இணைய இதழ்இணைய இதழ் 75சிறுகதைகள்

மாதுக்குட்டி – மித்ரா அழகுவேல்

சிறுகதை | வாசகசாலை

ந்தக் கடிதத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் முதல் வரியையே வாசித்துக் கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக இன்று காலையிலேயே என் வாசலில் மட்டும் கருமேகங்கள் கூடி நின்றன. பல காலமாக ஈரம் படாத நிலத்தில் இன்று பெருமழை பொழியப்போவதற்கான அறிகுறிகள் அனைத்து திசையிலிருந்தும் வரத் தொடங்கியிருந்தன.

அன்பு மிகுந்த மாதுக்குட்டிக்கு…’

என் வாழ்வின் எந்தக்கடிதமும் இத்தனை பிரியத்தை ஏந்தி வந்ததில்லை. ஒருவேளை வந்திருந்தாலும் அதனை நான் இத்தனை நெகிழ்வோடு ஏற்றுக் கொண்டதில்லை. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். ஒரு பேய்மழையில் நனைவதற்கான ஒத்திகையில் என் உடலின் ஒவ்வொரு திசுவும் ஈடுபட்டிருந்தன

கார்காலம் 

எவ்வளவு மழை பெய்தாலும், புயலடித்தாலும், சாலை எங்கும் நீரும் சேறுமாக நிறைந்திருந்தாலும் நான் மட்டும் விடாமல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருந்ததனால் மட்டுமல்ல. அவருக்காகவும்தான்

மேற்குறிப்பாக அப்போது நான் வேறொரு காதலிலும் இருந்தேன். ராஜாவுடன் முகிழ்ந்த வாழ்வின் முதல் காதல். எட்டாம் வகுப்பில் கவனிக்கத் தொடங்கி பத்தாம் வகுப்பில் கனிந்து விட்டிருந்த ஒரு உறவு. அதிர்ஷ்டவசமாக என் காதலன் என் வகுப்பு இல்லை. அதனால் பகுதி நேரமாக பள்ளிக்கு கணிதம் கற்பிக்க வந்த பயிற்சி ஆசிரியர் மீதும் என்னால் சுதந்திரமாக பிரியம் வளர்க்க முடிந்தது. அன்றைய காலத்தில், அது குறுகுறுப்பும் குற்றவுணர்வும் மிகுந்த வயசுக் கோளாறாகத்தான் எனக்கே தோன்றியது. இப்போதும் அது குறித்து திடமானதொரு முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் எனக்கு அவரைப் பிடித்திருந்தது

அதுவரை அந்த ஊர் கண்டதிலேயே வித்தியாசமான ஆண் அவர். வித்தியாசம் என்றால் வெளித்தோற்றத்தில் அல்ல. பழகும் பாங்கில், பரந்துபட்ட ஞானத்தில், நம்மை அசைத்துப் பார்க்கும் நிதானத்தில்நாள் முழுவதும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இல்லாத போதும் அவ்வப்போது அவரை நினைத்துக் கொண்டேன். இதற்காக என் காதலனை சந்திப்பதையோ அல்லது அவனுடன் மகிழ்வான தருணங்களை பகிர்ந்து கொள்வதையோ நான் தவிர்த்தேன் என நீங்கள் நினைத்தால், இல்லை. நான் அதனையும் மிகுந்த சிரத்தையோடு செய்து கொண்டிருந்தேன். என்னால் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடிந்தது. அவர் மீது நான் கொண்டிருந்த உணர்வு வேறு தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அதனை வெறும் காதலென்றோ, ஈர்ப்பு என்றோ நான் குறுக்கி விட விரும்பவில்லை.   

அந்த மழைகாலம் அவரும் நானும் தனியே பேசிப் பழகுவதற்கான வாய்ப்புகளை கை நிறைய ஏந்தி வந்தது. பெரும்பாலான மாணவிகள் பள்ளிக்கு வர மாட்டார்கள் அல்லது தாமதமாக வந்து வெகு சீக்கிரமே கிளம்பி விடுவார்கள். எங்கள் சிறிய கிராமத்தில் இருந்த சிறிய பள்ளி தன் மாணவர்களுக்கு அத்தனை சுதந்திரத்தை வழங்கியிருந்தது. ‘வடிவத்தில் இருந்த கூரை வேய்ந்த கட்டிடங்களில் காற்றோட்டத்திற்காகவும் வெளிச்சத்திற்காகவும் சுவரெங்கும் சாளரங்கள் அமைத்த, சுற்றிலும் தென்னை மரங்கள் மிகுந்த ரம்மியமான பள்ளி. அதன் ஒரு மூலை வகுப்பறையில் மழையின் கீதத்தை செவிப்பறை நிறைய நிறைய அள்ளிக் கொண்டே நானும் அவரும் அமர்ந்திருப்போம். தேர்வுக்கு தயாராகும் சொற்ப நிமிடங்களைத்தவிர ஏனைய நேரங்கள் அனைத்திலும் உரையாடுவோம். பாடப்புத்தகங்கள் தாண்டிய வெளியையும், எங்கள் கிராமம் தாண்டிய உலகத்தையும் அவர் எனக்கு தன் உரையாடல்கள் மூலம் காட்டினார்.

ஒருமுறை மதிய நேரத்தில் இருவரும் ஆளுக்கொரு சாளரத்தின் வழி வெளியில் உடைந்து கவிழும் வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தோம்.

மாதவி, நீ ஏன் இவ்வளவு மழையிலும் விடாமல் பள்ளிக்கு வரக் காரணம் என்ன..?”

என் பக்கம் பார்வையையே திருப்பாமல் கேட்டார். இதற்கு நான் என்ன பதில் சொல்வது, வீட்டில் சத்தம் படிக்க வாய்க்காது, பாடத்தில் சந்தேகம், மழையைப் பிடித்திருக்கிறது, உங்களைப் பிடித்திருக்கிறது என ஒரு நிமிடத்தில் என் மனம் ஆயிரம் பதில்களை அலசிப் பார்த்தது. அவர் என் பக்கம் திரும்பி நின்றார்

ராஜாவை சந்திப்பதற்காகவா?”

இது நான் பேச்சுக்காகக்கூட நினைத்துப் பார்க்காத பதில். இப்போது நான் ஆம் என சொல்ல வேண்டுமா இல்லை என சொல்ல வேண்டுமா ?

சார்.. அது..”

மாதவி இதில் எந்தத் தவறும் இல்லை. நீ என்னிடம் சொல்ல வேண்டிய அவசியமோ மறைக்க வேண்டிய அவசியமோ இல்லை. இந்த வயதில் முயன்று பார்க்க வேண்டிய முக்கியமான விசயங்களில் ஒன்று காதல். அதில் தவறு இல்லை. அதுவும் உங்கள் ஊரில் பள்ளி முடிந்ததுமே பெண்களுக்கும் திருமணம் செய்து விடுகின்றனர். அதன்படி யோசித்தாலும் இது ஒன்றும் தவறான விசயம் இல்லை. நீ பதறத் தேவையில்லை.”

