உங்களுக்கு லெனினைத் தெரியுமா?
தோழர் லெனினைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம்.. தெரியுமே அவர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்தார், புரட்சிக்கு வழிகாட்டினார். ரஷ்ய மக்களுக்கு தலைவர். சரி.. இப்போது எதற்காக அவரைப்பற்றி என்கிறீர்களா?
லெனின் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவராக இருந்தார், ஆனால் ‘கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்’ என்பதல்ல அவருடைய வரலாற்றுப் பாத்திரம். அதையும் தாண்டி வரலாற்றை முன்னோக்கி உந்தித் தள்ளிய மாபெரும் தனிநபர் என்பது தான் தோழர் லெனினுக்கு வரலாறு அளித்திருந்த பாத்திரம். அதற்காக அவர் அமர்ந்திருந்த இருக்கைதான் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பொறுப்பு.
இன்று தோழர் லெனினுடைய 150 வது பிறந்தநாள். லெனினுடைய இந்த பிறந்தநாளில் வரலாறு அவருக்கு அளித்திருந்த இடத்தையும், அந்த இடத்திலிருந்து அவர் வரலாற்றுக்கு ஆற்றிய பங்களிப்பையும் அறிந்துகொள்வதன் மூலம் தோழர் லெனினை புரிந்துகொள்ளலாம்.
வரலாற்றை உருவாக்குபவர்கள் யார்? அதிகாரத்தின் உயர்ந்த பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருக்கும் மாபெரும் தனிநபர்கள் தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள். உதாரணத்திற்கு அலெக்சாண்டர் போன்ற அரசர்களும், எலிசபெத் போன்ற அரசிகளும் தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்றுதான் பாமர மக்கள் நம்புகிறார்கள். பாமரர்கள் மட்டுமல்ல, மெத்தப்படித்த வரலாற்று அறிஞர்களும் கூட அப்படித்தான் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின்படிதான் வரலாற்றையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் எந்த தனிநபரும் வரலாற்றை உருவாக்குவதில்லை, உருவாக்கவும் முடியாது. மாறாக வரலாறுதான் தனிநபர்களை உருவாக்குகிறது. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலகட்டத்திற்குப் பொருத்தமான, எதிர்காலத்தை முன்னோக்கி பார்க்கக்கூடிய தொலைநோக்குப் பார்வை கொண்ட மாபெரும் மனிதர்களை வரலாறு படைக்கிறது.
ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடிஸ், அலெக்சாண்டர், புத்தர், மார்க்ஸ் போன்ற மாபெரும் தனிநபர்கள் அனைவரையும், குறிப்பிட்ட காலகட்டத்தின் தவிர்க்கவியலாத விளைவுகளாக வரலாறுதான் பிரசவிக்கிறது.
இந்த மாபெரும் மனிதர்களிலும் வெகுசிலர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். உலக வரலாற்றில் அத்தகைய மாமனிதர்களில் முதன்மையானவர் மார்க்ஸ். ஏனெனில் மனிதகுலம் தோன்றியதிலிருந்து பல்லாயிரமாண்டுகளாக நிலவி வந்த அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கருத்துக்களை எல்லாம் தனது சிந்தனைகளால் தலைகீழாக புரட்டிப் போட்டவர் மார்க்ஸ். மார்க்சுக்குப் பிறகு அத்தகைய மாபெரும் தனிநபராக வரலாறு கண்டறிந்த மனிதர்தான் லெனின். லெனினுக்கு முன்பும் வரலாற்றில் பல புரட்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் லெனின் தலைமை தாங்கிய ரஷ்யப் புரட்சி என்பது மனித குலத்தின் வரலாற்றிலேயே மாபெரும் சிந்தனைத் திருப்பத்தை ஏற்படுத்திய மார்க்சின் கருத்துக்களால் உள்வாங்கப்பட்ட புரட்சியாகும்.
