இணைய இதழ்இணைய இதழ் 87சிறுகதைகள்

மாசற்ற சோதி! – மணி எம் கே மணி

சிறுகதை | வாசகசாலை

சிவதாசன் ஒரு சிறுகதை எழுத விரும்பினான். ஆனால், அவன் எண்ணத்துள் அது படிந்து அமரவில்லை. வந்தால் வருவேன், வாராமலும் போவேன் என்கிற நழுவலில், பல முறையும் திரண்டது போலவே சரிந்தது. முற்றிலும் அது வேண்டாம் என்று எடுத்த முயற்சியைக் கைவிட்டால்தான் என்ன? இந்தக் கதையை நீ ஏன் எழுதவில்லை என்று கேட்கவா போகிறார்கள். உலகத்துக்கு எவ்வளவோ வேலை என்று தெரிந்தாலும், தன்னுடைய வேலையைப் பார்க்கும்போதெல்லாம் குன்றின் மீதிருந்து எழுகின்ற சூரியன் போல எதிர்பாராத நேரங்களில் வெளிப்பட்டு, அந்த இடையூறு அவனை வலிப்பது போல கிள்ளுகிறது. 

உலகம் முழுக்க உள்ள கதைகளின் ஜீவனைப் பற்றிக் கொள்ள ஓடத்துவங்கி வெகு காலமாகிறது. எழுத்தில் வந்தது சொல்லிக் கொள்கிற அளவில் இல்லை என்றாலும், ஒரு சினிமா ஆளாக அவன் அலைந்த பிரதேசங்கள் அளவிடற்கரியவை. தேவையோ, தேவையற்றதோ முழுமை பெற்ற கதைகளுடன் சந்தோஷிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு நேரத்தில்தான் தாசன், நேசமூர்த்தியுடன் திருப்பூருக்கு வந்து இறங்கி, மெயின் ஜங்ஷனில் ஒரு செருப்புக் கடைக்கு மேலே இருந்த ஒற்றை அறையில் கதை பேச பொருந்திக் கொண்டான். செலவை எல்லாம் செருப்புக் கடையின் முதலாளியான ஒரு பையன் பார்ப்பதாகத் தெரிந்தது. அது நல்ல அறிகுறியாக இல்லை. கதை எழுதி முடிந்ததும், தருவதாக வாக்களிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் எங்கிருந்து வரும் என்பதை தாசன் அலசி இருக்க மாட்டான். ஒரு குருட்டு நம்பிக்கையில், வேலை ஓடிற்று. அதை முடித்த நாள் பெரிதும் பரவசமாக இருந்தது.

எடுத்து சொல்ல வேண்டிய ஒரு மானுட அவலத்தைக் கைப்பற்றி அதை முழுமையாக கொண்டு வந்து விட்டதாக ஒரு நிறைவு. 

வறுமையின் கோரங்கள் எத்தகையது என்பது தெரியும். அபு படிப்பதைத் தவிர தனக்கு மீட்சி கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறான். தூரத்தில் அங்கே கிராமத்தில் அவனது அம்மா அவனுடைய வருகைக்கு காத்திருப்பது கூட அவனுக்கு கவனமில்லாமல் போகிறது. ஒரு நாள் அவன் அங்கே வந்து அம்மா உயிரோடு இல்லை என்பது அறிந்து அவன் திரும்பிப் போகிற காட்சி ஒன்று இருக்கிறது. எப்படி துர்கா ஒரு திருடியாக இருந்து விட்டாள் என்பதை விழுங்கினானோ, இப்போது அம்மாவின் மரணமும் அப்படியே. மேலும் அவனுக்கு படிக்க வேண்டும், மேலும் மேலும் படிக்க வேண்டும்.

ரே-யின் படங்களைப் பேசிக் கொண்டே நான்காவது பெக் ரம்மைக் கவிழ்த்துக் கொள்ளும்போது தாசன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த முத்துவை கவனித்தான். ஒரு சிறிய புன்னகை. அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டு விட்டான். 

