1
கவிதா ரேடியோவைத் திருகிக் கொண்டிருந்தாள். ‘கொர் புர்’ரென்று சப்தம் வந்ததே ஒழிய வேறொன்றும் கேட்பதாயில்லை. கண்ணன் அடுத்த மாதம் புது ரேடியோ வாங்கித் தருகிறேன் என்று சொல்லியிருந்தான். “பென் டிரைவ் மெமரி கார்டுன்னெல்லாம் வந்திட்ட பெறகும் இப்பிடி ரேடியோதான் வேணும்னு அடம்பிடிக்கிறியே” என்று சிரித்தான். சிரிக்கும் போது கண்ணனின் முகம் முழுக்க மலர்ந்து காணப்படும். அவனுக்கும் கவிதாவுக்கும் ஆறு வயசு வித்யாசம். அவன் சற்றே அம்மாவழி முகசாடை. அவர்களில் யாரையும் கவிதா பார்த்தது கூட இல்லை. அம்மா அடிக்கடி சொல்வாள். “எங்க மூத்தவரு மாதிரியே மூக்கு ரெண்டு கண்ணும், குத்திப் பார்க்கிற குணம், சிந்தாமப் பேசுற குரலு எல்லாமே அப்டியே எங்க அன்பழகன் அண்ணாச்சிதான்” என்பாள். மகனை அதனாலேயே ஒரு சொல் கொண்டு வையக் கூட மாட்டாள்.
தன் போதைக்கு அவனை ஊறுகாயாக்கித் துப்புவதெல்லாம் அப்பாதான்.
கண்ணனை அப்பா ஓங்கி அறைந்தார். உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. கண்ணன் அப்படித்தான். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. முண்டா பனியனுக்கு வெளியே தெரிந்த உடற்பகுதியில் உற்றுப் பார்த்தால் ஒன்றிரண்டு சிவப்புத் தடயங்கள் எப்போதோ வாங்கி முற்றிலும் மறைந்து விடாத பழைய காயங்களைப் பறைசாற்றுவதை அறியலாம். அப்பாவின் நாக்கு ஆயிரம் சவுக்கு.
“எங்கயாச்சும் போய்த் தொலை சனியனே.எதுக்கும் ஆகாதது எனக்கு வந்து பிறந்திருக்கணுமா..?” கையில் அதுவரைக்கும் முறுக்கிப் பிடித்திருந்த டர்க்கி துவாலையை எதோ ஒரு திசையில் எறிந்தவர் சற்றே வேகமாக உட்புறம் நடந்து போய்த் தன்னறைக்குள் புகுந்து கொண்டார். அப்படியே நின்று கொண்டிருந்தவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. மனத்தைச் சற்றும் யூகிக்க முடியாத முகம். அவனது இயல்பே அதுதான். இத்தனை வருட வாழ்தலின் தொடர்ந்த பயிற்சியால் இன்னும் மெருகேற்றிக் கொண்டிருப்பதாகவும் சொல்லலாம். இதொன்றும் கவிதாவின் கருத்தல்ல. அப்பா சென்ற முறை அண்ணனை விளாசியபடியே முழங்கும் போது கவனித்ததுதான்.
எங்கிருந்தோ சிகரட் வாசம் கமழ்ந்தது. அப்பா தன் மலைகளிலிருந்து சிகரட்டின் கைப்பற்றித்தான் கீழிறங்குவது வழக்கம். காட்டுக் கத்தலுக்கப்பால் ஒரு சிகரட். அதன் முடிவில் மனமும் முகமும் சாந்தத்தில் குழைந்து போகும். முன்னர் காட்சியளித்தது அவரல்ல வேறொரு குறளி என்று யாரும் நம்புவார்கள். அப்படி ஒரு முகபாவ மாற்றத்தோடு எதுவுமே நடைபெறாத தோரணையில் மீண்டும் தென்படுவார். அம்மா கவிதாவைத் தன் உடம்போடு அதக்கிக் கொள்வாள். “இரு சனியனே, அந்தாள் போயி சிகரட்டைப் பத்த வச்சி நாலு இழு இழுக்கட்டும். அப்பறம் நடமாடுனா போதும். கொதிக்கிற அண்டாவை மடியில வார்த்துக்கிடணுமா என்ன?” என்று குரலற்ற ரகசியமாய்ப் பகிர்ந்து அடக்குவாள். எப்போதாவது அரிதாக அண்ணனும் எதிர்த்துப் பேசும் போது தூள் பறக்கும் சண்டை ஓரிரு மணி நேரங்களுக்கு மேல் தொடரும். அக்கம் பக்கத்திலிருந்து வீட்டு வாசல் வரை வந்து நின்றபடி வேடிக்கை பார்க்கும் முகங்களுக்கு எல்லை கடந்து உள்ளே புகும் தைரியம் இருந்ததில்லை.
சம்சு வாத்தியார் மட்டும் விதிவிலக்கு. ஒரு தடவை அப்பாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
“நீ மனுஷனாவே..? தோளுக்கு மிகுந்தவனை இப்படிக் கை நீட்டிட்டிருக்கியே.. அவன் திரும்பிட்டா உனக்கேது மரியாதை..? நாகராஜா, நீ ரொம்பத் தப்புப் பண்ணுறே. இதெல்லாம் உன் உடம்புல தெம்பிருக்கற வரைக்கும்தான் நடக்கும். தெரிஞ்சிக்க.” கோபக் களத்தில் அலைகையில் அப்பாவைப் பிடிமாடு போலாக்குகிற வித்தை அறிந்தவர் சம்சு வாத்தியார் ஒருவர்தான்.
