யாரோவாகி..
நலம் விசாரிப்பதற்கு குறை வந்துவிட்டது
கடிதம் போட்டுவிட்டு பிறகு சாவதானமாகக் கிளம்பி வருகிற
காலத்தைத் தொலைத்துவிட்டேன்
கருப்புமை முத்திரைகளோடு கடிதத்தை சுமந்தலையும்
நீலநிறத்திலான காகித மடிப்புகளுக்கு
முன்பொரு பெயர் இருந்தது
இன்லேன்ட் லெட்டர் என்பதாக
இப்போதெல்லாம்
எதிர்பாரா திருப்பத்தில் சந்திக்க நேரும்
நலம் கெட்டவரை
என்னவென்று விசாரிப்பது என்கிற குழப்பம் தீர்வதற்குள்
அவர் கேட்டு வைக்கிறார்
டீ சாப்பிடலாமா
சர்க்கரை குறைத்து ஆடையகற்றி
சூடாகப் பருகும் டீக்குள்
என்ன பெரிய கேடு இருக்க முடியும்
கண்ணீர்த்துளி பட்டு வார்த்தைகள் கலங்கியிருக்கும்
வாழ்வைத் தொலைத்துவிட்டேன்
நல விசாரிப்பில்லாமேலே
டீயும்
தீர்ந்துவிடுகிறது
****
மேலும் அவை நிறங்கள் அல்ல
பரபரப்பான பெருநகரச் சாலையின் சிக்னலை
வேடிக்கைப் பார்த்தபடி
கடையோர நாய் படுத்துக் கிடக்கிறது
தவறாக சாலையைக் கடக்கும்பொருட்டு
அடிப்படாமல் தப்பிவிட்ட யாரோவை பார்த்து
வள் என்கிறது
பகல்நேரம் முழுவதும் தொடர்கிற
வேடிக்கைப் பார்த்தலால்
நடு இரவில்
அணையா சிக்னலின் தொடர் மினுக்கத்தை
ஆட்சேபிக்கும் முனைப்பாக
சாலைதோறும் திரண்டபடி
அங்குமிங்குமாக நகர்ந்துகொண்டே இருக்கிறது
பலநூறு
வள்
****
பாதையென்று ஒன்றில்..
அவன் அவனைவிட்டே இறங்கிப் போகிறான்
கிஞ்சித்தும் விமர்சனம் இல்லாமல்
யாதொரு தயக்கத்தையும் மிச்சம் வைக்காமல்
பழைய ஞாபகங்களின்மீது தான் மதிப்பிழந்துவிட்டதாக
ஒரேயொரு முறை அதிர்வில்லாமல் சொல்லியதுண்டு
கணக்கில் வரவு வைத்துக்கொள்ளாத மன்னிப்புகள்
கருணையின் கோப்புகளில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன
என்கிற உறுதியை
இறங்கிப் போன வேகத்தில் முகம் திருப்பி
எட்டிப்பார்த்த வேகத்தில்
அதோடு இறங்கிப் போய்விட்டான்
அடியோடு
****
எங்கெங்கிருந்தோ..
நீங்கள் ஒரு கும்பல்
உங்களிடம் ஆயிரம் கரங்கள் உண்டு
ஒற்றை இதயத்தை பணயம் வைக்க நீங்கள் முன்வருவதில்லை
முன்தீர்மானங்களின் பீடத்தில் மண்டியிடவே
உங்கள் பாதங்கள் பலநூறு கிலோமீட்டர்கள் பயணித்து வந்திருக்கின்றன
நீங்கள் ஒரு சராசரி
உங்களிடம் மாதாந்திர பட்ஜெட் உண்டு
கெட்ட பெயரை சம்பாதித்துக்கொள்ள நீங்கள் முன்வருவதில்லை
படியேறி பொந்துகளுக்குள் புகுந்துகொள்ளவே
உங்கள் வம்சத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக சுமந்து வந்திருக்கிறீர்கள்
நீங்கள் ஒரு ரசவாதி
உங்களிடம் உறவுகள் பல உண்டு
அவற்றை மாற்றிப்போட்டு ஆட்டம் காட்ட நீங்கள் முன்வருவதில்லை
மொண்ணைக் காரணங்களைக் குழிபறித்து ஒளிந்துகொள்ளவே
உங்கள் கைவிரல்களை பத்திரமாக சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறீர்கள்
****
அருமை