சினிமாவா என்று ஒருமுறை கேட்டுக் கொண்டான். ஆமென்றதும் அவனது முகத்தில் இருந்த தயக்கங்கள் சட்டென விட்டுப் போயிற்று. பரஸ்பர அறிமுகங்கள் கொஞ்சம் நகரந்ததற்கு அப்புறம், அவன் பலமுறை கேட்டது ஒன்று மட்டுமே. 

“உங்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுமா? நாளையே உங்களைக் கதை சொல்ல உட்கார வைக்கிறேன் ! “

‘’இயக்குனர் நான் அல்ல. இவர் ! “ 

“இவரா? இந்தப் படத்துக்கு நீங்கள் எழுதுகிறீர்கள் இல்லையா? சந்திப்புக்கு நாளையே ஏற்பாடு செய்கிறேன் “ 

பக்கவாட்டில் தாசன், நேசமூர்த்தியைப் பார்த்தபோது அவன் ‘வேண்டாம்’ என்பது போல உதட்டைப் பிதுக்கினான். இந்த மாதிரிக் குடித்து ததும்பி வழிகிறவர்கள் சந்தரப்பத்துக்கு தோதான உணர்ச்சிகளில் திளைப்பார்கள் என்பது புதியது அல்ல. தாசன் அவனை வருத்தப்படுத்தாமல் தான் இருக்கிற முகவரியைச் சொல்லி காலை ஆறு மணிக்கு வர சொன்னான். விஷயம் முடிந்து விடுகிறது இல்லையா?

ஆனால், மொட்டைமாடியில் கயிற்றுக் கட்டிலின் மீது படுத்துக் கிடந்த தாசனை தட்டி எழுப்பினான் முத்து. குளித்து, தூய வெள்ளை வேட்டியும், சட்டையுமாக பளிச்சென்று நெற்றியில் திருநீறு வைத்துக் கொண்டு அவன் செய்த புன்னகையை மறக்கவே முடியாது. நேற்று இருந்த ஆளை இவன் எங்கே இறக்கி வைத்து வந்திருப்பான்? குடித்து விட்டு உளறினது போல இருந்ததெல்லாம் உண்மையாக இருந்தது. ஒரு நீண்ட தென்னந்தோப்புக்குள் வெகு தூரம் சென்ற கார் நின்ற இடத்தில் ஒரு பிரம்மாண்ட அலுவலகம் இருக்க, அதில் ஒரு முதலாளி குஷாலாக இருந்தார். நேசமூர்த்தி பாதுகாப்பற்ற ஒரு அபலையைப் போல நடுங்கிக் கொண்டு தாசனிடம், ‘தானே அவரிடம் கதை சொல்லி கவிழ்க்க முடியும் என்பதால், நீங்கள் சென்று விட வேண்டும்’ என்பதாக கேட்டுக் கொண்டது ஒரு புதிய கோணமாக இருந்தது. சினிமாவை கற்க வேண்டியிருப்பது இப்படி எல்லாம்தான் என்றான் முத்து. அது அந்த நேரத்தில் ஒரு பொன் மொழியாகவும் இருக்கவே அப்படியாக தாசனும் முத்துவும் தனியாக ஒரு பாருக்குப் போனார்கள். 

முத்து குஷால் முதலாளியின் ஆப்செட், பிரிண்டிங் பிரஸ், பனியன் கம்பனிகளில் மேற்பார்வை பார்த்துக் கொண்டு பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கிறான். மனைவி இருக்கிறாள். பள்ளியில் படிக்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பெரிய இடர்கள் இல்லாமல் குடும்பத்தை தாங்கிச் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை அவன் பெருமூச்சுடன் சொல்லவே, சினிமாவை விட்டு விலகின காரணத்தைக் கேட்டான் தாசன். 

