
தனபால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். விடிந்தும் விடியாத காலைப் பொழுது. கொல்லைப் புற மரங்களில் அமர்ந்து கும்பலான நார்த்தை குருவிகள் விடியலை அறிவித்துக் கொண்டிருந்தன. வாசலில் திடீரென்று ஒரு அழுகையுடன் கூடிய பெண் குரல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தான். அக்கா அழுது கொண்டு வந்து வாசலில் நின்றாள். வாசலில் சாணம் தெளித்து கோலம் இட்டுக் கொண்டிருந்த பெண்கள் என்னமோ ஏதோ என்று கூடிவிட்டனர். தூக்கம் கலையாமல் அதிர்ச்சியுடன் நின்று அக்கா வசந்தியைப் பார்த்தான். தனபாலுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.கோபமும் குழப்பமுமாக அவளை பார்த்து பற்களை ‘நற நற’ என கடித்தான். கூந்தல் கலைந்து தலைவிரி கோலமாகவும் அழுது கன்னங்கள் வீங்கிய முகத்துடனும் வாசலில் அசையாது நின்றாள். கண்களில் இருந்து வடிந்த கண்ணீரை அடிக்கடி துடைத்துக் கொண்டாள். வாய்க்கு வந்த வார்த்தைகளில் புருசனை திட்டிக் கொண்டு இருந்தாள். “இனி நான் செத்தா கூட அந்த குடிக்கி பய வரக்கூடாது. இது அந்த காளியம்மன் மேல சத்தியம் ஆமா. அவனுக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை” என்று அழுத்தமான குரலில் சொன்னாள். மேற்கொண்டு அவளால் தெளிவாகப் பேச முடியவில்லை. குரல் கட்டி இறுகிப் போயிருந்தது. ஆனாலும் அவள் கரகரப்பான குரலில் பேசிக் கொண்டே இருந்தாள்.
“என் நெலமைய பாத்திங்களா.. இனிமே இந்த உசுர வச்சிக்கிட்டு இருக்கப் போறதில்ல. எங்கப்பா போன இடத்துக்கே நானும் போயி சேரப் போறேன்.” என்று பெருங்குரலெடுத்து அழுதாள்.
காதல் கணவனை கைப்பிடித்து கனவுகளுடன் வாழப் போனவள் இப்படி கண் கலங்கி வந்து நிற்பதைப் பார்த்த சில பெண்கள் அவள் அழுகையை கண்டு கலங்கினார்கள். அவளை சூழ்ந்து வட்டமாக கூடி நின்று என்ன நடந்தது என விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால், அவள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அடிப் போடி விவரங்கெட்ட சிறுக்கி. மொதல்ல என்னா நடந்துச்சுன்னு சொல்லுடி” என்றாள் கடைசி வீட்டு கனகா.
“ஆடப் போன இடத்துல ஒருத்திய அழைச்சிக்கிட்டு வந்துட்டான் தேவிடியாப் பய. இனிமே நான் அவன் கூட வாழ மாட்டேன்”
புறவாசலில் இருந்து என்னமோ ஏதோ என்று ஒடி வந்த வசந்தியின் தாய் மருதாம்பாள் மகளின் கோலத்தைப் பார்த்து ஒப்பாரி வைத்தாள். தனபால் தனது அம்மாவை பார்த்து, “எல்லாம் உன்னால வந்தது. அப்பவே இது சரிப்பட்டு வராதுன்னு சொன்னனே கேட்டியா.. ஆட்டக்கார பயலுங்க ஒழுங்க குடும்பம் நடத்த மாட்டனுங்க” என்று பார்த்து சத்தம் போட்டுக் கொண்டே அவளருகில் நின்று பாய்ந்து பாய்ந்து பேசினான். அவனை “செத்த சும்மாரு தனவாலு” என்று பட்டு கிழவி கண்டித்தாள்.
“இஞ்ச வாடி” அக்காவை அழைத்து கொண்டு போய் கொல்லையில் வைத்து அம்மா ஆறுதல் சொன்னாள். “எல்லாம் சரியாபுடும் இந்த வருஷம் நடக்குற காளிகட்டு திருவிழாவுல காளியத்தா அவனுக்கு நல்ல புத்திய கொடுத்துப்புடுவா. அந்த ஆட்டக்கார சிறுக்கிய தொறத்திட்டு ஒன்னை தேடிக் கிட்டுவருவான் பாரு” என்றாள்.
இதனைக் கேட்டதும் தனபாலுக்கு எரிச்சலாக இருந்தது. இங்கேயிருந்து கிளம்ப வேண்டும் போல் தோன்றியது. நடக்கத் தொடங்கினான். தெரு பம்பில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள் இவன் போவதை பார்த்து ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டார்கள். காறித் தூப்பினான். சில தினங்களுக்கு முன்பு தான் புரோக்கர் ஒருவர் மூலமாக வந்து மாப்பிள்ளை வீடு பார்த்து போயிருந்தார்கள். இந்த பெண் அமைந்து விடும் என்றுதான் தோன்றியது. பெண்ணுக்கு நாலு பேர் முன்னிலையில் பொட்டு மட்டும் வைத்தால் போதும்; பத்திரிக்கை அடித்து சிக்கனமாக திருமணத்தை நடத்தி விடலாம். பெரிதாக நிச்சயதர்த்தம் எல்லாம் செய்ய வேண்டாம்; அது வீண் செலவு என்று நடராஜன் மாமா சொல்லியிருந்தார். பெண் வீட்டாருக்கும் பெண்ணுக்கும் கூட இவனைப் பிடித்து விட்டதாகச் செய்தி சொல்லி அனுப்பியிருந்தார்கள். இவனும் பிடித்திருப்பதாக புரோக்கரிடம் சொல்லிவிட்டான் என்றாலும் அந்தப் பெண்ணை விடவும், அவளது பெயரில் தான் இவனுக்கு ஆழமான ஈர்ப்பு இருந்தது. ஜாதகத்தில் இருந்த தேன்முல்லையாள் என்ற பெயரை பல தடவைக்கு மேல் தன்னை அறியாமலேயே முணுமுணுப்பதே ஆனந்தமாக இருக்கிறது. இதே பேரில் இவனது வாழ்வில் இரண்டு பெண்கள் வந்து போயிருக்கிறார்கள். அதில் தேன்முல்லை டீச்சர்தான் இவனை அதிகம் பாதித்தவள். உறக்கம் இல்லாத இரவுகளில் அவளுடன் பழகிய காலங்கள் சட்டென்று ஒரு நினைவுச் சுடரை ஏற்றி வைத்துவிடும். அது மினுங்கி மினுங்கி இரவு முழுமையும் எரிந்து கொண்டிருக்கும். இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கூட டீச்சரை மட்டும் மறக்க முடியவில்லை இவனால். தனக்கு பெண் தேடும் பொழுதெல்லாம் அவள் போன்ற முகச்சாயல் கொண்ட எவரேனும் மனைவியாக அமைய வேண்டும் என்று காளியம்மனிடம் வேண்டுதல் வைத்து இருக்கிறான். கடைவீதிகளில் டீச்சர் போன்ற முக லட்சணம் கொண்ட பெண் யாராவது பார்த்துவிட்டால் பின் தொடர்ந்து சென்று அந்த பெண் செல்லும் வரை பார்த்து விட்டு சில தடவை திரும்பியிருக்கிறான். ஆனால், தற்போது அமைந்து இருக்கும் பெண், டீச்சரின் பெயரை கொண்டிருப்பதில் இவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