நான் சிரமப்பட்டு புன்னகைத்தேன். வெளியில் பெய்யும் மழையை விடவும் அதிக வேகத்தில் எனக்குள் மழையடித்துக் கொண்டிருந்தது. இதனையே மோப்பம் பிடித்திருக்கும் மனிதருக்கு இவர் மீதான பித்து குறித்து தெரியாமல் இருக்குமா? தெரிந்தேதான் இந்த விசயத்தை எடுத்துப் பேசுகிறாரா?

நாம் வாழ்வில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் மாதவி. ஆனால் எடுக்கும் முடிவில் தெளிவாக இருக்க வேண்டும். நம் முடிவின் மீதும் செயல்களின் மீதும் நமக்கே நம்பிக்கை இருக்க வேண்டும். நமக்கு என்ன வேண்டும் என்பது முதலில் நமக்குத் தெரிய வேண்டும்.”

எனக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. நான்தான் எத்தனை அசடு

உனக்கும் எனக்கும் ஒரு பன்னிரண்டு வயது வித்தியாசம் இருக்குமா? உலகத்தின் பார்வையில் நானே இன்னும் பக்குவப்படாத வயதின் வேகத்தில் இயங்கும் இளைஞன்தான். உன்னுடன் நான் பேசிய எத்தனையோ விசயங்களை என்னை விட மூத்தவர்களிடம் பேசினால் சிரிப்பார்கள். நீ என் மீது கொண்ட பிரியத்தால் அத்தனையும் சகித்துக் கொண்டிருக்கிறாய்.”

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை

அப்படித்தான் மாதவி. ஆனால், நான் உன்னை நம்புகிறேன். இந்த வகுப்பில் இருக்கும் மற்றவர்களில் இருந்தும், இந்த கிராமவாசிகளிடம் இருந்தும் நீ வேறுபட்டவள். நான் அதனை ரசிக்கிறேன். நீ நன்றாக வர வேண்டும் என மனதாற விரும்புகிறேன். நீ படி மாதவி. உன்னால் அப்படி மட்டும்தான் என்னை பெருமைப்படுத்த முடியும். மகிழ்விக்க முடியும். என் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கு. மாதவி என் மாணவியென நான் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் சொல்வேன்.”

நேரமாகுது. நான் போகனும்

என சொல்லிக்கொண்டே வேகமாக என் பையை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியே ஓடினேன். அவரும் பின்னாலேயே குடையுடன் ஓடி வந்தார்.

மாதவி மழை வருது பாரு..”

உங்களுக்கென்ன அக்கறை? நான் நனையுறேன் என்னமோ போறேன்.” என கோபத்துடனும் இயலாமையுடனும் சொல்லிக் கொண்டே நான் கால் இடறுவதைப் பொருட்படுத்தாமல் வேகமாக சென்றேன்

அவர் என் அருகில் எனக்கும் சேர்த்து குடை பிடித்தவாறு நடக்கத் தொடங்கினார்

அப்பாடா.. உனக்கு இவ்வளவும் கோபம் வருமா?”

இன்னும் வரும்.. என்கிட்ட எதுவும் பேசாதீங்க. தேர்வு முடிந்து முடிவுகள் வந்ததும் பேசுங்க.. எல்லார்கிட்டயும் போய் மாதவி என் மாணவினு சொல்லுங்க..”

அவர் சிரித்தார். நானும் சிரித்தேன். என் வாழ்வின் முதல் மழை அதுதான்

தேர்வு முடிவுகள் வந்து விட்டிருந்தன. மெச்சும்படியாக எதுவும் இல்லையெனினும் அந்த கிராமத்திற்கு நான் பெற்றது பெரிய மதிப்பெண்தான். அன்று எதிர்பாராமல் பெய்த கோடை மழையில் நனைந்தவாறு பள்ளிக்கு சென்றேன். சொன்னது போல பெருமைப்பட்டுக் கொள்ள எனக்கென்று பள்ளியில் யாரும் இல்லை. அவர் தேர்வுக்கு முன்னரே வேறு ஊருக்கு சென்று விட்டிருந்தார்

ன்றைய மழைக்குப் பிறகான என் நடவடிக்கைகள் மாற்றம் கண்டிருந்தன. இருப்பதாக நான் கற்பனை செய்து கொண்ட உரிமையும், அதைக் காண்பிக்க முடியாத இயலாமையும் என்னைக் கலங்கடித்துக் கொண்டிருந்தன. ஆனால், எதுவுமே நடக்காதது போல ஒன்றுமே தெரியாதது போல அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இதற்கு மேல் இதில் நான் என்னதான் செய்ய முடியும்? அவர் கண்ணில்படும்படி ராஜாவுடன் சுற்றினேன். தேர்வு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக மகிழ்ச்சியுடன் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டேன். உச்சகட்டமாக ஒருநாள் ராஜாவை அழைத்து சென்று அவரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எந்த சலனமும் இன்றி அவன் படிப்பு விசயங்களை விசாரித்தார், எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் கேட்டார். திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் மேலே படிக்குமாறு அவனை அறிவுறுத்தினார். ராஜா ஆச்சரியமாக என்னை திரும்பிப் பார்த்தான். அதனைப் புரிந்து கொண்டு அவரும் என்னைப் பார்த்தார்.

பிறகொரு நாள், வழக்கம்போல பள்ளிக்கு வரும்போது அவர் வேறு ஊருக்கு சென்று விட்ட விசயத்தை செய்தியாக சொன்னார்கள். அவ்வளவுதானா எனத்தோன்றியது அவ்வளவுதான். ஆனால், என்னை இன்னும் சற்று முக்கியத்தன்மையுடன் நடத்தியிருக்கலாம், கிளம்பும் முன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு சென்றிருக்கலாம், அதற்கு நான் தகுதியானவள் என மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டேயிருந்தது

ள்ளியில் யாரும் இல்லை. நான் வெளிவளாகத்தின் தூணில் சாய்ந்து நின்று ஒரே சீராக கோடு கிழித்தது போல் வீழும் சாரலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்

மாதவி…”

பழக்கப்பட்ட குரல். அது என் காதில் விழுந்ததற்கும் நான் திரும்புவதற்கும் இடைப்பட்ட சிறிய நொடியில் என் கண்கள் கலங்கியிருந்தனபுன்னகையுடன் மற்றொரு தூணில் சாய்ந்து நின்றிருந்தார். நான் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு முறைத்துப் பார்த்தேன்

எத்தனை மதிப்பெண்?”

நீங்கள் பெருமைப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை.”

நீ எத்தனை மதிப்பெண் எடுத்தால் நான் பெருமைப்படுவேன் என உனக்கு தெரியுமா?”

நான் பதில் பேசாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். என்ன உணர்வு இது? எதற்கு இந்த மனிதன் இப்போது இங்கு வந்து நிற்கிறார்? நமக்காகவா? இருக்காதுஅவர் ஊரை விட்டு சென்று நான்கைந்து மாதம்தான் இருக்கும். கிட்டத்தட்ட நான் அவரை மறந்துவிட்டிருந்தேன். ஆனால், காய்ந்து பட்டுப்போனதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மரத்துண்டு ஒரு சிறிய மழைக்கு துளிர் விட்டு நிற்குமில்லையா அப்படித்தான் இருந்தது. பாரம் தாங்காமல் தொண்டையும் நெஞ்சும் வலித்தன. மூச்சு விட சிரமமாக இருந்தது

பேச மாட்டியா?”