அவன் ஒரு கணம் தனது மூச்சை நிறுத்திக் கொண்டது போலிருந்தது. ஒரு விதமான வலிப்பு முகத்துடன் சொன்னான். “ஒரு பெண் ! “

திரைப்படத்துறையில் புகுந்து பெருமைமிகு நாற்காலிகளில் அமர்ந்து விட்ட திருவாளர்களின் கதைகள் ஊதிப் பெருக்கப்படும் வரையில் பல பையன்கள் பேருந்து ஏறி சென்னை வந்து இறங்குவது பெரிய விஷயமில்லை. முத்துவுக்கு ஒரு சினிமா கம்பனியில் துணை இயக்குநர் வேலை கொடுத்து விட்டார்கள். சில நாட்களில் மதிய சாப்பாடு நின்று போய், உப்புமா கிளற ஆரம்பித்தார்கள். ஒன்றிரண்டு முறை இவனே அதற்கு தன்னிடம் இருந்த சில்லறையைப் பொறுக்கிக் கொடுத்திருக்கிறான். அவர்களிடம் சம்பளம் கேட்பதெல்லாம் பஞ்சமாபாதகத்தில் சேரும் என்பதால், நான்கு பேராக இருந்த அறைக்கு வாடகை கொடுப்பது சிரமமாகி வெற்றிகரமான ஒரு தலைமறைவு வாழ்க்கையைத்தான் நடப்பில் வைத்திருந்தான். அறையின் சுவர்களைப் பார்த்து படுத்திருந்து விட்டு, விடிவதற்குள் துணியை துவைத்துப் போட்டுக் கொண்டு, அக்கம்பக்கம் தலையை உயர்த்திப் பார்த்து விடாமல் இருந்த உத்தமமான காலத்தில், ஒருநாள் அதிகாலை கொடியில் இருந்து சட்டை எடுக்கும்போது பக்கத்து வீட்டின் ஒரு பகுதி விளக்கெரிவதைப் பார்த்தான். அதே கணத்தில் அங்கே வந்த ஒரு இளம்பெண் இவனை நோக்கி காலை வணக்கம் சொன்னாள். அதே கணத்தில் அவள் உள்ளே சென்று விடவும் செய்தாள். முத்து பொழுது விடிந்த பின்னரும் அங்கேயேதான் நின்று இருந்தான். ஒரு அசைவுமில்லை. 

அன்று அலுவலகத்தில் எந்த வேலையும் பிடிபடவில்லை. தயாரிப்பாளர் வரப் போவதாக கேள்விப்பட்டு இயக்குநர், பையன்களை உட்கார வைத்து கதை விவாதம் போல ஒரு தோரணையை உண்டாக்குவதன் பொருட்டு இவனிடம் கதை கேட்டபோது எப்போதோ அம்புலி மாமாவில் படித்த ஒரு இளவரசியின் கதை சொன்னான். அத்தனை பேரும் பிரமித்துக் கேட்டார்கள். அவன் அந்த இளவரசியைப் பற்றி மேன்மைப்படுத்தி வர்ணிக்கும் போதெல்லாம் காலை வணக்கத்துக்கு அவள் உதடுகள் அசைந்த லாவகம் உலுக்கியது. முதலில் அவள் எப்படி இருந்தாள் ? என்ன உடை போட்டிருந்தாள்? அவளுக்கு என்னிடம் காலை வணக்கம் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் கிடையாதே? ஒருவேளை, எனக்குப் பின்னால் யாரோ இருந்து, அவனுக்குச் சொன்ன காலை வணக்கத்துக்கு நான் பதறி விட்டேனா?