அப்பா அமைதியானது அந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான். அதுவும் பிற்பாடுதான் ஏன் என்ற காரணம் புரிந்தது. அப்பாவின் நாட்பட்ட அப்பெண்டிசைடிஸ் தொந்தரவு ஆபரேஷன் வரை சென்றது. அடுத்து வந்த இரண்டு மாத காலம் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டுதான் நடமாடினார். அண்ணனுக்கும் அம்மாவுக்கும் கூட அப்பா கொஞ்சம் மாறி விட்டார் என்று தோன்றிற்று. கவிதா தென் கரை அம்மனை மனத்தில் நினைத்து நினைத்து தாள் பணிந்தாள். “எங்கப்பாவை இப்பிடியே அமைதியாக்கி வச்சிரு அம்மா. அது போதும்” என்று நெக்குருகினாள். இரண்டு மாதங்கள். ஒருவிதமான கூச்சத்தோடுதான் அமைதியும் நிம்மதியும் அவர்களுக்குப் பழக்கமாகிக் கொண்டிருந்தது.
ரொம்ப நாட்களுக்கு அந்த நிம்மதி கூடிவரவில்லை. தற்செயல்கள் சில வாழ்க்கைகளில் மாத்திரம் கருணையின்றி நிகழ்பவை. கண்ணன் அடி வரம் பெற்று வந்த ஒருவன். அதன் விளைதலே இன்றைய களேபரம்.
2
பதினாறு வயதில் அசோசியேட் ஸ்பின்னர்ஸில் டெம்பரவரி தொழிலாளியாகச் சேர்ந்தவன் பத்து வருடங்களுக்குப் பிறகு தற்போது இரண்டாயிரம் ஸ்பிண்டில்கள் கொண்ட ஒரு செக்சனுக்கு மேற்பார்வையாளன். அவனது தொடக்க காலத்தை நினைவுறுத்தியபடி புதிதாய்த் தொழிலறிய வருகிற பசங்களுக்குக் கண்ணன் ஸார் ஒரு ஹீரோ.தனக்குத் தெரிந்ததைப் பதமாகச் சொல்லித் தந்து வேண்டியதைப் பக்குவமாகப் பெறத் தெரிந்தவன். கம்பெனியில் ‘கண்ணனா..ஸ்மார்ட்!’ என்று பெயர் உண்டு.
உதிரிகளில் ஒருவனாகக் கலந்து கிடந்தவனைக் காலம் கதம்பத்தின் முதல் மலராக்கி அழகு பார்த்தது.
யூனியன் என்பது காலத்தின் நியதி. கண்ணனுக்குத் தன் முன் நீட்டப் பட்டது ஒரே ஒரு விரல்தான் என்பது நன்கு தெரியும். அதைத் தொட்டுத் தேர்வு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அதைத்தான் செய்தான். நிர்வாகத்துக்கும் அதனால் பெரிய அதிருப்தி எல்லாம் இல்லை. இன்னும் நாளானால் இந்த யூனியன் இரண்டாய் நான்காய் உடையக் கூடும். உடையாது எனும் பட்சத்தில் உடைத்து வைக்கவும் நிர்வாகத்திடம் பலம் இருந்தது. ஆகவே பெரிய சலசலப்பில்லை. கோவிந்தராஜ் போன்ற ஒழுங்கீனமான நாலைந்து பேர் இதாண்டா சாக்கு எனக் கிளம்பினர். அதன் விளைவுதான் சங்கராபுரம் வின்னர் சலூனுக்கு முடிவெட்ட வந்த நாகராஜனிடம், “உன் பய்யனுக்கு புத்தி சொல்ல மாட்டியா? யூனியன்னு போயி நாசமாப் போகப் போரான். எதாவது நேரம் வாய்க்கிறப்ப கம்பெனிக்காரன் தூக்கிருவான்” என்று தொடங்கித் தன்னால் ஆன மட்டும் ஏற்றி விட்டனர்.
மின் கசிவால் சக தொழிலாளி மனோகருக்கு வலது கை செயல்படாமல் போயிற்று. நிர்வாகம் ஏனோ தானோவென்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கப் பார்த்தது. யூனியன் தொடங்கிய பிறகு நிகழும் முதல் துர் சம்பவம். போராட்டம் ஒரு மாதத்துக்கப்பால் மாநிலம் தழுவியதாக மாறிற்று. அதே கோவிந்தராஜை மீண்டும் இரானி டீ ஷாப்பில் வைத்துப் பார்த்த நாகராஜனிடம், “உன் பையன் கலக்குறான்பா…ஸ்டேட் லெவல்ல பெரியாளாயிட்டான் போல…” என்றவன் தன் அருகே இருந்தவர்களிடம், “நம்ம கண்ணன் இல்ல…அதான்யா வாத்தியார் மாதிரியே செவப்பா சுருள் கிராப்போட இருப்பானே” எனத் தொடங்க அவர்கள், “தலைவர் கண்ணனைத் தெரியாதா?” என்று கேட்க, “அதானே அப்பிடி சொல்லணுமில்லை த-லை-வ-ர்ர்ர் கண்ணன்..நான் தூக்கி வளர்த்த பைய்யனில்லையா..அப்பிடி டக்குன்னு சொல்ல வரமாட்டிக்கிது… தலைவர்ர்ர்ர்… கண்ணன்” என்று சொல்லி நிறுத்த அன்னக்கரங்கள் உடனே “வாழ்க” என்று பின் தொடர மூஞ்சியெல்லாம் சிவந்த படி வந்த அப்பாவுக்குக் கண்ணனைப் பார்த்ததுமே வெறி பன்மடங்காயிற்று. தெரு முனையிலிருந்தே இறைந்து கொண்டு வந்தார். “எங்க அந்தத் தாயோளி?” எனத் தொடங்கி காது கூசும் வார்த்தைகள். அப்பாவின் சொற் சங்கிலி அவரோடு நெருக்கமான அனைவருக்குமே பழகியது தான். தொடர்ந்து ரேடியோ நிகழ்ச்சி கேட்பவர்களுக்கு முன்பின் ஒலிக்கிற விளம்பரங்கள் கூட அத்துப்படியாகும் அல்லவா..?
