இதுவொரு பட்டாம்பூச்சி
குறித்த கவிதை
இதையெழுதி விட்டாதாலொன்றும்
அதன் வாழ்நாளொன்று
கூடிவிடப்போவதில்லை
நானோ இதைவாசிப்பரோ
கான்ங்கீரிட் அறையொன்றில்
நெகிழிச்செடிகளை எரித்துவிட்டு
தேனூறும் பூச்செடிகளை
வளர்க்கப்போவதுமில்லை
மேலும்
இதன் தாக்கத்தில்
சிறகு கொய்யுமெந்த
கைகளுக்கு காப்பிடப்போவதில்லை
எனினுமிதில்
சுழியியல் விரும்பியொருவனின்
இயலாமையும்
அகதியாய் புலம் பெயருமொரு
பட்டாம்பூச்சியொன்றின்
வாழ்வுமுள்ளது…!
000
கருத்து நீண்ட குயிலொன்று நாளையுடன் தன்யாழ் பாடலை
நிறுத்தப்போவதில்லையெனினும்
உன்னிடமிருந்து விடைபெறுகிறேன்
மயிர்க்கால் சிலிர்த்த
ஆசைபொழுதின்கதகதப்பைவிட
நீயளித்த அவமானங்களே
பெருங்களிப்புடன் வழியனுப்புகிறது
நான் தொலையவில்லை
என்பதால் உன்தேடலில்
கிடைக்கப்போவதுமில்லை
தற்சமயம் புலர்வின்
இசைக்குறிப்பை
துருப்புச்சீட்டாய் வைத்தபடி
தேடியலைகிறாய் பின்நவீனஅங்காடி அடுக்ககங்களில்
நானோ
ஓயாது நீந்தும் வெண்புரவியொன்றின்
வாலைப்பிடித்தபடி
ஏழாம்கடலைத் தாண்டுகிறேன்
எதிர்வரும் நகரின்
வீதிகளில் வீடுகளில்
கேட்கத்தொடங்குகிறது
யாழிசை….!
000
நிலத்தின் பறவைகள்
##########
மஞ்சள்க்கனி புளித்து
அடர்ந்திருக்கும்
அரி நெல்லி மரக்கிளையில்
அமர்ந்திருக்கும்
மரகதப்புறா சிறகுகளையும்
அப்பா பச்சை புறாவென்று
நதிமலர் அதிசயித்து
இமைகளை விரிக்கும்
கணமும் ஒன்றாக. அமைய
மறு கணங்களில்
இந்நிலத்தை வானெங்கும்
தூக்கிச்செல்கிறார்கள்..
அவர்கள்….!