உண்மையில் அறையின் பக்கத்தில் இருந்தது வீடு அல்ல. ஒரு அராஜக பங்களா. மூன்று நிலைகள். மேலே இருந்து பார்க்கும்போது ‘ப’ வடிவ தரையில் இப்போதும் நான்கு கார்கள் நிற்கின்றன. பாதங்கள் கூசிக் கொண்டிருகக, கை கால் ரோமங்களை நிமிர்த்துகிற குளிர். மரங்களின் அசைவு பெரும் இரைச்சலாக இருந்தது. கிரீச்சிடுகிற கிளிகளின் அராஜகக் கோஷம் தன்னைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று முத்து பயந்தான். நான்கு மணிக்கு முன்னதாகவே வந்து நிற்க ஆரம்பித்தது, இப்போது நேரமென்ன?

விளக்கு எரிந்தது. 

அவள்தான் ! ஒரு கதவைத் திறந்து கொண்டு வருகிறாள். குளித்து இருக்கிறாள். ஊதா வர்ணத்தில் பெரிய பூக்கள் இருக்கிற அரைப் பாவாடை. மஞ்சள் சட்டை. கழுத்திலும், காதிலும், மூக்கின் மீதும் அவ்வப்போது விளக்கு வெளிச்சம் பட்டுத் தெறிக்கிறது. நடக்கிறாள். பக்கத்தில் இருந்த சிறிய அறையைத் திறக்கிறாள். அது ஒரு பூஜையறை. அவள் ஒரு சிறிய விளக்கைப் பற்ற வைக்கிறாள். கும்பிட்டு நிற்கிறாள். வெளியே வந்து மறுபடி வந்த அறைக்குள் செல்லுகிறாள். விளக்கு அணைந்து விட்டது. முத்து இமைப்பதைக் கூட நிறுத்தி நின்றிருந்தான். ஆமாம், முகம் பாரத்தாகி விட்டது. 

கடவுளே, ஒரு பெண் இவ்வளவு வடிவாக இருக்க முடியுமா?

மீண்டும் வெளிச்சம். இவன் திடுக்கிட்ட போது அவள் இவனைத்தான் கண்களில் அடித்துப் பார்த்தவாறு நின்றாள். புன்னகை துவங்குகிறது. அதே, காலை வணக்கம். இவன் தன்னால் முடிந்ததை செய்தது ஒரு சேட்டையாக இருந்தது. அவள் மேலும் சைகைகளில் பேச ஆரம்பித்தாள். உன்னை எனக்குப் பிடிக்கும் என்று அவள் சொன்னதைப் புரிந்து கொள்ளவும், என்னை உனக்குப் பிடிக்குமா என்பதற்கு பதில் சொல்லவும் ஒரு யுகம் போயிற்று. என்னை இங்கே இருந்து அழைத்துச்  செல்கிறாயா என்பதைச் சுமக்கவே முடியவில்லை. இறுதியாக அவள் ஒரு முத்ததை காற்றில் வீசி விட்டுக் காணாமல் போனபோது முத்து காய்ச்சல் அடிப்பது போல உணர்ந்தான். உயிரே போவது போல முட்டின மூத்திரத்தை வெளியேற்றும்போது இலேசாக அழுதான். 

தாசன் இதில் கரை கண்டவன். நிறைய பேர் அவனிடம் தங்களுடைய காதல் கதையை சொல்லித் தீர்த்திருக்கிறார்கள். பொதுவாய் மனிதர்கள் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் பெரும் தனியர்கள். எல்லாவற்றையும் கடந்து முத்து ஒரு வகையில் துணுக்குற வைப்பது எதற்கு? தேடாமலே அந்தக் கண்களில் கண்ணீரும், உண்மையும் இருந்தது. முத்து அவள் எங்கெல்லாம் போக முடியும் என்பதைத் தொடர்ந்தான். அந்த வீடு ஒரு இரும்புக் கோட்டை. அவளுடைய அப்பாவின் ஆளுமைக்கு முன்னே ஒரு சாம்ராஜ்ஜியமே ஒரு நாய் போல ஒரு மூலையில் ஒண்டிக் கிடந்தது. அவளின் அம்மா தனக்குள் சுருங்கி அந்த ஆளின் அம்மா போல தென்பட்டாள். அவள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரில் அடக்க ஒடுக்கமாக பள்ளிக்கு போனாள். எங்கே போனாலும் கூட ஆண்களோ, பெண்களோ இருந்தார்கள். அவள் ஒரு கைதி போலவே தலை நிமிராமல் நடப்பது ஒரு விதமான அபத்தமாக பட்டது. அந்த வட்டாரத்தின் ஒரு பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வீட்டுக்கு வந்த பள்ளிப் பெண்களோடு வந்த நேரம் தற்செயலாக வந்தவன் போல எதிர்ப்பட்டான். அவள் ஒதுங்கியவாறு இவனை நோக்கி முன்னேறினாள். அவனால் ஏறிடவே முடியாத அந்த மாசற்ற புன்னகையுடன் அவனுடைய காதில் மூச்சுக் காற்றுடன் உரசி என்னவோ சொன்னாள். 

