“உத்திரக்கட்டை இறங்கிருச்சே… “ – அம்மாவின் பதைபதைத்த அந்தக்குரல் காதுகளில் விழ கண்விழித்தேன் நான். அதற்குமுன் என்னென்ன புலம்பி அழுதிருந்தாள் எனத் தெரியவில்லை. தங்கை படுத்திருந்த அந்த அறை மேற்கூரையை டார்ச்லைட் அடித்து பார்த்துக்கொண்டிருந்தனர் அப்பாவும் அம்மாவும். புடவுக்குள் பாய்ச்சிய வெளிச்சத்துக்கு புறா குணுகுவதுபோல் தூக்கத்தில் ஏதோ உளறினாள் தங்கை.
“தங்கம்! தங்ங்ங்கம்…! எழுந்திரிடி தங்கம்”
அம்மா குரலுக்கு வாரிச்சுருட்டி எழுந்து மலங்க மலங்க விழித்தாள். அம்மாவின் கைநீட்டலுக்குக் குழைந்து குழைந்து குழந்தையாகி, அவள் கைக்குள் வந்து அடங்கிக்கொண்டாள். கூடத்திற்கு வலது ஓரத்தில் அந்த அறை… அந்த ஒரே ஒரு அறைதான் தனி அறை, அதற்கு நிலைச்சட்டமோ கதவோ கிடையாது. அந்த வாசலை அம்மா திரைச்சீலை போட்டு மூடியிருப்பாள். திரைச்சீலைக்கு மேலே ஓர் அடுக்காக சிப்பிகளாலான அலங்காரத் தோரணம் கட்டியிருந்தாள். அது கிட்டத்தட்ட எச்சரிக்கை மணி மாதிரி அம்மாவுக்கு. அவள் உடைமாற்றும்போது அந்த கிளிஞ்சல்கள் உரசும் ஓசை கேட்டால் விசுக்கென மாராப்பை இழுத்து மூடிக்கொள்வாள். ஒரு வருடம் முன்பு ஒருநாள், தங்கை வயதுக்கு வந்துவிட்டதாக அம்மா சொன்னாள். அன்றுதான் நான் என்னை ஏனோ பெரிய மனிதனாய் உணர்ந்தேன். எனக்கு ஏதோ பொறுப்பு கூடிவிட்டதுபோல், ஒரு காவல்காரன் எனக்குள் குடிவந்துவிட்டது போலெல்லாம் உணர்ந்தேன்.
அன்றிலிருந்துதான் தங்கைக்குத் தனியறை தரலாம் என முடிவெடுக்கப்பட்டது. எங்கள் வீட்டின் உயரத்திற்கு அதில் கூரை மின்விசிறிகள் மாட்டமுடியாது… நாங்களோ அத்தனைபேரும் நெடுநெடுவென உயரம், கைதூக்கினால் கூரை மின்விசிறியால் ஆபத்து என மேசை மின்விசிறிதான். தங்கையின் அறைக்கும் புதிதாக ஒரு மேசை மின்விசிறி, சீட்டுக்கட்டி வாங்கியிருந்தாள் அம்மா. இரவானால் அறை வாசலின் திரைச்சீலைகளை இழுத்து மேலே முடிச்சு போடுவாள் அம்மா. அது ஏதோ கிழவியின் வெள்ளைமுடிக் கொண்டை மாதிரியே இருக்கும். அறைவாசலிலேயே மர இருக்கை ஒன்றைப்போட்டு அதன்மேல் மின்விசிறியை வைத்து ஓடவிடுவாள். இப்போது, மின்வெட்டு என்றாலும் மழை என்பதால் அவ்வளவு வெக்கையில்லை. உயரம் தணிவான வீடு என்பதால் வெதுவெதுப்பாகவே இருக்கும், அதனால் மழையின் குளிரும் அவ்வளவு தாக்கவில்லை. ஆனால், இந்த ஒழுகுகிற சுவரோரம்தான் இம்சித்துக்கொண்டிருந்தது இத்தனை நாளும்.
