காட்சி அழகியலின் நுட்பமான அமைதி மொழி :
தமிழ் சினிமாவின் எளிமையான ரசனைகளின் மதிப்பீட்டில் இருந்து கொஞ்சம் அழுத்தமான காட்சி மொழி விவரனைகளின் வழியே தன் சினிமா மொழியை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் அவர்கள். சினிமா என்னும் கலையின் வடிவில் அவருக்கிருந்த தனித்த பார்வையையும், தீவிர வாசிப்பனுபவத்தில் அவருக்குக் கிடைத்திருந்த வாழ்வின் சிறு சிறு நெகிழ்வுத் தன்மைகளின் நுணுக்கங்களையும், மனதின் உணர்வுகளுக்கு நெருக்கமான இசையமைதியையும் கொண்டே அவரது சினிமாக்கள் எடுக்கப்பட்டன, தொகுக்கப்பட்டன. காட்சி அழகியலின் ஆதார சுருதியிலிருந்து பின்னணி இசையின் மெல்லிய வருடல்களாலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளுடனான அசைவுகளையும் படம்பிடித்தே தனக்கென ஒரு சினிமா வடிவத்தைக் கண்டடைந்தவர் அவர். நாடகத்தனமான வசனங்களிலும் திரைக்கதையின் நுட்பங்கள் ஏதுமற்று அடுத்தடுத்து விரிந்திடும் வெற்றுக் காட்சிகளின் வழியான திரைப்படங்களுக்கு மத்தியில் எவருடைய சாயலிலுமில்லாமல் தனித்த திரைமொழியை செய்துகாண்பித்தவர் மகேந்திரன். நாடக எழுத்தில் மிகுந்த பரிச்சயமிருந்தாலும் தனக்கான திரைவடிவத்தில் அதை சிறிதளவும் பயன்படுத்திடாத தன்மையே அவரது படைப்பாற்றலை திடமாக நம்பவைக்கின்றது.
சிறிய கதைக்கருக்களின் வழியே அழுத்தமான காட்சியமைப்புகள் மற்றும் அக்கதைத்தன்மையின் யதார்த்த பிரக்ஞையின் சூழலில் விரிந்திடும் கதாப்பாத்திரங்கள் தனக்கான உணர்வுகளையும், சொற்களையும், மௌனத்தையும் வெளிப்படுத்துவதே ஆகச்சிறந்த சினிமா மொழியின் ஆதாரமான சூத்திரம். (ஈரானிய சினிமாக்களின் சிறந்த உள்ளடக்கம் இது தான்) இவைகளையே தன் சினிமாவின் எல்லாப் படங்களிலும் பயன்படுத்தி வெகு காலத்திற்கு முன்பே நம் வெளியில் எடுத்துக் காண்பித்திருந்தார் அவர். மேலும் யதார்த்த வகை சினிமாக்களின் வழியே சிறிதான இசைப்பரப்பை துல்லியமான இடங்களில் பகிர்ந்து அதன் அனுபவப்பரப்பை மாற்றிக் காண்பித்திருக்கிறார்.
உதிரிப்பூக்களில் விஜயன் பேசும் சொற்களுக்கு அவர் மனைவி மௌனமாக நின்றுகொண்டிருக்கும் அமைதி தழும்பும் காட்சியமைப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்புதிதுதான். சிறுகதையிலிருந்தும் நாவலிலிருந்தும் தனக்கான சினிமாவைத் துவங்கும் மகேந்திரனின் சினிமா வெளி அதற்கான காரணங்களை அங்கிருந்தே தேடத்துவங்கியிருக்கக் கூடும். அதுதான் கோடைகாலத்தில் உதிர்ந்திடும் இலைகளின் வாசனையைப் போல் தன் காட்சியமைப்பில் அமைதியின்
மனநிலையை மெலிதானதாக எல்லா இடத்திலும் பகிர்ந்தளித்திருக்கிறது. கதாப்பாத்திரங்களுக்குப் பின்னால் தெரிந்துகொண்டிருக்கும் வெளியையும், மரத்தையும், சமவெளியையும், மேகத்தையுமே எப்போதும் காண்பிப்பதில் அலாதி பிரியமவருக்கு. கதாப்பாத்திரங்களின் மனநிலையில் தோன்றும் மாற்றங்களை அசலான வீரியத்தில் காட்சிகளினடிப்படையில் செய்து காண்பித்தவர் மகேந்திரனைப்போல் தமிழ் சினிமாவில் வேறுயாருமில்லை.