அவனுக்கு அது தெளிவாகக் கேட்கவில்லை. 

அன்றெல்லாம் தூங்க முடியவில்லை.

நான்கு மணிக்கு கதவைத் திறந்து கொண்டு மொட்டை மாடிக்கு வந்தபோது பக்கத்து வீட்டின் எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. கீழே முப்பது பேராவது இருந்தார்கள். யாரோ இருவர் ரத்த காயத்துடன் ஒரு பையனை இழுத்துக் கொண்டு வர, வீட்டுக்குள் இருந்து ஒரு மிருகம் போல உறுமிக் கொண்டு வந்த அந்த வீட்டின் தலைவன் தன்னுடைய ரிவால்வரால் அவனைத்  தொடர்ந்து தலையில் அடித்துக் கொண்டே இருந்தான். ரத்தம் கொப்புளித்து சிதறியது. சட்டென முறுகிய ஆத்திரத்துடன் அவனை சுடுவதற்கு முயற்சி செய்யும்போது எல்லோரும் தடுத்து விட்டார்கள். மூச்சிரைக்க கொலை வெறியுடன் அந்த ஆள் கத்தினார். “சுரேஷ் எங்கிருப்பான்? மரியாதையாகச் சொல்லி விடு ! “

முத்துவுக்கு ஒவ்வொன்றாகப் புரிந்து வந்தது. 

அவள் அவனுடைய காதில் சொன்ன ரகசியம் நீ வேறு யாரையாவது காதலித்துக் கொள் என்பதாகும். அவள் பெயர் வெண்ணி. பிளஸ் டூ படிக்கிறாள். தினமும் அவளுக்கு காரை ஒட்டின டிரைவரின் பெயர்தான் சுரேஷ். இப்போது அவள் அவனோடு ஓடிப் போய் விட்டிருக்கிறாள். 

கதை நின்றது. 

அது மறுபடி துவங்கியபோது, தாசனால் சரி வர கவனிக்க முடியவில்லை. அருகே யாரோ ஒரு பையன் நீட்டின லோடட் பீடியை ரெண்டு இழுப்பு இழுத்து விட்டு அது போட்ட வட்டங்களுக்குள் இறங்க முடியுமா என்பதாக தன் பாட்டுக்கு இருந்தான். என்ன பெரிய கதை? ஊரில் இருந்து வந்த பையன் யாரோ போல வாழும் காலத்தில் அவனுக்கு டைபாய்டும் மஞ்சள் காமாலை எல்லாம் வந்து அது மயக்கதில் சுற்ற விடுகிறது என்றால் உயிர் பிழைப்பது ஒரு முறிந்த நம்பிக்கை அல்லவா? முத்துவின் அம்மா உறவினர்களுடன் வந்து அவனை அள்ளிக் கொண்டு போனாள். எத்தனையோ மருத்துவர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மருந்து வாங்கிப் புகட்டி, கண்ணின் இமை மூடாமல் கண்ணே மணியே என்று அனத்தி காவல் காத்து உயிரின் தீபத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளரச் செய்து இறுதியாக அதை நின்று எரியச் செய்தாள். ஒருநாள் அவனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. முடிந்தது, இல்லையா?