லெனின் தலைமையில் நடந்த ரஷ்யப்புரட்சி என்பது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. ரஷ்யப் புரட்சிக்கு முன்பு இங்கிலாந்திலும், பிரான்சிலும், ஐரோப்பாவின் பிற நாடுகளிலும், அமெரிக்காவிலும், ஆசியாவில் ஜப்பானிலும் கூட புரட்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் அந்த புரட்சிகள் எல்லாம் ஏற்கெனவே நிலவிய பழைய சமூக அமைப்புகளிடமிருந்து வடிவத்தில் மட்டுமே வேறுபட்டிருந்தன. புரட்சியின் மூலம் வீழ்த்தப்பட்ட பழைய சமூக அமைப்புகளின் இடத்தில் எழுந்து நின்ற புதிய சமூகங்கள் பழைய சமூகத்திலிருந்த அனைத்தையும் ஒழித்துக்கட்டிவிடவில்லை. மாறாக அவற்றைப் புதிய வடிவில் வரித்து கொண்டன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நீடித்து வந்த வர்க்க வேறுபாடுகள் இந்தப் புரட்சிகளால் ஒழித்துக்கட்டப்படவில்லை. மனிதனை மனிதன் சுரண்டுவது ஒழித்துக்கட்டப்படவில்லை. பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் அரசு இயந்திரம் ஒழித்துக்கட்டப்படவில்லை. பெண்களை நுகர்பொருட்களாகக் கருதும் ஆணாதிக்கம் ஒழிக்கப்படவில்லை. வறுமை ஒழிக்கப்படவில்லை. கொலை, கொள்ளை இருந்தது, திருட்டு, விபச்சாரம் இருந்தது, அரசு அமைப்பில் லஞ்சம், ஊழல் இருந்தது.
பழைய சமூக அமைப்பை புரட்சியின் மூலம் வீழ்த்தி புதிதாக உருவாகி எழுந்த சமூகங்கள், பழைய சமூக அமைப்பின் ஒடுக்குமுறைகளையோ, சுரண்டலையோ ஒழித்துக்கட்டவில்லை. மாறாக அனைத்தையும் புதிய வடிவத்திற்கு மாற்றியிருந்தன. பழைய வர்க்கத்தின் இடத்தில் புதிய வர்க்கம். பழைய ஒடுக்குமுறைக்கு பதில் புதிய ஒடுக்குமுறை என்று வடிவங்களை மாற்றியிருந்தனவே தவிர சுரண்டலும், ஒடுக்குமுறையும் மாறவில்லை. மாறாக முன்னிலும் உறுதியாக நிலைநாட்டப்பட்டிருந்தன.
இதன் காரணமாக ரஷ்யப்புரட்சிக்கு முந்தைய புரட்சிகள் ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கவில்லை. ஆனால் ரஷ்யப் புரட்சி, உலகில் அதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து புரட்சிகளிலிருந்தும் தன்மை ரீதியிலேயே வேறுபட்ட நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது. அதுவரை உலகில் நடைபெற்ற அனைத்து புரட்சிகளிலிருந்தும் தன்னை தீவிரமாக முறித்துக் கொண்டதாக இருந்தது ரஷ்யப்புரட்சி.
மனித சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கும் தனிச்சொத்துடைமையை ஒழிப்பதை தனது நோக்கமாகக் கொண்டிருந்தது ரஷ்யப் புரட்சி. அந்த நீண்ட நிகழ்ச்சிப் போக்கின் முதற்கட்டமாக அனைத்து நிலமற்ற கூலி, ஏழை விவசாயிகளுக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பகிர்ந்தளிக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்துவந்த சுரண்டல் ஒழித்துக்கட்டப்பட்டது. மனிதனை மனிதன் சுரண்டுவது சட்டவிரோதம் என்று சட்டமியற்றப்பட்டது. ரஷ்யாவின் ஒடுக்குமுறைக்கு கீழ் இருந்த பிற தேசிய இனங்கள் அனைத்தும் பிரிந்து சென்று சொந்த அரசுகளை உருவாக்கிக்கொள்வதற்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டது. அதுவரை இருந்த சீனாவின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
அனைவருக்கும் அவரவரின் திறமைக்கேற்ப வேலைகள் உருவாக்கப்பட்டன. நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. கூட்டுப் பண்ணைகளில் விளைவித்த பொருட்களை எடுத்துச்செல்ல ஒவ்வொரு பண்ணைக்கும் பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இருந்தன. மாபெரும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளர்களிடமே விடப்பட்டது. பொருட்களை பதுக்குவதும், விலையை உயர்த்தி விற்பதும் சட்டவிரோதமாக்கப்பட்டது. அனைவருக்கும் ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழிக்கல்வி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. சிறு காயங்கள் முதல் மிகப்பெரிய விபத்துகள், அறுவை சிகிச்சைகள் வரை அனைத்து மருத்துவ சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. உலகின் ஆறில் ஒரு பகுதியான இரசியா ஐந்தே ஆண்டுகளில் மின்மயமாக்கப்பட்டது. மதங்கள் பலாத்காரமாக ஒழித்துக்கட்டப்படவில்லை, மாறாக மத நிறுவனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டன. அத்துடன் மதத்திற்கு எதிரான பிரச்சாரங்களையும் அரசு மேற்கொண்டது.
