சிறுகதைகள்
Trending

முறிந்த  சிறகுகள் – ஐ.கிருத்திகா

சிறுகதை | வாசகசாலை

பித்தளை அண்டாவுல இருக்க கருப்பு மசிய அப்படியே வானத்துல கொட்டி ஒழுக விட்டுடுவா தேவதை. அதனாலதான் ராத்திரி இருட்டாயிடுது. அப்புறம் பகல் எப்படி வருது தெரியுமா….. தங்க சரிகை இழைகளால நெய்யப்பட்ட சல்லாத்துணியைத் தேவதை பூமியில விரிச்சு விட்டுடுவா. அதான் பகல்…….”

துளசி கதை சொன்னாள். அவளின் கதைகள் வெண்ணிலாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.

“மேல வட்டமா ஒண்ணுத் தெரியுதே….. அதுக்குப் பேரு என்னவாம்?”

வெண்ணிலா குறும்புடன் கேட்டாள். துளசி அசரவில்லை.

“அது சூரியத்தட்டுக்கா. தங்கத்தால  செஞ்ச தட்டு. நைட்டு தெரியுறது வெள்ளியில செஞ்ச நெலாத்தட்டு.”

ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவளின் கற்பனைத்திறன் வெண்ணிலாவை அவளிடம் கதைகள் கேட்கத் தூண்டியது. ஆரம்பத்தில் அவளுக்கு இந்த கிராமத்துக்கு வரவேப்பிடிக்கவில்லை.

“சிட்டியில பரபரப்பா வாழ்ந்துட்டு அங்கே போய் கட்டி போட்டாப்ல இருக்கிறது ரொம்ப போரடிக்கும்”  என்று அவள் முனகியதை கண்ணன் காதில் வாங்கவில்லை.

சிறிய திண்ணையோடு கூடிய அந்த வீட்டை வெண்ணிலா ஆச்சரியமாகப் பார்த்தாள்.  கொல்லையில், நீர் குடித்துப் பருத்திருந்த கல்வாழை செடியின் இலைகள் யானையின் காது மடல்களாய்  விரிந்திருந்ததைக் கண்டு அவளது புருவங்கள் உயர்ந்தன.

அவ்வப்போது தோன்றும் வானவில்லின் வண்ண இழைகள்,  தலையையும், முதுகையும் காட்டி குளத்து நீரில் நீந்தும் எருமைகள், கூரை மீதேறிக் கிடக்கும் சுரைக்காய்கள் என வெண்ணிலாவின் ஆச்சரியப் பட்டியல் நீண்டுகொண்டே போனது.

துளசி பள்ளிக்கூடம் விட்டதும் நேரே இங்கு வந்து விடுவாள். குழந்தைமையோடு கூடிய வறுமையின் தாக்கத்தால் ஏற்பட்ட முதிர்ச்சி அவள் முகத்தில் ஒட்டிக் கொண்டேயிருந்தது.

“இன்னிக்கு பள்ளிடத்துல என்னாச்சு தெரியுமாக்கா……. ”

சம்பவத்தின் மூலத்தில் கொஞ்சம் அப்படி, இப்படி சேர்த்து விவரணையாக எதையாவது சொல்வாள். கண்களில் நட்சத்திரங்கள் ஊறும். அன்றொரு நாள் அடித்துப் பெய்த மழையில் நனைந்து ஓடி வந்தவள் திண்ணையில் நின்று குரல் கொடுத்தாள்.

அக்கா…….வெளியில வாங்க……..”

வெண்ணிலா என்னவோ ஏதோவென்று அவசரமாக வெளியே வர, நனைந்து துலங்கிய கருங்கற்சிலையாய் துளசி நின்றிருந்தாள்.

“எதுக்குடி மழையில நனைஞ்சிக்கிட்டு  ஓடிவந்தே……?”

“மழையோட சில துளிகளை உங்களுக்காகப் பிடிச்சிட்டு வந்திருக்கேன்க்கா…..”