மறுநாள் நேசமூர்த்தி, சரவணன் என்கிற ஊர் பிரமுகருடன் வந்தான். இவர் நமது படத்துக்கு பக்கவாட்டில் இருந்து உதவி செய்வார் என்றான். நட்சத்திர ஓட்டலில் பியர் குவளைகளை நிரப்பினார்கள். டிஸ்கோ வர்ணங்கள் சுற்றிச் சுழன்று வருகையில் அதில் லகரியுடன் இணைய வேண்டும். முகங்களை கழட்டி வைத்த மாதிரி ஒரு விடுதலை கிடைக்கும். அப்போது என்னவும் பேசலாம். 

“நேசமூர்த்தி, சாரைப் பற்றி சொல்லுங்கள் ! ”

“சார், சாதாரண ஆளே கிடையாது! அவருக்கு சினிமா பற்றி தெரியாதது ஒன்றுமில்லை!” என்றான். பேச்சுக்கு ஒரு நகைச்சுவை வேண்டுமல்லவா? “சினிமா பற்றி எல்லாம் தெரிந்திருந்தால் சினிமா பண்ண முடியாது ! என்ற கண்களை சிமிட்டினான். தாசன் அசட்டுச்  சிரிப்பு சிரித்து வைத்தான். 

சரவணன் சொன்னார். ”நாம் திறமையான மூன்று பேர். குஜாலையும் சேர்த்துக் கொண்டால் நால்வராகிறோம். அடுத்த மாதம் இதே நாள், இதே ஓட்டல். நீங்கள் இருவரும் பெயர் கேட்ட இரண்டு நடிகைகளுடன் வந்தால் போதும். மூன்றாக நான்காக இருந்தால் மிக்க சந்தோஷம். நீங்கள் இருவரும் உங்கள் பாட்டுக்கு தனியாக ஒரு அறையில் இருங்கள். இந்த திருப்பூர் மட்டுமல்ல, சுற்றிலும் உள்ள சேலம் ஈரோடு கோவையைச் சேர்ந்த பெரும்புள்ளிகளை கொண்டு வருவது எனது பொறுப்பு. பகுதிப் பணத்தை வேலை செய்பவர்களுக்கு கூலியாக கொடுக்க வேண்டும் என்று வந்தால் கூட, நமக்கு அனைவருக்கும் கற்பனை செய்ய முடியாத ஒரு தொகை கிடைக்கும். என்ன தாசன் சார், கதை எழுதுவது எல்லாம் முக்கியம் இல்லை. காசு வேண்டும்.. காசு ! அப்போதுதான் மற்றவர்கள் நம்மை மனிதராக மதிப்பார்கள் ! “

தாசன், நேசமூர்த்தியை ஒரு அறை விட்டு, அங்கிருந்து தனியாக ஒரு ஆட்டோவில் கிளம்பி முத்துவைத் தேடிப் பிடித்து விட, இருவருமாக ஒரு சிறிய குப்பியுடன் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தார்கள். 

கதை கேட்கிற மூட் தனியாக இருந்தது. 

துழாவியும் தாசன் அதை அறிய விரும்பினான். 

“அதற்கு அப்புறம் வெண்ணிக்கு என்ன நடந்தது என்பதே உனக்குத் தெரியாதா? “

முத்து கொஞ்சம் மரத்து காணப்பட்டான். அவனுக்குள் எப்போதும் அவனைப் போட்டுக் குடைகின்ற புழுக்கள் இருக்கின்றன போலும். துப்பவும் விழுங்கவும் முடியாத அவஸ்தையை தற்காலிகமாக நிறுத்த இரண்டு பெக் போதாமல் இருந்தது. எனினும் அவன் தாசனை ஒரு உற்ற தோழனாக உணர்ந்திருக்க வேண்டும். 

