கலைத்துவிடாதீர்கள்
கயிற்றுக் கட்டிலை
சுவற்றில் சாய்த்துவிட்டு
தலைக்கு வைத்திருந்த துண்டை
உதறித் தோளில் போட்டுக்கொண்டு
வேப்பங்குச்சியைப்
பல்லுக்குக் கொடுத்துவிட்டு
வயல்வெளியில் நடந்து
பம்புசெட்டில் நீராடித்
திரும்பும் வழியில்
தேநீர்க்கடையொன்றில் பசியாறிப்
பழகியவர்களை நலம் விசாரிக்கும்
கனவொன்றைக்
கண்டுகொண்டிருக்கிறேன்
காலிங் பெல் அழுத்திக்
கலைத்துவிடாதீர்கள்.
***
வளையல் – குதிரை – ஐஸ்
எந்தக் குதிரையில் அமர்கிறாய்
என்ற கேள்விக்கு
விழியிரண்டும் அகலமாக விரிய
அந்த ரோஸ் நிறக் குதிரை என்கிறாள்
சுற்றி முடிந்ததும் இறங்கி
பூமியில் பாதம் பதிக்கிறாள்
கிறக்கத்தில் பூரித்துப்போகிறாள்
அந்த வளையல் கடையில்
வளையும் பிளாஸ்டிக் வளையல்
வாங்கிக்கொள் என்றால்
வேண்டாம் கலகல ஒலி எழுப்பும்
கண்ணாடி வளையல்கள்
வேண்டுமென்கிறாள்
பன்னிரண்டு வளையல்களை
பக்கம் ஆறாக அணிந்துகொண்டு
கைகளிரண்டை எதிர்பட்டவர்களுக்குக்
காட்டி மகிழ்கிறாள்
வளையல் ஒலியுடன் தன்
சிரிப்பொலியைக் கலக்கிறாள்
வீட்டிலிருந்து புறப்பட்டபொழுது
மாங்காய் கீற்று கேட்டவள்
இப்பொழுது
வேண்டாம் ஐஸ் வாங்கிக்கொடு
என்கிறாள்
வாங்கிய ஐஸ் கைகளில்
வடியத் தானும் உருகுகிறாள்
வருடந்தோறும்
வழக்கம் மாறாமல் வந்துபோகட்டும்
திருவிழாக்கள் அம்மனுக்காக.
***
வீட்டுப் பொங்கல்
அம்மா செய்துவைத்த சாதத்தில் ஒரு கைப்பிடி
அக்கா பிடித்துவைத்த தண்ணீரில் ஒரு குவளை
அண்ணன் அறிந்துவைத்த கீரையில் ஒரு பிடி
அப்பா திருகிவைத்த தேங்காய்ப்பூ கொஞ்சம்
மாலையில் கூடியது மணல்மேட்டில் கூட்டம்
நெருப்பில்லாத அடுப்பில் வைத்திறக்கி
அவரவரின் பங்களிப்புகளை ஆரவாரமாய்ப் பரிமாற
குட்டிப் பாப்பாக்களின் வீட்டுப் பொங்கல் இனிக்கிறது
கட்டி வெல்லம் போடாமலேயே.
********