கவிதைகள்
Trending

கவிதைகள்- திருமூ

1) ஆண்ட பரம்பரை எச்சில்தானே மகனே..!
____________________________________________

அடேய் பீப்பயலே…
நாறப்பயலே…
எச்சப் பொறுக்கியே…
சூர நாய்களேயென…
பேருந்தில் நின்றுகொண்டுவந்த
எங்களூர் சேரிப்பயனொருவனை
பால்ய வயதில் வார்த்தைகளால் கொட்டித்தீர்த்ததை
எண்ணிக்கொண்டு
காலரைத் தூக்கிவிட்டபடி
பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தேன்;
நாங்கள் மண்டையில் பிறந்து
கொண்டையில் வளர்ந்தவர்கள்
நாங்கள்தான் உயர்ந்தகுடி
நாங்களே ஆண்டசாதி
நாங்களே எல்லாமென
தன்னுடன் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த
ஒருவனிடம்
வீரவசனம் முழங்கிய எனதருமை மகன்
அடிவயிற்றிலிருந்து கெட்டியான சளி
உருண்டு திரண்டுவர
அடிமை நாய்களேயென்று காரித்துப்பினான்
அதுவோ..!
காற்றின் வேகத்தில் கிழிந்து
வெட்கமே இல்லாமல்
மானமே இல்லாமல்
அம்மணமாய்
சீத்தென்று என்முகத்தில் விழுந்தது
ஆண்ட பரம்பரை எச்சில்தானே மகனே!
இன்னொருமுறை துப்புவாயாக…

2) அண்டர்வேர்
_______________
துவைக்கக் கழற்றிப் போட்ட
ராமசாமியின் அண்டர்வேரிலிருந்து
அம்பது ரூபாயைக் கத்தரித்த கையோடு
கால்தடுக்கும் லுங்கியை
பல்லில் கடித்தபடி
10B பஸ்ஸைப் பிடித்து நகரடைந்தேன்;

பாக்கெட்டைத் தடவிக்கொண்டே
அந்த மருந்தகத்தின் கண்ணாடி மேசையில்
கைகளிரண்டையும் கெட்டியாக
அழுத்தி வைத்தாலும்
பதற்றம் தொற்றிக்கொண்டது;

வேறு வழியேயின்றி
யாரும் பார்த்திராத கணம் பார்த்து
குரல்நடுங்க “ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவர் காண்டம்
ஒன்னு குடுங்க”னு கேட்டு
வாங்கிப் பாக்கெட்டில் பதுக்கும்
என் சில்லறைக் காதலை
எப்படி எழுதிக் கிழிக்க?

பக்கத்து வீட்டுப் பொடக்காலியில்
தொங்கும் பாவாடை நாடாவின் நீளம் அது;
மேலும்,
ராமசாமி யாரெனில்
யாரெனக் கேட்போருக்குச் சொந்தக்காரர்.

3) மணிகண்டனுக்கு வாழ்த்துகள்!

_____________________________________
நேற்று என்னிடம்
பந்தயத்தில் இழந்த டயர்வண்டியை
மீட்பதற்காக
இன்று மீண்டும் பந்தயதமிட்டு
தோற்றவன் டயர்வண்டி
வென்றவனுக்கென்று
ஒரு கரண்டி தழுவுக்கும்
ஒரு பிடி சுண்டலுக்கும்
யார் முதலெனப் போட்டியிட்டுக்கொண்டு
மாரியம்மன் கோவிலுக்கு
டயர் வண்டியடித்துக்கொண்டோட
ஆலயமணி நிற்பதற்குள் முதலாவதாக
கோவில் வாசலடைந்தான் மணிகண்டன்
மணியோசை நின்ற
சில வினாடிகளில் இரண்டாவதாகக் கோவிலடைந்தேன்
நான்

ஆலயம் நுழைந்து
அம்மனை தரிசித்து
தீர்த்தம் வாங்கி
திருநீறு பூசி
நறுக்கிய துண்டுவாழை இலையில்
ஒரு கரண்டித் தழுவும்
ஒரு பிடி சுண்டலும்
முதலாவதாக வாங்கிக்கொண்டு
வெளியில்வந்து
மணிகண்டனுக்கு ‘வாழ்த்துகள்’ சொன்னேன்

என்னசெய்வது என்னால்
மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள் மட்டும்தான்
சொல்லமுடிகிறது

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button