சொல்லாம கொள்ளாம போய்ட்டு இப்போ எதுக்கு வந்து என்கிட்ட பேசனும்? நான் யாரு? எதோ ஒரு கிராமத்தில் இருக்கும் மக்கு மாணவி. படிப்பு கூட இப்போ முடிஞ்சாச்சு. இனி உங்களுக்கும் எனக்கும் பேச என்ன இருக்கு?”

அது அப்போ அவசரமா போக வேண்டிய சூழல்.”

..”

கல்யாணம் முடிஞ்சதா..?

என்ன என்னை பார்த்தா கிண்டலா இருக்கா?”

நீதானம்மா சொன்ன?”

நான் அழுகையை அடக்கிக் கொண்டு சிரித்தேன். அவரும் சிரித்தார். மேகங்கள் விலகி மீண்டும் வெயில் கீற்றாக அடிக்கத் தொடங்கியது

இளவேனிற் காலம் 

மேற்கண்ட சம்பவம் நடந்து ஏழு வருடங்கள் கடந்திருக்கும். நான் ஆசிரியர் பயிற்சி முடித்து எங்கள் கிராமத்தில் இருந்து தொலைவில் அமைந்திருந்த ஒரு பள்ளியில் பணி புரிந்து கொண்டிருந்தேன். மீண்டும் என் கிராமத்தையும், வீட்டையும் அந்தப் பள்ளியையும் வாழ்வில் காணவே கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தேன். அதற்கு, ராஜாவிற்கு வேறு பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தது என்பதைத் தவிர குறிப்பிட்டு சொல்வதற்கான தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. வேண்டுமானால் இப்படி சொல்லலாம், அந்த ஊரும் மக்களும் பார்த்த மாதவி மரித்துப் போயிருந்தாள். இப்போது இருக்கும் மாதவியை அவர்களால் அதே வாஞ்சையுடன் ஏந்திக் கொள்ள முடியாது எனத் தோன்றியது.

எந்தப் பிடிமானமும் பற்றும் இல்லாமல் தன்னைப் போல நகர்ந்து கொண்ட வாழ்வில் அவ்வப்போது பூச்செறிந்தது இந்த ஆசிரியர் பணிதான். சிறிய வகுப்புகளின் மழலைகளுக்கு கற்பித்தல் என்பது சுவாரஸ்யமான அதேநேரத்தில் பொறுப்பு மிகுந்த வேலை. நாளை எப்படி எப்படியோ வடிவம் கொள்ளப்போகும், எத்தனையோ இடர்களையும் இன்பங்களையும் தாங்கப்போகும் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை போடும் பொறுப்பு தொடக்கநிலை ஆசிரியர்களுடையது. அது ஒரு கொண்டையூசி வளைவுகள் நிறைந்த சாகசப்பயணம். சில குழந்தைகள் நம் மீது  அன்பைப் பொழிவர், சில குழந்தைகள் நம்மை வெறுத்து ஒதுக்குவர். இரண்டிற்குமே எந்தக் காரணமும் இருக்காது. அன்பையும் வெறுப்பையும் பாரபட்சமின்றி ஒரே தட்டில் வைத்து ஏந்திக் கொள்ளும் நிதானத்தையும் பக்குவத்தையும் அந்தக் காலம் எனக்கு கற்பித்துக் கொண்டிருந்தது

அப்போது பள்ளிக் கல்வித்துறை அந்த பிராந்தியத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கென ஒரு கல்விச்சுற்றுலாவை ஏற்பாடு செய்தது. சில பள்ளிகள் பயந்து ஒதுங்கிக் கொண்டன. மூன்று பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் துணிந்து ஒப்புக் கொண்டோம். ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரையும் சந்தித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் கேள்விக்கெல்லாம் பதிலளித்து, கட்டணம் கட்ட ஊக்குவித்து அவர்களை சுற்றுலாவுக்கு கிளப்புவது என்பது பாடம் கற்பிப்பதை விடக் கடினமான வேலையாக இருந்தது. ஆனால், ஆசிரியரின் கடமை கற்பிப்பது மட்டும் இல்லை என்பதை நான் முன்பே உணர்ந்திருந்தேன்

இரண்டு பேருந்துகளில் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளும் முதல் நாள் இரவில் கிளம்புவது, அடுத்த நாள் அதிகாலை சென்னை மெரினாவில் சூரிய உதயம் பார்த்து விட்டு, விவேகானந்தர் மாளிகை, கன்னிமாரா நூலகம், அருங்காட்சியகம், முதலைப் பண்ணை பிறகு கோவளம் கடற்கரையைப் பார்த்து விட்டு அன்று இரவே கிளம்பி மீண்டும் ஊர் நோக்கிப் பயணப்படுவதுதான் திட்டம். அதன்படி முதலில் எங்கள் பள்ளியில் இருந்து பேருந்து புறப்பட்டது. செல்லும் வழியில் மற்ற இரண்டு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை ஏற்றிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது பள்ளியில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு இறுதியாக அந்தப் பள்ளியில் சென்று பேருந்து நின்றது. நான் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்தேன். மாணவர்கள் ஒவ்வொருவராக ஏறிக்கொள்ள கடைசியாக அவர் தோன்றினர். அவர்தானா? அவரேதான். தாடியில் எண்ணி ஏழு முடிகள் நரைத்திருந்தன. அதைத்தாண்டி ஒரு மாற்றமும் இல்லை. அதே ஒளி. லட்சோபலட்சம் மின்னல்களின் ஒளியில் திகழும் தாழம்பூ. அனிச்சை செயலாக அவசரமாக தலையைத் திருப்பிக் கொண்டேன். என்னுடன் வந்த ஆசிரியர் அவரிடம் சென்று அறிமுகமாக, பேசிக் கொண்டே உள்ளே வந்து என் இருக்கையைக் கடந்து செல்கையில் ஒரு நொடிக்கும் குறைவான காலத்தில் எங்கள் கண்கள் சந்தித்துக் கொண்டன

மாதவி…”

என தன்னை மீறி உச்சரிக்க, அச்சொல் என் காதை வந்து சேர்வதற்குள் மின்சாரத்தை மிதித்தது போல மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன். ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டவாறு அவர் கடந்து சென்றார். அந்த இரவும் முழுவதும் என் முதுகுப்பக்கம் குறுகுறுத்தது கண்டிப்பாக அவர் பார்வையாகத்தான் இருக்கும் என எனக்கு நன்றாகத் தெரியும். அந்த இரவிலும் ஜன்னல் வழி முகத்திலறையும் காற்றையும் மீறி என்னுடலும் மனமும் புழுங்கின

தேர்வு முடிவுகள் வெளியான இரவு அவரை வழியனுப்பி வைப்பதற்காக நானும் பேருந்து நிலையம் வரை சென்றிருந்தேன்

உன்னிடம் அன்று சொல்லாமல் சென்றது தவறுதான் மாதவி. சொல்லி விட்டு சென்றிருக்க வேண்டும். நீ என்மீது அதிருப்தியில் இருப்பாய் என்றும் தெரியும். அதனால்தான் இன்று வந்தேன்..”