கண்ணன் யூனியன் விஷயமாக சென்னைக்குப் போய்விட்டு இரவு இரண்டு மணிக்குத்தான் வீடு வந்திருந்தான். லேட்டாய்த் தூங்கினால் மறு நாள் மதிய உணவுக்குத்தான் எழுவான். ஓரிரு நாட்கள் தொடர்ந்து கண் முழித்து வேலை பார்த்து விட்டு வந்தால் ஒன்றரை நாளாவது இப்படி தூங்கிக் கிடப்பான். ஒங்கித் தன் காலால் எத்தினார். எதோவொரு கனவின் சாலையின் நிலத்தைப் பொத்துக் கொண்டு நிஜத்தில் வந்து விழுந்தவன் விழித்த போது கண் ரெண்டும் எரிந்தது.
“படிப்பு ஏறலை. ஒரு பொழப்பை பார்த்துக்கடான்னு தெரிஞ்சவன் காலைக் கையப் பிடிச்சி வேலை வாங்கித் தந்தவன் நானு. இவரு பெரிசா கொடி பிடிக்கிறாராம். யூனியன் ஆரம்பிக்கப் போறாராம். தலைவனாகப் போறென்னு கெளம்புன பாதிப்பயலுக அட்ரஸில்லாம ஆன கதை எங்களுக்குத் தெரியாதாக்கும்? ஒழுங்கா சூத்தை மூடிட்டு வேலைக்கிப் போயிட்டு வந்தா இந்த வீட்ல எடம் உண்டு. இல்லை, நான் கொடிதான் பிடிப்பேன் கோஷம்தான் போடுவேன்; என் இஷ்டப்படிதான் இருப்பேன்னு சொல்றதா இருந்தா கெளம்பச் சொல்லு. இந்த வீடு அடங்கி நடக்கிறவங்களுக்கு மட்டுந்தான் இடம் தரும். சொல்லிட்டேன்.”
கையிலிருந்த ஸ்கேல் முறிந்து விட்டிருந்ததை அப்போதுதான் கவனித்தவராய் “அட நல்ல ஸ்கேலு வீணாப் போச்சே” என்றவாறே அதை ஒரு திசையில் எறிந்து விட்டு வரிசையாய்த் தொங்கிக் கொண்டிருந்த சட்டைகளிலிருந்து சந்தனக் கலருடையதை எடுத்து ஒரு கையை நுழைத்துக் கொண்டே வாயில் சிகரட்டையும் பற்ற வைத்தபடி சைக்கிளை எடுத்துக் கொண்டு நகர்ந்தார்.
அப்பா போன பிறகு அது வேறொரு வீடு. அம்மா ஒரு பூனை. தன்னை வளர்ப்பவனைத் தன் சாமி என்றும், எஜமான் என்றும் தப்பர்த்தம் செய்துகொண்ட பூனை. அவளுடைய மனம் விஸ்வாசம் வழிய முற்படும் ஓட்டைப் பாத்திரம். அவளுடைய கண்களுக்கு உட்புறம் நிரந்தரமாய்த் தெரிவது அப்பாவின் பேருருவம். அவரின்றி அவள் ஏது?
“ஏண்டா கண்ணா அவர் வம்புக்குப் போறே?” என்று கசிந்தாள். உடம்பில் காயத் தழும்புகளைத் தொட்டவுடன் சொஸ்தப்படுத்தி விட முடியாத தன் தெய்வீகமற்ற விரல்களை நொந்தபடி அவன் உடம்பை வருடினாள்.எண்ணையை எடுத்து வந்து பூசும் பொழுது கண்ணன் அந்த உடம்பு தன்னுடையதில்லை என்றாற் போல் பார்த்துக் கொண்டிருந்தான். கவிதாவுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. “மனுஷனா அந்தாளு…இப்பிடிப் போட்டு அடிக்காரு…நீ வேணா கொஞ்சிட்டிரு. நானும் அண்ணனும் ஒரு நா பிச்சிட்டு போறோம். அந்தாளு செத்தாக் கூட வர மாட்டம் பார்த்துக்க” என்று கொதித்தாள்.
“அடியே இவளே அப்பிடி சொல்லாதடி. அவருக்கு முன்னாடி நாம் போயிரணும்டீ. அவரு ஆத்திரம் வந்தாத்தான் அப்பிடி.. மத்தபடி நல்லவரு தாண்டீ” என்று சமாதானம் சொல்லத் தொடங்கினாள். கண்ணனும் கவிதாவும் ஆளுக்கொரு பக்கம் போன பிற்பாடும் தன் இயலாமையின் அபத்தத்தை உதிர்க்க வழியின்றி அப்படியே நொந்திருந்தாள்.