அவரது முதல் படத்திலிருந்து தனது எல்லாப்படங்களிலும் அவற்றையே தொடரவும் செய்திருந்தார். சிறிய உணர்வுகளின் வலியை, சந்தோசங்களை, காத்திருப்பின் நோய்மைகளை, பெண்களின் தனிமை சார்ந்த துயரங்களை, பேரன்புகளின் மொழியை, ஏக்கங்களை, காதல்களை, குடும்பங்களின் சோக ரேகைகளை யதார்த்தப் பட அடிப்படையில் தனக்கான பிரத்யேகமான வடிவங்களில் திரும்பத்திரும்ப, ‘உதிரிப்பூக்கள்’,’முள்ளும் மலரும்’,‘மெட்டி’,’பூட்டாத பூட்டுக்கள்’ ‘நண்டு’,’நெஞ்சத்தைக் கிள்ளாதே’.’ஜானி’ ஆகிய படங்களில் செய்து காண்பித்திருக்கிறார். சினிமாக்களில் பாடல்கள் குறித்த சில மாற்றுக் கருத்துக்கள் அவருக்கிருந்தாலும், இசையின் வழியான அதன் துல்லியமான மனம் நெகிழும் தருணங்களை மாண்டேஜ் முறையில் தன் படங்களில் இழையோட வைத்து ரசிகர்களை மகிழ்வித்திருப்பார்.
இந்திய அளவிலும், உலக அளவிலுமான படங்களின் அழகியல் ரீதியான யதார்த்த திரைக்கதைக் காட்சிகளின் வடிவைப்புகளுக்கு சற்றும் குறைந்திடாத உத்திகளையும், உணர்த்தும் தருணங்களையும் கொண்டிருப்பவை மகேந்திரனின் படங்கள். ஒரு நிழலில் சரிந்திருக்கும் சிறிய செடியொன்றின் மெல்லிய தனிமையையும், ஏக்கத்தையும், சுதந்திரத்தையும் உணர்த்துவது போலானவை அவரது சில காட்சியமைப்புகள். ‘பதேர் பாஞ்சலி’ யில் அடைமழையில் காய்ச்சலுடன் அசைவற்றுப் படுத்திருக்கும் துர்காவின் கடைசி ஏக்கங்களையும் துடிப்புகளையும், சிறிய சன்னலில் புயல்காற்றில் தொடர்ந்தசைந்திடும் சின்ன துணியின் வழியே காட்சிப்படுத்தி உணர்த்தியிருந்த தருணத்திற்கு ஒப்பானவை மகேந்திரனின் பல காட்சியமைப்பிலும் இருந்திருக்கின்றன. எப்போதுமான உரையாடல்களிலிருந்து திருப்பி அக்கதாப்பாத்திரத்தின் இயல்பான உரையாடல்களைத் திறந்து மேலும் அவர்களின் சிறிய உடல் மொழிகளின் நுட்பங்களாலும் அழகியல் ரீதியான காட்சியின் வசீகரத்தாலும் தன் சினிமாவாக விரித்திருக்கிறார் அவர். தமிழ் சினிமாவின் வெவ்வேறு காலகட்டத்தின் மிக சாதுர்யமான வீச்சுக்களையும் சிறப்புகளையும் உள்ளடக்கியவர்களில் மகேந்திரனின் பங்களிப்பு மிகவும் சிறப்பும் தனித்தன்மையும் நம்பிக்கையும் வாய்ந்தவைதான்.
தொட்டிகளில் வளர்ந்திருக்கும் அந்தச் செடிகளுக்கு நாளைக்கேனும் தண்ணீர் ஊற்ற வேண்டும், அதற்கான ஞாபகங்களையே மகேந்திரனின் படங்கள் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டேயிருக்கின்றன.
02-04-2020 – திரு. மகேந்திரன் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம்.