அவள் கண்களுருட்டி சொல்லிவிட்டுத் தன் கையிலிருந்த அந்த செம்பருத்திப் பூவைக் காட்டினாள். பூவின் இதழ்களில் முத்து, முத்தாய் நீர்த்துளிகள்.

“ரொம்ப புத்திசாலிடி நீ……”

“எனக்கு மழைன்னா ரொம்பப் பிடிக்கும். உங்களுக்குப் பிடிக்குமாக்கா…….?”

பற்கள் தந்தியடிக்க கைகளைக் கோர்த்துக் கும்பிடுவது போல் வைத்துக்கொண்டு கேட்டாள்.

“மழையை யாருக்குத்தான் பிடிக்காது. நீ மொதல்ல இந்தக் குடையை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போய் துணியை மாத்து.”

“அதெல்லாம் வேணாம்க்கா. நான் நனைஞ்சிகிட்டே ஓடிடுவேன்”  என்றவள் தாமரைக் குளத்துப் படிக்கட்டில் வந்து நின்றாள்.

குளத்து நீரில் துளிகள் விழுவது விரிந்து கிடக்கும் துணியில் பொத்தல்கள் விழுவதுபோல அவளுக்குத் தோன்றிற்று. அடுத்தநாள் அதைச் சொன்னபோது வெண்ணிலாவுக்கு வியப்பாக இருந்தது.

“வருங்காலத்துல நீ பெரிய எழுத்தாளரா வருவேடி.”

அவளுக்குப் புரியவில்லை. சடையின் நுனியில் முடிந்திருந்த சிவப்பு ரிப்பனைத் திருகியபடியே சிரித்தாள். எப்போதும் சிரிப்புதான். அகல் விளக்கின் சுடர் போல ஒளிர்விடும் கண்களும்,  கதை சொல்லும்போது அதில் தோன்றும் பாவங்களும்…..

“உனக்கு இந்தக் கதையெல்லாம் யாருடி சொல்லித் தர்றா…..?”

வந்த புதிதில் வெண்ணிலா தெரியாமல் கேட்டுவிட்டாள்.

“எனக்கு, நானே சொல்லிக்குவேன். அம்மாகிட்டசொன்னா,  பொழப்பத்தவ, போடின்னு விரட்டிவிட்டுடும். நீங்கதான் நான் சொல்றதைப் பொறுமையா கேட்கறீங்க. ரொம்ப நன்றிக்கா…..”

அவளின் தலையசைப்பில், மிளிரும் சிரிப்பில், உருளும் விழிகளில் குளிர்ந்த தன்மைக்கு ஒப்பான ஏதோ ஒன்று வெண்ணிலாவின் இதயத்தை வருடும்.

“நல்லா பேசறா, பழகறா. ஆனா எது குடுத்தாலும் வாங்கிக்கிறதில்ல”  என்ற வெண்ணிலாவின் புலம்பல்கள் கண்ணனுக்கு சலிப்புண்டாக்கின.

“வேண்டாம்னா விட்டுட வேண்டியதானே…..”

“அதெப்படி? சின்னப்புள்ள….. தீனிக்குப் பறக்கற வயசு. மனசை அடக்கி வச்சிக்குது. அதான் காரணம். இல்லேன்னா இந்த வயசுக்கு ஏதாவது குடுக்க மாட்டாங்களான்னு இருக்கும்.”

” அம்மா யார்கிட்டேயும், எதுவும் வாங்கித் தின்னக் கூடாதுன்னு சொல்லியிருக்குக்கா.”

துருவித் துருவிக் கேட்ட பிறகு காரணம் சொன்னாள்.