தனக்கு திருமணம் கைகூடி வரும் இந்த நிலையில் மகிழ்ச்சியாக கணவருடன் வந்து காரியங்களில் ஈடுபட வேண்டிய அக்கா இப்படி கண்கலங்கிக் கொண்டு வந்து நிற்பதோடு இல்லாமல் அவன் ஒருத்தியைக் கூட்டிக் கொண்டு வைத்து குடும்பம் நடத்துவதாக சொல்லி வயிற்றில் புளியை கரைத்துவிட்டாளே? என்ன செய்வது என்ற அச்சத்தில் சாலையோர புதரில் இரண்டு தடவை ஒதுங்கிவிட்டான். முப்பதைக் கடந்தாகிவிட்டது. இந்த இடமும் கை நழுவி போகக் கூடாது என்று தண்டலை அய்யனாரிடம் வேண்டுதல் வைத்தான். தஞ்சை சாலையை விட்டு விலகி ஆற்றங்கரை மண் ரோட்டில் நடக்கத் தொடங்கினான். கிழக்கே சூரியன் இப்போது தான் தனது பிரகாசமான கதிர்களை பாய்ச்சத் தொடங்கியது. ஆற்றின் எதிர்க்கரையில் அக்கா வாக்கப்ட்டு போன மணிகண்டி கிராமம் மிக அமைதியாக கிடந்தது. அவனது மனம் அதிகாலை நேரத்தில் இலந்தை காடுகளுக்கு விதவிதமான சுவை கொண்ட பழங்களை ருசித்துச் சாப்பிட ஒடும் சிறுவனைப் போல பின்னோக்கியும் முன்னோக்கியும் ஒட்டம் பிடித்தது.
ஒரு காலத்தில் இந்த மணிகண்டி இவனது பிரியத்துக்குரிய இடமாக இருந்தது. ஒர்ச்சேரி வாசிகள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்கு மணிகண்டியை சார்ந்து இருந்தார்கள். அங்கே தான் அசைவ ஒட்டல் இருந்தது. முழு நீள கண்ணாடி கொண்ட சலூன் கடை வைத்திருந்தார்கள். மாட்டுக்கும் மனிதருக்கும் மருத்துவம் பார்க்கும் கம்பவுண்டர் இருந்தார். பெரிய மளிகைக் கடைகள், ஜவுளிக்கடைகளில் மக்கள் கூடி தங்களுக்கு தேவையானவற்றை வாங்கினார்கள். மேலும் ஆண்டுக்கு ஒரு தடவை பிரமாண்டமான காளிகட்டு திருவிழா நடக்கும் காளியம்மன் கோவிலும், இரண்டு வேளை பாங்கு சொல்லும் பள்ளிவாசலும் இருந்தன. இப்படி அந்த பட்டியல் நீளமானது அதனால் தான் இவனை போல ஒர்ச்சேரி, மேப்படி உள்ளிட்ட அக்கம் பக்கத்து கிராமத்து மக்கள் காலையிலும் மாலையிலும் மணிகண்டி போவதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். இவன் சிறுவனாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தான் முதன் முதலாக தனியாக மணிகண்டி சென்று பம்பரம் வாங்கி வந்தான். அப்பா அதில் இருந்த பொய் ஆணியைப் பிடுங்கிவிட்டு புதிதாக ஒரு பெரிய ஆணியை அடித்துக் கொடுத்தார். அதைக் கொண்டு வடக்கு வீட்டு கணேசன் பம்பரத்தை குத்தி உடைத்தற்காக அப்பாவிடம் கன்னத்தில் அறை வாங்கினான்.
ஒர்ச்சேரியில் இருந்து மணிகண்டிக்கு பாலம் வழியாகப் போனால் மூன்று கிலோமீட்டர் தொலைவு. ஆனால், இடையே ஒடும் ஒடம்போக்கியாற்றை கடந்து போனால் அரைகிலோமீட்டர் தொலைவுதான் .சிறிய பாலம் இருசக்கர வானங்கள் போகலாம். அப்போது ஊரில் வசதியான ஒரு சிலர் வீட்டில் தான் சூசுகி பைக் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது காரணம் இரு சக்கர வாகனம் வைத்திருப்பதால் அவர்களை வியப்புடன் பார்த்து மதித்தார்கள். “அவர் என்ன? பைக் வைத்திருக்கிறார்” என்று அந்த நபரின் பெருமை பேசுவார்கள். இதை விடவும் ‘டப் டொப் ‘ என்று ஊருக்கே ஒசை கொடுக்கும் பெரிய பைக் வைத்திருப்பவர்களை பற்றிப் பேச என்று ஒரு கூட்டமே இருந்தது. கோவில் மண்டபத்தில் வெட்டியாய் உட்கார்ந்து இருப்பவர்கள், டீக்கடையில் அமர்ந்து ஒசி டீ குடிப்பவர்கள், தர்ம சத்திரத்தில் உட்கார்ந்து மூன்று சீட்டு விளையாடுபவர்கள் ஆகியோர் பைக் பேர்வழிகள் மற்றும் குதிரை ரேக்ளா வண்டி வைத்திருப்பவர்களுக்கு மறைமுக ஆதரவாளர்களாக இருந்தார்கள். சிலர் அவர்களுக்கு உளவு வேலைக்காரர்களாகவும் இருந்தார்கள்.
ஆற்றைக் கடந்து செல்லும் பாலத்துக்கு வந்தான். இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல கூடிய அளவில் இருந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு இப்போது கார் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்லும் வகையில் புதிய பாலம் கட்டியிருந்தார்கள். இதில் கம்பி பிட்டர் வேலைக்கு வாய்ப்பு வரும் என்று இவனது மேஸ்திரி எதிர்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. அதனை ஒப்பந்தம் எடுத்தவர் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் ஆளுங்கட்சி அமைச்சரின் உறவினர். மூன்றே மாதத்தில் கட்டி முடித்து விட்டார்கள். அத்தனை விரைவாக கட்டுவதற்கு காரணம் அந்தளவுக்கு புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி இருந்தார்கள். அதன் தரம் குறித்து எவரும் பேசவில்லை. பாலம் அமைந்ததில் தான் மகிழ்ந்து போயிருந்தார்கள்.
