எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான “அறம்” என்னும் நூல் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. அதில் உள்ள ஒரு சிறுகதையின் தலைப்பு “மத்துறு தயிர்”. கம்பனில் கரைந்து போன பேராசிரியர் ஒருவரை முதன்மைப் பாத்திரமாக வைத்துப் புனையப்பட்டது. அக்கதையில் கம்ப ராமாயணத்தின் இந்தப் பாடல் மையப் புள்ளியாக அமைகிறது:
“மத்துறு தயிரென வந்து சென்றிடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ?”
கதையில் பேராசிரியர் இந்தப் பாடலின் பொருளை இப்படி விளக்குகிறார்: ‘மத்தால கலயத்திலே தயிர் கடையற காட்சிய நாம கற்பனையிலே பாக்கணும். கலயம்தான் உடல். உயிர்ங்கிறது அதுக்குள்ள இருக்கிற தயிர். மத்து அந்தத் துன்பம். துன்பம் உயிரைப்போட்டு கடையுது. கடையற தயிர் எப்டி இருக்கும் பாத்திருக்கேளா? ஒருபக்கமாட்டு சுத்திச் சுழன்று நொரையோட மேலேறி இந்தா இப்ப தளும்பி வெளியே பாஞ்சிரும்னு வரும். உடனே மத்து அந்தப்பக்கமாட்டு சுத்தும். அந்தப் பக்கமாட்டும் அது வெளிய சாடீரும்னு போயி உடனே இந்தப்பக்கமாட்டு சுத்தும். ஒரு செக்கண்டு நிம்மதி கெடையாது. நுரைச்சு பதைஞ்சு …மனுஷனோட பெருந்துக்கமும் அதேமாதிரித்தான். அந்த அலைக்கழிப்பு இருக்கே அதாக்கும் கொடுமை. இதுவா அதுவா, இப்டியா அப்டியான்னு. வாழவும் விடாம சாகவும் விடாம… அதைச் சொல்லுதான் கம்பன்.’
அற்புதமான உவமை; ஆழமான கருத்து. இதைப் படித்த பின் என் உள்ளம் இதன் நதிமூலம் தேடிப் புறப்பட்டது.
தாழியில் தயிர் இட்டு அதனை மத்து கொண்டு கடைதல் என்னும் நிகழ்ச்சி தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் இடம் பெற்று வந்திருக்கிறது. அது ஆயர் வாழ்வியலில் அன்றாட நிகழ்வு. ஆநிரை மேய்த்துப் பேணி ‘நல்லான் தீம்பால்’ கன்றுக்கும் புகட்டியது போகத் தமது கலத்திலும் கறந்து கொண்ட ஆயர், காடும் காடு சார்ந்த நிலமும் ஆன முல்லைத் திணைக்கு உரிய மக்கள். “ஆ காத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர்” (சிலப்பதிகாரம்: 5:120-121) என்று குறிப்பிடுகிறார் இளங்கோ அடிகள். முல்லை நிலத்திற்குத் தெய்வம் கண்ணன் என்று தொல்காப்பியம் குறிக்கும். அவன், ஆயர்தம் கொழுந்து.
மத்து என்னும் கருவியை மத்தம் என்றும் அழைத்துள்ளனர். ‘பொருள் வயின்’ பிரிந்த தலைவன் செல்லும் பாலை நிலம் பற்றி தலைவி விவரிப்பதாகப் பாடுகிறது நற்றிணையின் 84-ஆம் பாடல். அந்தப் பாலை நிலம் வெப்பத்தால் வெடித்துக் கிடக்கிறது; சோடியம் மிகுவதால் காரத்தன்மையும் அமிலத் தன்மையும் கொண்டு உப்புப் படிந்து கிடப்பது களர் நிலம். அதற்கு இப்பாடல் ஓர் உவமை சொல்கிறது:
“சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பிடத் தன்ன
உவர் எழு களரி …”
அதாவது, மண்ணால் செய்த பெரிய தயிர்த் தாழியில் மத்து கொண்டு கடைந்தபோது வெப்பம் அதிகமாக இருந்த காரணத்தால் வெண்ணெய் சரியாகத் திரண்டு வராமல் சிதறிக் கிடப்பதைப் போல் உப்புப் பூத்துக் கிடக்கும் களர் நிலம்.
