நித்யா ஸ்கூட்டியை உதைத்துக் கிளப்பிக் கொண்டு தன் அபார்ட்மெண்ட்டை விட்டு வெளியில் வந்தாள். சானடோரியம் ஸ்டெஷனில் 7.30 ட்ரெயினைப் பிடிக்க வேண்டும். கடிகாரம் ஏழு ஒன்பது என்றது. அவள் இருக்கும் சிட்லபாக்கத்தில் இருந்து ஐந்து நிமிடத்தில் போய்விடுவாள்.
பெட்ரொல் அளவு குறைவாக இருந்தது. ஸ் … ராகவ் நேற்று இரவு எடுத்துக் கொண்டு போனான். அவன் எடுத்தாலே இந்த நிலைதான்.
செல்லப் பிள்ளை. சொன்னால் கேட்க மாட்டான். அவனுக்கு லைஸன்சும் கிடையாது. ‘சந்து சந்தா போய்டுவேன் அம்மா. அர்ஜ்ண்டா நோட்ஸ் வாங்க வேண்டும்’ என்பான்.
ஒரு சில சமயம் அவன் திரும்பி வரும் வரை ‘அவனை போலிஸ் பிடித்து விட்டதோ, ஏம்மா சின்னப்பையன் கையில வண்டியைக் கொடுத்திங்க என்று நம்மையும் அரெஸ்ட் செய்து விடுவார்களோ?’ என்று பயமாக இருக்கும்.
‘இனிமேல் அவனிடம் வண்டியைத் தரக்கூடாது’ என்று ஒரு திடமான தீர்மானத்தை மனதிற்குள் போட்டாள். ‘காமன் மாடலாக இல்லாமல், பெண்கள் வண்டியாக மட்டுமே அறியப்படும் வண்டியாக மாற்றி விட்டால்…..?’ என்று மனதுக்குள் அசை போட்டாள்
ஸ்டேஷன் ஸ்டாண்டில் வண்டியை நிறுத்திவிட்டு, வேகமாய் ஓட்டமும் நடையுமாக நடைமேடையை அடைந்தாள். இன்னும் மூன்று நிமிடங்கள் இருந்தன.
தலைமுடியைக் கோதிக்கொண்டாள். நித்யாவிற்கு 34 வயது. சீக்கீரமே திருமணம் ஆகி, பதின்ம வயதில் பையனும் பெண்ணும் இருந்தார்கள். ஆனாலும், நித்யா இளமையாகத்தான் தெரிவாள்.ஒல்லியும் இல்லை குண்டும் இல்லை.உயரமும் இல்லை குள்ளமும் இல்லை. முகத்தில் ஒரு வசீகரம், எனர்ஜி, புன்னகை.
மின்வண்டி வந்ததும், பெண்கள் பெட்டியில் ஏறினாள். ஒரே ஒரு சீட் இருந்தது. ஓடிப்போய் அதில் அமர்ந்துகொண்டாள்
மாம்பலத்தில் ஒரு பிரபல நகைக்கடை ஒன்றில் பில்லிங் செக்ஷனில் வேலை. நல்ல சம்பளம். ஒன்பது மணியில் இருந்து ஏழரை மணி வரை வேலை.
ரயிலிலும் மாம்பலம் நிலையத்திலும் ஒரே கூட்டம்.
முண்டியடித்துக்கொண்டு , இறங்கி மாடிப்படிகளில் ’தப தப’ என்று ஏறி இறங்கினாள். கடை அருகே நிறைய ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டைகளை பையில் இருந்து எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு உள்ளே செல்ல வரிசையில் நின்றிருந்தனர்.
எல்லோரும் சீருடையில். ஆனால், உள்ளே நுழைந்த நித்யாவோ, சாதாரண உடையில் உள்ளே நுழைந்து, முதலில் கடையின் பக்கவாட்டில் இருந்த ஒய்வு அறை பகுதிக்குச் சென்று, சீருடைக்கு மாறி, பிறகு வந்தாள். வரிசையில் நின்று உள்ளே சென்றாள்.