ஒழுகுகிற சுவரை அம்மா சமாளிக்கும் விதம் அலாதியானது, மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னே அம்மா மண் சேர்க்க ஆரம்பித்துவிடுவாள். கடலோர வெண்ணிறத்துக் குருத்து மண். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு ஓலைப்பெட்டி மண்ணாய் சுமந்து வந்து வீட்டில் ஒழுகாத பக்கமாக சேர்த்துவைப்பாள். மழை ஆரம்பித்ததும் ஒழுகும் சுவரோரத்தில் அதை அணை கொடுத்துவிடுவாள், மண் முழுக்க நனைந்துவிட்டால், அந்த மண்ணை எடுத்து அடுப்பங்கரை அருகே மாவு வறுக்கும் சட்டியில் போட்டுவிட்டு வேறு மண் மாற்றுவாள். இரவு உறங்கும் இடத்தின் தரைமுழுக்க மண்ணை மெத்தைபோல் பரப்பி, அதன்மேல் கோணிப்பைகளை விரித்து, அதற்கும்மேல்தான் பாய் விரிப்பாள். தங்கை வயதுக்கு வந்தபோது அவளுக்கு ஏதாவது செய்யவேண்டுமென உண்டியலை உடைத்து ஆசைஆசையாய் நான் வாங்கிக்கொடுத்திருந்த வெள்ளிக் கொலுசு , ஒருநாள் இந்த மண்ணில் கழன்று விழுந்து காணாமல்போய் தேடிச்சலித்து எடுத்த நாளும் உண்டு. அம்மா செய்யும் மழை ஏற்பாடுகள் இப்படியென்றால் அப்பாவோ சற்று வேறு மாதிரி.
மழைக்காலத்துக்கு முன்னமே, சிமெண்ட்டும் சீனியும் கரைக்க ஆரம்பித்துவிடுவார். அப்பாவின் சிமெண்ட் குடுவை ஒரு பெட்ரமாக்ஸ் லைட்டின் கண்ணாடி உறை மாதிரி வடிவத்தில் இருக்கும். ஆனால், அதைவிட மூன்று மடங்கு பெரிதாய் இருக்கும். சீனி போட்டு சிமெண்ட் கரைக்கும்போது எழுகிற வாசம் சிறுவனாய் இருந்தபோது சாப்பிட்ட சிலேட்டு பல்ப்பம் மாதிரி, ஒரு நாவூற வைக்கும் வாசம். கரைத்த கரைசலை நான்தான் போய் மாடியில் கீறல் விட்ட இடங்களில் ஊற்றிவிடுவேன். அந்த நேரங்களில் எங்கள் வீடு எனக்கு ஒரு மிகப்பெரிய குழந்தையாய் தோன்றும், அழுதுவடிகிற ஒரு குழந்தை வாயில் சீனிப்பாகு ஊற்றினவுடன் அழுகை நிறுத்துவதுபோல் அடுத்த இரண்டு மூன்று மழைக்கு ஒழுகாமல் இருக்கும் வீடு. பிறகு, மறுபடியும் அழ ஆரம்பித்துவிடும், அதன் கண்ணீரை உள்ளங்கை ஏந்திப்பிடித்தால் நீரோடு கலந்து இருக்கிற மட்டப்பாவின் பனஞ்சிராய் கறுப்புத்துகள், அந்தக்குழந்தையின் கண்மைப் பிசிறு என எண்ணிக்கொள்வேன்.
இப்போது மழை, மழை, ஒரு வாரமாய் விடாத மழை.
