“ஏன் அப்படி பாக்குற? என்னால டயலாக்ஸ்ல கவனம் செலுத்த முடியலடா”
“சரி.. நான் ஒரு தம் அடிச்சிட்டு வந்திடறேன்.. யூ கேரியான்”
மனோரஞ்சன் அவளைத் தனியாக விட்டுவிட்டு மெதுவாக எழுந்து பால்கனிக்கு போய் நின்றுகொண்டான். இந்த டபுள் பெட்ரூம் ஃபிளாட் வசுமித்திரையினுடையது. பன்னிரண்டாவது மாடி உயரத்திலிருந்து பார்க்கும்போது வானம் எழுபது எம்.எம். ஃபிரேமாக அகன்று விரிந்து தெரிந்தது. பார்வைக்கு மிக அருகாமையில் பிரம்மாண்டமாக இருந்தது. எப்போதும் பார்க்கின்ற வானம்தான். ஆனால் இன்றைய பொழுதில் இந்த வானம் கொஞ்சமாக உள்வாங்கியது போல இருக்கிறது. வெளிச்சமாக வெளுத்திருக்கிறது. ஆனால் சூரியனைக் காணவில்லை. வெகுதொலைவிற்கு நீண்டிருந்த சாலையில் வாகனங்கள் டிராஃபிக் நெரிசலோடு பொம்மையாக ஊர்ந்துகொண்டிருந்தன. நகரத்தின் பரபரப்பை தள்ளிநின்று வேடிக்கைப் பார்க்கும்போது அதில் ஓர் அழகு இருக்கிறது. விரல்களில் ஃபிரேம் அமைத்து ஒற்றைக்கண்ணை மூடி அதனூடே பார்த்து க்ளிக் என்று சொல்லிக்கொண்டான். அவசரமேயில்லாமல் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து ஆழமாக ஓர் இழு இழுத்து நெஞ்சுக்கூட்டில் சில நொடிகள் நிறுத்தி வைத்து புகையை மெல்ல ஊதினான்.
பக்கத்து பிளாக்கின் ஸ்லாபில் இருந்த ஏஸி அவுட்டோர் யூனிட்டின்மீது அமர்ந்திருந்த இரண்டு சாம்பல் நிறப் புறாக்கள் அலகுகளை உரசிக்கொண்டு ரொமான்ஸில் இருந்தன. ஒன்றின் வட்டக் கண்கள் கிறங்கிப் போய் பாதி மூடி மீதி திறந்து என ஏகாந்த மயக்கத்தில் இருந்தது. அது ஆண் புறாவா? பெண் புறாவா? அவன் யோசித்தான். ரொம்பவும் குழப்பிக்கொள்ளவில்லை. கிறக்கத்தில் இருப்பது ஆண் புறாதான் என்கிற முடிவுக்கு வந்துவிட்டான்.
ஓர் ஆண் புறாவின் தொகை:
ஒண்டிக்கொள்ள சிறிய இடம் இருந்தால் போதுமாக இருந்தது அவனுக்கு. தெரிந்த நண்பர்களைப் பிடித்து ஒருவர் மாற்றி ஒருவர் என சொல்லிச் சொல்லி.. ரிலே ரேஸ் மாதிரி ஒவ்வோர் இடமாக அல்லாடி கடைசியில் தி நகரில் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் இருந்த ஒரு மேன்ஷன் அறையில் தஞ்சம் அடைந்தான். அறைக்கு சொந்தக்காரன் ராபர்ட்.
அந்த புறாவிற்கு லக் இருந்தது. அறைக்கு வந்த இரண்டே வாரங்களில் அலைந்து திரிந்து.. முதல் படம் இயக்கவிருக்கிற ஒருவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டான். மூன்றாவது உதவியாளராக வேலைத் தகுதி. சொற்ப பேட்டாவும் தினப்படிக்கு ஒருவேளை உணவுமாக செட்டில் ஆகிவிட்ட மனநிலையில் கொஞ்சம் தெம்பு வந்திருந்தது. ராபர்டிற்குதான் ஆச்சரியம் தாளவில்லை.
