கவிதைகள்
Trending

கவிதைகள்- தமிழ் உதயா

தமிழ் உதயா

முதல் மழைத்துளி

எந்தக்கசப்புமில்லை கடலுக்கு

000
ரயில் நிற்கும் வரை காத்திருக்கிறேன்
குழந்தை ஒன்று
சொற்களை உடைத்து விளையாடினாள்
அவள் நாக்கு நுனியில்
யாரோ கடந்து கொண்டிருக்கிறார்கள்
ஒரு குறுஞ்செய்தியாக
கடந்தவர்கள் உதடுகளில்
முதல்மழை சொட்டிய தென்னங்கீற்றுகள்
நான் பார்வையாளனாகவே
இருந்து விடுகிறேன்
என்னை எழுப்பிய பறவை
எங்கோ பறந்து கொண்டிருந்தது
மனசுக்குள்ள ஓர் ஒத்திகை
மௌனமாய் உயிர்ச்சேதமின்றி தன்னுள் மலர்த்தி இறக்கியது
நீங்கள் பூவைக்  கொய்து நீட்டுகிறீர்கள்

நான் வனம் ஒன்றை சேகரிக்கிறேன்

000

அசையும் சுடரில் எத்தனை மலர்ச்சி
சொற்ப நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒரு செவ்வரத்தம்பூ காற்றில் நர்த்தனமாடுவது போல
தன்னையே தீய்த்துக் கொள்வதற்காய்
எவ்வளவு பெரிய காத்திருப்பு
இருள் முழுவதும்
அபாண்டமான பொய்
அப்பொய்யில் ஒளிந்திருக்கிறது
அத்தனை வசீகரமான மெய்யும்
மேலும் அவை
ஒருசமயம் நினைவுகளை மேய்கின்றன
மேய்ச்சலை அசைபோடும் போது நிச்சயம்

தெரிந்து கொள்வீர்கள்

அம்மாவின் கைவிளக்கு
அம்மாவிடம் பேசுவது போல்

எங்களிடம் பேசுவதில்லை

000

உப்புக்காற்றுச் சரசரக்க
திறந்த உயிரின் வழி
உறைந்திருந்த மூச்சிற்குள் பெரும்புயல்
சட்டென்று தூறிவிட்டுப் போன மழைக்கு
காத்திருந்த நிலத்தில்
ஏமாற்றத்திலும் ஈரம் கசிந்திருந்தது
கருணை ஆறளவு வடிந்து கொண்டிருக்கையில்
எந்தக் கசப்புமில்லை கடலுக்கு
இரைக்குச் சிறகடித்துக் கொண்டிருந்த பறவைக்கு
வீழ்த்தப் பொறி வைப்பது

துடித்துப்பறக்கும் விஷம்

இப்படித்தான் நிகழ்கிறது
மனிதனுக்கும்
மனிதனுக்குமான
தொடுசல்கள்

000

காலமழை குடைகளை நனைப்பதில்லை
மாறாக
செந்நிறத்தைக் கரைக்கிறது
தூக்கிலிடப்பட்ட நொடிக்கு
கடைசி ஆசை என்ன
என்று கேட்டால்
கடந்து செல்வது தான் என்று துடிதுடித்துச் சொல்லியிருக்கும்
பயணத்திற்கு பத்து நிமிடம்
மட்டுமே மீதியுள்ள நிலையில்
நான்கரை மணிநேரப் பயணப்படலுக்கு
யாதொரு சங்கடமுமற்று
புறப்படுகிறேன்
இருபது பவுண்ஸ் பயணச்சீட்டில்
இன்னும் மிச்சமிருக்கிறது
என் நிலத்தின் ஈரம்
அது
குழந்தைகள் உணவுக்கோ
மௌனச் சித்திரப் பார்வையற்றவனுக்கோ
பிறழ்வுற்ற இளம்பெண்ணொருத்திக்கோ
ஏன்
மதில்மேல் தெரியும் திருட்டுப்பூனைக்கோ பயன்படலாம்
பயன்படல் இனிது தானே
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button