ஒருவாரம் முன்பு வரை, “இந்த வருசம் மாதிரி எந்த வருசமும் வானம் ஏமாத்தினதில்ல மக்கா…” – என சொல்லித்திரிந்த ஊர்ப்பெருசுகளெல்லாம், பற்கள் கிட்டிக்க, திண்ணையை எட்டி எட்டிப்பார்த்து, “யாத்தே… இப்டியொரு மழையை ஏ வாநாளுக்கும் பாத்ததில்ல” என புலம்ப ஆரம்பித்திருந்தனர். பக்கத்து வீட்டு ஜெபமாலைத் தாத்தாவோ, “இந்த மழைல மட்டும் செத்து கித்து போய்டக்கூடாது மக்கா… புதைக்க குழி தோண்டினா, குழி தண்ணியாலல்ல நெறையும், அப்புறம் நம்ம பொட்டிய தண்ணிலதான் மொதக்க போட்டு மூடுவானுக” – என்று வாய்விட்டே சொல்லிக் கொண்டிருந்தார் நேற்று மதியம். ஜார்ஜ் பெரிய்யா வீடு, நேற்று இடிந்து விழுந்து மூன்று மரணம் ஒரே வீட்டில், அதன்பிறகுதான் இந்த மழையைப்பார்த்து எல்லாரும் பயப்பட ஆரம்பித்தது. ஊரில் பாதி பழையகாலத்து கட்டிடங்கள்தான், எங்கள் வீடும் அப்படித்தான். ஜார்ஜ் பெரிய்யா வீட்டைவிடவும் பழசு எங்கள் வீடு. இன்று தங்கை அறையின் உத்திரம் இறங்கவும்தான் மழை எங்களுக்குள் பீதியைக் கிளப்பியிருக்கிறது.
“கொஞ்சநாளைக்கு வேற வீடு பாக்கலாமாங்க? “
“ரெண்டு வாரம் எங்க அக்கா வீட்ல இருக்கலாமாங்க?”
“ஸ்கூல்ல நெறயபேரு தங்கியிருக்காங்களே… அங்க போய்டலாமாங்க? “
– இதுபோன்ற கேள்விகளால் நிறைந்த அந்த இரவின் எந்த பதற்றமும் எட்டாமல் உறங்கிக்கிடந்த தம்பியைப் பார்த்தேன். நெற்றியை வருடிவிட்டேன், புரண்டு படுத்து மறுபடி உறக்கத்தை நீட்டினான்.
மறுநாள் காலை, மழையில்லாமல் விடிந்தது. அப்போதே அப்பா தீர்மானமாய் தேட ஆரம்பித்துவிட்டார், உத்திரக்கட்டைக்கு முட்டுக்கொடுக்கத் தோதான ஒரு உயரமான மரத்தை. எங்கெங்கோ தேடிப்பார்த்தும் வாய்க்கவில்லை. பிறகுதான் நானும் அப்பாவும் இந்த முடிவுக்கு வந்தோம்… சவுக்குத்தோப்புக்கு இரவில் போய் ஒரு மரம் வெட்டிவரலாமென்ற முடிவுதான் அது.
அப்பா சைக்கிளை அழுத்த அழுத்த அவர் முதுகு வியர்வையில் நிலவொளி உவர்ப்பு வாசமுடன் மின்னியது. அப்பாவின் இந்த வாசம் மிகவும் பிடிக்குமெனக்கு, பழைய ரூபாய்த்தாள்களிலிருந்து வருவதுபோல ஒரு மணம் அவரிடமிருந்து வரும். பெரும்பாலும் இரவுகளில் சட்டையணியாமல்தான் இருப்பார். இன்றும் அப்படித்தான். லுங்கியை முழுங்காலுக்கு மடித்துக்கட்டியிருந்தார். முன்புறம் குறுக்கு பாரில் தம்பி உட்கார்ந்திருந்தான். இரண்டு வளர்ந்த ஆம்பிளைப் பயலுகளை இப்படி முன்னும் பின்னுமாக வைத்துக்கொண்டு கடற்கரை மணலில் வண்டி அழுத்துவது சிரமமாகத்தான் இருந்திருக்கும் அப்பாவுக்கு. ஆனால், அவர் தீவிர யோசனையிலிருந்தார்.
“ஓடக்கரைகிட்ட வந்திடுச்சுப்பா… இன்னும் கொஞ்சதூரம்தான் சவுக்குத்தோப்புக்கு… “ என்றான் தம்பி.
“ஆமாம்ல, கொஞ்சம் கடலுக்கு ஒட்டிப்போய்ட்டோம்னா சுளுவா அழுத்திறலாம் வண்டிய…”
அப்பா சொன்னதுபோல், உண்மையிலேயே கடல் ஈரமண்ணில் முன்னைவிட வேகமாகியது வண்டி.
