சிகிச்சைகள்
குழந்தைகளின் உடைந்த
கண்ணாடி வளையல்களை
வண்ண மீன் குஞ்சுகளென
பாலீத்தீன் பைக்குள் நீந்தவிட்டு விற்பனைக்கு வைக்கிறேன்.
எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கையில்
எனது மண்டையோடு
பனையோலையால் முடையப்பட்ட
பொட்டியாக இருந்தது.
மண்டையைத் திறந்த
கையுறை மருத்துவர்
மரத்தாலான விளையாட்டுச் சாமான்களை
பொட்டிக்குள்ளிருந்து எடுத்தார்.
**********
அறுந்துத் தொலைந்த
பட்டத்தை நடந்து தேட முடியாது.
கஞ்சா சுற்றப்பட்ட
தென்னங்கீற்று சிமிலிக்குள் நுழைந்து
கங்குகள் மினுங்கும்
கெட்டிப் புகையில் அமர்ந்து
காற்றுவெளியத் துழாவுகிறேன்.
போதைமுறிவு மாத்திரை வாசங்களுக்கு
தொடர்ச்சியாக தப்பிக்கையில்தான்
குதிங்கால் நரம்பினை
துண்டிக்க வந்தனர்.
என் உடம்பு நரம்புகளில்லாமல் நாணல்களால் ஆனதென்று தெரிந்தது.
காட்டுத் தென்றலுக்கு சரிந்தாடினால்
பட்டம் கிடைக்குமாம்.
**********
தட்டானின் சிறகு போலிருக்கும்
என்னுடைய முதுமையைச் சுற்றி
ஆயிரம் குளுக்கோஸ் பாட்டில்கள் தொங்குகின்றன.
கீழிறங்கும் ஒவ்வொரு சொட்டும்
உயிரின் திரவ உருவங்கள்.
பாட்டில்கள் மாற்றும் இடைவேளையில்
கருவேல மரத்தின் குட்டி குட்டி மாடுகளை
தீப்பெட்டியில் அடைத்து
அசைவற்ற என் கண்களுக்கு முன்னால் விளையாடி காட்டுகிறார்
சிரித்தமுக செவிலியர்.
**********
புரியல தோழர்
இன்னும் பக்குவப்படல போல நானு