3
மில்லுக்குத் தொடர்புடைய ஒரு கொலை சம்பவத்தால் மில் மறு தேதி தெரியாமல் மூடப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலையிழந்தனர். அப்பாவைப் பொறுத்தவரை நடந்த யாவற்றுக்கும் அவன்தான் தலைமை தாங்கினான் என்றே நம்பினார். “இவன் ஒழுங்கில்லை. கிடைச்சதைத் தக்க வச்சிக்கிற துப்பில்லை. ஆகாவளிப்பய” என்று ஏசுவதில் பேரானந்தம் அடைந்தார். தூரத்து உறவினர்கள் எதுவும் அறியாமல், ‘எப்ப கண்ணனுக்குக் கலியாணம்?’ என்று கேட்டு விட்டால் போயிற்று. “இவனே தண்டம்.. அது ஒண்ணுதான் குறையாக்கும்?” என்று சப்தமாய் சிரிப்பார்.
கண்ணனும் அப்பாவும் பேசிக் கொள்வதே இல்லை.
கிடைத்த இடத்திலெல்லாம் வேலைக்குப் போய் வந்தாலும் எதிலும் ஒட்டவே இல்லை கண்ணனுக்கு.
மன ஆழத்தில் எப்படியாவது மில்லை மறுபடி திறந்து விட மாட்டார்களா எனும் நியாயமான எதிர்பார்ப்பு மெல்ல மெல்ல கோரிக்கையாக, பிரார்த்தனையாக மாற்றம் அடைந்து ஒரே ஒரு நாள் மறுபடி அந்த யூனிஃபார்மை அணிந்து, அந்த ஸ்டாஃப் பஸ்ஸில் ஏறி அமர்ந்து, கேண்டீனில் அறுபது பைசாவுக்கு வெண் பொங்கலும் இருபது காசுக்கு வடையும் சாப்பிட மாட்டோமா என்றெல்லாம் ஏக்கமாகவே மாறியது. உள்ளம் உருக்குலைகையில் உடம்பும் மெலியும். கண்ணனது உடல் தன் பழைய தோற்றத்துக்குத் திரும்ப முடியாத வேறொரு இருளெடுத்து வரைந்த சித்திரமாய்க் குறுகியிருந்தது.
“நான் வேலை வாங்கித் தந்தேன். நீ ஒழுங்கா இல்லை. யூனியனுக்குப் போயி வேலையைக் கெடுத்துக்கிட்டே” – என்று நேர் கோட்டில் பூர்த்தி செய்யப்பட்ட வஞ்சக நியாயம் ஒன்றை அண்ணன் மீது சவுக்காகச் சொடுக்கிச் சுழற்றிக் கொண்டிருந்தார் அப்பா.
பெரும்பாலும் அவர் வீட்டில் இருக்கும் நேரங்களில் எங்காவது போய்விடுவான். அவர் தலை தெரிந்தாலே வீட்டை விட்டு நகர்வதைப் பழக்கப் படுத்திக் கொண்டான். நிசி நடுவே வந்து படுப்பவன் அதிகாலையிலேயே கிளம்பிச் சென்று விடுவான்.
மழைக்காலம் தொடங்கியிருந்தது. வீட்டில் இருந்த பழைய பண்ட பாத்திரங்களை எல்லாம் அம்மாவும் அண்ணனும் ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பா இன்னும் சாப்பிட வரவில்லை. பின்னத்தூர் சந்தைக்குச் சென்று விட்டு லேட்டாகத்தான் திரும்புவார் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். பழைய துணிமணி, ஓடாத பெரிய வால்கிளாக் மற்றும் இயக்கத்தை நிறுத்திக் கொண்ட மர்பி ரேடியோ என பார்த்துப் பார்த்து ஏறக்கட்டிக் கொண்டிருந்தார்கள். கவிதா உள் ரூமில் டீவீ பார்த்துக் கொண்டிருந்தாள். “உனக்கு ஈஸ்னோபீலியா. நீ தூசில வராதே” என்று அம்மா கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.
மர பீரோவின் தலைக்கு மேலே சின்ன விளிம்புக்குப் பின்னால் ஒரு சிகப்பு துணிப்பை புடைத்துக் கொண்டிருந்தது.
“அதென்ன கண்ணா எடு பார்க்கலாம்” என்றாள் அம்மா. ஸ்டூலைப் போட்டு ஏறி எடுத்தவன் பையின் கனம் தாளாமல் சரிந்து அப்படியே கீழே வழிய விட்டான். அறையின் பாதிப் பரப்பில் உள்ளே இருந்த புஸ்தகங்கள் சிதறின.
விதவிதமான பெயர்களும் முகங்களுமாய் செக்ஸ் புத்தகங்கள்.கதை மட்டும் கொண்டது பாதி, படங்களைப் பிரதானப் படுத்தியவை மிச்சம் என்று எப்படிப் பார்த்தாலும் நூற்றைம்பதுக்கும் மேல் இருக்கும். அம்மா அவற்றைப் பார்த்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் கண்களை மூடிக் கொண்டாள். சட்டென்று எழுந்து சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அந்த நேரம் பார்த்து “பின்னத்தூர் சந்தையில சல்லிசாக் கெடச்சிது. இந்தா பார்வதி, இதை ஃப்ரிட்ஜில வய்யி” என்று கேரி பையில் பாதி வெட்டப்பட்ட தர்பூஸ் பழத்தைப் பற்றியபடி உள்ளே நுழைந்த அப்பா கீழே சிதறிக் கிடந்தவற்றைப் பார்த்ததும், “நீ எதுக்கு என் ரூமைக் குடையிறே?” என்று கேட்டபடியே பேண்ட்டிலிருந்து பெல்டை உருவி அடிக்க ஆரம்பித்தார்.