என் கையில் அரிவாள் ஒரு நாகத்தின் படம்விரிந்த கோலம்போல் இருந்தது, நான் என்னை அய்யனார் சாமி மாதிரி கற்பனை செய்துகொண்டு கண்ணை உருட்டிப்பார்த்தேன், அரும்பு மீசைக்கும் அடுத்தநிலைக்குத் தாவி சற்று அடர்ந்துகொண்டிருந்த என் மீசையை, சற்று தடவி விட்டுக்கொண்டேன். என் சேட்டையை நிலா நிழலாக்கி காட்டிக்கொடுத்திருந்தது அப்பாவுக்கு… ‘எலேயப்பா… வசு… அரிவாள கால்ல கீல்ல போட்றாத…’ நான் கையை இறுக்கிக்கொண்டேன்.
“ இவ்ளோ கஷ்டப்படுறதுக்கு பகல்ல வரலாம்லப்பா… “ என்றான் தம்பி.
“ம்க்கும்… எங்கய்யா வூட்டுத்தோட்டம் பாரு, வெளிச்சத்துல வந்து வெட்டுறதுக்கு… சாய்புவோட வாட்ச்மேன் ரங்கையன் கைல மாட்டுனோ வச்சுக்க, கட்டிவச்சு உரிச்சிடுவான்ல்லேய்… “ என்ற அப்பாவிடம், “உண்மையிலேயே அது தாத்தாவோட சவுக்குத் தோப்புதானேப்பா…? தாத்தா காலத்துக்குப்பிந்தி ஆச்சி கொமருகளை கரையேத்துறதுக்காக வித்துட்டதா ஒருநாள் புலம்பிருக்கு என்கிட்ட, நான் சின்னப்பயலா இருக்கப்ப’“ என்றேன்.
அப்பா எதுவும் பதில் சொல்லவில்லை. அவர் அப்படித்தான், நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டார், என்றாவது அவர்மீது மிதமான சாராயவாடை வரும்நாளில் ஈசிச்சேரை வாசலுக்கு வெளியே முற்றத்து மணலில் எடுத்துப்போட்டுப் படுத்திருப்பார். அம்மா அந்த தினங்களில் சற்று கோபமாய் இருப்பாள். ஆனால், நாங்கள் இருவரும் தங்கையோடு அவரைச் சுற்றி உற்சாகமாக உட்கார்ந்துகொள்வோம். அந்தமாதிரி சமயத்தில்தான் அப்பா நிறைய கதை சொல்வார், பெரும்பாலும் கடல் கதை, கடல் மேல் சுருட்டு பிடித்தபடி நின்றுகொண்டிருக்கும் வேதையன் ஆவி கதைதான் அப்பா சொல்வதில் எனக்குப் பிடித்த கதை. திரும்பி கடலைப் பார்த்தேன்… ஏதாவது அப்படி சிவப்பு நெருப்புப்புள்ளி தெரிகிறதா என… தெரிந்தது; ஆனால், அது ஏதோ தொலைதூரப் படகு. நிலவொளியை இவ்வளவு அழகாக்க கடலால் மட்டும்தான் முடியும் அல்லது கடலை இவ்வளவு அழகாக்க நிலவொளியால் மட்டும்தான் முடியும். பௌர்ணமியில் பூரித்திருந்தது நிலா. கடல், கோடி கோடி வாளைமீன்கள் மேற்பரப்புக்கு வந்து வந்து உடற்காட்டிச் செல்வதுபோல் மினுக்கிக் கொண்டிருந்தது. ஏராளம் நண்டுகள் எங்களை அந்நேரத்தில் எதிர்பாராததுபோல் ஓடி ஓடி வளை பதுங்கின. பகலில் அலையைப் பார்ப்பது ஒருமாதிரி கிளர்ச்சியென்றால் இரவில் அது சற்று வேறு மாதிரி. யாருமற்ற கரையில் தனியாய்க்கிடந்து அலையடிக்கும் கடல் இன்னுமின்னும் ஆங்காரம் அதிகரித்த ஒரு இரவு தெய்வத்தின் ஆட்டம் போலிருக்கும். காற்று கண்ணுக்குத்தெரியாத உடுக்குகளை அடித்தடித்துக் கடலை துடியேற்றிக்கொண்டிருக்கும்.
