![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/08/Mohan-780x405.jpg)
இந்து அறநிலையத் துறையிடமிருந்து வந்த அந்த கடிதம் கண்ட நிமிடத்திலிருந்து இருப்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் அருணாச்சலம். வீட்டின் கிழக்குப் பக்கத்தில் உள்ள சுவரின் ஆணியில் மாட்டப்பட்டிருந்த அங்கவஸ்த்திரத்தை கர்வத்துடன் பார்த்தார். என்ன நினைத்தாரோ என்னவோ, தூசி படிந்திருந்த வஸ்த்திரத்தை எடுத்து உதறி தோளில் போட்டுக் கொண்டு, முகத்தை மட்டும் திருப்பித் தன் மனைவியை ஒரு பார்வை பார்த்தார். அவரின் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. என்னாச்சு இந்த மனுசனுக்கு… என்ன விசயம் என்பதைக் குறிப்பால் தன் பார்வையாலே கேட்டாள். அதற்கு அவரின் சிரிப்புதான் பதிலாக வந்தது. தன் தலையில் அடித்துக் கொண்டு அடுக்களைப் பக்கம் திரும்ப நினைத்தவளை நோக்கி அந்தக் கடிதத்தை எடுத்துக் காட்டினார். கடிதத்தை எடுத்துக் கொண்டு தெருவாசல் பக்கமாக வந்து திண்ணையில் அமர்ந்தார்.
“ஏங்க அப்படி என்ன லெட்டர்ல இருக்கு… யார்கிட்டயிருந்துங்க…” என்று கேட்டாள்.
அதுவந்து… என்று தொடங்கிய போது, தெருவில் சிறுவர்களின் கூச்சல் அருணாச்சலத்தை எரிச்சலடைய செய்தது.
அவர்களைப் பார்த்து, “டேய்… அங்கிட்டு போங்கடா…” என்று அதட்டினார்.
“ஏங்க அது கிடக்குது… நீங்க சொல்லுங்க…” என்று மறுபடியும் கேட்டாள். அதற்கு அருணாச்சலம், “இப்பத்தான்டி என்னருமை தெரிஞ்சிருக்கு…” என்று அந்தக் கடிதத்தை அவர் மனைவியிடம் கொடுத்தார்.
அருணாச்சலம் நாற்பத்தைந்து வயதைக் கடந்த நாதசுவரக் கலைஞர். ஆண்டவர் மடத்தில்தான் நாதசுவரம் கற்றுக் கொண்டார். கோயிலில் சாயரட்சை பூசையின் போது மட்டும் வாசித்து வந்தார். சிறப்பு நாட்களில் காலசந்திக்கும் வாசிப்பார். இவருடைய குடும்பம் இசைக்குடும்பம். காரைக்குறிச்சி அருணாச்சலம்பிள்ளை போல வரவேண்டும் என்று நினைத்துத் தான் இவருக்கு அருணாச்சலம் என்று பெயர் வைத்தனர். அவருக்குப் போதாத காலம் என்ன செய்வது. அவ்வப்போது சின்ன சின்ன மங்கல நிகழ்ச்சிக்கு மட்டும் போய்க் கொண்டிருந்தார். சில நேரங்களில் காளாஞ்சி மட்டுமே அவருக்குக் கிடைக்கும். அவருடைய தந்தையார் இருக்கும் வரையில் கஷ்டம் ஒன்றும் தெரியவில்லை. திருமணமாகி கலைவாணி வீட்டுக்கு வந்த பிறகு அப்போதாவது கஷ்டம் தீரும் என்றிருந்தார்; தீரவில்லை. இப்பவெல்லாம் நாதசுரத்தை எங்க சார் கூப்புடுறான். கேரளா செண்ட மேளம் தானே வைக்கிறாங்க. டொம்மு…. டொம்முன்னு சத்தம் பெரிசா கேட்டா பெரிய கச்சேரின்னு நினைக்கிற உலகமா மாறிப் போச்சு. செண்ட மேளம் வந்த பிறகு நாதசுவரம் வாசிக்க யாரும் தன்னை அழைப்பதில்லை என்று தன் இயலாமையை நினைத்து கொண்டிருந்த போது, மீண்டும் அந்த சிறுவர்களின் சப்தம் நினைப்பைக் கலைத்துப் போட்டது.