நாலு அடி மேலே பட்டதும் பெல்டின் நுனியைத் தன் வலது கரத்தால் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு, “கெழட்டு மூதி.மீறின வயசுல பிள்ளையும் பொண்ணும் இருக்கறப்ப ஒருத்தன் படிக்கிற புஸ்தகமா இதெல்லாம். வீட்டுக்குள்ளே சேர்த்து வக்கிற விசயமாடா இது..? கொன்னுறுவேன் உன்னைய” என்றவாறே அப்பாவின் கழுத்தைப் பற்றி நெரிக்கத் தொடங்கின கண்ணனை ஓடி வந்த அம்மா முதுகில் தன் பஞ்சுக் கரங்களால் சாத்தினாள். “டே விடுறா, அவர் உன் அப்பாடா” என்றவள் சட சடவென்று அந்தப் புத்தகங்களை எடுத்து அடுக்கி மீண்டும் சிவப்பு பையிலேயே திணித்தாள். என்னவோ சத்தம் என்று கவிதா வந்து பார்க்கும் போது அந்தப் பையை வாங்கி அப்பா மீண்டும் அது இருந்த இடத்திலேயே வைத்து விட்டு சிகரட்டைப் பற்ற வைத்தபடி கிணற்றடிப் பக்கம் போனார். கோபத்தோடு கிளம்பிச் சென்ற கண்ணன் மறு நாள் காலையில்தான் வீடு திரும்பினான்.
திடீரென ஒரு நாள் அப்பா வேலைக்குப் போன பிற்பாடு ஸ்டூலை எடுத்துப் போட்டு ஏறியவன் மர பீரோவின் தலைக்கு மேல் அந்த சிகப்புப் பை இருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. இடம் மாற்றி வைத்திருப்பார் என்று நினைத்துக் கொண்டவன் இறங்கியதும் முதுகின் பின்னே இருந்து அம்மாவின் குரல் ஒலித்தது.
“அது அவரோட பலவீனம். அவர் ஒளிச்சி வைக்கிற விஷயங்களைத் திறக்கிறதன் மூலமா அவரையும் நாம வெளிச்சப்படுத்தறோம். அது அனாவசியம்டா கண்ணா, இனிமே இந்த வீட்டுக்குள்ள அந்த மாதிரி புஸ்தகங்கள் வராதுன்னு எங்கிட்ட சொல்லிட்டு போயிருக்கார். நீ துப்பறிய வேண்டியதில்லை தெரியுதா?”
முன்பு போல் எதுவும் இல்லாமல் மாறுவதுதான் இந்த உலகத்தின் இயல்பிலிருக்கும் மாபெரிய வஞ்சகம். மனம் என்ற இல்லாப் பண்டம்தான் எதையாவது ஒப்பிட்டுக் கொண்டே அல்லாடுகிறது. நிசப்தம் தருகிற நிம்மதி சங்கீதங்களுக்கு அப்பாற் பட்டது. அந்த வீட்டின் மனிதர்கள் அன்னியர்களாகவே இருந்து கொண்டார்கள். எந்தப் பிராதும் இல்லாமற் போகையில் எதற்குச் சப்தம் எழுகிறது..?
கண்ணனின் கனவுகளில் மூன்று சக்கர சைக்கிளைக் கோணல் இழைகளினூடே ஓட்டிக் கொண்டு பெருஞ்சிரிப்புடன் செல்கிற குழந்தைக் கண்ணனைத் துரத்தியபடி, ‘ஒரே ஒரு புஸ்தகம்டா.. ப்ளீஸ்டா கண்ணா!’ என்றவாறே வந்து கொண்டிருந்தார் அப்பா. மீண்டும் நினைவுக்கு வந்து தொலைப்பதுதான் கனவைக் காண்கிற பொழுதைக் காட்டிலும் பேரவஸ்தை என்று கண்ணனுக்குத் தோன்றியது.
4
மழை பொய்க்கும் காலம் க்ரூரமானது. வியர்வைச் சளி அம்மாவின் நெஞ்சைக் கட்டி உட்புறம் நெறித்தது. மூன்றே நாட்கள். அறை மூலையில் முடங்கின அம்மா எழுந்திருக்கவில்லை. பார்த்துப் பார்த்துப் போட்ட கோலத்தை நிமிடப் பொழுதின் தூறல் அழித்து விடுவது போலானார் அப்பா. எதைக் கேட்டாலும் வீட்டின் உட்புறம் பார்ப்பதும் தனக்குள் முணுமுணுத்துக் கொள்வதுமாக இருந்தாரே ஒழிய, பழைய பெருங்குரல் எங்கே போனதென்று தெரியவில்லை. கவிதாதான் அரற்றி அழுதாள். சம்சு வாத்தியாரும் ரத்தினவேல் பெரியப்பாவும்தான் பார்த்துப் பார்த்துச் செய்துமுடித்தார்கள். அப்பாவைச் சார்ந்தவர்கள் சொற்பப் பேர்தான். சொந்தபந்தமும் சுற்றத்தாரும் சேர்த்து நூறு பேர் வந்திருந்தால் அதிகம். வந்தவர்கள் எல்லாருமே கண்ணனின் பழக்க வழக்கம்தான். சங்கராபுரம் அப்படி ஒரு இறுதி ஊர்வலத்தைக் கண்டதில்லை என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். கூட்டமான கூட்டம். பலரும் காட்டிற்குப் போய் எரியூட்டுகிற வரைக்கும் கலையாமல் அப்படியே உடனிருந்தனர்.
