மனம் சூழ் ஆழி
எத்தனை முறை வந்தாலும்
முதல்முறை வருபவனைப் போல்
என் பாதங்களைக் கழுவுகிறாய்
எப்போதும் நீலம் மற்றும் கருப்பு
நிற ஆடைகளையே
உடுத்திக் கொள்கிறாய்
பல உயிர்களை தினமும்
பிரசவிக்கிறாய்
மனிதனை விடுவிக்கக்
கரை வரை ஓடிவந்து
நுரைத்துத் தோற்கிறாய்
என் மனராக ஆலாபனைக்கு
அழகாக வயலின் இசைக்கிறாய்
இம்முறையும் உன்னை என்
அலைபேசியில் சிறைபிடிக்கிறேன்
மன்னித்துக்கொள்.
**** **** **** **** **** ****
உறவுகள்
பக்கத்து ஊரில்
இருக்கும் சித்தப்பா மகனைக்
காண நேர்ந்தால்
“நல்லா இருக்கியா?” என்று கேட்க
முப்பது கி. மீ தூர முறிந்த சொந்தத்தை
மனம் தாண்ட வேண்டியிருக்கிறது.
அவனின் “இருக்கேன், நீங்க?” என்பதும்
திருவிழா ஸ்பீக்கரின் இரைச்சலுக்கு
நடுவே உரையாடுபவர்களின்
வார்த்தைகளாக வருகின்றது
சொத்துப் புயலில் கீழே விழுந்த
உறவுப் பாலத்தை மீண்டும்
எழுப்ப ஒரு செங்கல்லையேனும்
எடுத்து வைக்கவில்லை நாங்கள்
என்பது
“ம்ம், பாப்பம்” என்கிற இழுவையான
தோரணையில் எட்டிப் பார்த்து
ஓடியது.
**** **** **** ***” **** ****
கவிதைகள் சமைப்பவன்
படிமக் கிறுக்கன்
ஊரடங்கையும் மீறி
தனக்கான வாகனத்தில் எங்கோ
சென்றுவிட்டான்
ஒரு ஒளியாண்டு தூரம்
தள்ளியிருந்தவனை எண்ணித்
தவமிருந்தவனைப் புற்றாய்
சூழ்ந்து கொண்டன தினசரிகள்
தனது சாயலில் மண்ணால்
சில படிமங்கள் செய்து
விலா எலும்பில் இருக்கும் நினைவுகளை
அவைகளின் உயிராக்கி
இலக்கியம் சமைத்துத்
தன் யின் யாங் வட்டத்திற்குள்
மீண்டும் சுழலப் போனான்
சமாரிய தாவோயியன்.