
சிந்தி : மகேஷ் நென்வானி
ஆங்கிலம் : அருணா ஜெத்வானி
தமிழில் : கு.அ.தமிழ்மொழி
*************************
ஓவியமும், சிட்டும் – I
ஓர் ஓவியத்தை வரைந்து
சுவரில் அதைத் தொங்கவிட்டேன் நான்
ஒவ்வொரு நாளும் அதனைக்
கலையின் ஒவ்வொரு கோணத்தில்
உற்று நோக்கிவந்தேன்
என்னின் மேலான படைப்பு அது
சில நாட்கள் கழித்து
ஒரு சிட்டு
காய்ந்த புற்கள்,
வைக்கோல்
இவற்றைக் கொண்டு
கூடொன்றைக் கட்டி
முட்டையிட்டது
அடைகாத்தது அதன் வெப்பத்தால்
முட்டைக்குள்ளிருந்து குஞ்சுகள்
மிகச்சிறிய இறக்கைகளுடன்
படபடத்து வெளிவந்தன
தாய்ப்பறவை
பூச்சி, தும்பிகளைத் தன்
அலகினால் ஊட்டியது
என் சிறந்த படைப்பினும்
முன்னோக்கித் தெரிந்தது
அந்தச் சிட்டுக்குருவி
*********************
ஓவியமும், சிட்டும் – II
நான் ஓர் ஓவியத்தைத் தீட்டி
சுவரில் மாட்டினேன்
அது
என் சிறந்த கலைவடிவம்
சில நாட்கள் கழித்து
ஒரு சிட்டு
ஓவியத்தின் பின்னால்
கூட்டைக் கட்டி
முட்டையிட்டது
அதிலிருந்து
சின்னஞ்சிறிய குஞ்சுகள்
வெளியே வந்தன
நான்
பொறாமை கொண்டேன்
அத்தாய்ப்பறவை மேல்.
***********************
ஓவியமும், சிட்டும் – III
ஓர் ஓவியம் வரைந்து
சுவரில் மாட்டிவிட்டேன்
அது என் சிறந்த படைப்பு
சில நாட்களுக்குப் பிறகு
ஒரு சிட்டுக்குருவி
ஓவியத்தின் பின்புறம்
கூட்டைக் கட்டியது
அன்றொரு ஓவியப்போட்டி
நானந்த கூட்டைப் பிய்த்து
தூர எறிந்துவிட்டு
என் ஓவியத்துடன்
போட்டிக்குச் சென்றேன்
அனைவரும் என் ஓவியத்தைப்
பாராட்டி
இப்போட்டியில்
என் ஓவியமே சிறந்ததென்று
கூறினர்
ஆனாலும்…
பரிசு வேறொரு ஓவியருக்கு
அன்று நான்
அந்தச் சிட்டுக்குருவியை
நினைத்துக்கொண்டேன்
ஒரே நிகழ்வை மூன்று கவிதைகளில் மூன்று மனநிலைகளோடு வித்தியாசப்படுத்தியிருப்பது அழகு…