தசும்பு என்னும் பெயர் சுடுமண் தாழியை / பானையைக் குறிக்கும். முல்லை நிலத்தில் இருந்து பானையில் தயிர் கொண்டு வந்த ஆய்மகள் மருத நிலப் பெண்டிரிடம் அதனை வெண் நெல்லுக்குப் பண்டமாற்றுச் செய்யும் செய்தியைப் புறநானூறு பகர்கிறது:
“….. …. …. …. ஆய்மகள்
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப … …”
முல்லை நிலம் மிகு வளம் கொண்டது. அதில் உள்ள ஆயர் குலச் சிறுமிகள் எத்தகையோர்? “சீர்மல்கு ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்” என்று அழைக்கிறார் ஆண்டாள். பால், தயிர், வெண்ணெய், நெய் என்று பெருகும் வளம். ஆய்ச்சியரை அதிகாலையில் துயில் எழுப்பும் பாங்கிலேயே ஆண்டாள் திருப்பாவை பாடினார். வைகறையில் பறவைகள் பாடுகின்றன, எருமைகள் மேய்ச்சலுக்குப் புறப்பட்டு விட்டன. அப்போது அவள் ஆய்ச்சியரை எழுப்புகிறாள்.
“புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்…” (6)
“கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்
கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?” (7)
“கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண்…” (8)
ஆண்டாளின் இந்த அழகிய ஆய்ச்சித் தமிழுக்கு அடி எடுத்துக் கொடுத்தது சங்கத் தமிழ். முல்லை நிலத்து ஆய்மகள் வானம் வெளுக்கும் முன்பே எழுந்து புள்ளினம் பாடத் தொடங்கும் அதிகாலையிலேயே மத்தால் தயிர் கடையத் தொடங்கி விடுகிறாள் என்று கூறுகிறது பெரும்பாணாற்றுப் படை. தயிரைக் கடையும் மத்தின் ஓசை புலியின் உறுமல் போல் கேட்கிறதாம்! உருத் திரண்டு வரும் வெண்ணெய்க் குமிழ் புதிதாக முளைத்த வெண் காளானின் தலை போல் இருக்கிறதாம்!
“நள்ளிருள் விடியல் புள் எழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீந்தயிர் கலக்கி, நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நல் மா மேனி
சிறு குழை துயல்வரும் காதின் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்” (155-162)
பசுக்களோடு ஆயர்கள் செல்லும்போது அவர்கள் மீது வேடர்கள் அம்புகள் எய்யும் காட்சியைத் திருத்தக்க தேவர் பாடுகிறார். அப்போது அந்த ஆயர்கள் சிதறி ஓடுகிறார்கள். மத்தால் கடையும் போது தெறிக்கும் தயிர் போல் அவர்கள் ஆனார்கள் என்று அவர் உவமை சொல்கிறார்:
“ஆயர் மத்தெறி தயிரின் ஆயினார்” (420)
வேடர்கள் ஆயர்களை தப்பிப் போக விடுவதாக இல்லை. இந்தப் பக்கம் ஓட விட்டு அந்தப் பக்கம் வந்து மறிக்கிறார்கள். மத்தைச் சுழற்றும் கயிற்றை வலது கை விட்டால் இடது கை இழுக்கும், இடது கை விட்டால் வலது கை இழுக்கும். இப்படி மாறி மாறி இழுப்பதை உவமை சொல்கிறார் திருத்தக்க தேவர்:
“மத்தம் புல்லிய கயிற்றின் மற்று அவர்
அத்தலை விடின் இத்தலை விடார்” (423)
இப்பாடல்கள் இடம் பெறும் கோவிந்தையார் இலம்பகத்தில் ஆயர் குலத்து இளம் பெண் ஆன கோவிந்தையை அவர் வருணிக்கும் விதம் புதுமையானது. வெண்ணெய் போல மென்மையான இனிய பெண் அவள்; பால் போல் தித்திப்பாகப் பேசுபவள்; உருக்கிய நெய் போல் நிறம் திகழும் மேனி கொண்டவள்.