இதை ஏன் சொல்ல வேண்டும், எனக்காக இத்தனை தூரம் வர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பதுதான் மீண்டும் மீண்டும் எனக்குள் ஓடிக் கொண்டிருந்ததுஎங்களுக்குள் இருக்கும் உறவுதான் என்ன, சாதாரண வாத்தியார் மாணவி உறவா இல்லை அதனைத் தாண்டியதா, ஒரு வேளை அதனைத் தாண்டியது என்றால் எந்த எல்லை வரை, ஒரு சாதாரண மாணவியைக் காணத்தான் இப்படி ஓடி வந்தாரா, இதனை எப்படி எடுத்துக் கொள்வது என பல்வேறு சிந்தனைகள் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தன. ஆனால், கடலலையை மீண்டும் மீண்டும் வாங்கினாலும் அரித்துப் போகாமல் இருக்கும் கல்லைப் போல காட்டிக் கொண்டேன், உள்ளுக்குள் மூலக்கூறுகள் எப்போதோ இடம்பெயரத்தொடங்கியிருந்தன

அடுத்து என்ன?”

எதுவுமில்ல சார்..”

ம்ம்..”

மீண்டும் மழை தூறத் தொடங்க நிழற்குடைக்குள் இருவரும் ஒதுங்கினோம்

உன்னிடம் இன்னொரு விசயமும் சொல்ல வேண்டும்.”

சொல்லுங்க..”

எனக்கு திருமணம் முடிந்து விட்டது மாதவி..”

உருகத்தொடங்கிய மூலக்கூறுகள் மீண்டும் இறுகிக் கொண்டன. எங்கிருந்து அத்தனை ஆத்திரமும் ஆவேசமும் வந்ததென இப்போது வரை தெரியவில்லை

இதை சொல்றதுக்குதான் வந்தீங்களா..? இதை சொல்றதுக்காக எதுக்கு மறுபடி வரனும்?”

எனக் கத்தினேன். மழையின் சத்தம் என் கோபத்தை தின்று செரித்தது

மாதவி நீ இவ்வளவு கோபப்பட எதுவுமில்லை. என்னிடமிருந்து வேறு என்னதான் எதிர்பார்த்தாய்?”

ஆம், சரிதான். வேறு என்ன எதிர்பார்க்க முடியும்

நீ என் பிரியத்திற்குரிய மாணவி, என் பிதற்றல்களை காது கொடுத்துக் கேட்கும், அதனை மதிக்கும் உலகின் ஒரே ஜீவன். உன் மீதான என் அன்பு உலகின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. அதை நீ புரிந்து கொள்ள வேண்டும் மாதவி. என்னால் உனக்காக சில மைல்கள் பயணித்து வர முடியும். ஆனால் நாம் இருவரும் ஒன்றாகப் பயணிக்க முடியாது..”

உதடு விம்ம ஒரு வெளி ஆடவன் முன்பு அசிங்கமாக அன்று நான் அழுதேன். அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்

உனக்கு என் மீது இருக்கும் ஈர்ப்பை நான் அறிவேன். அதற்கு எதாவது ஒரு வகையில் நான் காரணமாக இருந்தேன் என நீ நினைத்தால் என்னை மன்னித்துக் கொள். மாதவி, உலகம் மிகப்பெரியது. நான் பார்த்த முதல் பெண் நீ அல்ல, கடைசி பெண்ணும் நீ அல்ல. அதேபோலத்தான் உனக்கும். ஆனால் உனக்கான வழிகள் அடைந்து கிடக்கின்றன. அதற்கு நான் பொறுப்பாக முடியுமா சொல்? தன் கிராமத்தை தவிர்த்த வெளியுலகம் அறியாத, தன் உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ள முடியாத, பத்தாம் வகுப்பிற்கு மேல் என்ன செய்வதென தெரியாத, பதினைந்து வயதிலேயே திருமணத்திற்கு தயாராகும் பெண்ணை என்னால் மாணவியாக மட்டும்தான் பார்க்க முடியும். இணையாக பார்க்க முடியாது.”

என சொல்லவும் பேருந்து வரவும் சரியாக இருந்தது. நான் எதுவும் பேசாமல் பேருந்தைப் பார்க்க

காலம் அனுமதித்தால் மீண்டும் சந்திப்போம்.”

என சொல்லி விட்டு பேருந்தில் ஏறிக் கிளம்பினார். நான் எவ்வளவு நேரம் அந்தப் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தேன் என்று எனக்கே தெரியாது. இருட்டிய பிறகு என் தந்தை வந்து அழைத்து செல்லும் வரை பித்துப் பிடித்தவள் போல சாலையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்

நான் யாரிடமும் எதுவும் சொல்லவில்லையே. நான் நேசிக்கிறேன் என்றோ என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றோ நான் யாரிடமும் கேட்கவில்லையே. எதற்காக யார் உபகாரமும் இன்றி தானே முளைத்து, தன் மகிழ்விற்காகப் பூத்துக் கொண்டிருந்த ஒரு காட்டுச்செடியின் மீது வந்து வெந்நீர் ஊற்றி விட்டுச் செல்லவேண்டும். ஆனால், அந்த நொடியில்தான் வைராக்கியத்துடன் கண்களைத் துடைத்துக் கொண்டு மேலே படிக்க வேண்டும் என முடிவு செய்தேன்

தோ இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது

அதிகாலை மெரினாவில் விடியத்தயாராக இருந்தது. கடற்கரையில் இருந்த கட்டண ஓய்வறைகளில் தயாராகிக் கொண்டோம். வேண்டுமென்றே அவர் கண்களில் படுவதைத் தவிர்த்தேன். முழுக்க முழுக்க என் மாணவர்களுடன் நேரத்தை செல்விட்டேன். மற்ற பள்ளி மாணவர்கள் தயாராவதற்கு முன்னதாகவே என் மாணவர்களை அழைத்துக் கொண்டு கடலை நோக்கி நடந்தேன். ஏற்கனவே இரண்டொரு முறை பார்த்திருந்த கடல்தான் இன்று என்னவோ அகண்டு விரிந்திருந்தது போலப் பட்டது. ஒவ்வொரு அலையும் கரமென மாறி எனை உள்ளிழுக்க நீள்வது போலத் தோன்றியது. குழந்தைகள் உற்சாகத்துடன் கடற்கரையில் விளையாடத் தொடங்கினர்

மாதவி..”

மிக அருகில் அவர் குரல் கேட்க, என் மனம்  பழக்கப்பட்ட நாயைப் போல அவரிடம் சென்று குழையத் துடித்தது. மூச்சை இறுகப் பற்றிக் கொண்டு திரும்பாமல் நின்றிருந்தேன்.

மாது.. நீ டீச்சராகிட்டயா?”

என மீண்டும் கேட்க, அதற்குள் என்னுடன் வந்த ஆசிரியர்,

இந்தக் கோடையில் யாராவது மெட்ராஸ் வருவாங்களா..? ஏன் சார்..நீங்களே சொல்லுங்க..” 