ஓடக்கரை சிற்றோடை கடலைத்தொடும் இடம் வரும்போது, அப்பா சைக்கிளைவிட்டு இறங்கினார். குனிந்து மண்ணைத் தொட்டு சிலுவை அடையாளம் வரைந்தார், பிறகு அந்த விரல்களை நெஞ்சின்மீது வைத்து, ஏதோ பிரார்த்தனை முடித்தாற்போல் அழுத்திக்கொண்டார். ஓடக்கரையைத்தாண்டும்போது தம்பி எப்படியும் பயத்தில் கண்ணை இறுக்கிமூடியிருப்பான் என்று எனக்குத் தெரியும். ஓடக்கரையில் மிதக்கும் மூங்கில்கூடை பகலிலேயே அத்தனை திகிலூட்டும் அவனை, இரவிலென்றால் கேட்கவா வேண்டும்?
“எதுக்குப்பா இதை ஓடக்கரைனு சொல்றாங்க, ஒரு ஓடமும் இல்லையே இங்கிட்டு? வள்ளம் கட்டுமரமெல்லாம் நிறுத்துற எடம் இங்கருந்து எப்டியும் ஒருகிலோமீட்டராச்சும் தள்ளித்தான இருக்கு? “
“அப்டி இல்ல வசு, அது ஓதக்கரை… ஓதம்னா கடல்மட்டத்தோட ஏத்த எறக்கம். கடல் தண்ணி ஒசந்து கழிமுகத்துலயும் ஏறுறது ஒரு ஓதம், கடல் மட்டம் கொறஞ்சு உள்வாங்கறப்ப கழிமுகத்துத்தண்ணி வேகமா கடலுக்கு பாயுறது ஒரு ஓதம். ஓதத்தோட தெசைய சரியா கெணிக்கத் தெரியாதவன் கடல்ல படகுவிட லாயக்குப்பட மாட்டான்… பௌர்ணமி அமாச நாள்ல கடலுக்குனு ஒரு பவுசு வந்துடும் பாத்துக்க, இந்த ஓதமெல்லாம் கன்னாபின்னானு பயங்கர வேகமாயிரும், அப்படி நேரத்துல ஊருக்குள்ள கடத்தண்ணி ஏறிறாம இந்த ஓடக்கரதான் காப்பாத்தும், இது தாமிரபரணியோட ஒரு சின்ன கெளைதான்…”
“அப்பா அந்த ஓடக்கர மூங்கில்கூடயப்பத்தி…” நான் கேட்டு முடிப்பதற்குள் தம்பி வீறிட்டான்…
“யப்பா! அண்ணன வாயமூடிட்டு வரச்சொல்லுப்பா… “ கிட்டத்தட்ட அழவே ஆரம்பித்துவிட்டான்.
“இப்டி பயப்படுறதுக்கு இதுல என்னல இருக்கு, கண்டவனும் கண்டதும் சொன்னானோ இதப்பத்தி? இப்ப நாஞ்சொல்றதக் கேளு மக்கா” என ஆரம்பித்தார் அப்பா.
“இதேமாதிரி ஒரு பௌர்ணமி நாள்லதான் அந்த பவுனுப்புள்ள கூடையத்தூக்கிட்டு காட்டுக்கு வந்திருக்கு, வாரப்பவே அதும் ஆத்தாக்காரி சொல்லிதான் அனுப்பிருக்கா, ஆறுமணி அடிக்கறதுக்குள்ளாற வீட்டுல இருக்கனுமுன்னு. அந்தப்புள்ள காட்ட எங்க பாக்கபோச்சு.. அவ மாமம் பையனையில்ல பாக்கபோச்சு… ரெண்டுபேரும் பேசிக்கெடந்ததுல நேரம்போனதே தெரியல…”
அப்பா நிறுத்தவும் தம்பி…”ம்…” என்றான்.
‘கொஞ்சநேரம் முன்ன இவன் பயந்த பயம் என்ன, இப்ப கத கேட்குறதப்பாரு’ என மனதில் எண்ணிக்கொண்டபோது எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. அப்பாவும் அதேதான் நினைத்திருப்பார் போலிருந்தது, அவரும் என்னைப்பார்த்துக் தம்பியை ஜாடைகாட்டி கண் சிமிட்டினார்.