பணிரெண்டு முடித்து இரண்டு ஆண்டுகள் தொழிற்கல்வி படித்தான். உருப்படியாக எந்த கம்பெனியிலும் பணி அமையவில்லை. அப்பாவுக்கு அதிகமான புகைப் பழக்காத்தாலும் உழைப்பாலும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்து போனார். அக்கா வசந்தி பிளஸ்டூ படித்து விட்டு பக்கத்து டவுனில் ஒரு துணிக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். பருவம் மலர்ந்து குடும்ப வாழ்க்கையில் திளைக்க வேண்டியவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும்; ஒர்ச்சேரியின் வெள்ளவாய்க்கால் ஒரமாய் இருக்கும் ஒரு ஏக்கர் கரம்பை நிலத்தையும் வருடத்தில் ஒரு போகமாவது சாகுபடி செய்து மகசூல் ஈட்ட வேண்டும்; மேலும் அம்மாவுக்கு கறிசோறு வேண்டாம்; மூன்று வேளையாவது பட்டினியில்லாத கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆரம்பத்தில் முருகேசன் கொத்தனாரிடம் ‘சித்தாள்’ வேலைக்குப் போனான் தனபால்.
கொத்து வேலையின் கடும் அழுத்ததை அவனால் எதிர் கொள்ள முடிந்தது என்றாலும் நான்கவது நாளே, சிமெண்ட் கலவையின் வீச்சால் கை, கால்கள் புண்ணாகிப் போயின. அதனைத் தாங்கிக் கொண்டு ஐந்தாவது நாள் கடைத் தெருவின் வாசன் ஒட்டல் வாசலில் ஆள் சேர்க்கும் இடத்துக்குப் போன போது இவனது கைகளைப் பார்த்த முருகேசன் கொத்தனார் கலங்கிப் போனார். “படிச்ச புள்ள, இப்படி அவஸ்தை படுறத என்னால பாக்க சகிக்கலடா; என் மச்சான் ஒருத்தன் கம்பி பிட்டரு. அவன் கிட்டே சொல்லி விடுறேன் போ” என்று அனுப்பி வைத்தார். அது இரும்புக் கம்பி கட்டும் பணி. அடிக்கடி கம்பிகள் காயப்படுத்தும். ஆணிகள் குத்தும், மரச்சட்டங்கள் தாக்கும், பலகைகள் மேலே விழும் என்றாலும் கொத்தனார் வேலையை விட சற்று பரவாயில்லை என்று தோன்றியது. அவரிடம் சேர்ந்து ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன. வேலையைத் தெளிவாக கற்றுக் கொண்டு இப்போது தனியாக வேலை எடுத்து செய்யுமளவுக்கு தொழிலில் தேர்ச்சி பெற்று விட்டான்.
கொத்தனார் முருகேசனின் மச்சானும் வேலை சொல்லிக் கொடுத்த குருவுமான குள்ள பக்கிரியின் தயவால் தான் அக்கா வசந்திக்கு ஏழு பவுன் நகை போட்டு, சீர் செனத்தி செய்து, மாப்பிள்ளை ஆட்டக்காரனாக இருந்தாலும் பரவாயில்லை; அக்கா ஆசைப்பட்டுவிட்டாளே என்று தனது அம்மாவின் பேச்சுக்கு இணங்கி திருமணம் செய்து கொடுத்தான். அப்படி உழைத்துச் சேர்த்த தனது சேமிப்பையெல்லாம் கரைத்து திருமணம் செய்து வைக்கப்பட்டவள் கண் கலங்கி வந்து இப்படி நின்றால் என்ன சொல்வது? எவரை நொந்து கொள்வது? அதற்கு காரணம் அவனா? அக்காவா?
பாலத்தின் தெற்கில் மழைகாலத்தில் கரை உடையாமல் இருக்க தடுப்புச் சுவர் எழுப்பியிருந்தார்கள். ஆற்றில் நீரின்றி இருப்பதால் குளிக்க வரும் நபர்களின் வரத்தும் குறைவாக இருந்தது. இரு புற ஆக்கிரமிப்புகளால் ஆறும் பரப்பளவில் சுருங்கிவிட்டது. இந்த மணிகண்டியில் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய் தொடங்கி ஐந்து நாட்கள் காளிகட்டி திருவிழா நடக்கிறது என்றால் சுற்று வட்டார ஆற்றோர கிராமங்களும் திருவிழா கோலம் பூண்டு விடும். ஆனி பதினைந்து தேதிக்கு முன்பாகவே காவிரியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டிருப்பார்கள். நுங்கும் நுரையுமாக பொங்கிப் பாயும் ஆற்று நீரை மக்கள் வேடிக்கை பார்த்து கொண்டு கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆறு அப்போது அத்தனை பெரிதாக இருந்தது. மழைக் காலங்களில் சீறிப்பாயும் அதன் வேகத்தைப் பார்ப்பவர்கள் வயிற்றில் கலக்கம் ஏற்படும். அந்த நேரத்தில் அக்கரையில் இருந்து இக்கரைக்கு சென்று சாகசம் காட்டும் வாலிபர்களை மக்கள் வியந்து பேசுவார்கள். கரையில் வீடுகட்டி தோட்டம், தொறவு என வளைத்துக் கொண்டவர்களும், படுகையில் செங்கல் சூளை போட்டு பணம் பார்த்த ஆசையில் ஆற்றையே சூறையாடிவிட்டார்கள்!