 

                  அன்று வெண்ணிலா பச்சைக்கல் நெக்லஸ் அணிந்து கொண்டிருந்தாள். திருமணத்துக்குப் பிறகு விசேஷம் எதற்கும் போகாததில் ஆபரணங்களின் மீதான ஏக்கம் அவளுக்கு கூடிப்போயிருந்தது. ஒன்றிரண்டு நகைகளை அவள் கையோடு எடுத்து வந்திருந்தாள். அன்றென்னவோ நெக்லஸ் போட்டுக்கொள்ள ஆசையாயிருந்தது.

“நெக்லஸ் சூப்பரா இருக்குக்கா” துளசி குதூகலித்தாள்.

பூ வேலைப்பாடுகளுக்கு நடுவில் பச்சை கற்கள் பதிக்கப்பட்டு, டாலரில்

பச்சைக்கற்களுக்கு மத்தியில் ஒரு பெரிய நீலக்கல் ஒளிர்ந்தது.

“இதோ வர்றேன்க்கா…..”

ஓடிச் சென்றவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்தாள். அவள் கழுத்தையொட்டி ஒரு கொடி சுற்றியிருந்தது. பச்சை வண்ண இலைகளின் நடுவில் நீல சங்குபபூ தொண்டைக்குழியில் கீழ்நோக்கி விரிந்திருந்தது.

“இதுவும், அதுவும் ஒரே மாதிரியில்ல…..?”

வெண்ணிலாவுக்கு வார்த்தைகள் எழும்பவில்லை.

“சதா இங்கேயும், அங்கேயும் அலைஞ்சிட்டேயிருக்கா. ஒரு நிமிசம் வீடடங்கி உட்கார்றதில்ல. பொட்டப்பிள்ளைக்கு அடக்கம் வேணாமா……..நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். கேட்க மாட்டேங்கற.  நீங்க எடுத்து சொல்லுங்க பாப்பா.” வெண்ணிலாவின் அம்மா புலம்பி விட்டுப் போனாள்.

“தாமரைக் குளத்துல ரெண்டு சிலை கண்டெடுத்திருக்காங்கக்கா. அதைப்போய் பார்த்தேன். அதுக்குதான் அம்மா என்னை ஏசுது.”

“அம்மா போகக் கூடாதுன்னு சொன்னா போகக்கூடாது. மீறிப் போனா அவங்களுக்கு கோபம் வருமில்லையா?”

“அதெப்படிக்கா. நம்மூர்ல சிலைக் கண்டெடுத்திருக்காங்க. அதை போட்டோ பிடிச்சு செல்போன்ல போடறாங்க. உலகமே பார்க்குது. நாம பார்க்கக் கூடாதா…….?”

அவள் சட்டையை மீறிய வளர்ச்சி அவளின் அம்மாவுக்குப் பயத்தை விளைவித்திருக்கலாம் என்று வெண்ணிலாவுக்குத் தோன்றியது.

“அதை விடுங்கக்கா. ரெண்டு சிலையும்  அவ்வளவு அழகு. ரெண்டும் பொம்பளை சாமி சிலைங்க. வரைஞ்சு வச்ச மாதிரி முகம். கண் இமை கூட தெளிவா தெரியற மாதிரி செதுக்கியிருக்காங்க. மூக்கு, உதடு, காது எல்லாம் சினிமா நடிகையோடது மாதிரி இருக்கு. அப்படி துல்லியமா செதுக்கியிருக்காங்க. நீங்க பார்த்தீங்கன்னா அசந்து போயிடுவீங்க.”

அவள் சொல்லிக்கொண்டே போனாள். அவள் கண்களில் அந்தச் சிலைகளின் படிமங்கள். ஒளிரும் கருமணிகளில் அவள் எப்போதும் காட்சிகளைத் தேக்கி வைத்திருப்பாள். கற்பனையும், மெய்யும் கலந்து கட்டிய காட்சிகள் வர்ணனைகளாக வெளிப்படும்போது ஒப்பனைகள் மிகுதியாயிருக்கும். ஆனால் திகட்டாது.

