![Valan](https://vasagasalai.com/wp-content/uploads/2020/08/Valan.jpg)
எழுத்துகளை அருந்தியவன்
இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்றில்தான் எனக்குப் போதை ஏறும். ஆனால், அன்று முதல் துளி நாவை நனைத்தபோது, `சுரீர்’ என்று போதை தலைக்கு ஏறிவிட்டது. அரை மயக்கத்தில் என் கோப்பையை நோக்கியபோது, தங்க நிற விஸ்கிக்கு பதிலாகக் கரிய திரவம் இருந்தது. அருகில் எடுத்து நோக்கியபோது, அவை மது அல்ல அவ்வளவும் எழுத்துகள் என்பதை கண்டேன். அதைக் கலக்கி உற்றுநோக்கியபோது, தமிழின் அத்தனை எழுத்துகளையும் கண்டேன். எனக்கு மது இல்லாமல் போனதில் வருத்தம்தான். ஆனால், அதன் போதையைவிடப் பன்மடங்கு போதை இதில் கிடைத்ததால், இன்னொரு மிடறு அருந்தினேன். ஆஹா… அற்புதம்! என் கண்முன்னே சொர்கம் விரிந்தது. இன்னொரு மிடறு அருந்தியபோது, சற்றே துணுக்குற்று என்னை அடக்கிகொள்ள முயன்றேன். நன்றாக இருந்தாலும், இது உயிரைப் பறிக்கும் போதை. அந்த முழு போதையில் கோப்பையை விட்டெறிந்து மயங்கிப்போனேன். இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில், அப்போது சிந்திய எழுத்துகளைத்தான் இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
**********
பேரிடர் இசைக் கலைஞன்
நகரத்தில் வைரஸ் பெருந்தொற்றுப் பரவும் வரை, அவனைத் தெருவோர இசைக் கலைஞன் என்றுதான் நினைத்திருந்தார்கள். இதுவரை யாருமே அறிந்திராத கிண்ணரம் போன்ற அவனுடைய இசைக் கருவியை மீட்ட ஆரம்பித்ததும், மயக்கும் இசையின் வழியாக வைரஸ் அந்தப் பெருநகரத்தின் வீதியெங்கும் பரவத் துவங்கியது. முதலில் இரண்டு அல்லது மூவரைப் பாதித்த வைரஸ், இசையின் உச்சத்தில் ஆயிரம் பேருக்கும், பின் லட்சம் பேருக்கும் பரவியது. எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னொரு நாளில், இன்னொரு இசையின் வழியாக வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டத்தை அந்த நகரில் அவன் ஏவிவிட்டான். வெகுண்டெழுந்த மக்கள்திரள், அந்த இசைக் கலைஞனைப் பிடித்து, அவன் கண் முன்பாக அவனது மர்ம இசைக் கருவியை உடைத்துப் போட்டது. கோபம்கொண்ட மக்கள் கூட்டம், அவன் இதயத்தில் கத்தியைச் சொருகியபோது, இன்னொருபுறம் அந்த நகரவாசிகள் ஒருவிதமான பைத்தியக்காரதனத்துடன் ஒருவரையொருவர் கடித்துத் தின்று கொண்டிருந்தார்கள். இவ்வாறாக அந்த மாய இசைக் கலைஞன் கொலையுண்டபோது, அந்த நகரமும் இல்லாமல்போனது.
**********