“மொத நாளு பாத்தப்பவே கண்டுபிடிச்சிட்டேன் பாஸூ. சரியான புக்வார்ம் நீங்க. உங்ககிட்ட திறமை தாண்டவமாடுது. நாஞ்சொல்றேன்.. சூப்பரா வருவீங்க. ஆல் த பெஸ்ட். நீங்க அசிஸ்டெண்டா ஜாயின் பண்ணதுக்கு இன்னைக்கு நான்தான் உங்களுக்கு ட்ரீட் வைக்கப் போறேன்”
அவன் ஆச்சரியப்பட்டான். அன்றைய இரவு டின்னரில் ராபர்ட் தன்னுடைய சொந்த வாழ்வின் விஷயங்களை மனதார பகிர்ந்துகொண்டான். தென்னக ரயில்வேயில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலையில் இருக்கிறான். வேலை இன்னும் நிரந்தரமாகவில்லை. இதுவரை ராபர்ட்டின் அறையில் நான்கு ரூம் மேட்கள் மாறியிருக்கிறார்கள். இவன் ஐந்தாவது நபர். ராபர்ட்டுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவள் ஜி.ஹெச்சில் நர்ஸாக பணிபுரிகிறாள்.
“இன்னொரு நாளு எங்க காதல் கதையை முழுசா சொல்லுறேன். சூப்பரா இருக்கும். அவ்ளோ ட்விஸ்டு சஸ்பென்ஸூன்னு உங்க சினிமாவுக்கு ஏத்த கதை பாஸூ. சும்மா சொல்லலை. நிஜமாவே மிரட்டலா இருக்கும். ஆனா, இன்னைக்கு இல்ல. ஓகே?”
“நீங்களும் சென்னை தானா ராபர்ட்?”
“இல்ல. அவ தான் சென்னை. எனக்கு வேலூரு. நாங்க மொத மொதல்ல ட்ரெயின்ல தான் மீட் பண்ணோம்”
ட்ரெயினை சுமக்கும் தண்டவாளங்கள்:
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் வெளியூர் வண்டிகளுக்கான பிராட்கேஜ் நடைமேடையில் கும்மிடிபூண்டி மின்சார ட்ரெயின் எப்போது வேண்டுமானாலும் கிளம்பிவிடும் நிலையில் தயாராக நின்றுகொண்டிருந்தது.
கையில் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் அவன் நின்றிருந்தான். அவள் முதுகுப் பையோடு கையில் ஒரு கர்ச்சீஃப் நுனியை டென்ஷனில் திருகியபடி அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். பரஸ்பரம் என்ன மாதிரியான எமோஷனல் மதிப்புகளோடு இருவரும் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களைப் பார்ப்பவர்களுக்குப் புரியவில்லை. அவள்தான் முதலில் வாயைத் திறந்தாள்.
“ரொம்ப தெளிவா இருக்கடா.. எனக்குலாம் செத்துப்போய் திரும்ப பொறந்து வந்து உன் முன்னாடி நின்னாலும் புத்தியே வராது.. நான்லாம் என்ன ஜென்மமோ ச்சே..”
அவன் எதுவுமே சொல்லவில்லை. செய்வதறியாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். முகம் மட்டும் பாறையைப் போல இறுகிப் போயிருந்தது.
ட்ரெயின் உள்ளே ஜன்னலோரத்தில் உட்கார்ந்தபடி அந்த ஜோடியை வெறுமனே வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தாள் நீலா. எத்தனை விதமான வாழ்க்கை? எத்தனை விதமான உயிர்கள்? ஆண் பெண் என்று இந்த உடலும் மனமும் படுகிற பாடு இருக்கிறதே..