அன்றிரவு கண்ணன் வெளியில் சாணம் மெழுகிய தரையில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தான். அருகிலிருந்த படியில் சுவரில் சாய்ந்தபடி வெண்ணிலா.

“சாப்பிட்டாச்சாக்கா……?”

இருளில் பேச்சுக்குரல் கேட்டது. குழைந்த மை போன்ற இருள். அதைத் துளைத்து வெளிப்பட்ட துளசியின்மீது சீயக்காய் வாசம்.

“இப்பதான் குளிச்சியா…..?”

“ஆமாக்கா. தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சேன். ”

” முடி  காயலைன்னா காய்ச்சல் வந்துடும்டி. ”

“அதெல்லாம் காய்ஞ்சிடும்க்கா. அம்மா முடியில சீயக்காய் தேய்ச்சு படிக்கட்டுல வச்சு கசக்கி விட்டுடும். அப்படியே குளத்துல ரெண்டு முழுக்குப் போட்டு எந்திரிச்சா அழுக்கு போய் முடி இலவம்பஞ்சாட்டம் ஆயிடும்.”

அவள் சிரித்தபடியே அமர, செல்போன் ஒலித்தது. கண்ணன் எழுந்து உள்ளே போனான். துளசி முடிக்குள் விரல்களைக் கொடுத்துக் கோதி விட்டுக் கொண்டாள்.

“நீ சாப்பிட்டியா……?”

“அம்மா சோறாக்குது. ஆக்கி இறக்கினதும் சாப்பிட வேண்டியதுதான்”  என்றவள்,

“வானத்துல நட்சத்திரமேயில்ல. ஆனா கீழே பாருங்க. எவ்வளவு நட்சத்திரம் கொட்டிக்கிடக்குதுன்னு…..” என்று கை காட்டினாள். அருகிலிருந்த வேப்ப மரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்து கிடந்தன.

“உன் கற்பனைக்கு எல்லையே இல்லடி. பள்ளிக்கூடத்துல உன் தோழிகள் கிட்ட இப்படியெல்லாம் பேசுவியா……?”

“அவங்களுக்கு சினிமாக் கதைதான் பிடிக்கும். நான் சொல்றதைக் கேட்க மாட்டாளுங்க. நான் ஏதாவது சொன்னா எங்கம்மாவும் விளக்கமாறைத் தூக்கிக்கிட்டு ஓடியாரும். உங்களுக்கு மட்டுந்தான் நான் பேசுறது பிடிச்சிருக்கு. ”

அவள்  சொல்லிவிட்டு எழுந்து நின்றாள்.

“அம்மா  இந்நேரம் சோறாக்கியிருக்கும். நான் போயிட்டு வர்றேன்க்கா.”

ஓடிவிட்டாள். சட்டென்று பறந்து மறையும் வண்ணத்துப்பூச்சியின் லாவகத்தன்மையை ஒத்திருந்தது அவளது ஓட்டம்.

“இந்தப் பூ, பட்டாம்பூச்சி, வானவில் இதையெல்லாம் பார்க்கறப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. ஏன்க்கா……?”

துளசி ஒருநாள் கேட்க, வெண்ணிலா உதட்டைப் பிதுக்கினாள்.

“நாம அதையெல்லாம் கண்ணால மட்டும் பார்க்கறது இல்லக்கா. மனசால ரசிக்கிறோம். சந்தோசத்தை உணர்றது அந்த மனசு தானே…..?”

கண்களை சிமிட்டி அவள் கேட்டபோது வெண்ணிலா கை தட்டினாள்.

“இப்படித்தான் பாப்பா புரியாத மாதிரி பேசறா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ”

அம்மா கவலைப்பட்டாள்.

“துளசி புத்திசாலி. அவளைப்பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். ”

“என்னமோ நீங்க சொல்றீங்க. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கிற பிள்ளைகளுக்கே விடிவுகாலம் வர மாட்டேங்குது. இது தாம், தூமுன்னு நிக்குது. புரியாத எழவெல்லாம் பேசுது. என்னா கதிக்குப் போகப்போகுதோ…..”

