குரல்கள்
பெரும் சனங்களின்
வதைகள் நடக்கும் பொழுதெல்லாம்
உங்கள் குரல்கள் என்னை அலைகழித்துக்கொண்டேயிருக்கின்றன
தலையீடுகளற்ற பெருவெளியில்
என் குரல் உயர்த்த விரும்புகின்றேன்
என்னால் இயலவில்லை
குரலெழுப்ப முனையும் நேரங்களில்
என் முதுகெலும்புகள்
முறிந்துவிடும் சத்தம் கேட்கின்றது
குரலை சில கரங்கள்
அழுத்திப் பிடிப்பதால்
ஈனஸ்வரத்தில் முனகுகின்றேன்
குருதிகளில் தோய்ந்த முகங்கள் ஓங்கி அறைகின்றன என்னை
சில சமயங்களில்
நிர்பந்தங்களின்
நெரிசல்களில்
சிக்கிக்கொள்வதால் ஆமை போல
கூட்டுக்குள் மறைத்துக்கொள்கிறது வெட்கம்
யாரேனும் குரலற்றவர்களின் உரிமைக்காக
குரல் கொடுத்தால்
என்னையும் தேடிப் பாருங்களேன்.
******
மௌனச் சிறகுகள்
அழுந்திக் கிடக்கும் சொற்கள்
சொல்லிய சொற்கள்
சொல்லாத சொற்கள்
அனைத்தும் சிறகு முளைத்துப் பறக்க எத்தனிக்கின்றன
உயிர் நெருங்கி வருடிய வசீகர சொற்களை
உள்ளங்கைகளில் ஏந்தி
கனவுகளின் தோற்றங்களைக் கண்டு நிறைந்து
அணைத்துக் கொள்கின்றது மனஉலகம்
அழுத்தி வைத்திருந்த சொற்கள்
வெடித்து வெளிவருகையில்
கண்ணீர்த் துளிகளில் கரைந்து
துயரங்களை துடைத்துச் செல்வதும்
அவ்வளவு சுலபமில்லை
மௌன முடிச்சுகளில் இறுகிக் கிடக்கும்
நேசம் மிகுந்த வார்த்தைகள் உள்ளத்தை உடைத்து
வெளியேறுகையில்
சூரிய வெளிச்சத்தில் ஒளிர்ந்தும்
இருளின் கருமையில் கரைந்தும்
காலநதியில் மிதந்தும்
நெருப்பாற்றில் கனன்றும்
காற்றின் திசைகளுக்கேற்ப பறந்தும் தன்னைத் தானே தொலைத்துக்கொள்கின்றன
சில நேரங்களில்
மௌனத்தில் ஆழ்ந்து
உருவமில்லா உயிராகி
படிமங்களாக
அழுந்திக்கொள்ளும் வார்த்தைகள்
மன அடுக்கின் அகச் சுவர்களில்
தன் தடயங்களைப் பதித்து
காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன
********