மனிதகுல வரலாற்றில் இதுவரை கடந்து வந்த எந்த சமூக அமைப்பிலும், சமூகத்தின் மொத்த உறுப்பினர்களுக்கும் உத்திரவாதம் அளிக்கப்படாத, அத்தியாவசிய தேவைகளுமான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும், வாக்குரிமை உள்ளிட்ட அனைத்துவகை ஜனநாயக உரிமைகளையும் வழங்கியது ரஷ்யப்புரட்சி.
புரட்சிக்குப் பிறகு லெனின் ரஷ்ய மக்களை நோக்கி கீழ்கண்டவாறு கூறினார்.
“உழைக்கும் மக்களே, இப்பொழுது நீங்கள்தான் ஆட்சி பீடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து அரசியல் விவகாரங்களையும் நீங்கள் உங்களுடைய சொந்தக் கரங்களில் எடுத்துக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு யாரும் துணை புரியப்போவதில்லை. இப்பொழுது முதல் உங்களுடைய சோவியத்துகள் தான் அரசு அதிகார உறுப்புகள், முழு அதிகாரம் படைத்த சட்டமன்றங்கள். உங்களுடைய சோவியத்துகளின் மூலம் ஒன்று திரளுங்கள், அவற்றை பலப்படுத்துங்கள், நீங்களே நேரில் பணிகளில் இறங்குங்கள்”.
மார்க்சின் கருத்துக்கள் என்பவை மனிதகுல வரலாற்றில் அதுவரை சட்டமாகவும், நியாயமாகவும், புனிதமாகவும், சரியாகவும், தவறாகவும், நீதியாகவும் எழுதி வைக்கப்பட்டிருந்த அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி அறிவுத்தளத்தில் தகர்த்தெறிந்தது. அந்த ஒருபக்க சட்டத்தையும், நியாயத்தையும், சரியையும் தவறையும் மார்க்சின் கோட்பாடுகளைக் கொண்டு நடைமுறையில் தகர்த்தெறிந்தது ரஷ்யப் புரட்சி. அந்தப் புரட்சிக்கு தலைமை தாங்கிய மாபெரும் தலைவர்தான் லெனின்.
ரஷ்யப் புரட்சியைப் போன்றதொரு புரட்சியை உலகம் இதுவரை கண்டதில்லை. அது எவ்வளவு பரந்ததாகவும் விரிந்ததாகவும் இருந்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆழமானதாகவும் இருந்தது. மனிதகுல வரலாற்றில் இறுகிக்கெட்டி நிலைபெற்றுவிட்டதாக கருதப்பட்ட அத்தனை வகை கருத்துக்களையும் அது தகர்த்து சுக்கு நூறாக்கியது.
அத்தகைய புரட்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்றால் அவர் எத்தகைய மனிதராக இருக்க வேண்டும். மனிதகுலத்தின் ஆயிரமாண்டுகாலச் சமூகப் பொருளாதர அமைப்பை பெயர்த்தெடுக்கக் கூடிய, உலகம் இதுவரை கண்டிராத ஒரு புரட்சிக்கு தலைமைதாங்கி வழிநடத்தக்கூடிய தலைவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும். அவர் மிக உயர்ந்த அரசியல் மேதையாகவும், அசாதாரண உறுதிகொண்ட மனிதராகவும் இருக்க வேண்டும். வரலாறு அத்தகைய மனிதரை ரஷ்யப் புரட்சிக்கு அளித்தது. அவர்தான் லெனின்.