“எக்ஸ்கியூஸ்மி.. இந்த பேக்கை கொஞ்சம் பாத்துக்கறீங்களா ப்ளீஸ்? நான் போய் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு ஓடியாந்துடறேன்”
சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள். ஸ்மார்டாக இருந்தான். சட்டையை டக்கின் பண்ணயிருந்தான். சிரித்த முகம். திருத்திய மீசை. மாநிறம். சுருள் முடி. சரி என்பதாகத் தலையசைத்தாள். அவன் கம்பார்ட்மெண்ட்டை விட்டு இறங்கி அந்த ஜோடியைக் கடந்து எதிர்த்திசையில் வேகமாக ஓடினான். கால்களில் ஷூ அணிந்திருந்தான். டை மட்டும்தான் மிஸ்ஸிங் என்று நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டாள் நீலா.
அந்தப் பெண் அவனிடமிருந்த தண்ணீர் பாட்டிலை விருட்டென்று பிடுங்கினாள். அவன் கைப்பிசைந்து நின்றான். சுத்தமாக அவனுடைய முகம் விழுந்திருந்தது. ட்ரெயின் முதல் ஹார்னை அலறவிட்டது. அவள் சுட்டுவிரலை உயர்த்தி ஆட்டி கண்களால் உருட்டி அவனைக் கண்டித்தாள். விருட்டென கம்பார்ட்மெண்ட்டை நோக்கித் திரும்பினாள்.
“வர்ஷூ..”
“டோண்ட் மேக் எனி புல்ஷிட் கால்ஸ் டு மீ”
உள்ளே ஏறிவிட்டாள். நீலாவிற்கு உட்கார்ந்த இடத்திலிருந்து வாசலைப் பார்த்தபோது அந்தப் பெண் மறுவாசல் பக்கம் போய் நின்றுகொள்வது தெரிந்தது. தண்டவாளங்களைப் பார்த்துக்கொண்டு நிற்பாள் போல. பையன் செய்வதறியாது அம்போவென்று நின்றிருந்தான். இப்போது எங்கிருந்தோ வந்த இன்னொரு பையன் அவனை நெருங்கி தோளைத் தட்டி என்னவோ சொல்லிக்கொண்டிருந்தான். ட்ரெயின் இரண்டாம் ஹார்னை அலறவிட்டு ஜிவுக்கென்று நகர்ந்தது. இரண்டு பையன்களும் நகரும் ட்ரெயினை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் இந்தப்பக்கமே வரவில்லை. ரயில்வே ஸ்டேஷனோடு தங்கிவிடுகிற தண்டவாளங்கள் நிரந்தர சோகத்தை சுமந்து கிடப்பவை. எந்த ட்ரெயினும் யாருக்காகவும் நிற்பதில்லை. ஒவ்வொரு பயணத்திற்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ள வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள் நீலா. ஒருவேளை அந்தப் பெண் அந்தப்பக்க வாசலில் நின்று அழுதுக்கொண்டிருப்பாளா?
பையைப் பார்த்துக்கொள்ளச் சொன்னவன் ட்ரெயினை தவறவிட்டுவிட்டானோ என்று கவனம் கலைந்து ஜன்னல்வழியே எட்டிப் பார்த்தாள். அந்த நொடி மிகச்சரியாக எதிர் இருக்கையில் வந்து உட்கார்ந்தான். அவனுகுக் மூச்சிரைத்துக்கொண்டிருந்தது. தன் பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான்.
“தேங்ஸ்ங்க..”
“ம்..”
நட்பாகத் தலையசைத்து பதிலாக ஒரு புன்னகையைக் கொடுத்தாள்.
“ஐ’ம் ராபர்ட்”
சொல்லிக்கொண்டே மலர்ந்த முகத்துடன் கையை நீட்டினான். ஒருகணம் தயங்கி கை குலுக்கினாள். அந்தப் பயணம் புதிய ஊருக்கு அவர்கள் இருவரையும் கூட்டிப் போயிற்று.
சாம்பல் நிற புறாவின் பகல் பொழுது:
முந்தின நாள் இரவு எழுதிய சீன் பேப்பரை அவன் தன் நண்பனிடம் வாசிக்கக் கொடுத்தான். இருவரும் டீக்கடையில் நின்றிருந்தார்கள். நண்பன் தம்மடித்துக்கொண்டே நிதானமாக அதை வாசித்துப் பார்த்தான். ம்ம்.. என்பதாக தலையை அசைத்துக்கொண்டான்.