மேனேஜர் சீனிவாசன் அவளை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். நித்யாவின் வேலையில் தவறுகள் அவ்வளவாக இருக்காது. ஒருமுறை சொன்னால் புரிந்து கொண்டு செய்வாள். ஆனால், பணிக்கு வரும் போதே சீருடையில் வருவதில்லை. ஒரு சிலர் சில நாட்கள் அப்படி வந்து, இங்கே மாற்றிக் கொள்வார்கள். நித்யா மட்டும் வீட்டில் இருந்து சீருடையில் வரமாட்டாள். போகும் போதும் உடை மாற்றிக் கொண்டுதான் செல்வாள்.
அது சீனிவாசனுக்குப் பிடிக்காது. அதுவும் அவர்தான் ஊழியர்களுக்கான சீருடையை வருடா வருடம் தேர்வு செய்வார்.
“நாம எவ்வளவு நல்ல துணியா வருடா வருடம் தேர்வு செய்றோம். நல்ல கலர்ஸ், நல்ல தரம்… ஹும்.. என்னாவாம் இவளுக்கு?”
அதனாலேயே அவள் மீது கோபமாக இருப்பார்.
”சில பேரு வந்தவுடனே எங்காவது போய்ட்டு, இரண்டு நிமிஷம் லேட்டாத்தான் வருவீங்க” என்று பொதுவாக கத்துவார்.
”சார், இன்னும் டைம் ஆகல” என்று யாராவது சொன்னால், ”சரிங்க சார்” என்று அவர்களிடம் நக்கலாக சொல்வார்.
நித்யாவின் நண்பர்கள் அவளைப் பார்த்து புரிதலுடன் சிரிப்பார்கள்.
அவள் நண்பர்கள் அதைப் பற்றிக் கேட்டால், ”ப்சு, இது ஒரு விஷயம். எனக்கு வீட்லேருந்து போட்டுட்டு வர பிடிக்கல அவ்வளவுதான்.” என்று சிரித்துக் கொண்டு சொல்வாள்.
நித்யாவின் வேலையில் குறை சொல்ல முடியாது என்பதால், பெரிய முதலாளி, சீனிவாசனின் புகாரை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்.
அன்று நடு முதலாளி கண்ணன் வந்திருந்தார்.
அந்த சமயம் பில்லிங்கில் கூட்டம் இருந்தது. புதியதாக சில டிசைன்கள் வந்திருந்ததால், அதற்கான ஆஃபர் மற்றும் தள்ளுபடிகளக் கேட்பதற்காக, நித்யா அடிக்கடி எழுந்து சென்றுகொண்டிருந்தாள்..
சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கச் சென்ற சீனிவாசனிடம் கண்ணன், ”அந்த பொண்ணு ஏன் எழுந்து எழுந்து போயிட்டுருக்கு?” என்றார்.
கிடைத்த வாய்ப்பை நழுவவிடுவாரா? “சார், அது அகராதி புடிச்ச பொண்ணு சார், “
“ம்ஹும், கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க”.
“அப்பப்ப சொல்றதுதாங்க. பெரியவங்க நீங்க கூப்ட்டு சொன்னா இன்னும் கரெக்டா இருக்கும்”
”ஓகே ! கஸ்டமர்ஸ் குறைந்ததும் வரச்சொல்லுங்க” என்றார் கண்ணன்.
தன் அறையில் இருந்து நித்யாவை கவனித்துக் கொண்டிருந்தார்.
இவ்வளவு நாள், பெங்களுர் கிளையைப் பார்த்துக்கொண்டிருந்தார் கண்ணன். அதனால் அவருக்கு இங்கே உள்ள ஊழியர்களைப் பற்றித் தெரியவில்லை. ஆனால், நித்யா காரணகாரியமாகத்தான் அலைந்து கொண்டிருக்கிறாள் என்று ஐந்து நிமிடத்திலேயே புரிந்துகொண்டார்.
ப்ரேக் சமயத்தில் நித்யா முதலாளி அறையில் நுழைந்த போது சீனிவாசன் அவளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.
“நம்ம சீருடை கூட அவங்களுக்கு மட்டம்தான் சார், வெளிலேருந்து வரும்போது போடக் கூடாதாம். லேட்டா ஆனாலும் உள்ள வந்துதான் போடுவாங்க”.
அப்போதுதான் நித்யா நுழைந்தாள்.
கண்ணனின் கைபேசி சிணுங்கியது. கையையும் மனதையும் கைபேசியில் வைத்தபடி, தலையை மட்டும் அவள் பக்கம் திருப்பி, “கொஞ்சம் ஈடுபாட்டோட வேலையைச் செய்யுங்க”
“இந்த மாதிரி திமிரான ஆட்கள் மத்தவங்களை கெடுத்துடுவாங்க சார்” – மேனஜரின் கண்டுபிடிப்பு.