முனகல்களுடன் சொன்னான். 

வேட்டையாட்கள் போல நான்கு திசைக்கும் ஆட்கள் கார்களை எடுத்துக் கொண்டு பறந்தும் காதல் ஜோடிகளைப் பிடிக்க ஒரு வாரமாயிற்று. அதற்குள் தந்தி பேப்பரில் எல்லாம் அந்த செய்தியை சுவாரசியம் செய்திருந்தார்கள். மைனர் பெண்ணை கடத்திய குற்றத்துக்கு சுரேஷ் காவல் துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை. இவர்களே அவனுடைய கை காலை அடித்து உடைத்து முகத்தை சிதைத்து அன்னம் தண்ணீர் கொடுக்காமல் ஒரு உடைந்த கழிவறையில் படுக்கப் போட்டார்கள். நினைவு வரும்போதெல்லாம், அல்லது அவனுடைய முனகல் கேட்கும் போதெல்லாம் வெண்ணியின் அப்பா மயக்கத்தில் கிடந்தவனை எட்டி உதைத்துக் கொண்டு இருந்திருக்கிறார். அப்புறம் அவருக்குத் தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரி எச்சரிக்கை செய்யவே கொலைக்குற்றம் தலையில் விழாமல் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்கள். நான்கு மாதத்துக்கு அப்புறம் அவன் எங்கேயாவது ஓடிச்செல்ல விரும்பிய போது அவர்கள் சம்மதிக்கவில்லை. வெண்ணி அவனுக்காக அடிபட்டது பற்றியும், தூக்கில் தொங்கி காப்பாற்றப்பட்டதையும் யாரேனும் சொல்லி இருக்கலாம். குறிப்பாக அவள் முழுகாமல் இருப்பதையும். அவன் அந்த வீட்டுக்குத் திரும்பி வந்தான். அங்கே இருக்கிற நூறு கூலிகளில் அவனையும் ஒரு கூலியாக்கி அவனுக்கு வார சம்பளம் கொடுத்தார்கள். அதில்தான் அவன் வெண்ணியையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டும். அவ்வளவு பெரிய வீட்டில் அவர்களின் அகதி வாழ்க்கை துவங்கியது. 

முத்து அதற்கு அப்புறம் அவர்களைப் பற்றி அறியக் கூடிய இடத்தில் இல்லை. தன்னுடைய வாழ்நாள் முழுக்க அவன் சென்னை பக்கமே வராமலும் இருக்கக் கூடும். 

தாசன் சென்னைக்குப் புறப்படும்போது லட்ச ரூபாயும் இல்லை. நேசமூர்த்தியும் இல்லை. வண்டி ஏற்ற வந்த செருப்பு கடைக்காரன், “உங்களுக்கு கொடுக்க அவர் என்னிடம் பத்தாயிரம் வாங்கினார், பணத்தை உங்களிடம் கொடுத்தாரா?“ என்று கேட்டான். “அண்ணே, உங்க சினிமாவில் நான்தானே கதாநாயகன்? அதை யாரும் மாற்றி விட மாட்டார்களே? “

நேசமூர்த்தி எப்படி என்பது தாசனுக்கு ஓரளவு முன்பே தெரியும். தங்களை வளமைப்படுத்திக் கொள்ள மனிதர்கள் எங்கேதான் பாயவில்லை? போகட்டும் என்று இதையெல்லாம் விட்டுவிட வேண்டும். லட்சங்கள் செலவு செய்து பட பூஜை நடந்தது. அன்றே திருப்பூர் முதலாளிகளுக்கு சில துணை நடிகைகளை வாய்ப்பு தருவதாக ஏமாற்றி விடுதிகளுக்கு அனுப்பி வைத்த கதையும் நடந்தது. அவனேதான் தாசனிடம் இவைகளை சிரித்தபடி சொன்னான். தன்னை எப்போதும் அவமானம் செய்கிற பொருளாதார சூழலை சொல்லிக் கொஞ்சம் பணம் கேட்டபோது, தாசனிடம் அவன் அலட்சியமாக சிரித்தது கொஞ்சம் அதிகம். வேறு வழியில்லாமல் தாசன் அவனை இன்னொரு முறை அறைந்தான். கொஞ்சம் பணம் கிடைத்தது. 

