
துளி மேகமற்ற
கண்ணாடிவானம்
மிதக்கின்ற நகரின் வேலைநாள்.
திருவாளர் xyz அவர்கள்
வேறொருவரின் அலுவலக அறையில் காத்திருக்கிறார்.
ஆம்,அதே xyz தான்.
நகரில் சிறிய விசயங்களின் கடவுளான xyz க்கு
இந்த காத்திருப்பு எரிச்சலாய் மாறத்துவங்கி இருபது நிமிடம் ஆகிறது.
Xyz தன் கீர்த்திகளை நினைத்துக்கொண்டார்.
அந்த கீர்த்திகளை எப்படி ஜவ்வாதைப்போல உபயோகிப்பதென்பது அவருக்கு கைவந்த கலை.
இன்னமும் அவர் குடித்துமுடித்த தேனீர்குவளையை யாரும் அப்புறப்படுத்தவில்லை.
அதுவேறு அவரை உளவியல்குலையச் செய்கிறது.
காத்திருப்பின் வழியே
Xyz அடையவிருப்பது எதுவென நாம் யூகிக்கவேண்டாம்.
உங்களின் கிசுகிசுப்பு மூளையை தளர்த்துங்கள்.
இது விலங்கொன்றின் பிறாண்டலை ரகசியமாக பார்வையிடும் விளையாட்டு.
மிகச்சிறியவைகள் அப்படித்தான் பொழுதுபோக்குகின்றன.
Xyzன் ஆடை மிடுக்கு தளர்கின்றது.
அவரது மோதிரங்கள் விரல்களில் மாறி மாறி சுழல்கின்றன.
Xyz திரும்பவும் தனது கீர்த்திகளை நினைத்துக் கொள்கிறார்.
நீண்டநேர அமைதிக்குப் பிறகு நோயாளியின் நடையுடன்
ஒளிமட்டுப்படுத்தபட்ட ஜன்னலருகே செல்கின்ற
xyz கைவிடப்பட்ட பூங்காவின்
பகல்வேளையில் இருக்கின்ற
சிமிண்ட்பெஞ்சுகளைப் பார்க்கிறார்.
சிதிலமான அவை திரும்பிப்பார்க்காமல் விறைத்திருக்க,
Xyz ஒரு புன்னகைபுரிந்தார்.
இதுவரை ஜவ்வாதாய் மாற்றபட்ட புன்னகைகளிலிருந்து
இது முற்றிலும் வேறு.