கண்ணன் அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பது போல் தெரியவில்லை. இருந்தாலும், ஆமோதிப்பது போல் தலையை ஆட்டியபடி தன் கைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
தான் சொன்னதனால் நித்யாவைக் கூப்பிட்டு, தன் பேச்சையும் மதிக்கிறார் முதலாளி என்று புளகாங்கிதம் அடைந்த சீனிவாசன், “இனிமே எதுனாலும் சீட்டைக் கிழிக்கவேண்டியதுதான். தெரிஞ்சுதா? போங்க போங்க, சார் பிஸியா இருக்கார்” என்று அவளை விரட்டினார்
கண்ணன் கைபேசியில் வந்த செய்தியைப் படித்துக்கொண்டிருந்தார். சீனிவாசன் சொல்வதற்காக இல்லையென்றாலும் ‘முதலாளி தான் சொல்வைதைக் கேட்பாரோ கைபேசியைத்தான் பார்ப்பாரோ’” என நினைத்தபடி நித்யா திரும்பத் தொடங்கினாள்.
கைப்பேசியைக் கீழே வைத்தபடி கண்ணன், “ஒரு நிமிஷம், இன்னிக்கி பில்லிங்கில் என்ன பிரச்சினை?” என்றார்..
“இன்னைக்கி வந்த டிசைன்களுக்கான தள்ளுபடி ஆஃபர் எல்லாம் கொஞ்சம் டேலி ஆகல்ல.”
“இதெல்லாம் முதல்லயே தயார் நிலையில இருக்க வேண்டாமா?” கேள்வியும் கண்ணும் மேனஜரை நோக்கித் திரும்பியது.
“எல்லாம் தயார்தான் சார், இரண்டு டிசைன் மட்டும்தான்…” என்று சீனிவாசன் இழுக்க,
”அதைதான் நிறய பேர் வாங்கினாங்க. அதனால சீஃப் கிட்ட கேட்டு கேட்டு போட்டேன் சார்” என்றாள் நித்யா”.
“இனிமே எதுனாலும் சீட்டைக் கிழிக்கவேண்டியதுதான். தெரிஞ்சுதா?” என்று சீனிவாசனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார் கண்ணன்.
தன்னைப் பார்த்து முறுவலித்த முதலாளியிடம், ”மே ஐ ஹவ் அ வெர்ட் சார்?” என்றாள்.
“நா சிட்லபக்கத்தில் இருந்து மின்வண்டில வரேன். சீருடையில இருந்தா சக பயணிகள் எங்க வேல செய்றிங்கன்னு ஆரம்பிச்சு மெதுவா நம்ம கடை பத்தி அவங்களுக்குத் தேவையான சில விவரங்கள தெரிஞ்சுக்குவாங்க.
‘சரி, இந்த கடை பத்தி தெரிஞ்சிடுச்சி, நாம ****** கடைக்கு போய் பார்க்கலாம்’ன்னு அவங்களுக்குள்ள பேசிப்பாங்க.
தவிர, என் உடைகள் கலையாம இருக்கும். தனி பையில நீட்டா எடுத்துட்டு வரேன். அந்த ஓய்வு அறையில மின்விசிறியோ, கண்ணாடியோ இல்லாம கஷ்டப் பட்டுதான் போட்டுக்கிறேன்”
“இவங்க இந்த மாசத்தில லேட்டா வந்திருக்கங்களா?”
”இல்லை சார்”
சிறிய மௌன இடைவெளிக்குப்பின், “ஒகே, நித்யா, பெண் ஊழியர்களுக்கு எதாவது சிரமம் இருந்தா என் கவனத்திற்கு கொண்டு வாங்க” என்று சொல்லி தலையை ஆட்டி போகலாம் என்று சமிஞ்ஞை செய்தார்.
சீனிவாசன் சற்று வறுபட்டபின்புதான் வெளியில் வந்தார்.
மறுநாள் காலை நித்யாவுக்கு ஒரு இனிய அதிர்ச்சி!
ஆம். ஓய்வு அறையில் ஒரு மின்விசிறியும், அழகான கண்ணாடியும் இருந்தன.