“ஷார்ட் ஸ்டோரி டைப்ல இருந்தாலும் உனக்கு சீன் எழுத வருது மச்சி.. வெரிகுட். அப்படியே ட்ரை பண்ணு.. டைம் கிடைக்கும்போது டிஸ்கஸ் பண்ணுவோம். ஓகே. யார் அது ராபர்ட்? கற்பனை கேரக்டரா? லைவா?”
“ரூம் மேட்டோட பர்சனல் வாழ்க்கை. அதுல ரொம்ப குட்டியா ஒரு சிச்சுவேஷன் கிடைச்சது. அதை இன்ஸ்பிரேஷனா வச்சிக்கிட்டு என் ஸ்டைல்ல அப்படியே டெவலப் பண்ணி எழுதிப் பார்த்தேன்”
“செம்ம.. ஒரிஜினல் பெயர்களை மட்டும் யூஸ் பண்ணாத.. சரி.. நேரா காஸ்ட்யூம் டிசைனரைப் பார்த்துட்டு அங்கருந்து ஆஃபீஸூக்கு போவணும் வா..”
காஸ்ட்யூம் டிஸைனரின் முன்பகல்:
ரூபிணி ஆள் உயரக் கண்ணாடி முன்னே நெருங்கி நின்றபடி மிகக் கவனமாக.. வலதுகண் இமை முடிகளை ஐ–லேஷ் கர்லரால் ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள். கண்ணாடியில் தெரிந்த கட்டில் பிம்பத்தில் மேல்சட்டை இல்லாமல் டிராக் பேண்ட்டுடன் ஒற்றைக்காலை மடக்கி சாய்ந்த நிலையில் இருந்தான் நவ்நீத். ஒரு கையைத் தலையணையில் ஊன்றியபடி மொபைலில் எதையோ ஸ்க்ரோல் பண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தான். இன்னொரு கையில் காஃபி கோப்பை இருந்தது. அதிலிருந்து ஆவி பறந்துகொண்டிருந்தது.
முடித்து நிமிர்ந்தவள் உதடுகளை மடித்து லிப்ஸ்டிக் அளவுகளை சோதித்துக்கொண்டாள். திரும்பி அவனைப் பார்த்தாள்.
“என்னடா இன்னும் அதே கோலத்துல இருக்கற? டைம் ஆகுதுல”
அவளை ஏறிட்டான். ஆலிவ் பச்சை நிற டைட் பேண்ட்டும் யானைத்தந்தம் நிறத்தில் இடுப்புளவோடு நின்றுவிட்ட முக்கால்கை டாப்ஸூமாக அசத்தலாக இருந்தாள். வலது கை மணிக்கட்டை வுட் பீட்ஸ் இரண்டு சுற்றாக வளைத்திருந்தது. கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய செயினின் முனையில் ஸிர்கான் ஸ்டட்டில் குட்டி பிரவுன் நிற இதயம் ஒன்று முதல் பட்டன் திறப்பின் மேற்புற வி பிளவில் புரண்டது.
“ரொமான்ஸ் மூடுக்கெல்லாம் பிக்கப் ஆகாத டார்லு.. சைட் அடிச்சது போதும். கெட் ரெடி..”
“அரைமணி நேரம் இருக்குல்ல பேபி?”
“அது அங்கேயே நிக்குமா..? ஆல்ரெடி பத்துநிமிஷம் காலி. ட்வென்டி மினிட்ஸ்ல அவங்க ஷார்ப்பா வந்துருவாங்க மேன்”
“ஸ்ஸ்ஸப்ப்பா.. தாங்கல.. முதல் பட டைரக்டர்தான? அதும் இப்போ வரப்போறது அந்தாளோட அசிஸ்டெண்ட்ஸ்.. நீ சீனியர்டா கன்னுக்குட்டி. அஞ்சு படம் முடிஞ்சு ஆறாவதுல டாப் கியர் தூக்குற இடத்துக்கு வந்துட்ட. பிஹேவ்டா பேபி.. ஆட்டிட்யூட் காட்டுற டைம் வந்தாச்சு..”
