
சிறிய கல் அஃது;
முற்றிய சோளத்தினும் சற்று பெரிது;
நிரம்பிய குளத்தில் எறிந்து
அலை போகும் தூரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்;
எனக்கு அடுத்து நின்ற ஒருவன்
பெரிய கல்லைப் போட்டு
என் சிறிய கல்லின்
சிறிய அலையைத்
தொந்தரவு செய்தான்;
பெரிய கல்லின் அலைக்கு முன்
சிறிய கல்லின் அலை
ஒன்றுமில்லை என்பதுபோல்
அவன் சிரித்தது
எனக்குப் பிடிக்கவில்லை;
நானொரு அசுரனைப்போல் மாறினேன்;
நீரில் பாய்ந்தேன்;
மொத்த நீரையும் குடித்துவிட்டு
குளத்தைக் காலியாக்கினேன்;
அவனுடைய பெரிய கல்
அங்கே
பரிதாபமாகக் கிடந்தது;
****
எதிரிகளை எனக்குப்
பிடிக்கவில்லை;
அவர்கள்
நேருக்கு நேர் நின்று மோதுபவர்களாக இருக்கிறார்கள்;
நெஞ்சுக்கு நேராக
துப்பாக்கியை உயர்த்துகிறார்கள்;
முதுகுக்குப் பின்னால்
குத்தக் கூடியவர்களாக
என் நண்பர்களை சித்தரிக்கிறார்கள்;
அதிருப்தியாளர்களுக்கு
தலைவனாக இருப்பதற்குப் பதில்
எளிமையான
கடைகோடி மனிதனாக இருப்பது நன்றென்கிறார்கள்;
எப்போதும் என்னைத்
தாக்குதலுக்கு தயார்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்;
உலகம் துரோகிகளால் ஆனது என்ற
எதிரிகளின் வார்த்தைகளை
நான் வெறுக்கிறேன்;
இத்தனை அதிருப்திக்குரியவர்கள்
அவர்களை
விரும்பக்கூடியவனாகவும் என்னை
மறைமுகமாகத் தயார்படுத்துகிறார்கள் என்பதுதான்
இதில் சுவாரசியமே.
****
பயந்து அலறி எழ வேண்டுமென
நெடுநாள் ஆசை
சுடுகாட்டில் தூங்கிப் பார்த்தேன்
மண்டையோட்டின் கண்களில்
ஆவாரம்பூ வைத்துப் பார்த்தேன்
கோடங்கியோடு
சாராயம் குடித்துப் பார்த்தேன்
குணத்திலிருக்கும் மூர்க்கமும்
சுடுகாட்டில் படுத்தால் கூட
உடம்பில் ஏறிவிடுகிற தூக்கமும்
அதற்கு வாய்ப்பளிக்கவில்லை
ஆனால், பின் தொடர்கிறது
அப்படியோர் ஆசை
யாராவது சொல்லுங்கள்
நான் பயப்பட வேண்டுமெனில்
என்ன செய்ய வேண்டும்?
****
நஞ்சின் குணம் அதிகமிருக்கும் காந்தள் மலர்
காதல் பெண்டிரின் விரல்களுக்கு
கொஞ்சமும் பொருத்தமில்லாதது;
கபிலர் அவசரப்படாமல்
நல்லதொரு உவமைக்கு
இன்னும் கூட காத்திருந்திருக்கலாம்;
ஈச்சங்கட்டைகளைத் தோண்டி
அதன் தண்டுகளைத்
தின்று கொண்டிருக்கும்
என்னிடம் உள்ளது
ஒரு ருசியான உவமை;
புலவர்
வேறேதோ சிந்தனையில்
உவமையில் குறை வைத்துவிட்டார்
பொறுத்தருள்க தலைவி;
*******