மணிகண்டி நடுநிலைப் பள்ளியில், அப்பா அழைத்து போய் ஆறாம் வகுப்பில் சேர்த்தார். அப்போது மூன்று கிலோ மீட்ட ர் நடந்து வந்து தான் தினமும் பள்ளி சென்று வந்து கொண்டிருந்தான். இவனோடு ராஜா, முருகன், சேகர், மதி என எத்தனையோ பேர் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாம் திருமணம் செய்து ஏதோ ஒரு வழியில் செட்டிலாகி விட்டார்கள். ஆறாம் வகுப்பு படிக்கும் போது தான் முதன் முதலாக தனது கூட்டாளிகளுடன் காளிகட்டு திருவிழாவுக்கு தனபால் போனான். கோவிலைச் சுற்றியும் முன்புறமாகவும் பின் வழியாகவும் நீண்ட பந்தல் அமைத்து அதில் எண்ணற்ற கடைகள் போட்டிருந்தார்கள். அங்கு போட்டிருந்த அரிசி சர்பத் சாப்பிடத் தான் அத்தனை கூட்டமும் ஈபோல் மொய்த்து கொண்டிருந்தார்கள். மாணவர்களும் பெரியவர்களும் சூழ்ந்து நின்று கண்ணாடி கிளாசில் வாங்கிக் குடித்தார்கள். ஐம்பது பைசா கொடுத்து இவனும் வாங்கிப் பருகினான். நாட்டு வெல்லமும், ஏலக்காய் மணமும் கொண்ட அந்த சுவை என்றும் மறக்க முடியாதது. விழாவிற்கு சுற்று வட்டார மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அரசமரத்தடி பிள்ளையார் கோவில் இருந்து தான் காளிகட்டும் உலா தொடங்கியது. காளி கட்டி ஆடும் பூசாரி நாற்பெத்தட்டு நாட்கள் விரதம் இருந்து பாய், பதி மிதிக்காமல் தரையில் படுத்து கடும் விரதம் இருந்து காளி வேடம் தரித்து ஆடுவார்கள். அவர்களை நடமாடும் தெய்வமாக மக்கள் வணங்குவார்கள் என்று அம்மா கதை கதையாக சொல்லியிருந்தாள்.
அரசமரத்தடி பிள்ளையார் கோவிலின் கருறையில் இருந்து பூசாரி சண்முகம் காளி வேஷம் கட்டிக் கொண்டு வெளியே வந்தார். தனபால் அந்த திருக்கோலத்தை கண்டு அரண்டே போய் விட்டான். குழந்தைகள் பயத்தில் மிரண்டு அழுதன. அத்தனை ரெளத்திரம். கண்களில் கோபம். கோரை பற்களை கண்டபோது குலை நடுங்கியது. அத்தகைய சொரூபம் கொண்ட இந்த பராசக்தி உமையவள் தான் இந்த ஊரில் எழுந்தருளி இத்தனை ஆண்டுகளாக இந்த மக்களை காத்து நிற்கிறாள் என்று தமிழ் ஆசிரியர் பத்மநாபன் வகுப்பில் சொன்னது பொய்யில்லை என்று தோன்றியது. சில நிமிடங்களே பார்த்து விட்டு ஒட்டம் பிடித்து விட்டான் ஊருக்கு. அன்று முழுவதும் அம்மாவிடமும் பக்கத்து வீட்டாரிடமும், தனது கூட்டாளிப் பயல்களிடமும் காளியின் சொரூபத்தையும். காளியின் ஆட்டத்தையும் பார்த்த போது தனக்கு நிகழ்ந்த பயத்தையும் பெண்கள் எல்லாம் குலவையிட்டு ஆடியதையும் சொல்லி வியந்தான். மேல்நிலை வகுப்பு பாடங்களைப் படித்து மனப்பாடம் செய்து கொண்டிருந்த அக்கா வசந்தியிடமும் தனது அனுபவத்தை தெரிவித்தான். அவளும் இவன் சொல்லியதை ரசித்துக் கேட்டாள்.
ஏழாம் வகுப்புக்குப் போன போது புதிதாக தேன்முல்லை டீச்சர் வகுப்பு ஆசிரியை வந்திருந்தாள். இதற்குமுன் அவளைப் பார்த்தது இல்லை. ஐந்தடிக்கும் குறையாத உயரத்தில் மாநிறத்தை விட சற்று கூடுதலான சிவப்பில் இருந்தாள். கச்சிதமான உடல்வாகு. நெற்றிக்கு கீழே சின்னதாய் ஒரு சாந்துப் பொட்டு. கூந்தலை பின்னிப் போட்டு மல்லிகைச் சரங்களை சூடியிருந்தாள். நேர்த்தியான இளம் மஞ்சள் நிறப் புடவையில் பளிச்சிட்டாள். “உங்களுக்கு இன்னையிலிருந்து நான் தான் கிளாஸ் டீச்சர். சயின்ஸ் பாடம் தான் எடுப்பேன். நீங்க எல்லாம் நன்றாகப் படித்து எனக்கு பெருமை சேர்க்கனும். செய்வீங்களா?” என அவள் கேட்கவும், “செய்வோம் மேடம்” மாணவ- மாணவிகளின் ஒற்றைக்குரல் வகுப்பறையே அதிர்ந்தது. தேன்முல்லை டீச்சர் பெற்றோருடன் மணிகண்டி மேலத் தெருவில் வீடு எடுத்து தங்கி இருந்தாள். சாலையில் டீச்சர் நடந்து போகும் போதும், வரும் போதும் இளைஞர்கள் நீ – நான் என போட்டியிட்டு அலைந்து நூல் விட்டார்கள். ஹிப்பித் தலையர்களும், டிஸ்கோ சிகையலங்காரம் கொண்டவர்களும் சைக்கிளில் பெல் அடித்து கொண்டு அவளை காதலிக்க அலைந்தார்கள். படிப்பில் மக்கான இவனைப் போன்ற சிலருக்கு மட்டும் சனி, ஞாயிறு காலை நேரத்தில் தனி வகுப்புகள் எடுத்தாள். டீச்சர் குடித்தனம் இருந்த வீடு வடக்கு வாசல் கொண்டது. பள்ளியில் இருந்து சுமார் ஒரு பர்லாங் தூரம் இருக்கும். புற வாசலில் தான் வகுப்புகள் எடுத்தாள். இவனுக்கு கணக்கு நன்றாக வந்தது. ஆங்கிலத்தில் ரொம்பத் தடுமாறினான். சில குறிப்புகளை சொல்லி தெளிவுபடுத்தினாள். ஆங்கிலம் மீது இருந்த பயம் விலகியது. அதிலிருந்து தொழிற்கல்வி படித்து முடிக்கும் வரை அவள் சொல்லிக் கொடுத்தை வைத்து தான் ஆங்கிலத்தை ஒப்பேற்றினான். இப்படி போய் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காலைப் பொழுதில் தனபால் உள்ளிட்ட 6 பேர் அமர்ந்து வீட்டின் திண்ணையில் படித்து கொண்டிருந்தார்கள். டீச்சர் உள்ளே சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தாள். அவளது பெற்றோர்கள் டவுனுக்குப் போயிருந்தார்கள். வேலை முடித்துவிட்டு வந்த டீச்சர் எதையோ தேடினாள். இவர்கள் படித்து கொண்டிருந்தார்கள்.
இவர்களைப் பார்த்து, “ டேய், என் வாட்சை காணல. பாத்தீங்களாடா?”