ஜன்னல் திரைகளை அகலத் திறந்துவிட்டு இடுப்பில் கையூன்றி திரும்பினாள். வெளிச்சம் உள்ளே பாய்ந்து புகுந்ததில் சட்டென்று கோட்டுச் சித்திரமாக மாறிப் போனாள். நவ்நீத்துக்கு கண் கூசியதில் மொபைலை விட்டுவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கண்களுக்கு வலது உள்ளங்கையால் குடைப்பிடித்துக்கொண்டான்.
“ஏய்..! முத படத்துலயே டாப்புக்கு போயிடுவாரு. இண்டஸ்ட்ரியே அந்த மனுஷனோட அவுட்புட்டுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கு. ஏழு வருஷமா அவரோட வொர்க்கிங் ஸ்டைலை பார்த்துக்கிட்டு இருக்கோம்.. சத்தமா பேசாத. சுவருக்கும் காது இருக்கும். இந்தப் படம் எனக்கு முக்கியம். அதும் மும்பைல. யூத் சப்ஜெக்ட். ஹை-கிளாஸ் ஸ்டோரி பிளாட். செம்மையா கலர் சென்ஸ் இருக்குற மனுஷன்.. டபுள் மடங்கு வேல பாக்கணும் கண்ணா. இப்பத்தான் நிரூபிச்சு காட்டணும்..”
காஃபி கோப்பையை பெட்டில் வைத்துவிட்டு குனிந்து கையெடுத்து ஒரு கும்பிடு போட்டான். எழுந்து கட்டிலைவிட்டு இறங்கி வந்து அவளை நெருங்கி கழுத்தருகே மோப்பம் பிடித்தான். சந்தனம் மணந்தது. அவளுடைய உடை கசங்காமல் சிறிதாக அணைத்து விடுவித்து குளியலறைக்குள் நுழைந்துகொண்டான்.
ரூபிணி படுக்கையறையிலிருந்து வெளியேறி ஹாலுக்குள் நுழைந்தாள். கன்னாபின்னாவென்று கிடந்த பொருட்களை சீரமைத்தாள். சமையலறையில் வேலையாக இருந்த பெண்ணை அழைத்து உணவுக்கான குறிப்புகளைச் சொன்னாள். அலுவலகமாக மாற்றப்பட்டிருந்த பக்கத்து அறையைத் திறந்து ஏஸியை போட்டு வைத்தாள். கண்களை ஒரு சுற்று ஓட்டி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை நோட்டம் விட்டாள். கதவை மூடிவிட்டு ஹாலை ஒட்டியிருந்த பால்கனியில் வந்து நின்றுகொண்டாள். கீழே பார்த்தாள். தன்னுடைய பிளாக்கை ஒட்டி வந்து நின்ற பைக்கிலிருந்து அவர்கள் இறங்கினார்கள். முதலாமவன் இறங்கி நின்று இடுப்பைப் பிடித்து பின்னுக்குத் தள்ளி கட்டிட உயரத்தை அண்ணாந்து பார்த்தான்.
பக்கத்து பிளாக்கின் ஏஸி அவுட்டோர் யூனிட்டின்மீது ஒரு புறா தனித்து நின்றபடி அனற்றிக்கொண்டே ரூபிணியைத் திரும்பிப் பார்த்தது. அது ஒரு பெண் புறா என்பதை அவள் நன்கு அறிவாள்.
பெண் புறாவின் விதைநெல்:
வீட்டு வாசலில் நின்றிருந்த ஷேர் ஆட்டோவின் டிரைவர் ஸீட்டில் உட்கார்ந்து இட்லி தின்றுகொண்டிருந்தாள் மலர். பின்பக்க இருக்கையில் உடலை சரித்து அட்ஜஸ்ட் செய்து படுத்திருந்தான் சௌந்தர் என்கிற சௌந்திரபாண்டியன். மொபைலில் ஷார்ட் ரீல்ஸ் பார்த்து மௌனமாகச் சிரித்துக்கொண்டிருந்தான்.
“இன்னா சௌந்தரு இன்னிக்கு லீவு வுட்டுட்டியா?”