அம்மா இல்லாத அந்த வீடு மறுபடி வீடாவதற்குப் பெரும்பாடு பட்டது. அப்பா நிலை குலைந்தார். திடீரென்று நோய் வந்து உடல் இளைத்தவன் தன் முன் கால ஆடைகளில் ஒவ்வாமற் திரிவது போல் சிலபல சந்தர்ப்பங்களில் பெருங்குரலுக்கு முன் சட்டென்று அமைதியானது அப்பட்டமாய்த் தெரிந்தது. அம்மாவின் கைப்பக்குவத்துக்கு ஒப்பிச் சொல்வதற்கில்லை என்றாலும் கவிதாவின் சமையல் நன்றாகவே இருந்தது. அப்பாவும் அண்ணனும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதெல்லாம் அம்மா ஒருபோதும் காணாத காட்சி. அப்பா கவிதாவின் முன்னிலையில் எதாவது கேட்டால் கூட கண்ணன் அதற்கு அப்போது பதில் சொல்லாமல் அப்பா நகர்ந்த பிறகு கவிதாவிடம் பதில் சொன்னான்.
“ஏன் அண்ணே, அப்பா இப்பல்லாம் நெறைய மாறிட்டாருல்ல?” என்று கவிதா ஒருமுறை கேட்ட போது, “க்கும்” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனான். அதற்கப்புறம் கவிதாவும் அவனிடம் அப்பா பற்றி எதுவும் கேட்கவில்லை.
மில்லை ஒரு வட நாட்டுக் கம்பெனி அண்டர்டேக் செய்யவிருப்பதாகப் பேச்சு தொடங்கிய நாற்பதாம் நாள் முகம் மலர்ந்த சிரிப்போடு கவிதாவின் கைகளில் ஸ்வீட் பாக்ஸை நீட்டினான் கண்ணன். இழந்ததைப் பெறும் போது ஏற்படுகிற இன்பம் தொடர்ந்த வெற்றியில் கூட இருப்பதில்லை என்று எங்கோ படித்தது கவிதாவுக்கு ஞாபகம் வந்தது. அண்ணனெனும் மரம் மறுபடி தளிர்க்க ஆரம்பித்தது அப்போதுதான். அடுத்த வருடத்தின் தை மாதத்தில் கவிதாவை சுந்தரபாண்டியபுரம் செல்வியத்தையின் இரண்டாவது மகன் பிரகாசத்துக்குக் கேட்டு வந்தார்கள். அப்பா அதை ஒட்டி அண்ணனிடம் கருத்துக் கேட்க முயன்ற போது கவிதாவிடமே, “உன் இஷ்டம்தான் எனக்கும்” என்று சற்றே சப்தமாய்ச் சொன்னான்.
அந்த மாதத்தின் நடு முகூர்த்த தினமொன்றில் கவிதா கல்யாணம் எண்ணத்துக்கும் சொல்லுக்குமான அதே லயத்தோடு நடந்து முடிந்தது.
இரண்டு மாதங்களுக்கப்பால் ஒரு நாள் காலை, “உடனே கிளம்பி வா” என்று கவிதாவுக்கு ஃபோன் செய்தார் அப்பா. பன்னிரெண்டு மணியாயிற்று கவிதாவும் பிரகாசமும் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது. அப்பா வாசலில் அமர்ந்திருந்தார். மூன்று நாள் தாடி.. கண்களில் எதிர்த்திசை தெரியாமல் பஞ்சடைந்த கலக்கம். குரல் சுத்தமாய்க் கன்றிப் போய்த் தொனித்தது.
“உங்கண்ணனுக்கு கல்யாணம் ஆயிருச்சாம். பொஞ்சாதி கேரளாக்காரி. கட்டிக்கிட்டு நாலு வருஷமாச்சு போல. இரண்டரை வயசுல ஆம்பளைப் பய்யன் இருக்கானாம். இதெல்லாம் மூணாமத்தாள் சொல்லித்தான் தெரியுது. பாளாப் போன கோவம் நான் மிடுக்காத் திரிஞ்சப்ப என் கண்ணை மறச்சிட்டது. இன்னிக்கி அதுக்கு அனுபவிக்கிறேன். உங்கம்மாளும் இல்லாமத் தனியாக் கெடந்து நோவுறேன். இதெல்லாம் நியாயமா..?” என்று குமுறி அழுதார். அப்பா முதன் முறையாக அழுவதைப் பார்த்த கவிதாவுக்கு என்னவோ போல் இருந்தது. பிரகாசம் அவள் தோளைத் தொட்டவன் ” மாமா, எதா இருந்தாலும் சரி பண்ணிக்கிடலாம். தைரியமா இருங்க” என்றான். கவிதாவுக்கு ஆத்திரமாகவும் குழப்பமாகவும் இருந்தது. அப்பாவிடம் மறைத்ததற்குக் காரணம் இருக்கலாம். “எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கணுமில்ல..?” என்றவர் சற்றே தணிந்தவராய் “வீட்டுக்குள்ள வாம்மா…வாங்க மாப்பிள்ளே” என்றவாறே கதவைத் திறக்க ஆயத்தமானார் அப்பா.