“இல்லிங்க டீச்சர்”
டீச்சர் உள்ளே போனாள். இவர்களும் திண்ணையில் தேடத் தொடங்கினார்கள். அப்போது ஒருவர் மற்றவரின் புத்தகப் பைக்குள் தேடியபோது தனபால் பையில் கடிகாரம் கிடந்தது. அதனை எடுத்து கொண்டு ஒடிய ரவி, டீச்சரிடம் விவரத்தைச் சொன்னான். வெளியே வந்த டீச்சர் தனபால் கன்னத்தில் இரண்டு அறை விட்டாள். “டீச்சர் எனக்குத் தெரியாது” என்று சொல்லிக் கதறினான். இரண்டு நாட்கள் பள்ளிக்கு போகவில்லை. அது எப்படி தனது புத்தகப் பைக்கு வந்தது என்று தெரியவில்லை. அது யார் செய்த வேலை என்றும் தெரியவில்லை. ரவிக்கும் இவனுக்கும் தான் ஆகாது. அவன் தான் செய்து இருக்க வேண்டும் என்பது மட்டும் தோன்றியது. நான்காவது நாள் டீச்சர், இவனை பள்ளிக்கு வரச் சொன்னதாக மூர்த்தி வந்து சொன்னான். இவன் வகுப்பறையில் மவுனமாக அமர்ந்து இருந்தான். வகுப்பறைக்கு வந்தவள் இவனை அழைத்து, “ டேய் தனபால், அது யாரு செஞ்சதுன்னு நான் விசாரிட்டேன். நீ செய்யல..சரியா?” என்று சொல்லி தலையை கோதிவிட்டு கன்னத்தில் செல்லம்மாகத் தட்டி ‘சாரிடா’ என்றாள். மீண்டும் அவனது கண்கள் நிறைந்தன.
பாலத்தில் உட்கார்ந்திருந்தவனை தேடிக் கொண்டு பால்சாமி வந்திருந்தார். பக்கத்து ஊரில் வேலை இருப்பதாக நேற்றே சொல்லியிருந்தார். இவன் அக்கா அலங்கோலமாக வந்ததைக் கண்ட அதிர்ச்சியில் செல்போனை வீட்டில் வைத்து விட்டு இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.
“அண்ணே, கோவிச்சுக்காதீங்க. வேல பாத்த இடத்துல இருந்து பலகையும் மூட்டும் வந்து சேரல. நம்மக்கிட்டே வேல பாத்த ஆளுங்க லீவு சொல்லிட்டு. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேத்தி ராத்திரியே கிளப்பிட்டானுங்க.”
“என்னப்பா, நல்ல வேலைக்காரன்னு உன்ன நம்பி வந்தா. இப்படி அறுத்து உடுர்றியே” சொல்லி விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் எரிச்சலுடன் திரும்பி போனார்.
முழு ஆண்டுத் தேர்வு முடிந்து பள்ளி கோடை விடுமுறை விட்டார்கள். கடைசிநாள் அன்று டீச்சரை சந்தித்துப் பேசி விட்டு தான் வந்தான். இரண்டு மாதம் விடுமுறையின் இறுதி நாட்களில் பள்ளியில் இருந்து தேர்ச்சி அட்டை அனுப்பியிருந்தார்கள். சில நாட்கள் கழித்து பள்ளிக்கூடம் திறந்தார்கள். எட்டாம் வகுப்புக்கு போனான். ஒய்வு அறையில் தேன்முல்லை டீச்சரை தேடிப் பார்த்தான் அவளைக் காணவில்லை. விசாரித்த போதுதான் டீச்சருக்கு திருமணம் நடந்து விட்டதாகவும், சில நாட்கள் கழித்து கணவரோடு திரும்பி வருவாள் எனவும் சொன்னார்கள். பதினைந்து நாட்கள் கழிந்தன.மாலை பள்ளி விட்டார்கள். மேலத் தெருவுக்கு நடக்கத் தொடங்கினான். டீச்சரின் வீடு பூட்டிக் கிடந்தது. இளைஞர்கள் இன்றி தெருச்சாலை வெறிச்சோடிக் கிடந்தது. பள்ளிக்கூட சாலை பொலிவிழந்து காணப்பட்டது. தனபால் பள்ளி முடிந்து அந்த வீட்டின் வாசல் முன்பு போய் நின்றான். வாசலுக்கு முன்பு படர்ந்து நின்ற குண்டு மல்லிச் செடி வதங்கி கிடந்தது. கடும் கோடையில் புறவாசலில் இருந்த நந்தியாவட்டை, கனகாம்பரம் ஆகியவை பூக்காமல் சாம்பல் படர்ந்து நின்றன. ‘இனி டீச்சர் வரமாட்டார்’ என்று தோன்றியது. அந்த வீட்டைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது திரும்பி நடக்கத் தொடங்கினான். அம்மா, காளியம்மன் கோவில் அருகேயுள்ள மளிகைக் கடையில் வெல்லமும், ஏலக்காயும் வாங்கி வரச் சொல்லியிருந்தாள். அதற்காக நடந்தான். அப்போது கடை வீதியில் சற்று நீண்ட தலை மூடி வளர்த்து காவி உடையில் இருந்த இளைஞன் ஒருவன் மிதமான போதையில் கடைக்காரனிடம் வம்பு செய்து கொண்டிருந்தான். அப்போது வேட்டி மட்டும் அணிந்து உடம்பில் சட்டையின்றி கழுத்தில் ஸ்படிக மாலை அணிந்த ஒருவர் வந்து அவனை அதட்டி அடக்கினார். அவருக்கு சற்று அஞ்சியவன் மளிகை கடைக்காரை பார்த்து, “ உன்னை நான் ஒரு நாளக்கி பாத்துக்கிறேன்” என்று மிரட்டி விட்டுக் கிளம்பினான். அவர் தனது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்டு விட்டுக் கிளம்பினார். கடைக்கு சாமன்கள் வாங்க வந்தவர்கள் இதனை வேடிக்கை பார்த்தனர்.
சில நாட்கள் கழித்து அந்த சனிக்கிழமையின் மதியத்தில் மணிகண்டியில் முடி வெட்டிக் கொண்டு வர சலூன் கடைக்கு தனபால் சென்று கொண்டிருந்தான். ஆற்றுக்கரை சாலையில் கேரியர் இல்லாத சைக்கிளில் முன்னால் ஒரு இளம் பெண்ணை அமர வைத்து கடையில் சண்டையிட்டவன் சென்று கொண்டிருந்தான். அதன்பிறகு அவனை அடிக்கடி பார்க்க நேரிட்டது. அப்போது அவன் போதையில் கண்கள் சிவக்க செல்வதையோ அல்லது எதாவது ஒரு பெண்ணுடன் சிரித்து சிரித்து பேசி செல்வதை பார்த்தான். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து அம்மையூர் மாரியம்மன் கோவில் திருவிழா கரகாட்டத்தில் அவனை ஆட்டக்காரனாகப் பார்த்தான். தலையில் கரகத்தை வைத்துக் கொண்டு ஆடும் போது சக ஆட்டக்காரிகளுடன் சற்று எல்லை மீறி ஆபாசமாக ஆடிக்கொண்டிருந்தான். அப்போது தான் அவனைப் பற்றி பார்வையாளர்கள் வரிசையில் இருந்து சிலர் பேசிக் கொண்டார்கள். மணிகண்டி காளியம்மன் கோவில் பூசாரி சண்முகத்தின் மூத்தமகன் செல்வராசு என்றும், விரதம் இருந்து காளிகட்டி ஆட வேண்டியவன் அதனை பெரிது பண்ணாமல் காசுக்காக நிகழ்ச்சிக்கு வந்து ஆடுகிறான் எனவும் அதனால் கோபம் அடைந்த சண்முகம் பூசாரி வீட்டை விட்டு இவனைத் துரத்தி விட்டு விட்டார் என்றும் பேசிகொண்டார்கள். கடந்த கால நிகழ்வுகளை மறக்க மறுக்கிறது மனம்.