கடைசி இட்லியைக் கொஞ்சமாய் பிய்த்து பொடியில் தோய்த்து எடுத்து சாம்பாரில் பிரட்டிக்கொண்டாள்.
“ஆங்..! எவன் வாடக கட்டுறது? ரெகுலரை இன்னிக்கு கட் பண்ணிட்டேன். ஒரு லாங் சவாரி சொல்லிருக்காங்க. அப் அண்ட் டவுன்.. ஓகே பண்ணி வச்சிருக்கேன். லம்ப் அமவுண்ட். அய்யா இன்னிக்கு ராஜா..”
“சூப்பரு.. டீசல் ஏத்திட்டியா..?”
“பக்கா..”
“பாப்பாவ மட்டும் இப்போ ஸ்கூல்ல வுட்டு வந்துறலாமா? எனக்கும் சீக்கிரம் போவணும். அப்பார்ட்மெண்ட்ல டைரக்டர் வூட்ல நைட்டு பார்ட்டி இருக்குது. இன்னிக்கு எனக்கு லேட் ஆவும். இப்போவே போயி கொஞ்சம் ரெடி பண்ணி வச்சிட்டா.. சாயந்தரம் நானே ஸ்கூல்லருந்து கூட்டினு வந்து வூட்டுல விட்டுட்டு திரும்ப போயிடுவேன். நீ பொறுமையா சவாரி முடிச்சிட்டு வந்து பாப்பாவ பாத்துக்கோ.. சந்தியக்காகிட்டயும் சொல்லி வச்சிருக்கேன்”
அவன் கவனத்தை வீடியோவில் வைத்துத் தலையாட்டிக்கொண்டான்.
“ஒருத்தி இங்க சொல்லிக்கினே இருக்கேன்.. பாரேன்”
“சரிடி.. கத்தாத”
வீட்டுக்குள்ளிருந்து ஸ்கூல் பையுடன் மாலினி வந்து நின்று மலரைப் பார்த்து சிரித்தாள். கடைசி வாய் இட்லியை மாலினிக்கு ஊட்டிவிட்டு எழுந்தவள் வீட்டுக்குள் நுழைந்தாள். மாலினி, ஆட்டோ கண்ணாடியில் ஒருமுறை தன்னுடைய முகத்தில் இருக்கும் பவுடர் திட்டுகளை சரிசெய்துகொண்டாள். ரெட்டை ஜடை வளைவுகளின் மேல்முனையில் பச்சை நிற ரிப்பன்கள் பட்டாம்பூச்சியாக முடிச்சிடப்பட்டிருந்தன.
“என்ன வீடியோப்பா பாக்குறீங்க?”
“ரமேஷோட டான்ஸூம்மா..”
“பாவம்லப்பா..”
டிக்டாக் புகழ் டான்ஸர் ரமேஷ் பத்தாவது மாடியிலிருந்து விழுந்து இறந்த செய்தி ஜனங்களை வெகுவாக உலுக்கியிருந்தது. சௌந்தர் பெருமூச்சோடு எழுந்து உட்கார்ந்துகொண்டு மகளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.
“வாய்ப்பு கிடைச்சா மட்டும் பத்தாதும்மா. தலையெழுத்தும் நல்லாருக்கணும்.. எல்லாம் ஒரு நேரந்தான். நீ ஹோம் வொர்க்கு முடிச்சிட்டியாடா?”
“அதெல்லாம் நைட்டே முடிச்சிட்டேன். அம்மா ஹெல்ப் பண்ணாங்கப்பா..”
மலர் புடவை மாற்றியிருந்தாள். வாசலைப் பூட்டிவிட்டு திரும்பியபோது சௌந்தர் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்து என்ன என்பதாக பாவனையில் கேட்டாள்.
“பாத்துடி.. உங்க டைரக்டரு உன்ன ஹீரோயினாக்கிட போறான்..”