“வெண்ணெய் போன்று ஊறு இனியள்;
மேம் பால் போல் தீஞ் சொல்லள்;
உண்ண உருக்கிய ஆ நெய் போல் மேனியள்.” (480)
ஆயர்பாடியில் ஆய்ச்சியர் கடைந்து வைத்த வெண்ணெய்யைக் கண்ணன் திருடி உண்பான் என்பது பாகவதம் சொல்லும் செய்தி. பாவம், அவர்கள்தாம் எவ்வளவு முயன்று உழைத்து வெண்ணெய் கடைந்தார்கள். ஒருத்தி இடை நோக மத்தால் கடைந்த வெண்ணெய்யை இன்னொருத்தி வழித்தெடுத்து வேறொரு பானையில் நிரப்பி அதனை உரியில் கட்டி வைக்கிறாள் என்கிறார் திருமங்கையாழ்வார்:
“வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக்கொண்டு
ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு
நாரார் உறியேற்றி நன்கமைய வைத்ததனை…”
(சிறிய திருமடல்: 57-61)
என்னதான் கண்ணுக்கும் மனதுக்கும் இனிய பிள்ளையாக இருந்தாலும் சேட்டைகள் செய்யும்போது சற்றே கோபம் எழுந்து அதட்டுவது இயல்புதானே? ஆய்ச்சியர் தம் கை மத்தும் தாம்பும் ஓச்சி கண்ணனைக் கண்டிக்கவும் கட்டிப் போடவும் செய்கின்றனர். அவனும் அஞ்சுவது போல் நடிக்கின்றான்.
“வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி
கண்ணி ஆர் குறுங் கயிற்றால் கட்ட வெட்டொன்று இருந்தான்”
(பெரிய திருமொழி: நாலாயிர… : 1434)
“உழந்தாள் நறுநெய் ஓரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான்…”
(பெரியாழ்வார் திருமொழி: 25)
“உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே” (மூன்றாம் திருவந்தாதி : 2309) என்று அவன் அஞ்சிய எளிமையைப் பாடுகிறார் பேயாழ்வார்.
வெண்ணெய்யைத் திருடியதற்காக தாய் யசோதை அவனை ஓர் உரலில் கட்டி வைத்தாள். கண்ணனின் அந்நிலையை ஓரிடத்தில் நம்மாழ்வார் இப்படிச் சொல்கிறார்:
“மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்தேங்கிய எளிவே!”
(திருவாய்மொழி 1-3-1)
இதே வெண்ணெய்க் களவு நாடகத்தைப் பெரியாழ்வாரும் குறிப்பிடுகிறார்:
“மத்து அளவும் தயிரும் வார்குழல் நன்மடவார்
வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி…”
(திருமொழி: செங்கீரைப்பருவம்: 67)
வைணவ மரபில் சொல்லப்படும் தொன்மங்களுள் தலையான ஒன்றாகிய பாற்கடல் (க்ஷீராப்தி) கடைந்து அமிர்தமும் ஆலகாலமும் வெளிப்பட்ட நிகழ்வை ஆழ்வார்களும் கம்பனும் பன்முறை பாடியுள்ளனர். மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடையப்பட்டதாக அந்தத் தொன்மம் கூறும். “வலி மிக்க வாள் வரை மத்தாக” – வலி மிக்க / வாள் நாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான் (இரண்டாம் திருவந்தாதி: 68) என்கிறார் பூதத்தாழ்வார்; “ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்பு உண்டிருந்தவன்” அந்தப் பாற்கடலைக் கடைந்தான் என்கிறார் திருமங்கையாழ்வார்: “குன்றொன்று மத்தா அரவம் அளவிக் குரைமா கடலைக் கடைந்திட்டு ஒருகால்” (பெரியதிருமொழி: நாலாயிர… : 1898), “மன்னும் வடமலையை மத்தாக…” (பெரிய திருமடல்: 104) என்றும் குறிப்பார்; “மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாய பிரான் / அலை கண்டு கொண்ட அமுதம்” (திருவிருத்தம்: நாலாயிர… : 2527) என்கிறார் நம்மாழ்வார்; “மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி / வடம் சுற்றி வாசுகி வன்கயிறு ஆகக் / கடைந்திட்ட கைகளால் சப்பாணி” (திருமொழி: நாலாயிர… : 82) என்கிறார் பெரியாழ்வார். மத்தும் தயிரும் ஆயர் குல வாழ்வின் இன்றியமையா அடையாளங்கள் என்பதை இப்பாடல்கள் யாவும் உணர்த்துகின்றன.