இவனுக்கு ஆற்றுப் பாலத்தின் தனிமையில் அமர்ந்து இருப்பது இப்போது ஏற்பட்ட பழக்கம் அல்ல. சிறுவயது முதலே பிரியமான ஒன்று தான். விடுமுறை நாட்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும் போது கையில் தூண்டிலோடு படித்துறையில் அமர்ந்துவிடுவான். இரண்டு மணி நேரத்தில் நாலைந்து கிலோ மீன்களை அள்ளி விடுவான். மற்றவர்கள் பத்து நிமிடத்திற்கு ஒரு மீன் பிடித்தால் இவன் பத்து மீன்கள் பிடிப்பான். விலைக்கும் விற்று விட்டு வீட்டுக்கு குழம்புக்கும் கொண்டு வந்து விடுவான். மற்ற பயல்கள் இவனுக்கு மீன்ராசி என்பார்கள். அப்படி மீன் பிடித்துக் கொண்டிருந்த போதுதான் தேன்மொழியின் அறிமுகம் ஏற்பட்டது. அந்த மழையில்லாத கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமையில் தனது தோழியுடன் வந்து இவனிடம் முகவரி கேட்டாள். அப்போது இவன் தொழிற்கல்வி முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தான். ஆற்றுப் பாலத்தில் சைக்கிளை நிறுத்தி மணிகண்டி அடுத்துள்ள காரஞ்சேரிக்கு எப்படிப் போவது என்று முகவரி கேட்டாள். இவன் தெளிவாக செல்லும் வழியை சொன்னான். அவள் இவன் படித்த தொழிற்கல்வி கூடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த திருவிக கல்லூரியில் தான் பிகாம் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மன்னார்குடி பக்கத்தில் ஊர் இருந்தது. கமலாபுரத்தில் சித்தி வீட்டில் தங்கி கல்லூரிக்கு வந்தாள். ஆண்கள் மட்டுமே படிக்கும் தொழிற்கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மதியம், காலை, மாலை என்று முப்பொழுதுகளிலும் கல்லூரியை சுற்றியே வலம் வந்து கொண்டு இருப்பார்கள். காக்கி சீருடையில் இவர்கள் அலைந்து கொண்டிருப்பதை பார்த்து ஊர்க்காரர்கள் சிலர் பிரின்ஸ்பாலிடம் வந்து புகார் சொல்லிப் போனார்கள். இப்படி மாணவர்கள் அலைவதைத் தவிர்க்க வாரத்தில் ஒரு நாள் நல்லொழுக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் அழுத்தம் காரணமாக மாணவர்கள் கல்லூரி பக்கம் போவதைத் தவிர்த்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்திலேயே தங்களது பணியை மேற்கொண்டனர். அப்படியான சந்தர்ப்பத்தில் தான் முன் அறிமுகம் கொண்டிருந்த தேன்மொழியோடு தனபால் நெருக்கமாகியிருந்தான். அவள் கல்லூரி முடிந்து வரும் வரை காத்திருந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தான். இப்படியாக இவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்த ஒரு நாளில் தான் அக்கா வசந்தி, பூசாரியின் மகனும் ஆட்டக்காரனுமான செல்வராசு சைக்கிளில் பின்னிருக்கையில் கடைவீதியில் சென்று கொண்டிருப்பதை பார்த்து நம்ப முடியாமல் பார்த்து நீண்ட நேரம் மவுனமாக இருந்தான். இவன் அருகில் இருந்த தேன்மோழி அவனது திடீர் மாற்றத்தை கண்டு ஏன் என்று இவனிடம் கேட்டாள். பதிலேதும் சொல்லாமல் கலங்கிப் போய் இருந்தான். அதற்கு பிறகான நாட்களில் தேன்மொழியை சந்திப்பதைத் தவிர்த்தான். அவள் இவனிடம் நாலைந்து தடவைக்கு மேல் வலிய வந்து பேசினாள். முகம் கொடுத்து பேசாமல் விலகினான். சில நாட்களில் பேருந்து நிலையத்துக்குப் போவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டான்.
அன்று இரவு பத்துமணி ஆகிவிட்டது இவனும் அம்மாவும் உணவு சாப்பிட்டு விட்டுத் திண்ணையில் அமர்ந்து இருந்தார்கள். ஊரின் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்று செல்லும் சத்தம் கேட்டது. சோர்வுடன் அக்கா வீட்டுக்குள் நுழைந்தாள். அவளது முகத்தை உற்றுப் பார்த்தான். அவள் தலையை கவிழ்ந்து கொண்டாள். அம்மா இவனைப் பார்த்து, “ இவள. இனி மேல வீட்டுல வைக்க கூடாது. எவன் கையிலாவுது பிடிச்சு கொடுத்துர்னும்” என்றாள் கிசுகிசுப்பாக. இவன்பதில் சொல்லாமல் மவுனமாக அமர்ந்து இருந்தான். வசந்தி சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டாள். அன்று முதல் அவள் போக்கே மாறியது. துணிக்கடைக்கு சமயங்களில் காலை நேரத்தில் கிளம்பிபோனாள். சில நாட்கள் மதியத்தில் சென்று இரவு பத்து மணி கடந்து திரும்பினாள். ஞாயிறுக்கிழமைகளில் பகல் முழுவதும் சோம்பலுடன் படுத்து இருப்பாள். ரேடியோவை எப்போதும் பாட விட்டிருப்பாள் அல்லது பக்கத்து வீட்டு கனகா வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தாள். பேருந்து நிலையத்தில் தேன்மொழி தனது தோழிகளுடன் பேசிக் கொண்டு இருப்பாள். தனபால் அந்த பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் கடந்து போய்க் கொண்டு இருந்தான். இவனிடம் பேச வேண்டும் என்று நூலகத்துக்கு வரச் சொல்லி இருந்தாள். இவன் போகவே இல்லை. அதன் பிறகு சில நேரங்களில் தேன்மொழியை நேருக்கு நேராக சந்திக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்ட போது மிக சாதுர்யமாக நடந்து கொண்டான். தனபாலிடம் ஊர்க்கார இளைஞர்கள் சிலர் வசந்தி ஆட்டக்காரன் நட்பு குறித்து வருத்தமாகப் பேசினார்கள்.
