இச்சிறைக்கு வருவதற்கு முன்பு
எனது எடை எவ்வளவு இருந்ததென எனக்கு ஞாபகம் இல்லை
இச்சிறைக்கு வருவதற்கு முன்பு
எனக்கு இருபத்தைந்து வயது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருந்தது
இப்போது எனது வயது முப்பத்தைந்து என்று அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருக்கும்
இச்சிறையில் எல்லா நாட்களிலும் நான் துயரத்துடனும் இருந்ததில்லை
அதை ஒப்புக் கொள்கிறேன்
இச்சிறையில் எல்லா நாட்களிலும் நான் மகிழ்ச்சியுடனும் இருந்ததில்லை
அதையும் ஒப்புக் கொள்கிறேன்
இச்சிறையில் நுழைந்தபோது என்னை அழைத்து
என்னைப் பற்றிய குறிப்புகளை
உடலில் உள்ள அங்க அடையாளங்களை
அந்த இளம் சிறையதிகாரி
உறுதிசெய்து கொண்டதை நினைவிற்கு மீள் கொணர்கிறேன்
இச்சிறையில் எனக்கு நண்பர்கள் உண்டு
அவர்களில்
சிலர் எனது வயதை ஒத்தவர்கள்
சிலர் என்னைவிட மிக இளம் வயதினர்
சிலர் என்னைவிட வயதில் மூத்த வயதினர்
தொடக்கத்தில் இச்சிறை அச்சத்தைத் தந்தது
சில நாட்களிலேயே அச்சம் தகர்ந்தது
சிறை கூட அழகான தோட்டமாக இருக்க முடியுமா?
சிறைவாசியான நான் வானவில்லை ரசித்திருக்கிறேன்
இரவையும் நிலவையும் கூட ரசித்திருக்கிறேன்
இச்சிறையிலிருந்தபடி காதல் கவிதைகள் கூட எழுதியிருக்கிறேன்
அவை யாருக்கானதாக இருக்கும்
நிச்சயம் இப்போது வரை அவை யாருக்கானதென எனக்கும் கூட தெரியாது.
***
நினைவிலிருந்து தப்பிய
சொல்லொன்று
தூரிகையில் இருந்தது
நான் நனவிலியாக இருந்த தருணத்தில்
காகிதத்தில்
தன்னைத் தானே
வெளிக்காட்டிக் கொண்டது
உண்மையில் அப்போது
நான் எனது வெளிச்சமற்ற
அறையில் அமர்ந்திருந்தேன்
ஒளியின் நிழலுக்காக.
******
– latchumanaprakasam@gmail.com –