“சாயங்காலம் ஆறுமணிக்கு அந்த பவுனுப்புள்ள தலையில பனம்பழம் நெறஞ்ச மூங்கில் கூடையோட இந்த ஓடக்கரையத் தாண்டிருக்கு, செவளயும் பன ஏறுற சோலியை முடிச்சுட்டுப்போலாம்னு மரம் ஏறுனவன், அப்டியே அவ போற அழக அந்தா அந்த பனமரத்துமேலருந்துதான் பாத்துட்டு இருந்திருக்கான்… இந்த புள்ளைக்கி என்ன பிரச்சனைன்னா, காக்காவலிப்பு வரும் அவளுக்கு அப்பப்போ… சரியா ஓடக்கரையை கடக்குறப்போ வந்துருச்சு வலிப்பு… தண்ணிக்குள்ளயே புள்ள கையும் காலும் வெட்டி வெட்டி இழுத்திருக்கா… பௌர்ணமி வேறயா, ஓதம் பெருக ஓடக்கர நிறைய தண்ணி, மூழ்குறா மூழ்குறா… அதப்பாத்துப் பதறி கத்துன செவள, மரத்து புடிய உட்டுட்டான், அங்கருந்து விழுந்து மிஞ்சவா? அவனுஞ் சாக… இவளுஞ் சாக… “
“அப்போலாம் நான் சின்னப்பய… ஊரே பேசுச்சு அந்த கதைய… இந்த ஊருல உலாத்துற கதைகளக்கேட்டா… பவுனு செவளய வச்சு ஒரு இதிகாசமே எழுதலாம். ஆனா, ஒரு ஆச்சரியம் என்னன்னா, இந்த மூங்கில் கூடதான், இது எப்டி அழியாம கொள்ளாம இத்தன வருசத்துக்குக் கிடக்கு? அதே கூடையா, வேற கூடையா? தெரியல.. ஆனா, என்னோட வாலிபத்துல, நாங்க இளந்தாரி பயலுவல்லாம் சேந்து கல்லெடுத்து அடிச்சு ஒருநா தாழ்த்திப் பாத்தோம் அத, தாந்துச்சு. ஆனா, மறுநா பாக்கறப்ப அப்டியே மேல வந்து நின்னுருச்சு, அதேமாதிரி தாழ்த்திப்பாத்த பலபேரும் அதையேதான் சொன்னாங்க… “
அச்சத்தை வெள்ளைவிழியாய், அதன்மேல் தைரியத்தை கருவிழியாய் வைத்துக்கொண்டு பார்ப்பதுபோல் உணர்ந்தேன், நான் அந்தக்கூடையைப் பார்க்கும்போது.
“யாரையாச்சும் பழி வாங்கிருக்காப்பா அவங்க ஆவி?” அப்பா சிரித்தார்,
“யாரும் அவங்களக் கொல்லலையே, பழிவாங்க… ஆனா, கடல்ல சாகப்போன சோடிகள காப்பாத்திருக்கு, இதுவரைக்கும் எங்கெங்கையோ கடல்ல சாகலாம்னு விழுந்த மூணு காதல் சோடிக கொற உசுரோட இங்க கரை ஒதுங்கிருக்காங்க… செத்தவங்கள சாமினு சொல்றது நம்ம வழக்கமில்ல. ஆனா, இந்த எடத்துக்கு வந்தா ஒரு கும்பிடு போட்டுட்டுதான் நகர்றது…”
அதுவரை வண்டியை உருட்டியபடி நகர்ந்தவர், ஓடக்கரை கடந்ததும் மறுபடி வண்டி ஏறிக்கொண்டார்.
