சாத்தானுக்கும் கடவுளுக்கும் சர்ச்சை.
பரிச்சயமில்லா நபருக்கு
இன்று பிறந்தநாளென்று சொல்கிறது
எனது முகநூல் கணக்கு.
அதன் உண்மைத் தன்மை குறித்து
ஆராய்கிறது எனது ஆறாம் அறிவு.
எனது கணக்கில்
அவர்களின் பங்களிப்பு குறித்து
கணக்கு பார்க்கிறது
சாத்தானின் சாயல் கொண்ட
எனது சுயநல புத்தி.
வாழ்த்துக்களை பகிர
நெருக்கமாகத்தான் இருக்கவேண்டுமென்ற
அவசியமில்லை
அன்பையும் வாழ்த்தையும் பகிர
மனிதனாயிருந்தால் மட்டும்
போதுமென்று சொல்கிறது
கடவுளின் சாயல் கொண்ட ஆழ்மனம்.
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும்
சாத்தானுக்கும் கடவுளுக்கும்
தொடர்ந்து நடக்கும் சர்ச்சையில்
பரிச்சயமற்ற அந்த நபருக்கு
பகிரப்படாமலே பரிதாபமாய்
செத்துப் போகிறது
அந்த பிறந்தநாள் வாழ்த்து.
சப்தமின்றி சாத்தான்
தொடர்ந்து ஜெயித்துக்கொண்டேயிருக்கிறது.
மீன் வளர்க்க ஆசைப்படும் புத்தன்
முதல் முறையாய் புத்தன்
மீன் வளர்க்க ஆசைப்படுகிறான்.
மீன் வளர்த்தல்
ஜீவகாருண்யத்தில் சேர்வதால்
மீன் வளர்ப்பதென்பது
ஆசைக்குள் வராது என்றவன்
அழுத்தமாய் நம்புகிறான்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
அவன் அறிந்திருந்தபடியால்
சில வண்ண மீன்களையும்
ஒரு கண்ணாடி பேழையையும்
கொஞ்சம் கூழாங்கற்களையும்
வாங்கி வருகிறான்.
மீன் வளர்ப்பென்பது
பெரிய பொறுப்பென்றும்
அது பராமரிப்பு சார்ந்த
பெரியப் பணியென்றும்
மெல்ல உணர்த் தொடங்குகிறான்
குடும்ப பொறுப்புக்களிலிருந்து
தன்னை துண்டித்துக்கொண்ட
புத்தன்.
நாட்கள் நகர நகர மீன்கள்
இனப்பெருக்கம் செய்யாதது
அவனை வருத்தமடையச் செய்கிறது.
நீர் மாற்றி சுத்தம் செய்யும் பணி
அவனை சோர்வடையச் செய்கிறது.
வேளைக்கு உணவளிக்கும் கடமை
அவனை சலிப்படையச் செய்கிறது.
ஒளி ஊடுருவும்
கண்ணாடி பேழைக்குள்
அவன் கண்கள்
எப்போதாவது ஊடுருவுகையில்
சோகம் உறைந்திருக்கும்
அந்த மீன்களின் கண்களில்
யசோதரையின் ஏக்கங்களையும்
ராகுலனின் வருத்தங்களையும்
மாறி மாறிக் காண்கிறான்.
துயரம் மெல்ல கவ்வும்
அவன் இதயத்தை
குற்றவுணர்வு மெல்ல மேலெழும்பும்
அவன் ஆன்மாவை
அமைதியிழந்து தவிக்கும்
அவன் உள்ளத்தை
மேலும் கொஞ்சம் திடமாய்
ஸ்த்திரப்படுத்தியப் பின்…
அந்த மீன் தொட்டியை தூக்கி
சுவற்றில் எறிந்து உடைத்துவிட்டு
மூச்சுத் திணறித் துடிக்கும்
மீன்களை கண்டும் காணாமல்
தனது பிக்குகளுக்கு
வாழ்தல் என்பதன்
பொருளுணர்த்தும் பாடம் எடுத்தபடி
மீண்டும் முழுதாய்
திரும்புகிறான் துறவுக்கு
மீன் வளர்க்க முயற்சித்து
தோற்றுப்போன புத்தன்.
நம்பிக்கை.
அசைவற்றுக் கிடக்கும் குளத்து நீரை
கண் சிமிட்டாமல்
உற்று நோக்கி உட்கார்ந்து
எதிர்காலம் குறித்தான அச்சமூட்டும்
நினைவொன்றில் மூழ்கி
கலங்கித் தவிக்கையில்,
தனது மெல்லியத் துடுப்பால்
ஒட்டு மொத்த குளத்தையுமே
அசைத்துப் பார்க்கிறது
முகம் காட்டாத மீன் குஞ்சொன்று.