எனக் கேட்டபடி அருகில் வர, நான் நழுவிக் கொண்டேன்

அன்று முழுவதும் சென்ற இடங்களில் எல்லாம்  அந்த இடத்தின் முக்கியத்துவம் பற்றியும், அவை நம் வாழ்க்கைக்கும் கல்விக்கும் எவ்வாறு உதவப் போகின்றன என்பது குறித்தும் குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டே வர, அவர் கண்ணில் மின்னிய பெருமிதம் நான் அவரது மாணவி என்பதால் மட்டுமா என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை

இரவு கோவளம் கடற்கரையின் நிலவொளியில் குழந்தைகள் வட்டமாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கியிருந்தனர். எனக்குப் பசியில்லை, வயிறையும் மனதையும் எதோ ஒரு துயரம் கிளம்பி அழுத்திக் கொண்டிருந்தது. சற்று தள்ளிச் சென்று கடலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தேன்

இத்தனை வருடத்தில் எத்தனையோ முறை நான் ராஜாவை நேருக்கு நேர் சந்தித்திருக்கிறேன், அவனின் ஏளனப் பார்வையை கர்வத்துடன் எதிர்கொண்டிருக்கிறேன், அந்தப் பார்வையிலேயே அவனை கூனிக்குறுக வைத்திருக்கிறேன், சமயங்களில் அவனை நினைத்து அழவும் செய்திருக்கிறேன். ஆனால், இவர் பரண் மேல் தூக்கிப் போடப்பட்ட பழைய புகைப்படம். இந்நேரம் துருவேறி, அச்சு மங்கிப் போயிருக்க வேண்டிய வெற்றுத்தாள், அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். குழிதோண்டிப்புதைத்து விட்டதாகவோ, கூட்டத்தில் தொலைத்து விட்டதாகவோ நினைத்துக் கொண்டிருந்த நினைவுதான் இப்போது மினுங்க மினுங்க மேலெழுந்து கொண்டிருக்கிறது. நான் அவரை மறந்து விட நினைத்தேனா இல்லை மறைத்து வைக்க நினைத்தேனா என இப்போது குழப்பமாக இருக்கிறது

நீ அமிழ்த்த அமிழ்த்த மேலெழும் காற்றடைத்த கோளம்தான் மாதவி அன்பு.. உன்னால் அதை ஒருபோதும் மறைக்க முடியாது.”

என்றபடி அருகில் அமர்ந்தார் அவர்

எனக்கு யார் மீதும் அன்பு இல்லை. யாருடைய அன்புக்கும் நான் தகுதியானவளும் இல்லை.”

நீ அதை அப்படியா புரிந்து கொண்டாய்?”

திரும்பி முறைத்தேன். தெறிக்கும் கோபத்தை கண்ணீர் திரையிட்டு மறைத்தது

அதுசரி.. நீ எப்படி டீச்சரானாய்?”

ஏன்.. கிராமத்துக்காரி எதுக்கும் ஆக மாட்டான்னு நெனைச்சீங்களா?”

அவர் முகம் வாடியது. ஏன் அத்தனை முசுடாக நடந்து கொண்டேன் என அடுத்த நொடியே நொந்து கொண்டேன். பிற அனைத்து உணர்வுகளையும் முறியடித்துக் கருணை மேலெழுந்தது. அன்பிற்கு கருணையை மட்டும்தான் சுரக்கத் தெறிகிறது. கோபத்தையும், இயலாமையையும், ஆற்றாமையையும் கருணையின் வழி மட்டும்தான் காட்டத் தெரிகிறது

என்னை மன்னிக்க மாட்டாயா மாது..”

நான் உங்களுக்கு நன்றிக்கடன்தான் பட்டிருக்கேன். நீங்கள் சொன்னது போல அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் யாரையேனும் கட்டிக் கொண்டு காலம் கடத்தியிருக்க வேண்டிய மாதவி இன்று ஆசிரியையாகியிருப்பது உங்களால்தான். சில சமயங்களில் ஊக்கப்படுத்துதல் நேர்மறையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இப்படிக்கூட இருக்கலாம்.”

அவர் அமைதியாக கடலைப் பார்த்துக் கொண்டிருந்தார்

நீங்கள் தேடி வந்து என் அன்பை நிராகரித்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. நான் உங்களிடம் ஏற்றுக் கொள்ளுங்கள் என அதனைக் கொடுக்கக்கூட இல்லை. அன்று மட்டும் அவ்வாறு நடக்காமல் இருந்திருந்தால் இப்படி உங்களை சந்தித்ததும் முகத்தை திருப்பிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். ஓடி வந்து உங்கள் கைகளைப் பிடித்து என் கண்களில் ஒத்திக் கொண்டிருந்திருப்பேன். ஒவ்வொரு நாளும் உங்களை மனதிற்குள் ஆராதித்தபடி இருந்திருப்பேன். அந்த நிறைவைக்கூட எனக்கு கொடுக்கக்கூடாது என்றுதான் நீங்கள் நினைத்தீர்கள் இல்லையா?”

நீ அப்படி என்னை ஆராதித்துக் கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை மாதுஅதனால்தான் அப்படி செய்தேன். எப்படியாகினும் அதில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன் இல்லையா?”

இல்லை.. என் வசம் இருந்தது நான் வரித்து வைத்திருந்த எனக்கே எனக்கான ஓவியம். அதில் உங்கள் சாயல் இருந்தால் உடனே நீங்களாகி விட முடியாதுநீங்கள் மனசாட்சி இன்றி கிழித்துப் போட்டது ஒரு குழந்தை ஆசைஆசையாக வரைந்து காலம் முழுவதும் பொக்கிஷமாக சேமித்து வைத்திருக்க வேண்டும் என நினைத்த வண்ணக்கிறுக்கலை.. அது கடலை வரைந்திருந்ததால் கடல் எழுந்து என்னுடையது என உரிமை கொண்டாடிக் கொண்டு வர முடியுமா?”

எனை ஆழ்ந்து பார்த்தார். அந்தப் பார்வையில் அன்பு, வியப்பு, களிப்பு அனைத்தும் ஒருசேரத்தெரிந்தன

என் மாணவி மாதவியா இது? எங்கிருந்து இப்படியெல்லாம் பேசக் கற்றுக் கொண்டாய்?”

நான் மீண்டும் திரும்பி கடலைப் பார்த்தேன்.. ஆனால் ஆற்றாமை சற்றே அடங்கியிருந்தது. இரவு நேரப் புழுக்கத்தை மீறி என்னவோ குளிர்ந்தது

கையைக் கொடு..”

நான் அமைதியாக இருக்க, அவரே முதலில் எனை நோக்கி கையை நீட்டினார்

உன்னை இப்படிப் பார்க்க மனம் மகிழ்கிறது மாது.. கையைக் கொடு.”