ஒரு மாதம கழித்து எட்டாம் வகுப்பில் மூன்றாவது பாட வேளையின் போது வந்த கணக்கு சார் கோமகன், தேன்முல்லை டீச்சர் கணவருடன் தலைமையாசிரிடம் பேசிக் கொண்டு இருக்கிறாள் என சொன்னார். தனபாலுக்கு வகுப்பில் அமரவே முடியவில்லை. மற்ற மாணவர்களும் டீச்சரின் வருகையை ஆர்வத்துடன் எதிர் கொள்ளத் தயாராக இருந்தார்கள். மூக்கால் மணி நேர கணக்குப் பாடம் கசப்பாக இருந்தது.
தேன்முல்லை டீச்சர் வகுப்பறைக்கு வந்தாள். லேசாக சதை போட்டிருந்தன. கன்னங்கள் ஆப்பிள் பழம் போல மினுங்கியது. மாணவர்கள் எழுந்து நின்று “ குட்மார்னிங் மேடம் “ என சொன்னார்கள். சிலர் நலம் விசாரித்தார்கள். டீச்சருக்கு கண்கள் கலங்கியிருந்தன. ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து பேசினாள். ஐந்தாவது டெஸ்கில் மூன்றாவது இடத்தில் தனபால் அமர்ந்து இருந்தான். அவளிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. “நல்லா படிச்சு வேலைக்கு போவுணும்” என்று டீச்சர் சொன்ன போது கண்களில் ஈரம் கசிவதை உணர்ந்தான். ‘பள்ளி முடிந்த பிறகு வீட்டு வா’ என்று சொன்னாள். இவன் வீட்டுக்கு போன போது வீட்டை காலி செய்யும் பணியில் இருந்தார்கள். டீச்சரின் கணவர் வந்திருக்கவில்லை. அவளின் பெற்றோரும் சித்தியின் மகளும் இருந்தார்கள். பொருட்களை பேக்கிங் செய்து கொண்டிருந்தார்கள். இவனைக் கண்டதும் வீட்டுக்குள் அழைத்த டீச்சர் அம்மாவிடம் காபி கொடுக்க சொன்னாள் . இரண்டு ஆட்கள் பீரோ, கட்டில் உள்ளிட்டவற்றை வாசலுக்கு தூக்கி வந்து வைத்தார்கள். டீச்சர் ஒரு பையைத் திறந்து இரண்டு புதிய சட்டைகளை தனபாலிடம் கொடுத்தாள். இவன் சற்று கூச்சத்துடன் வாங்கி கொண்டான். இரவு ஏழு மணிக்கு கிளம்புவதாகச் சொன்னாள். இவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்றான். சிறிய தாளில் தனது முகவரியை எழுதிக் கொடுத்தாள். இருட்டத் தொடங்கியது. கிளம்பினான். இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை இவன் சட்டைபையில் வைத்து திணித்தாள்.
ஆற்றுப் பாலத்தில் காலை நேரப் பணிகளுக்கு செல்லுபவர்கள் சைக்கிளிலும், பைக்கிலும் சென்று கொண்டிருந்தார்கள். வயிறு கலக்கியது. படுகையின் இருந்த புதர் நடுவே அமர்ந்து அவஸ்தை தீர்த்தான். அக்கா வசந்தி சிறு வயது முதலே சுறுசுறுப்பானவள். அப்பா உடன் வயல் வேலைக்குப் போவாள். நடவு செய்வாள். களை எடுப்பாள். களத்துமேட்டில் கிடக்கும் வைக்கோல் போர்களில் பிடிங்கி கட்டிக் கொண்டு வந்து மாடுகளுக்குப் போடுவாள். மாலை நேரங்களில் புல்லறுத்துப் போடுவாள். ஆற்றிலும் வாய்க்காலிலும் மீன்கள் பிடித்து வருவாள். பனை மரம் ஏறி நுங்கு வெட்டுவாள். ஆற்றில் தண்ணீர் நிரம்பி வரும் போது அச்சமின்றி எதிர் நீச்சல் போடுவாள் அத்தகைய வல்லமை பெற்றவள். அப்பா இறந்த பிறகு டவுனுக்கு வேலைக்குப் போன பின் அடியோடு மாறிப்போனாள். அதுதான் இவனுக்கும் அம்மாவுக்கும் வியப்பாக இருந்தது. காலைக் கடனை முடித்து விட்டு வந்திருந்தான். படுகையில் சிறிது தூரம் நடந்தான். முகம் கூட சரியாகக் கழுவாமல் வந்திருப்பது நினைவுக்கு வரவும், ஆற்றங்கரையில் வளர்ந்திருந்த நாயுருவிச் செடியை வேருடன் பிடிங்கி அதனை முறித்து வேர்ப் பகுதியில் சூழ்ந்திருந்த வேர்களை கிள்ளியெறிந்து கொண்டே நடந்தான். ஆற்றில் இறங்கி செடியின் வேரில் இருந்த மண் துகள்களைக் கழுவினான். கரையில் அமர்ந்து பல் தேய்க்கத் தொடங்கினான்.