“ம்க்கும்.. ஆக்குறாங்க.. வண்டிய எடு”
முந்தைய லாங் ட்ரிப்பின் அடுக்குகளில் ஒன்று :
செங்கல்பட்டில் ஒரு பண்ணை வீட்டில் சினிமா காட்சிகளுக்கான ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அக்குழுவில் ஆணும் பெண்ணுமாக மொத்தம் பதினைந்து பேர். இயக்குனருக்கு முதல் பட வாய்ப்பு என்பதால் தனக்கான ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு முழு மூச்சாக வேலையில் இறங்கியிருந்தார். முக்கியமான கதாபாத்திரங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் புதுமுகங்கள். ஆகவே அவர்கள் எல்லோருக்கும் தனித்தனியாக சீன் பேப்பர்கள் கொடுக்கப்பட்டு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. பழைய பாணியை கையாள்வது என்கிற முடிவுடன் இருந்த இயக்குனர் செலவு பற்றிக் கவலைப்படவில்லை. மொத்தமாக ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்திருந்தார். சென்னையை விட்டு முற்றிலும் துண்டித்துக்கொண்ட மனநிலையில் அனைவரும் இயக்குனரின் அலைவரிசைக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டிருந்தார்கள்.
பண்ணைவீட்டுச் சூழல் அக்குழுவினருக்கு ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாக வளர்ந்துகொண்டிருந்தது. வேலைநேரம் ஒன்றை வகுத்துக்கொண்டது அக்குழு. மற்ற வேளைகளில் அரட்டைக் கச்சேரிதான். மூடு நன்றாக இருந்தால் இயக்குனர் சமையலில் இறங்கிவிடுவார். அத்தனைப் பேருக்கும் ஒற்றை ஆளாக தானே முன்நின்று சமைத்துப் போடுவார். அவருடைய உதவியாளர்கள் பம்பரமாக சுற்றினார்கள். சுறுசுறுப்பாகவே இருந்தார்கள். அவர்கள் அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள். புதிது புதிதாக கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டார்கள்.
அங்கிருந்த அநேகரும் தங்களுடைய முதல் வாய்ப்பிற்காக உடல் பொருள் ஆவி மொத்தத்தையும் அர்ப்பணித்துவிட்ட மனநிலைக்கு வந்துவிட்டிருந்தார்கள்.
Creating a Role குறித்த ஸ்தானிஸ்லேவ்ஸ்கியின் மேடை நடிப்புக்கான உத்திகளை சினிமாவிற்கு தகுந்தார் போல இயக்குனரால் மாற்றியமைத்துக்கொள்ள முடிந்தது. அக்குழுவில் முதல் பட அனுபவத்துடன் வெளிப்படத் துடித்துக்கொண்டிருந்த அறிமுக ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் பல விஷயங்களைப் பேசிப் பேசி காகிதங்களில் பென்சிலால் நிறைய ஸ்கெட்ச் போட்டுக்கொண்டிருந்தார்கள். அவை அனைத்துமே அன்றிரவே லேப் டாப்பில் டிஜிட்டல் வடிவ கோப்புகளாக உருமாற்றம் ஆகி தேதி வாரியாக பத்திரப்படுத்தப்பட்டன.
நல்ல வெயிலில் நீச்சல் குளத்தில் ரப்பர் படுக்கையில் தான் மட்டும் தனியாக மிதந்தபடி கண்களில் கூலிங் கிளாஸூடன் தீவிரமான சிந்தனையில் இருப்பது எப்போதாவது நடக்கும். அந்த சமயத்தில் இயக்குனரை யாரும் தொந்தரவு செய்வதில்லை. கட்டிடத்தின் மறுபக்கம் போய்விடுவார்கள்.
அப்படியொரு நாளில்தான் அந்தப் பண்ணைவீட்டிற்கு ஆட்டோவில் வந்து இறங்கினாள் வசுமித்திரை.
இரண்டு புறாக்களின் வானம் :
அந்தோணி போர்டைனின் புகைப்படத்துடன் அவருடைய வாசகம் ஒன்று ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட போஸ்டராக அந்த அறைச் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.
‘பயணித்தல் எப்போதும் அழகானது அல்ல.
எல்லா நேரமும் அது சௌகரியமானதும் அல்ல.