நான் தயங்கியபடி நீட்டினேன். மென்மையாகப் பற்றுக் குலுக்கினார். அவ்வளவு நேரமும் இறுகிப்போயிருந்த பனிப்பாறை ஒன்று அந்த மெல்லிய கதகதப்பில் உருகத்தொடங்கியது. என்னையும் மீறி அந்தக் கைகளைப் பற்றிக் கொண்டு அழுதேன். அழுது கொண்டேயிருந்தேன்

இலையுதிர் காலம்

பிறகு சில வருடங்கள் கழித்து மலைப்பிரதேச பள்ளி ஒன்றிற்கு பயிற்சிக்காக சென்றிருந்த போது மாயவனை சந்தித்தேன். அந்தப் பள்ளியை நம்பியிருக்கும் சொற்ப பழங்குடியின மாணவர்களுக்காக அவரும் அங்கேயே தங்கியிருந்தார். அந்தத் தொடக்கப்பள்ளியின் அனைத்து வகுப்புகளுக்கும் அவர்தான் ஆசிரியர். உதவி ஆசிரியர்கள் வேண்டும் என்ற மாயவனின் தொடர் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அரசு அவ்வப்போது தற்காலிக ஆசிரியர்களை சில மாதங்களுக்கு அங்கு அனுப்பி வைக்கும். அப்படி ஒரு இலையுதிர்காலத்தில் நான் அங்கு சென்றேன். ஆனால், உண்மையில் மரத்துப் போன என் மனம் அங்குதான் துளிர்க்கத்  தொடங்கியது

பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் அங்கு எந்த வேற்றுமையும் கிடையாது, அனைவரும் இயற்கையின் பிள்ளைகள். அன்பைப் பரிமாறுவதற்கென்றே படைக்கப்பட்டவர்கள். தங்களுக்குக் கிடைக்கும் பழங்களையும், திணைகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே சில மைல்கள் பயணித்து  சுமந்து வருபவர்கள். உண்மையில், ஆசிரியர் என்றால் யார், கல்வியால் என்ன சாதிக்க முடியும் என்பது கூட தெளிவாக அவர்களுக்குப் புரியாது, எங்கள் மொழியும் தெரியாது. ஆனால் உலகம் முழுவதும் ஒருவரோடொருவர் உரையாடிக் கொள்வதற்கு உகந்த உன்னதமான மொழி ஒன்று இருப்பின் அது அன்புதானே. இந்தக்காலத்திலும் இத்தகைய மக்கள் வாழ்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மாயவன் அவர்களைக் கையாளும் விதமும், மதிக்கும் பாங்கும் என் மனதை நெகிழச் செய்தது. தன் வாழ்வில் ஒரு சிறு உயிருக்கும் தீங்கு நினைக்காத மனிதர் ஒருவர் இருப்பாரெனில் அது மாயவனாகவே இருக்கும் என உறுதியாக நம்பினேன். உண்மையில் பயிற்சி முடிந்து மீண்டும் அங்கிருந்து கிளம்பவே எனக்கு மனதில்லை

மாயவனைத் திருமணம் செய்து கொண்டேன். ஆனால், பிடிவாதமாக என் பழைய பள்ளியிலிருந்து மாற்றல் வாங்கவும், இப்போது இருக்கும் இந்த வீட்டை விட்டு அங்கே இடம்பெயரவும் மறுத்தேன். மாயவனாலும் அங்கிருந்து இங்கு வர முடியாது என எனக்கு நன்றாகத் தெரியும். பரஸ்பர புரிதலின் அடிப்படையில் நான் இங்கும் அவர் அங்குமாக வாழலாம், விடுமுறைகளை சேர்ந்து கழிக்கலாம் என முடிவு செய்தோம். இரண்டு குழந்தைகளையும் பெற்றோம். மீண்டும் என் மனம் அரிக்கத் தொடங்கியது. அவரைச் சந்திக்க வேண்டும்

கடைசியாக சந்தித்தபோது அவர் பணி புரிந்த பள்ளிக்கு என்னால் செல்ல முடியும். ஆனால் செல்லத்தான் வேண்டுமா? எதற்காக, எங்கிருந்து திடீரென மேல் எழுந்து வருகிறது இந்த குறுகுறுப்பு. இதற்கு மேலும் நான் யாரிடம் எதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது? ஆனால், இந்த எண்ணம் தோன்றியதில் இருந்து இரவும் பகலும் மனம் கிடந்து அடித்துக் கொண்டது. எனக்கு திருமணம் முடிந்து விட்டது, நான் இல்லறத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என அவரிடம் சொல்ல வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது

துணிந்து ஒரு மதியத்தில் அவர் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். இரண்டு மணி நேரம் ஆகலாம். பெருமூச்சுடன் இருக்கையில் சற்று சாய்ந்து கண் மூடினேன். மனம் என்னை மீறி அந்தக் கோடைகாலத்து இரவிற்கு சென்றது

அழுது சிவந்த முகத்துடன் நான் என் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவரும் தயக்கத்துடன் வந்து என் அருகில் அமர்ந்தார். பேருந்து ஊரை நோக்கி வேகமெடுக்கத் தொடங்கியது. விடியல் அவரவர் ஊரில்.. 

எல்லோரிடமும் சொல்லி விட்டேன்மாதவி என் மாணவின்னு.. கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன்.”

உங்களுக்கு இப்படி ஒரு பெருமையைக் கொடுக்க வேண்டுமென்பதற்காக நான் இத்தனை வருடங்களை வலி சுமந்து கடந்திருக்கிறேன். ஆனால், எனக்குத் தேவையானதை செய்ய வேண்டுமென உங்களுக்கு என்றேனும் தோன்றியிருக்கிறதா?”

உனக்குத் தேவையானது எதுவென நீ அறிவாயா மாதவி..?” யோசிக்காமல் கேட்டார்

நான் திக்குமுக்காடிப்போனேன். அந்த இரவிலும் அனல் காற்று வந்து முகத்திலறைந்தது. தீச்சுடரென தனியே எரிந்து கொண்டிருக்கும் மலர் மேலும் மேலும் வெப்பக்காற்றைத்தான் எதிர்கொள்ள வேண்டுமெனில் அதன் வாழ்வுதான் என்ன

நீ என் அன்பைத்தான் வேண்டுகிறாய் எனில் அதில் உனக்கு எந்த சந்தேகமும் தேவையில்லை. வாழும் நாள் வரையிலும் உனக்கான அன்பை நான் சுமந்து திரியத்தான் போகிறேன். அதனைத்தாண்டி என்ன வேண்டுமென்பதில் உனக்கும் தெளிவில்லைதானே..”

நீங்கள் ஏன்..”

தொண்டை அடைத்தது. அதைக் கண்டுகொள்ளாமல் அவர் பேச்சைத் தொடர்ந்தார்.

நான் திருமண உறவிலும், இல்லற வாழ்விலும் நம்பிக்கை இழந்து விட்டேன் மாது. அந்த உலகம் எனக்கானது அல்ல. நான் அதிலிருந்து மாறுபட்டவன், ஒரே நேரத்தில் நெருப்பாகவும் நீராகவும் இருக்க விரும்புபவன். ஆனால் திருமண வாழ்வு ஒரே நாளை மீண்டும் மீண்டும் வாழப் பணிக்கிறது. என்னால் என் விருப்பத்திற்கு எதையும் செய்ய முடிவதில்லை.”

அப்படியெனில்..”

மெதுவாக தலையசைத்தார்

நான் திருமண உறவில் இருந்துதான் விலகி விட்டேன். ஆனால் காதல் மீதான என் நம்பிக்கை இன்னும் பட்டுப்போய்விடவில்லை. ஒரு உன்னதமான காதலை என் வாழ்க்கைப்பயணத்தில் கட்டாயம் நான் அடைவேன் என உறுதியாக நம்புகிறேன். ஒரு பெண்.. இயற்கையின் அதியற்புதப் படைப்பென ஒருத்தி, என்னைப்போலவே நீராலும் நெருப்பாலும் ஆனவளை என் பயணத்தில் கட்டாயம் கண்டடைவேன்.”