அடைத்தே வைத்திருந்த புழுக்கத்தில் மூச்சு முட்டிற்று. சன்னலைத் திறந்தார் அப்பா. உலகத்தின் மொத்த வெளிச்சமும் வீட்டின் உள்ளே பரவிற்று. “இதான் உன் அண்ணன் இருக்கிற அட்ரஸாம்”
தன் பர்ஸில் இருந்து ஒரு சீட்டை எடுத்து நீட்டின அப்பாவின் கரம் நடுங்கிக் கொண்டிருந்தது. அளவுக்கதிகமாக வியர்த்துப் போய் சட்டையெல்லாம் மழையில் உலாவி வந்தாற் போல் தெப்பமாய்த் தெரிந்தது. “நீங்க முதல்ல காத்தாடிக்கடில இருங்க” என்றவள் பிரகாசத்திடம் காதோடு எதோ சொன்னாள்.
“காலைல எதும் சாப்டலையா?” என்றவளிடம் கூட்டிப் பெருக்கப் படாத வீடு தூசியும் துப்பையுமாக இருந்ததைப் பார்த்ததும் லேசாய்க் கூசியவராய், “நா மட்டுந்தானேம்மா இருக்கேன்” என்றார். அம்மாவின் இன்மை அந்த வீட்டின் அத்தனை இருளிலும் குன்றிய ஒளியிலும் பட்டவர்த்தனமாய்த் தெரிந்தது.
பிரகாசம் வாங்கி வந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரித்து வேக வேகமாய்த் தின்ன முயன்றவர் இரண்டுக்கு மேல் அப்படியே வைத்துவிட்டார். “எறங்கலைம்மா” என்றவர், “இரு குளிச்சிட்டு வந்திடுதேன்” என்றபடியே பின் பக்கம் சென்றார்.
‘நான் ரொம்ப நல்லாத்தான் இருக்கேனாக்கும்’ என்று காட்டிக் கொள்ள முயற்சிக்கையில்தான் பெரும்பாலும் நோய்மைகள் வெளித்தெரிந்து பிடிபட நேர்கிறது. அப்பா எப்போதும் வெளியே கிளம்புகிற காட்சியே வேறு. மடித்து விட்ட சட்டை, கழுத்தோடு படர்ந்த கர்ச்சீஃப், உள்பாக்கெட்டில் இருக்குமிடம் தெரியாமல் ஒளிந்துகொள்ளும் நாலைந்து சலவைத் தாட்கள் வெளிப்பையில் மொடமொடக்கும். அவருடைய செல்ஃபோன் மற்றும் பணப் பர்ஸை எப்போதும் டவுசர் பையில் தான் வைப்பார். எத்தனை போதையிலானாலும் பின்னாமல் நடந்து நேராகத் தன் வீட்டுக்குத் திரும்பிவிடுகிற வல்லமை அவருக்கிருந்தது. “நாகராஜன் குடிச்சாலும் பைசாக் காசை நகர்த்த மாட்டான்ல” என்பார் ரத்தினவேல் பெரியப்பா.அது மெய்தான்.
இன்றைக்குத் தன் பழைய மிடுக்கு கலைந்து போய் ஆங்காங்கே வெளிறிக் கொண்டிருப்பதை அறிந்தும் அறியாதவராய்க் கதவைப் பூட்டிக் கொண்டு முன்னே நடந்தார் அப்பா. அழைத்திருந்த கால் டாக்ஸியில் ஏறியதும் விலாசச் சீட்டைப் பார்த்துப் படித்தாள் கவிதா. பிரகாசம் அந்தக் குரலில் தொனித்த வெறுப்பின் விலகலைக் கவனித்தவனாக, ” எதா இருந்தாலும் பேசிக்கலாம். இரு” என்றான்.
கவிதாவின் வாழ்க்கை ஸெட்டில் ஆகி விட்டது நாகராஜனுக்கு சந்தோஷம்தான். இந்தக் கண்ணன் பயல்தான் காலத்துல ஒரு கல்யாணம் பண்ணாம ஒத்தையாவே திரியுறானே என்று கவலை இருந்தது. அதுவும் இன்றோடு விலகிவிட்டது. என் மகனுக்குக் கலியாணம் ஆகிவிட்டது. அதைவிட எனக்கொரு பேரன் இருக்கிறான். அவருக்குக் கண்ணனின் பையன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்ததும் தன்னை அறியாமல் முறுவல் பூத்தது.
5
காலிங் பெல்லை அடித்ததும் கதவைத் திறந்தது கண்ணன்தான்.
அந்த வருகையை அப்போதில்லை என்றாலும் பல முறை எதிர்பார்த்து ஒத்திகை பார்த்திருந்தான் போலும். “வாங்க வாங்க” என்று விருந்தினரை உபசரிக்கிற குரலில் வரவேற்றவன் உள்ளே திரும்பி, “மஞ்சு….கவின்,….இங்க வாங்க” என்றான். வந்தார்கள். கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு அந்தச் சின்னஞ்சிறு முகத்தில் தன் வாழ்க்கையின் முன் பரவலை அவசர அவசரமாய்த் தேடினார் நாகராஜன்.