இரண்டு ஆண்டு கால தொழிற்கல்வி படிப்பை கடும் சிரமத்துடன் எப்படியோ படித்து முடித்து விட்டிருந்தான். அப்பா இறந்த பிறகு கம்பி பிட்டர் ஆகிவிட்டான். தொழிற்கல்வி நிலையத்தில் இருந்து தேர்ச்சி அறிக்கை அஞ்சலில் வந்தது. அதனை வாங்க சைக்கிளில் போன அந்த திங்கள் கிழமையின் மாலைப்பொழுதில் தேன்மொழியை கடைவீதியில் பார்த்தான். மஞ்சள் நிற சுடிதார் அணிந்து தோளில் புத்தகப் பையை மாட்டிக் கொண்டு நடந்து போனாள். எதிரே வந்த அவனை அவள் கவனிக்கவில்லை. அவளிடம் பேசலாம் என்று அந்த கணம் ஒர் உந்துதல் ஏற்பட்டது. ஆனால், அவளிடம் எந்த முகத்தை வைத்து கொண்டு பேசுவது என்ற பயத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தான். வசந்தியிடம் அவளது காதலன் குறித்து அம்மாவும், இவனும் எத்தனையோ முறை எடுத்துச் சொன்னார்கள். அதனை நம்ப அவள் தயாராக இல்லை. அவளை டவுனுக்கு வேலைக்குப் போக வேண்டாம் என தடுத்து மட்டும் தான் நிறுத்த முடிந்தது. ஆனாலும் அவன் வசந்தியை ஏதோ ஒரு வழியில் வந்து சந்தித்து கொண்டிருந்தான். இவன் வெளியூர் வேலைக்கு செல்லும் நாட்களிலும், அம்மா வயல் வெளிக்கு போகும் நேரங்களிலும் அவர்கள் ஆற்றுக்கரையிலும், திடல்களின் புதர் மறைவிலும் சந்தித்து காதலை வளர்த்தார்கள். நான்கு ஆண்டுக்கு முந்தைய வைகாசி மாத இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் அம்மா, ஆட்டிறைச்சி குழம்பு வைத்துக் கொண்டிருந்தாள். இவன் திண்ணையில் பசியுடன் அமர்ந்திருந்தான். புறவாசலில் அமர்ந்த வசந்தி நீண்ட நேரம் தனது கூந்தலை சீவி வாரி பேன் பொறுக்கி நீக்கிக் கொண்டிருந்தாள். வாசலில் அம்பாசிட்டர் கார் வந்து நின்றது. அதிலிருந்து நாலைந்து ஆட்கள் இறங்கினார்கள். இவன் அவர்கள் யாரென்று பார்த்தான். பூசாரி மகன் அவர்களுடன் நின்று கொண்டிருந்தான். இவனுக்குப் புரிந்துவிட்டது. உள்ளே சென்று வசந்தி முகத்தில் ஒர் அறை விட்டான். அம்மா திட்டினாள். வெளியே வந்தான். உள்ளூரைச் சேர்ந்த கிராம நிர்வாகிகள் வந்திருந்தார்கள். அம்மாவை அழைத்து பெண் கேட்டு மணிகண்டியில் இருந்து ஆட்கள் வந்திருப்பதாக சொன்னார்கள். தனபால் பேச வாயெடுத்தான். அவனை பேச வேண்டாம் என்று தடுத்தார்கள். வாசலில் கார் நிற்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் கூடி விட்டிருந்தனர். முதலில் தயங்கிய அம்மா பிறகு சம்மதம் தெரிவித்தாள். அவன் , நகை நட்டு என எதுவும் வேண்டாம்; வசந்தியை கட்டிய புடவையுடன் அனுப்பினாள் போதும் என்றான். இரண்டு வாரம் கழித்து ஆனி மாத இரண்டாவது வார புதன் கிழமையில் எண்கண் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இரண்டு வருடங்கள் இருவரும் சந்தோஷமாகத் தான் வாழ்ந்தார்கள். அக்காவுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டது. அம்மா சித்த வைத்தியர்களிடம் அக்காவை அழைத்துச் சென்றாள். பிறகு பெண் மருத்துவர்கள் சிலரிடமும் காண்பித்தாள். அவர்கள் அக்காவுக்கு குறையில்லை என்று சொன்னதாக அம்மா தெரிவித்தாள். அவனை அழைத்த போது வர மறுத்துவிட்டான்.
பல் துலக்கிய செடியை விட்டெறிந்து விட்டு கடைத்தெருவுக்கு வந்தான். முச்சந்தியில் இருந்த குடிநீர் குழாயில் வந்த நீரில் முகம் கழுவி வாய் கொப்பளித்து விட்டு டீ குடித்தான். தெருப் பையன் ஒருவன் வந்தான். அவனுடன் வீட்டுக்கு சைக்கிளில் திரும்பினான். அக்கா உள் அறையில் படுத்துக் கிடந்தாள். அம்மா புறவாசலில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள். செல்போனை எடுத்துப் பார்த்தான். பத்துக்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள் வந்திருந்தன. வெளியே வந்து நடராஜன் மாமாவுக்கு போன் செய்தான். அவர் மதியம் டிவிஎஸ் 50 ல் வந்தார். அக்காவிடம், நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். வசந்தி ‘இனி நான் செத்தாலும் மணிகண்டிக்கு போகமாட்டேன்’ என்று அவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள். தனபாலுக்கு பெண் பார்த்திருப்பதை பற்றிச் சொன்னார். இவன் அவர்களின் உரையாடலைக் கேட்கும் விருப்பம் இன்றி வெளியே இருந்தான். அந்திப் பொழுது ஆகியிருந்தது. மாமா போய் விட்டிருந்தார். இவன் வாசலில் அமர்ந்து தெருவில் செல்லும் நபர்களை வேடிக்கை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான்.
சைக்கிளில் வந்தவன் வாசலில் சரியாக வந்து நிறுத்தினான். ஒல்லியான திரேகம். தனபாலை பார்த்து, “இது வசந்தியக்கா வீடு தானே?” என்றான். தனபால் தலையை ஆட்டி ஆமோதித்தான். திடீரென்று சத்தமான குரலில் அந்த வாலிபன், “வசந்தியக்கா புருஷனை கடைத்தெருவுல வெச்சி கத்தியால குத்திட்டானுங்க. பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டு போயிருக்காங்க.” என்றான். சில நிமிடங்கள் குழப்பமாக அவனைப் பார்த்தான் தனபால். சற்று பதட்டத்துடன் மேற்கொண்டு அவனிடம் விவரத்தை கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது வீட்டுக்குள் இருந்து….ஆ… வென அலறியடித்து கொண்டு வெளியே ஒடி வந்த வசந்தி, “என் ராசாவுக்கு என்னாச்சு” என்று தெருவில் அழுது கொண்டே ஒடத் தொடங்கினாள். தனபால் அவளை அதட்டிப் பிடிக்க முயன்றான். அதற்குள் தகவல் சொல்ல வந்தவனின் சைக்கிளிளை மறித்து ஏறி அமர்ந்தாள். அந்த வாலிபன் வேகமாக சைக்கிளை ஓட்டினான். தனபால் அம்மாவை கோபத்துடன் தேடினான்.
******
வணக்கம், அய்யா, போத்து கதையை எழுதிய கதையாசிரியன் தான் எழுதுகிறேன். இது போன்ற இணைய இணை இதழ்களில் கதையை பிரசுரிப்பது எளிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் வருத்தம் என்னவெனில் கதை வாசிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் இது போன்ற இணைய இதழ்கள் பக்கம் எட்டி கூட பார்ப்பதில்லை என்பது உண்மை. மேலும் இந்த கதையை எழுதியவர் ஒரு பெண் படைப்பாளியாக இருக்குப் பட்சத்தில் நட்பு வளர்க்கு்ம் நோக்கில் சிலர் படித்திருக்க கூடும்.