டேய்… ஆமடா… எங்கடா… அவனக் காணல… உய்…ஆய்… என்று சிறுவர்கள் ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் அரைக்கால் டிரெளசரை தூக்கிவிட்டுக் கொண்டும், ஒருவன் தன் சட்டையைக் கழற்றிச் சுழற்றிக் கொண்டும் சாலையோர புழுதியைக் கிளப்பி விட்டுக் கொண்டும், உச்சி வெயில் என்றும் பாராமல் குதித்துக் கொண்டிருந்தார்கள். சற்றுத் தொலைவில் ஒரு சிறுவனைக் கண்டவுடன் கூடியிருந்த சிறுவர்களுக்கு மேலும் உற்சாகம் பெருக்கெடுத்தது. அவன் வந்த திசையை நோக்கி, டேய்… கஞ்சித்தொட்டி… என்று கத்திக் கொண்டே ஓடினார்கள். பனிரெண்டு வயதைக் கடந்த அந்தச் சிறுவன் பொத்தான்கள் இல்லாத பழுப்பேறிய சட்டையும், காக்கி டிரெளசரும் போட்டிருந்தான். தலைமுடி வாரப்படாமல் இருந்தது. பார்த்தால் கோட்டிக்காரச் சிறுவனாகத்தான் தெரிந்தான். அவன் பெயர் கஞ்சித்தொட்டி. அப்படித்தான் அனைவரும் அழைத்தனர். இவனுக்கென்ன அப்படி வரவேற்பு?
அருணாச்சலம் தன் பழைய 2.5அடி நாதசுவரத்தை எடுத்து சுத்தம் செய்யத் தொடங்கினார். அணசு சிறிது உடைந்திருந்தது. வால் பகுதி வழியாக ஒரு கண்ணை இடுக்கிக் கொண்டு பார்த்தார். ஏதோ அடைத்திருந்ததைக் கண்டார். ஒரு குளவிக் கூடு கட்டியிருந்தது. உடனே ஒரு விளக்கமாற்றுக் குச்சியை உடைத்து, மூன்றாவது ஓட்டை வழியாக விட்டு மெல்லமாக எடுத்தார். பிறகு சீவாளிய எடுத்து ஊதி ஊதி சுத்தம் செய்தார். ப்பீ…ப்பீ என்று ஊதி ஊதிப் பார்த்தார். பன்னிரண்டு ஓட்டையும் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்தார். பன்னிரண்டில் ஏழு ஓட்டைகள் தான் இசைக்குப் பயன்படும். மீதம் உள்ள ஐந்து ஓட்டையில் மெழுகு கொண்டு அடைத்தார். நாதசுவரம் வேலை செய்ய ஆரம்பித்தது.
இப்பவெல்லாம் ஒத்து ஊதுவதற்குச் சம்பளத்துக்கு ஆள் வைப்பதில்லை. ஆதார சுருதி என்ற ஒரு கருவியை வைத்துத்தான் இசைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அந்த ஆதார சுருதிப்பெட்டியையும் துடைத்து சுத்தம் செய்தார்.
“ஏங்க இப்புடியே ஊதிகிட்டிருந்தா… எப்ப வேலைக்குக் கிளம்புறது. சாப்ட்டு கிளம்புங்க…” என்று கலைவாணியின் கரிசனம் கிடைத்தது. “எனக்குப் பசிக்கல நான் கிளம்புறேன்” சொல்லிக் கொண்டே நாதசுவரத்தை எடுத்து மூலையில் ஒரு ஓரமாக வைத்து விட்டுக் கிளம்பினார். நாதசுவர வித்வானாகி கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்த அருணாசலத்துக்கு மடத்தில் கணக்கு எழுதுகின்ற வேலை தான் கிடைத்தது. வேலைக்கும் போய்க்கொண்டு, மற்ற நேரங்களில் மங்கல நிகழ்ச்சிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அருணாச்சலம். வேலைக்குப் புறப்பட நினைத்த அருணாசலத்தை அந்தக் கடிதம் தடுத்து நிறுத்தி மறுபடியும் வாசிக்க வைத்தது. “ஸ்ரீமான் அருணாச்சலத்திற்கு, தங்கள் ஊரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில், வருகின்ற அக்னி நட்சத்திரத்திலிருந்து மூன்று நாட்கள் தாங்கள் அமிர்தவர்சினி ராகமும், மேகநங்கை ராகமும் வாசித்து மழைக்காக இசை யாகம் செய்து கொடுக்க வேண்டும். அதற்கான சன்மானம் கோயில் நிருவாகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இப்படிக்கு ஆணையர்.” என்றிருந்தது. கடிதத்தை மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு மடத்தை நோக்கிப் புறப்பட்டார்.
மறுநாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் சிறுவர்கள் கடைவீதியை ஒட்டிய வாட்டர் டாங்க் பின்புறம் உள்ள ஆலமரத்து நிழலில் ஒதுங்கினார்கள். சாதி வேறுபாடு இல்லாமல் அனைத்துச் சிறுவர்களும் கஞ்சித்தொட்டியின் தலைமையில் இந்தவருடமும் மழைக்காகக் கஞ்சித்தொட்டி தூக்கி சாமி கும்பிடுவது என முடிவு செய்தார்கள். இரண்டு இரும்பு வாளிகளும், இரண்டு காவடிக்கம்புகளும் வந்து சேர்ந்தன.
ஒவ்வொரு வீடாகச் சென்று கஞ்சி சேகரித்தார்கள். ஒரு வீட்டில் சோளக்கஞ்சி, ஒரு வீட்டில் கம்பங்கஞ்சி, கொஞ்சம் வசதியானவர்கள் மட்டும் அரிசிச்சோறு போட்டார்கள். அருணாச்சலத்தின் வீட்டின் முன்பும் வந்து, “மழைக்காக வந்திருக்கோம்… மனுச மக்கா கஞ்சி ஊத்துங்க… மழைக்காக வந்திருக்கோம்… மனுச மக்கா கஞ்சி ஊத்துங்க…” என்று கத்திக் கொண்டிருந்தார்கள். அருணாச்சலம் அப்போதுதான் தனது நாதசுவரத்துடன் கோயிலுக்குச் செல்வதற்காப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். நம்ம ராகத்துக்கு வராத மழை இந்த பரதேசிங்க கஞ்சிக்கா வந்திரப்போகுது… என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே புறப்பட்டார்.
இரண்டு நாட்களாக காலையிலிருந்து இரவு வரை அமிர்தவர்சினியும், மேகநங்கையும் மற்ற இராகங்களையும் வாசித்து வாசித்துக் களைத்துப் போய்விட்டார் அருணாச்சலம். அவ்வப்போது கோயில் மடப்பள்ளியிலிருந்து சித்ரான்னம், வெண்பொங்கல், மோர் என வந்து அவர் பசியாறிக் கொண்டிருந்தார். இன்று மூன்றாவது நாள் தன்னை மறந்து வாசித்துக் கொண்டிருந்தார்.
சிறுவர்களும் சலிக்காமல் ஊர் முழுக்க அலைந்து கஞ்சி வாங்கி ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில், கொண்டு வந்த கஞ்சியை ஒன்றாகக் கலக்கி, ஆளுக்குக் கொஞ்சமாகக் குடித்தார்கள்.
அவர்களுக்கும் அது மூன்றாம் நாள்தான். எப்படியும் மழை வந்து விடும் என்ற நம்பிக்கையில் ஊர் முழுக்க அலைந்து கஞ்சி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
மணி மாலை நான்கிருக்கும் எங்கிருந்தோ வந்த கறுப்பு மேகங்கள் ஒன்றுகூடி காற்றுடன் மழையும் பொழிய ஆரம்பித்தது. சிறுவர்களின் ஆட்டம் அதிகரித்தது. அருணாச்சலமும் தன் இசை யாகத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்.
சிறுவர்களுக்கோ மகிழ்ச்சி நம்மால் தான் மழை வந்தது… என்று அவர்களுக்குள் கட்டி அணைத்துக் கொண்டு ஆடி மகிழ்ந்தனர். ஊர்மக்கள் கோவிந்தா… கோவிந்தா… உன் கருணையே கருணை… என்று கூறிக் கொண்டு, கோயிலுக்குள் வந்து கொண்டிருந்தனர். அருணாசலத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. அருணாச்சலம் தம் இசையின் மகிமையைத் தன் மனைவியிடம் கூறி பெருமைபட்டுக் கொள்ள அந்த மழையிலும் நனைந்து கொண்டே சென்றார். போகும் வழியில் ஆடிய சிறுவர்களை ஏளனமாகப் பார்த்து நமட்டுச் சிரிப்புடன் வீட்டின் உள்ளே சென்றார். மனைவி கலைவாணி தொலைக்காட்சிப் பெட்டியில் செய்தி சேனல் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தச் சேனலில் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்தது என்று செய்தி ஓடிக் கொண்டிருந்தது.