பேருந்தில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க என் மனதில் பாலைப்புயல் வீசிக் கொண்டிருந்தது

ஏதோ ஒரு பெண்ணா? மீண்டுமா? நான் ஏன் எப்போதும் உங்களுக்கு நான்கில் ஒரு தெரிவாகக் கூட இருப்பதில்லை.”

இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. எனக்குமே அதை கேட்டிருக்கத்தேவையில்லை என தோன்றியது

நான் இதைக் கேட்டிருக்கக் கூடாது..”

மாது.. நான் உன்னை காயப்படுத்துவதற்காக நீ மீண்டும் என்னை மன்னிக்க வேண்டும்…  நான் சொன்னதுபோல, திருமணம் மற்றும் காதல் பற்றிய எனது அபிப்ராயங்கள் இப்போது மாறியிருக்கின்றன. இவை கனவுகளுடன் இருக்கும் ஒரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியாதவை.. கனவுகளின் போலித்தன்மையையும், அவற்றின் போதாமைகளையும் வாழ்வின் ஓட்டத்தில் கண்டுணர்ந்த மனிதர்களால் மட்டுமே அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்..”

“…”

மேலும்.. மாது.. நான் நேர்மையாக சொல்றேன், உன் அன்பின் தீவிரத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அதற்கான காலத்தை நான் கடந்து விட்டதாகத் தோன்றுகிறது. உனக்கு உன்னைப் போலவே அன்பின் தீவிரத்தில் திளைக்கும் துணை தேவை.. மத்திமத்தின் இறுதியில் நிதானமான, தர்க்க விசாரணைகளை நிகழ்த்தக்கூடிய பக்குவத்துடன் கூடிய காதல் உனக்கு தேவையில்லை. நீயும் உன் துணையும் காதலில் திளைத்து உங்களுக்கான பாதையையும் பயணத்தையும் கண்டறிய வேண்டும் மாது.. அதுதான் உனக்கு நல்லது.. என்னை நம்பு.. இதை நான் முழுக்க முழுக்க உன் நன்மைக்காக மட்டுமே சொல்கிறேன். நான் ஒரு தனிமரம்.. எந்த வசந்தத்தையும் யாருக்கும் தர முடியாதபடிக்கு சபிக்கப்பட்டவன்.. நீ கட்டாயமாக என்னை விட சிறந்தவனைச் சேர தகுதியானவள். திருமணம் செய்து கொள், நிறைவாக குழந்தைகளைப் பெற்றுக் கொள், நான் சொல்வது சரிதான் என உனக்கே தோன்றும்.”

என்னுடல் தகித்தது. திடீரென மீண்டும் அவர் வெளியாளாக மாறி வெகு தொலைவிற்கு சென்றதைப் போல் இருந்தது. மீண்டும் ஒருமுறை நான் ஒரு வெளி ஆடவன் முன்பு அழுதேன்

இறங்கும் போது கடைசியாக ஒருமுறை அவர் கண்களைப் பார்த்தேன். குருவிக்குஞ்சை கையில் ஏந்தி பறக்கவிடும் வாஞ்சையுடன் அவரும் என்னைப் பார்த்தார். அந்த வாஞ்சை என்னை வதைத்தது. இல்லை நான் எதிர்பார்ப்பது இது இல்லை. அப்போது அவரிடம் சொல்லிக் கொள்ள எனக்கு ஒன்றே ஒன்றுதான் இருந்தது

நீங்கள் தனிமரம் இல்லை. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் சுகதுக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ள காலம் முழுவதும் நான் தயாராக இருப்பேன். இதே பள்ளியில் பணிபுரிந்து கொண்டு, இதே முகவரியில் வசிப்பேன்.”

திருமணம் செய்து கொள் மாதவி..”

திடுக்கிட்டு கண் விழித்தபோது பேருந்து அவர் ஊரை வந்து சேர்ந்திருந்தது. அங்கு அவர் பெயரை சொல்லி விசாரிப்பது ஒன்றும் அத்தனை கடினமான காரியமாக இல்லை

பழைய ஆலமரம் ஒன்றின் அருகில் இருந்த புராதன நினைவு சின்னம் போல் விளங்கிய ஒரு வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார். அதன் அத்தனை அறைகளையும் புத்தகங்களால் நிரப்பி நூலகம் செய்திருந்தார். நான் அங்கு சென்று சேர்ந்த முன்மாலை நேரத்திலும் சில சிறுவர்கள் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தனர்.

என்னைப் பார்த்து வியப்புடன் முகம் மலர வரவேற்றார். அதே பழைய பெருமிதம் பொங்க அங்கிருந்தவர்களிடம் நான் அவரின் மாணவி என அறிமுகம் செய்து வைத்தார். இல்லை என சத்தமாகக் கத்தத் தோன்றிய உணர்வை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். என்னை நான் வெறுக்கும் அதே வாஞ்சையுடன் அந்த வீட்டின் பின்கட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கென சமையல் செய்யும் வசதியுடன் கூடிய சிறிய அறை இருந்தது. அங்கிருந்த கட்டிலில் என்னை அமரச் சொல்லி விட்டு, தேநீர் தயாரிக்கும் முஸ்தீபுகளில் இறங்கினார்

என்ன திடீர்னு டீச்சரம்மாக்கு என் ஞாபகம்?”

நான் அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். முன்பு பார்த்ததை விடவும் அதிக முடிகள் தலையிலும் தாடியிலும் நரைத்திருந்தன. முகத்திலும் தோலிலும் முன்னினும் அதிக பிரகாசம் கூடியிருந்தது. பார்வை கூர்மையாகியிருந்தது. அந்தப் புன்னகை மட்டும் வசீகரம் மாறாமல் இன்னும் அப்படியே இருந்தது

அது.. எனக்கு திருமணம் முடிந்து விட்டது.. மாயவன்.. டீச்சர்தான். இரண்டு குழந்தைகள்.”

துணியை வைத்து பாத்திரத்தை எடுக்க முயன்று கொண்டிருந்தவர் எதிர்பாராமல் கையைச்  சுட்டுக் கொண்டார். திரும்பி என்னை ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு

சந்தோசம்.. சந்தோசம்..”

நான் பதில் பேசாமல் அவர் நீட்டிய தேநீரை வாங்கிக் கொண்டேன்

உனக்கு எல்லாம் நல்லதாத்தான் அமையும்..”

உங்களுக்கு அமைஞ்சிடுச்சா?”

மீண்டும் என்னை ஆழமாகப் பார்த்தார். முகத்தை திருப்பிக் கொள்ளவோ குனிந்து கொள்ளவோ தோன்றாமல் நானும் அவரைப் பார்த்தேன்

நீ ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் வெவ்வேறு பெண்ணாகத் தெரிகிறாய் மாது..”

வயதும் அனுபவமும் சிலரை நிதானிக்க வைக்கிறது, சிலரை இன்னும் வேகங்கொள்ள வைக்கிறது..”

பெருமூச்சு விட்டுக் கொண்டார். அவரின் சிந்தனைகள் அந்த அறையில் இருந்து விலகி எங்கோ செல்லத் தொடங்கியதை நான் உணர்ந்தேன்

என்ன நூலகமெல்லாம்.. வாத்தியார் வேலை என்னாச்சு..?”