அந்த ஹாலைத் தன் கண்களால் அளந்து கொண்டிருந்தார். “நீங்க உள்ள வாங்க” என்று கவிதாவையும் பிரகாசத்தையும் பெட்ரூமுக்குள் அழைத்துச் சென்றான் கண்ணன்.
சின்னஞ் சிறுவனுக்கு எதாவது வாங்கி வந்திருக்கலாமே என்று தோன்றியது அப்பாவுக்கு. ” இங்க வா ராசா” என்றவருக்குக் கண்கள் கலங்கின. அந்தச் சிறுவன் மெல்லத் தன் செப்புப் பாதங்களால் அடியெடுத்து அவரிடம் வந்தான். “நான் யார் தெரியுமா?” என்றார் நாகராஜன். சிறுவன் அமைதியாக நின்றுகொண்டிருந்தான். “நான்தான் உன் தாத்தா” என்றார். பின்னாலிருந்து “புதுசா யார்ட்டயும் சட்டுன்னு பேசிர மாட்டான். கொஞ்சம் ரிசர்வ் டைப் அவன்” என ஆங்கிலத்தில் சொன்னவாறே அவனைப் பற்றித் தூக்கிக் கொண்டாள் மஞ்சு.
உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை, இப்போது மஞ்சு டம்ளரை நாகராஜனின் முன் நீட்டியபடியே “காஃபி” என்றாள். நிமிர்ந்து அந்த முகத்தில் துளியூண்டு சினேகத்தை எதிர்பார்த்து ஏமாந்த நாகராஜன் எதுவும் சொல்லாமல் காப்பியை வாங்கிக் கொண்டார்.
கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த கவிதாவின் முகத்திலிருந்து எதையும் யூகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அழுதிருக்கிறாள் என்பது தெரிந்தது.
“வாங்கப்பா கிளம்பலாம்” என்று மட்டும் சொன்னாள். கண்ணன் அவரது முகம் நோக்கி ஒரு சொல்லைக் கூட உச்சரிக்கவில்லை. அப்பாவுக்கு அது இன்னும் பெரிய அழுத்தத்தைத் தந்திருக்க வேண்டும். மெல்ல எழுந்து கொண்டார்.
கார் கிளம்பியதும் “சொல்லு கவிதா..என்ன சொன்னாப்ல மச்சான்?” என்று தொடங்கித் தந்தான் பிரகாசம்.
“யப்பா..அண்ணன் மனசுல பகையும் பழியும்தான் இருக்குது. உங்களைத் தன்னோட வச்சிக்கிடுற ஆப்ஷனே அதுகிட்ட இல்லைப்பா. என்னால அப்பா கூட இருக்க முடியாதுன்னுதான் பாலீஷா சொல்லுதுன்னாலும் அர்த்தம் அதானே? உங்க நிழலே படாம வாழ்றதுதான் தனக்கு நிம்மதின்னு சொல்லுதுப்பா. உனக்கும் அப்பாவுக்கும் ஒத்துப் போவும்ல கவிதா…நீ அவரைக் கூட்டிப் போயிருன்னு கண்டிஷனா சொல்லிருச்சி” என்றாள்.
வேறொன்றை எதிர்பார்த்துத் தோற்றவராய் ‘அப்பிடியா’ என்றார் அப்பா. அந்தக் குரல் அதற்கு முன்பு ஒலித்ததேயில்லை என்றவகையில் இருந்தது அந்த ‘அப்பிடியா’.
பிரகாசம் சன்னமான குரலில் “உங்க அப்பாவோட பணமோ அந்த வீடோ எல்லாத்தையும் நீயே வச்சிக்க. உங்கப்பாவையும் நீயே பார்த்துக்க. என்னைய விட்ருங்கன்னு ஒட்டாமப் பேசுறாப்ல கண்ணன் மச்சான்” என்றவனைப் பார்த்து ஏளனமாய்ப் புன்னகைத்தார் நாகராஜன்.
“ஒரு வாரம் பத்து நாளுக்குள்ள எங்க வீடு இருக்கிற வரிசையிலயே அஞ்சாறு வீட்டுக்குள்ள ஒரு வீட்டைப் பார்த்துரலாம் மாமா. மச்சான் இப்பிடிப் பேசுறாப்லயேன்னு கலங்காதீங்க. நாங்க இருக்கோம். உங்களை விட்டுற மாட்டோம். நீங்க எதுக்கு இந்தவூர்ல தனியாக் கஷ்டப்படணும்..வந்திருங்க.” என்றெல்லாம் பிரகாசம் பேசியதைக் கேட்டுக் கொண்டே பூந்தொட்டியை நகர்த்தி சாவியை எடுத்துக் கதவைத் திறந்தார்.
கவிதா எதுவும் பேசாமல் பிரகாசத்தின் முதுகின் பின்னே நின்று கொண்டிருந்தாள்.
“சரிம்மா நீங்க கெளம்புங்க. நேரத்துக்கு வீடு போய்ச் சேரணும்ல” என்றார். தயங்கியவளிடம், “பிற்பாடு பேசிக்கிடலாம்” என்று தீர்க்கமாகச் சொல்லி அனுப்பினார்.
அவர்கள் கிளம்பிச் செல்வதைச் சன்னலினூடே பார்த்துக் கொண்டிருந்தவர் டீவீயை ஆன் செய்தார். கதவை உட்புறம் சாத்தினார். டீவீ வால்யூமை 100 வரை உயர்த்தினார்.
*********