ஆனால், சினிமாவே வேண்டாம் என்று தாசன் தொடர்களுக்கு வசனம் எழுதப் போனான். 

மானம் கெட்ட பிழைப்புக்கு நடுவே அவனுக்கு பல சௌகரியங்கள் அமைந்தன. குறைந்தபட்சம் தன்னுடைய திருப்திக்காக சிறுகதைகள் எழுதத் துவங்கியிருந்தான். முத்துவின் கதை, அதற்கு ஒரு முடிவு கிடைக்கவில்லை. கொஞ்ச காலம் போயிற்று என்பதைச் சொல்ல வேண்டும். ஒருநாள் அதற்காக இறங்கியபோது, வெண்ணியின் வீட்டார் நடத்திக் கொண்டிருந்த அரிசி மண்டியில் தூசிப் புழுக்கம் சூழ்ந்த ஒரு மூலையில் மேல் சட்டை கூட போடாத அந்தக் கிழவனைப் பார்த்தான். அவன் கிழவன் அல்ல. கிழவனைப் போலிருந்தவன். சுரேஷ். யாரையும் ஏறிட்டுப் பாராத, தனக்குள் குழிந்த ஒரு ஜந்து. 

ஓரிரு நண்பர்களின் துணையுடன் பல விவரங்களை அறிய முடிந்தது. 

வெண்ணியின் அப்பா ஒரு நாள் காலையில் டென்னிஸ் கோர்ட்டில் சரிந்திருக்கிறார். நல்ல சாவு என்று ஊரே சொன்னது. துவக்கத்தில் ஒதுக்கி வைத்திருந்தாலும், வெண்ணியின் மகனைப் படிக்க வைத்திருக்கிறார். அவன் அவரோடு இணைந்து கொண்டு விட தனிமை தாங்காத வெண்ணி தினமும் சர்ச்சுக்கு சென்று உட்கார ஆரம்பித்து, அப்பா இறந்ததும் ஒரு கிறிஸ்துவனை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.

தனக்கு ஏன் ஒரு அபிப்ராயமும் தோன்றவில்லை என்று தாசன் வியந்து கொண்டான். 

தெரிந்த வரைக்கும் போதும், இனி இந்தக் கதையில் அறிய வேண்டியது ஒன்றுமில்லை என்றுதான் இருந்தது. 

ஒருநாள் அதிகாலை தூக்கத்தில் இருந்து பதறி எழுந்து உடனடியாக கிளம்பினான். இரண்டு முறை தேநீர் குடித்து, சிகரெட் புகைத்து மிகுந்த தயக்கத்துடன் தாசன் கேள்விப்பட்ட அந்த சர்ச்சின் காம்பவுண்டுக்குள் அமைந்திருந்த ஒரு பூங்கொத்துக்களின் கடையில் நுழைந்து, அவளைப் பார்த்தான். இந்த வயதிலும் என்ன ஒரு வடிவு ? ஆளுமை? மலர்ச்சி? முத்துவை நினைக்காமல் முடியவில்லை. அவள்தான் கடைக்கு முதலாளி. ஒரு பெண் குழந்தை கேட்ட பரிசுப் பொருளை அவளிடம் காட்டியவாறு எதையோ சொல்லிச் சிரிக்கிற அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தபோது அவன் எழுதப் போகிற சிறுகதையின் தலைப்பு அவனுக்குத் தெரிந்து விட்டது. 

*******

mkmani1964@gmail.com –  

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button