கண்ணனுக்கு முந்தைய அவதாரமான ராமனின் கதையைப் பாடும் கம்பன் இந்த ஆயர் வாழ்வியலைப் பாடாமல் இருக்க முடியுமோ? அதனால்தான் அவனும் மத்துறு தயிர் பற்றிப் பாடுகிறான். பாற்கடல் தொன்மத்தை அவனும் பாடியிருக்கிறான். திருமால் பாற்கடலைக் கடைந்தான் என்பதுதான் புராணச் செய்தி. வாலி கடைந்தான் என்றால் அது புதுமைச் செய்தி அல்லவோ? தம்பியின் அறைகூவல் கேட்டு அவனுடன் சமர் புரிய புறப்படும் வாலியை, தாரை தடுக்கிறாள். அப்போது அவளுக்குத் தன் வலிமையின் சிறப்புக்களை வாலி பட்டியல் இடுகிறான். தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைய முடியாமல் சோர்ந்து அயர்ந்தபோது தான் போய் கடைந்து கொடுத்ததாகச் சொல்கிறான்: “மந்தர நெடு வரை மத்து, வாசுகி / அந்தம் இல் கடை கயிறு, அடை கல் ஆழியான் / சந்திரன் தூண், எதிர் தருக்கின் வாங்குநர் / இந்திரன் முதலிய அமரர், ஏனையோர் // பெயர்வுற வலிக்கவும், மிடுக்கு இல் பெற்றியோர் / அயர்வுறல் உற்றதை நோக்கி, யான், அது / தயிர் எனக் கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது / மயில் இயல் குயில் மொழி! மறக்கல் ஆவதோ?” (வாலி வதை படலம்: 26-27)
“இசுலாமியக் கம்பர்” என்று யான் ஏத்தும் உமறுப் புலவர் வைணவப் பைந்தமிழ் இலக்கியங்களால் பெரிதும் கவரப்பட்டவர் என்பது என் ஓர்மை. எனவே ஆயர் வாழ்வியலின் அடையாளங்களை அவரும் பாடியிருக்கிறார், உவமைகளாகப் பயன்படுத்தியிருக்கிறார். “தெள் திரை ஒலியின் மத்து ஒலி கறங்கும் ஆயர் தம் சேரி” (சீறா: 55:25) என்று அவர் பாடும்போது அறபு நாட்டில் ஓர் ஆய்ப்பாடி அமைகிறது!
நபிகள் நாயகம் தன் தோழருடன் மதீனா நகருக்குப் புலம்பெயர்ந்து சென்றபோது, வழியில் பாலைவனத்தில் ஓர் கூடாரத்தைக் கண்டார்கள். மடி வற்றிய ஆடு ஒன்று அங்கே நின்று கொண்டிருந்தது. அது உம்மு மஃபது என்னும் பெண்ணுக்குரியது (பனீ ஃகுஸா என்னும் குலத்தைச் அவரின் முழுப்பெயர் ஆத்திக்கா பின்த் ஃகல்ஃபிப்னு மஃபதிப்னு ரபீஆ.) அவரிடம் அனுமதி பெற்று நபிகள் நாயகம் அந்த ஆட்டின் மடியில் கை வைத்து, அற்புதத்தால் அதில் பால் சுரக்கச் செய்து அப்பெண்ணிடம் இருந்த பானைகளில் எல்லாம் பால் நிரப்பித் தந்தார் என்று ‘சீறத்துந் நபி’ கூறுகிறது. அவ்விடத்தை உமறுப்புலவர் தமிழ் கூறு நல்லுலகின் முல்லை நிலத்து ஆயர்பாடியாகவே வருணித்துப் பாடுகிறார். அங்கே, ‘பறவை எங்கணும் செழும்புகழ்’ (சீறா:51:2) பாடுகிறதாம்; கான் ஆறு ஓடுகிறது, திரை ஆம்பிய குறுஞ் சுனைகள் இருக்கின்றன, முல்லையும் கொன்றையும் நறுமணம் வீசுகின்றன (சீறா: 51:3); “வேய் இசைத் தொனி இரு செவி குளிர் தர” (51:4) – இடையர்கள் வாசிக்கும் புல்லாங்குழலின் தொனி காதுக்கு இன்பம் தருகிறது; “தோயும் வெண் தயிர் நறுநறை நாசிகள் துளைப்ப” (51:5) – தயிரின் நறுமணம் மூக்கில் ஏறுகிறது; சாமை அரிசி மலைகள் எனக் குவிந்து கிடக்கிறது, அங்கே அருகில் அலையும் பன்றிக் குட்டிகளின் உறுமல் ஒலி எப்போதும் கேட்டபடி இருக்கும் ஆய்ப்பாடி அது – “பறழின் வாய்த் தொனி இடையறாது இருந்ததோர் பாடி” (51:5); அந்த ஆயர் குலத்து முதுமகள் – “ஆயர் தம் குல விருத்தை” (51:8) உம்மு மஃபது. ஆங்கு நபிகள் நாயகம் நிகழ்த்திய அற்புதத்தின் காரணமாக ஆயர் குலமே அவரை இறைத்தூதராக ஏற்று இசுலாத்தில் இணைந்தது என்று கூறுகிறார் உமறுப் புலவர். “… … … பாடி / ஆயர் தம் குலத்தவர் இசுலாமில் ஆனார்” (சீறா: 51:20) ஆண்டாளும் பெரியாழ்வாரும் வாழ்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் உமறுப்புலவர் வாழ்ந்த எட்டயபுரத்தில் இருந்து ஐந்து காதத் தொலைவில்தான் இருக்கிறது என்பது கருதத் தகும்.