வந்துவிட்டோம் சவுக்கந்தோப்புக்கு. அவ்வளவு பெரிய கடற்கரை வெண்மணற்பரப்பில் சவுக்கந்தோப்பு ஒரு இருள் சாம்ராஜ்யத்தின் நுழைவாயில் மாதிரி நின்றுகொண்டிருந்தது…
“எலே மக்கா… சவுக்கந்தோப்புக்கு ரொம்ப உள்ளயெல்லாம் போய்றாதீங்கலேய்…. பாம்பு கிடக்கும். இந்த சவுக்கஞ்சருகு மத்த எலைச்சருகுவ மாதிரிலாம் அரவம் எழுப்பாது, அதாம் பிரச்சனை, அமைதியாக்கிடக்கும், எவன் எக்கேடுகெட்டா எனக்கென்னன்னு… அதனால நம்மதான் கவனமா இருக்கனும்… “ – என்றபடி டார்ச்லைட்டை உயிர்ப்பித்துக்கொண்டார் அப்பா. டார்ச் வெளிச்சம் வந்ததும் அந்த இடம் வட்டமாய் ஒளிர்ந்ததால் இவ்வளவுநேரம் சுற்றிலும் நிலவொளியாய்த் தெரிந்த இடங்கள்கூட இப்போது கும்மிருட்டாய்த்தெரிந்தது. என்னோடு ஒட்டிக்கொண்ட தம்பி, “யப்பா… பாம்பு…” – அலறினான் திடீரென… பதட்டமான அப்பா உறுத்து கவனித்து, “அது கும்ட்டிக்கா கொடி… “ என்றார்.
அவர் கண்கள் மரம் மரமாய் துழாவ ஆரம்பித்து ஒரு மரத்தில் நிலைத்தது. அவர் எதுவெனக் குறித்துவிட்டார் என அறிந்து அரிவாளை நீட்டினேன். அப்பாவின் அரிவாளுக்கு அந்த மரமெல்லாம் வெறும் பத்து நிமிடம் கூட தாங்கவில்லை. அப்பாவின் தொடை பருமனைவிட பருத்து இருந்தது அந்த மரம்.
மரமாய் விழுந்த சவுக்கு, அரிவாளை இப்படியும் அப்படியுமாய் விளாசியதில் கொஞ்சம் நேரம் கொஞ்சம் வேர்வைக்குப்பிறகு கட்டையாகி இருந்தது. மூன்று சிறுகிளைகளை மட்டும் வெட்டாமல் விட்டிருந்தார், பிடிமானத்துக்கு வசதியாய் அப்படிச்செய்கிறார் என்று புரிந்துகொண்டேன்.
“எப்படிப்பா கொண்டு போறோம்?” என்றேன் யோசனையாய்…
“மேக்கால அரை கிலோமீட்டருக்கு கொண்டுபோய்ட்டா போதும்லேய்… மீனுக்கு ஐஸ் அடிக்க, இன்னும் கொஞ்சநேரத்துல ஐஸ் கம்பெனிக்கு ஒங்க சித்தப்பச்சியோட மீன்லோடு வண்டி வந்து நிக்கும் , அதுல போட்டுட்டம்னா சரக்க அனுப்பிட்டு நம்ம வீட்டுவழியாதான் விடியாலைல கடக்கரைக்கு அந்த வண்டி போவும், அப்ப எறக்கிருவான்… “
“அதுக்கு சித்தப்பாவ இங்கயே வரச்சொல்லலாம்ல…” – என்றான் தம்பி… அப்பா பதில் சொல்லாம சிரிதாய் முறுவல் பூத்தார், ‘உங்க சித்தப்பச்சி’ என்று அப்பா சொல்ல ஆரம்பித்த நாளுக்கும், ‘ஏந்தம்பி’ என அவர் சொல்லிவந்த நாளுக்குமான இடைவெளிக்கு அர்த்தம்தான் அந்தச்சிரிப்பு என தம்பிக்கு புரியும் வயதில்லை.
“அதுவரை எப்படிப்பா கொண்டு போறது? “
“ஓடக்கர வழியாதான்”
சொன்ன அப்பாவை நான் திகிலுடன் பார்த்தேன், தம்பியோ இப்போது சாதாரணமாய் இருந்தான். கதை அவனை மாற்றியிருந்ததை உணர்ந்தேன்.