லெனினுடைய வாழக்கையைப் பற்றி எழுதுவதென்றால் பல தொகுதி நூல்களாக எழுத வேண்டியிருக்கும். அவ்வளவு பிரமிப்புகளும், ஆச்சரியங்களும் நிறைந்தது அவருடைய வாழ்க்கை. உண்மையில் இப்படி ஒரு மனிதர் வாழ முடியுமா என்று நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை அவருடைய வாழ்க்கை சம்பவங்கள். எனவேதான் ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் “சில நேரங்களில் லெனினை நோக்கும்போது இவர் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட மனிதரோ என்று கூடத் தோன்றுகிறது” என்று எழுதினார்.
லெனின் தனது ஐந்தாவது வயதிலேயே படிக்க கற்றுக் கொள்கிறார். பத்தாவது வயதில் அரசியல் நூல்களை வாசிக்கிறார். பதினைந்தாவது வயதில் மூலதனத்தை படிக்கத் துவங்குகிறார். லத்தீன் கற்றுக்கொள்ளும் தனது சகோதரிக்கு ஐந்தாண்டுகளில் கற்க வேண்டிய பாடத்தை இராண்டே ஆண்டுகளில் கற்றுக்கொடுக்கிறார்.
புரட்சிக்கு வழிகாட்ட வேண்டிய தீவிரமும் கொந்தளிப்புமான நாட்களில் தொடர்ந்து இருபத்தி மூன்று நாட்கள் உறங்காமல் வேலை செய்திருக்கிறார். நான்கு, ஐந்து நாட்கள் விழித்தபடி வேலை செய்வது என்பது அவருக்கு சாதாரணமானது.
ஓய்வொழிச்சலற்ற அதிகப்படியான வேலைப்பளு காரணமாக மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு லெனின் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மருத்துவர்கள் விதித்த ஒரே நிபந்தனை சிந்திக்கக்கூடாது என்பதுதான். சிந்தித்தால் இறந்துவிடுவீர்கள் என்கிறார்கள். சிந்திக்காவிட்டால்தான் இறந்துவிடுவேன் என்கிறார் லெனின்.
எனவே தான் லெனின் வரலாறு உருவாக்கிய மாபெரும் தனிநபர்களில் ஒருவரல்ல, அந்த தனிநபர்களிலேயே மிக முக்கியமான மாபெரும் தனிநபராவார்.
இன்று உலகமே கொரோனா அச்சத்தில் மூழ்கியிருக்கிறது. கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் கடுமையான துன்பத்திலும், துயரத்திலும் சிக்கி வதைபடுகிறார்கள். இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலகமே கதிகலங்கி நிற்கிறது என்பதைவிட முதலாளித்துவம் கதிகலங்கி நிற்கிறது என்பதுதான் சரி. இது முதலாளித்துவ சமூக அமைப்பின் அப்பட்டமான தோல்வி.
முதலாளித்துவத்தின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க சோசலிசம் மட்டும்தான் நம் முன்னுள்ள ஒரே மற்று. எனவே சோசலிசம் நோக்கி சிந்திப்போம். அதற்கான வேலைகளை முன்னெடுப்போம். அதற்கு எந்த வழியில் செல்வது? கடந்தகாலத்தில் நமக்கு வழிகாட்டிவிட்டுச் சென்ற மாமேதைகளான மார்க்சிய ஆசான்களிடம் இருக்கிறது அதற்கான வழிகள்.
மார்க்சையும், லெனினையும் வாசிப்பதன் மூலம் அவர்களுடன் நாம் எப்போதும் உரையாடலாம். அவர்களிடம் கேள்விகளைக் கேட்கலாம் பதில்களைப் பெறலாம்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக இருப்பது தனிச்சொத்துடைமையும், அதைப் பாதுகாக்கும் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பும்தான். அதை எவ்வாறு அடக்கம் செய்வது என்பதற்கான விடை அவர்களிடம் தான் இருக்கிறது. அதற்காக அவர்களை வாசிப்போம். சோசலிசத்தைப் படைப்போம்.
காம்ரேட் லெனினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!