சிலவேளைகளில் அது காயப்படுத்தும், இதயத்தையே கூட நொறுக்கிவிடும்.
ஆனால் பரவாயில்லை.
பயணம் உன்னை மாற்றும்; மாற்றமடைய செய்யவேண்டும்.
உன்னுடைய நினைவுகளில், புத்திக்கூர்மையில்..
உன் இதயத்தில் உன்னுடைய உடலிலுமே கூட
அது தழும்புகளை விட்டுப்போகும்.
பயணத்தின்போது உன்னுடன் எதையாவது எடுத்துக்கொள்.
அதேவேளை நம்பிக்கையுடன்.. ஏதோ ஒரு நல்லதை விட்டுவிட்டும் போ..’
“மனோ.. தம் அடிச்சது போதும்.. உள்ள வா முதல்ல..”
அவள் கூப்பிட்டதும் மனோரஞ்சன் உள்ளே வரவில்லை. அந்த இரண்டு புறாக்களையே பார்த்துக்கொண்டிருப்பதில் இருந்து அவனால் பார்வையை பெயர்த்து எடுக்க முடியவில்லை. அனைத்துக்குமான ஆக்சிஜனை சூரியன்தான் வழங்குகிறது என்றால் இந்த சூரியனை இன்றைக்கு ஏன் காணவில்லை. உலகம் தோன்றிய அந்த முதல் கணத்தில் ஒரு வார்த்தை இருந்திருக்கும் என்கிறார்களே. என்ன வார்த்தை அது?
பால்கனி வாசலில் வந்து நின்ற வசுமித்திரை அவனுடைய முதுகைப் பார்த்துப் பேசினாள்.
“பக்கத்து பிளாக்ல வீட்டு வேலை செய்யுற ஒரு அக்கா இருக்காங்க. அவங்க புருஷன் ஆட்டோ ஓட்டுறாரு. நம்பர் வாங்கி வச்சிருக்கேன். லாங் ட்ரிப்புக்கு முன்கூட்டியே சொன்னா போதுமாம். ஒன் டே பேமெண்ட் கணக்குல பேசிக்கிட்டா.. செங்கல்பட்டு வரைக்கும் போயிட்டு வர்றதுக்கு நம்ம சொந்த வண்டிய எடுத்துக்கிட்டு டிராஃபிக்ல மல்லுக்கட்ட வேண்டாம்ல?”
தலைக்கு மேலே ‘ம்க்கும்’ என்ற சத்தம் கேட்டது. அது எந்த புறா என்று தெரியவில்லை.
பொறுமை இழந்து பால்கனிக்குள் நுழைந்தாள். ஏற்கனவே சூழல் மந்தமாகி வழக்கத்தைவிட அதிகமாக காற்று வீசிக்கொண்டிருந்தது. வசுமித்திரையின் கையிலிருந்த டயலாக் காகிதங்கள் காற்றில் படபடவென அடித்துக்கொண்டன.
அவனையும் அந்தப் புறாக்களையும் பார்த்தாள். கடுப்பாகி ‘ஷூ..’ என்று கையை ஆட்டி அவற்றைத் துரத்தப் பார்த்தாள். எதிர்பாராதவிதமாக கையில் இருந்த காகிதங்கள் மொத்தமும் நழுவின. நழுவின வேகத்தில் காற்று அவற்றைப் படபடவென்று அள்ளித் தூக்கிற்று. அந்தப் புறாக்கள் இரண்டும் சட்டென்று மிரண்டு சிறகுகளை உதறி எம்பி வானம் நோக்கிப் பறந்தன.
அவர்கள் இருவரும் திகைப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே டயலாக் காகிதங்கள் அத்தனையும் சிறகடித்து சிறகடித்துப் புறாக்களாக உருமாறின. அவை வேகமாகப் பறந்து பறந்து அந்த இரண்டு புறாக்களுடன் இணைந்துகொண்டன. பிறகு அவை மொத்தமும் மெல்ல மெல்ல பார்வையிலிருந்து மங்கிக்கொண்டே வெளிச்சத்தோடு கலந்து மறைந்து போயின.
****