உமறுப் புலவரின் கற்பனையில், அரிமா போல் வீரம் செறிந்தவரும் நபிகள் நாயகம் அவர்களின் தளபதியும் ஆன காலித் பின் வலீத் அவர்களுக்கு மத்து உவமை ஆகிறது; அவர்களை எதிர்த்து நின்ற அபுசுபியானின் படையினருக்குத் தயிர் உவமை ஆகிறது:
“கந்தர கவிகை வள்ளல் துணை அடி கமலம் நாளும்
வந்தனை செய்யும் சிங்கம் கடை தரு மத்தை ஒத்தார்
சுந்தர புய காலீது மன் அபாசுபியான் ஏவும்
வெம் திறல் சேனை எல்லாம் வெண் தயிர் ஒத்த மன்னோ”
(சீறாப்புராணம்: 72:201)
அரசர், தளபதிகள், துணை வந்த மன்னர்கள், குதிரை வீரர்கள், காலாட் படையினர், நகர மாந்தர் ஆகியோரெல்லாம் கலந்து சிதறித் திரியும் காட்சிக்கு மத்துறு தயிரே உமறுப்புலவரின் உள்ளத்தில் உவமை ஆகிறது: “விரிதரும் தலை மத்து எறிதரும் தயிரின் மிக்கு உடைந்து அறமிடைந்தனரே” (32:159)
போர்க்களத்தில் குதிரை ஒன்று தலை பிளந்து மூளை சிதறிக் கிடக்கும் காட்சியை உமறுப்புலவர் காட்டுகிறார். அதற்கு அவர் சொல்லும் உவமையால், அஃது தமிழ் இலக்கியப் பரப்பில் மிகவும் குரூரமான படிமங்களுள் ஒன்றாகிவிடுகிறது என்று கருதுகிறேன்: “… … விரைந்தெழு கந்துகம் / உயிர் துறந்து கிடந்த, உள் மூளையாம் / தயிர் சொரிந்து கிடந்த அதின் தலை” (சீறா: 82:52)
“மத்துறு தயிர்” என்னும் உவமையில் தொடங்கி நெடுந்தொலைவு அலைந்துவிட்டோம். கம்பனின் உவமை அளிக்கும் நுட்பமான அர்த்தப் பிரிகைகள் போல் வேறொரு கவியிடம் காண்பது அரிது என்பது உண்மை. எனினும், “மத்துறு தயிர்” போல் உயிர் நைகிறது என்னும் உவமையை அவனுக்கு முன்பே ஒருவர் பாடியுள்ளார் என்பது வியப்பூட்டும் செய்திதான். பக்தி உணர்வுக்கு இடையூறாக ஐம்புலன்கள் சேட்டைகள் செய்து படுத்தும் பாட்டை அப்பர் தனது தேவாரத்தில் சொல்கிறார்:
“பத்தனாய் வாழ மாட்டேன், பாவியேன், பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய
மத்துறு தயிரே போல மறுகும் என் உள்ளம் தானும்,
அத்தனே அமரர் கோவே ஆரூர் மூலட்டனீரே” (506)
“மத்துறு தயிரே போல மறுகும் என் உள்ளம்” என்னும் இத்தொடர் ஒரு பழமொழி என்று கருதுகிறார் ச.நாகராஜன் (கட்டுரை: “அப்பர் தேவாரத்தில் பழமொழிகள்.”). இருக்கலாம்; பாமர மக்கள் தமது புழங்கு பொருட்களை வைத்துத்தான் அக உணர்வுகளையும் பட்டறிவுச் சிந்தனைகளையும் சொல்லி வைப்பர். காலப் போக்கில் அவை பழமொழிகள் ஆகும். அங்ஙனம், ஆயர் சொல்லி வைத்த பழமொழியாக இது இருப்பது சாத்தியமே.
******