மூவரும் சேர்ந்து கடலைநோக்கி மரத்தை சிரமப்பட்டு இழுத்தோம்.அப்பாவும் நானும் மரத்தை கடல் இழுத்துச்செல்லாமல் பார்த்துக்கொள்ள தம்பி ஓடிப்போய் சைக்கிளை உருட்டிவந்தான் அங்கிருந்து ஓடக்கரைவரை கடல் நீரிலேயே இழுத்துச்சென்றோம். அலையின் நீக்கு போக்கு தெரிந்திருந்தது அப்பாவுக்கு. பௌர்ணமி நாளின் அலைகள் பெரிதுபெரிதாய் வீசிக்கொண்டிருந்தது, ஒரு ஓங்கிய அலை, நீரை வெளித்தள்ளும்நேரத்தில் ‘கழிஓதம் பெருகுதுலேய்… கால நல்லா பதிச்சு நடங்க…’ என்றவாறு ஓடக்கரைநோக்கி வேகமாக நகர்ந்த நீரோட்டத்தோடு தானும் ஓடியபடியே, சரசரவென மரத்தை ஓடக்கரைவரை நீரைக்கொண்டே இழுத்துச்சென்றார். தம்பியை சைக்கிள் மேலமர்த்தி தண்ணீருக்குள்ளேயே உருட்டி வந்தேன். அப்பாவின் கையில் மரம் ஒரு நாய்க்குட்டி நடைபயிற்சிக்கு வருவதுபோல் நீரோட்டத்தால் அழகாய் நகர்ந்து வந்தது. எனக்கு அப்பாவிடம் பேசவேண்டும் போலிருந்தது. ஆனால், என் குரல் பலவீனப்பட்டுப்போயிருந்தது. தம்பி அவனுக்குப் பிடித்த ‘ராஜா கையவச்சா… அது ராங்கா போனதில்ல…‘ பாட்டை உற்சாகமாய் பாடியபடியிருந்தான்.
அதோ தெரிகிறது ஐஸ் பேக்கடரி, அப்பா சொன்ன இடத்துக்கு வந்துவிட்டோம். சைக்கிளை முதலில் கரைக்கு ஏற்றிவிட்டு, நானும் தம்பியும் மரத்தைக் கரையேற்ற அப்பாவுடன் இணைந்தோம் . சற்று களைத்திருந்தோம், என்றாலும் செய்துவிட்டோம். இழுக்க இழுக்க ஏதோ சிணுங்குவதை உணர்ந்தேன். ரொம்ப சின்ன சிணுங்கல். மரத்தின் பிசிறு கிளைகளில் சரசரவென பரவிய என் கண்களில் தட்டுப்பட்டது ஒரு கொலுசு. கிளையில் மாட்டிக்கொண்டு இருந்தது.
“அப்பா…“ என்றேன்
என் பெரிய கண்கள் இன்னும் பெரிதாய் ஆகிருந்ததை நானே உணர்ந்தேன். அப்பா நிதானமாய் அதை எடுத்து உள்ளங்கைகளை சேர்த்துப்பிடித்து, நடுவில் அந்தக் கொலுசு மின்ன உற்றுப்பார்த்தார். இரு கைகளையும் குவித்து மூடி, நெற்றிக்கு மேலே கைகளை உயர்த்தி ஏதோ ஜெபிப்பதுபோல் முணுமுணுத்தார். பிறகு தண்ணீரிலேயே அந்தக் கொலுசை விட்டுவிட்டு கரையேறினார்.
“அப்பா… ஆவி வந்துருமா மரத்தோட சேர்ந்து…? “ நடுங்கியது என் குரல்.
“அவ அப்டிலாம் அவ வாழ்ற எடத்தவிட்டு வந்துறமாட்டா மக்கா… இது அவளோட இடம், கடலோட காலடிலயே கெடக்க கொடுத்து வச்சவ அவ, நம்ம வீட்டு தங்கம் மாதிரி அவளும் ஒரு நெறஞ்ச சீமாட்டிலேய்… எந்த ஆபத்தும் வராது… “
– என்ற அப்பாவை எப்போதும்போல் முழுதாய் நம்பி, திரும்பிப்பார்த்தேன் ஓடக்கரையை. மொத்த ஓடக்கரையுமே நிலவொளியில், ஒரு கொலுசுபோல் மினுமினுத்தது. தங்கையைப்பார்க்கும்போது தோன்றுகிற அதே பெரியமனித உணர்வு எனக்குள் இப்போது பொங்கியது,
‘‘தங்கப்புள்ள… ‘‘
**********
– என்றேன் ஓடக்கரையை நோக்கி.