அதெல்லாம் ஏறக்கட்டி நாட்களாயிற்று.. நான் நினைப்பதை என் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும், அதில் பள்ளி நிர்வாகம் தலையிடுவதை நான் விரும்பவில்லை. இது என் இடம்.. இங்கு வருபவர்கள் என் பிள்ளைகள்.. இவர்களுக்கு நான் எதை வேண்டுமானாலும் கற்பிக்கலாம் இல்லையா?”

சரிதான்..”

நீ எப்படி இருக்கிறாய் மாது..?”

கனவுகளின் போலித்தன்மையையும், போதாமைகளையும் உணர்ந்து கொண்டவளாக..”

நீ எதையுமே மறக்கமாட்டாயா?”

அப்போது என் முகத்தில் நெளிந்த புன்னகை எனக்கே அத்தனை விசித்திரமாக இருந்தது. நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எதை எதிர்பார்த்து இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன்? இவரிடம் என்ன அங்கீகாரத்தை நான் பெற நினைக்கிறேன்?

என் பயணத்தில் காதலைக் கண்டடைவேன் என்ற நம்பிக்கை தகர்ந்து வருகிறது மாது.. எனக்கான பெண்ணை இனி நான் சந்திக்கவே போவதில்லை எனத் தோன்றுகிறது. என் விதி.. ஒரு காதலின் கதகதப்பை அனுபவிக்காமலேயே என் காலம் முடிய வேண்டும் என்று இருக்கிறது போல..”

இல்லை. மூன்றாவது முறையாக ஒரு வெளி ஆடவன் முன்பு அழுது விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்

சரி அதை விடு.. நான் இசை கற்றுக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? என் காதலின் வேட்கையை கலையின்பால் திருப்பி விட முடிவு செய்திருக்கிறேன். ஒரு கலையில் லயித்து ஒன்றிவிடுவது போன்ற உச்சத்தை வேறு எந்த உணர்வால் நமக்கு கொடுத்து விட முடியும்?”

நான் தேநீர் கோப்பையை வைத்து விட்டு எழுந்தேன்

நேரமாகி விட்டது.. மறுபடி சந்திப்போம்.”

அவரும் எழுந்தார் உரிமையாக என் கைகளைப் பிடித்துக் கொண்டார்

நீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி மாது.. இன்றைய தேதிக்கு என்னைத் தேடி வரும்படி இருக்கும் ஒரே உறவு நீதான்.. சொல்.. உனக்கு என்னிடம் இருந்து ஏதேனும் வேண்டுமா? நான் உனக்காக என்ன செய்யட்டும்?”

எதுவும் வேண்டாம். வருகிறேன்.”

என சொல்லி விட்டு விறுவிறுவென பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். இலைகளை உதிர்த்த மரங்கள் காதலை இழந்த கைம்பெண் போல ஆங்காங்கே நின்று கொண்டிருந்தன. நான் நடந்த சாலையெங்கும் காய்ந்த சருகுகள் மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்தன

இது நடந்து இப்போது நான்காண்டுகள் கடந்து விட்டன

அன்பு மிகுந்த மாதுக்குட்டிக்கு.. 

இந்த வரிகளைத் தாண்டி கீழே செல்வதற்கே நான் மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருந்தது

அன்பு மிகுந்த மாதுக்குட்டிக்கு… 

வீட்டில் தாழ்வாரத்தில் வீழும் மழையைப் பார்த்துக் கொண்டே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த மழை பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய மழைகாலத்தை எனக்கு நினைவுப்படுத்துகிறது

இந்தக்கடிதம், எனக்கென விதிக்கப்பட்ட விதிகளையும், எல்லைகளையும் மீறியதாக இருக்குமா எனத் தெரியவில்லை. அப்படி மீறியதாக இருப்பின் நீ வழக்கம்போல என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு உன்னைத் தேடுகிறது மாது. ஒரு துர்சொப்பனத்தினால் கண் விழித்த இரவில் எனக்கென யார் இருக்கிறார்கள் என யோசிக்கத் தொடங்கினேன். மற்ற அனைவருக்கும் என்னுடன் பழக, என்னை நேசிக்க ஒரு காரணம் இருந்தது. தேவை இருந்தது. அத்தேவை முடிந்ததும் என்னை விலகவும் செய்தார்கள். அதில் எனக்கு எந்தப் புகாரும் இல்லை. என் மீதான அன்பின் காரணமாக மட்டுமே இத்தனை வருடங்களாக என்னுடன் பயணிப்பவள் நீ மட்டும்தான் மாதவி

நீ உன்னதமான பெண். உனக்கு என் மீது இருப்பது பரிசுத்தமான நேசம். உன்னை, உன் அன்பை நான் இன்னும் சற்று சிரத்தையுடன், மரியாதையுடன் அணுகியிருக்கலாம் என்ற எண்ணம் சமீப காலமாக என்னுள் பெருகத் தொடங்கியிருக்கிறது. நீ அதற்குத் தகுதியானவள். நான் உன் எளிய அன்பின் மீது உறுத்தலின்றி ஒரு வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன் என்பது சமீபமாகத்தான் உறைக்கத் தொடங்கியிருக்கிறது. வெட்கம் விடுத்து சொல்கிறேன், எனக்கு உன்னைத் தேடுகிறது மாதவி

நேரில் வந்து விடலாம் என்றுதான் இரண்டொருமுறை கிளம்பினேன். நீ எத்தனை காலம் ஆனாலும் எனக்காக அதே முகவரியில் வசிப்பாய் என எனக்குத்தெரியும். ஆனால் அது அத்தனை கண்ணியமாக இராது. என் வேண்டுதல் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீ ஒருமுறை என்னை வந்து சந்திக்க வேண்டும். ஒரே ஒரு முறை.. எதற்காகவென்று எனக்குத் தெரியவில்லை. மாணவியாக மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட உன்னை என் மீதான அன்பைத் தளும்ப சுமக்கும் சக மனுசியாகக் காண விரும்புகிறேன். வருவாயா?

படித்து முடிக்கையில் என் கண்கள் நிறைவில் நிறைந்திருந்தன. இத்தனை வருடங்களாக நான் இதைத்தான் தேடினேன். இதற்காகத்தான் ஏங்கினேன். விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் துடித்தேன். என் வாழ்வின் மிகப்பெரிய வெற்றிடம் இப்போது நிரப்பப்பட்டிருக்கிறது.

கண்களை அழுந்தத்துடைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டேன். உடனே மாயவனுக்கு கடிதம் எழுத வேண்டும், ஊரையும் வீட்டையும் காலி செய்து கொண்டு உங்களுடனே வந்து விடுகிறேன் என. அதற்கு முன்னால் ஓடிச் சென்று சுவரோடு சாய்த்து வைக்கப்பட்டிருந்த வயலினை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அந்த இலையுதிகாலத்திற்கு பிறகு வாங்கிய வயலின்

நான் வாசிக்க வாசிக்க வெளியே மழை பொழியத் தொடங்கியது. பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய மழை. மாதுக்குட்டிக்கான மழை

*********

mithraalaguvel@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button