மனிதக்காட்டின் வழியே
ஒரு காட்டை சுமந்து வந்திருந்தேன்
சருகின் சாறறுத்து வேர்வழி சடைத்து விகாரமானாய்
பனங்கூடல் என்பது
நமக்கேயான தனிச்சொல்
உன் வானத்தை நோக்கி
என் முற்றத்தில் இரண்டு கதவுகள்
ஒன்று தெரியுமா
திறப்பது நான்
மூடுவது நீ
கவிழ்ந்து விடும் நீர்க்குவளை
அங்கே குவளை நீ
சிதறுண்ட நதி நான்
எல்லா வேடத்திலும்
குற்றம் காணமுடியாத பிறழ்வு நிலையில்
என் சாயல்
இருள் திரிந்த மனிதக்காடு
எங்கே
ஒருமுறை தனியாக அடைத்துப்பார்
பரிந்துரைப்புட்டியில்
ஒரு சுடராவது இருக்கட்டும்.
00
துரத்திக் கொண்டே இருக்கிறது
நொடிச்சிலந்தி
வளைய வளைய
ஓடிக் கொண்டே இருக்கிறேன்
எங்கிருந்தோ கிளர்ந்து வந்த
அகநெருக்கடிக்குள் சூழ்ந்து கொள்கிறீர்கள்
எதேட்சையாகவேனும்
இந்த உயிரை
எளிய உயிர் என்று சொல்லமாட்டேன்
அது குருட்டுச்சொல்
ஒரு ரணம் போதும்
சமரசமில்லாமல் கூடி விடலாம்
ஒரு இடறிவிழல் போதும்
கவன உதறலை
அபகரித்து விடலாம்
ஒரு மிதப்பு அவசியமாகிறது
செடியாய் முளைப்பதற்கு
பெயர்ந்தெடுக்கப்பட்ட பாறை எனினும்
நிலம் தீண்டாமை
நீருக்குண்டான கதை தானே.
00
ஒன்றும் அறியாததுபோல்
உறங்கிக்கிடந்த நிலம்
மார்பின் அமரத்துவத்தின்மீது
காதல் பொழிகிறது
என் தேசத்தின் திரள்மேகம்
திடீரென்று மழை
சொற்களாகி விடுகின்றன
சிறகு விரிக்க மர்ம வாசம் கமழும்
இக்கிழக்கு சிவப்புக்குருவிக்கு
புதுப்பித்துக்கொள்ளும்
ஆசை வலுக்கிறது
சுவரோரம் மெல்லக்கனிந்த
நீலமலர்
பொழுது புலர்வதற்கு முன்
ததும்பும் உள்ளார்ந்த கண்ணீரை
நன்றாகப் பருகு என்கிறது
அது நட்சத்திரங்களை கலக்கிய
தெய்வீக திராட்சை ரசம்
ஆயிரம் பொருள்பட
தூய்மையான இந்நிலத்திற்குள்
பிரவேசித்தேன்
அதன் மதுரமொழிக்கு
கடிவாளமில்லை
அதனால் தான் முள்ளை விதைத்தபோதும் பூவாய் விரிகிறது
இவ்வளவும் செய்கிற
இந்த அழகிய கிண்ணத்திலா
உப்பு விளைந்திருக்கிறது
சொர்க்கத்தை திறப்பதற்கு
சாவி எதற்கு
மேனிதழுவி கமழ்கிறது
என் மண்வாசம்.