அவள் புலம்பியபடியே சென்றாள்.

” அம்மாவுக்கு, அப்பா மேல கோபம். பொழுதனிக்கும் குடிச்சிட்டு ரகளை பண்ற மனுசரை யாருக்குத்தான் பிடிக்கும். அதோட நானும் இந்த மாதிரி இருக்கேனா…..அதனால மனசு வெறுத்துப் போச்சு.”

துளசி சொல்லிவிட்டு அமைதியானாள்.

துளசியின் மேல் சுட்ட பலாக்கொட்டையின் வாசமடித்தது. பாவாடையில் மலர்ந்த பூக்களோடு அவள் நின்றிருந்தாள்.

“நம்மூர் அண்ணாச்சி கடையில அம்மா வாங்கித் தந்துச்சிக்கா. ” அவள் பாவாடையைப் பெருமிதமாகப் பார்த்துக்கொண்டாள்

“கலர், கலரா பூ போட்டு இருக்கு. உனக்கு ரொம்ப அழகா இருக்குடி….”

“நானே பார்த்து எடுத்தேன்க்கா. முன்னூறு  ரூபாய். தையக்கூலி  நூத்தியம்பது. மொத்தம்  ஐநூறு  ஆச்சு.”

அவள்  கண்கள்  விரிந்தன. வெண்ணிலா  தனக்காக  வாங்கி  வைத்திருந்த  மல்லிகைச்  சரத்தை  அவளுக்குச்  சூட்டிவிட்டாள்.

“நானே  ஒரு  பூந்தோட்டம்  மாதிரி  இருக்கேன்.  தலை, உடம்பெல்லாம்  பூப்பூவா  பூத்திருக்கு. வண்டுங்க  என்னைச்  சுத்தி  வரப்போவுதுங்க.”

அவள்  சந்தோஷமாகச் சொல்லிவிட்டு  ஓடினாள். மறுநாள்  துளசி  வரவில்லை. பள்ளிக்கூடம்  போகும்போது  ஒருமுறை  குரல்  கொடுத்துவிட்டுப்  போவாள். திரும்பிவரும்போதும்  புத்தகப்பையோடு  நேரே  இங்குவந்து  கதையளந்துவிட்டு  கிளம்புவாள்.

அன்றென்னவோ  வரவேயில்லை. வெண்ணிலா  தெருமுனையிலிருந்த  அவள்  வீட்டுக்குச்  சென்றபோது  உள்ளே  நிறைந்த  கண்களோடு  துளசி அமர்ந்திருந்தாள். துளசியின்  அம்மா  அவளைக்  கண்டதும்  ஓவென்று  அழுதாள்.

“புதுப்  பாவாடையைப்  போட்டுக்கிட்டு  ஐயனார்  கோயில்  பக்கமா  போனவளை  அங்கே  நின்ன  ஒருபய  பேச்சு  குடுத்து……இவதான் எல்லார்கிட்டேயும் நல்லாப் பேசுவாளே…..அதை சாக்கா வச்சிக்கிட்டு  ஏதேதோ பேசி கோவிலுக்குப்  பின்பக்கம்  கூட்டிட்டுப்  போய்  கண்ட, கண்ட  இடத்துல  தொட்டு…….” வெண்ணிலாவுக்கு  அதிர்ச்சியாக  இருந்தது.

“இது  மட்டும்  ஊருக்குத்  தெரிஞ்சா  கண்ணு, காது, மூக்கு  வச்சு  பெரிசாக்கிடுவாங்க  பாப்பா.”

அம்மா   தழுதழுத்தாள்.

துளசி  சுருண்டு  படுத்துக்கொண்டாள். அருகில் சிறகுகள்  இரண்டு  முறிந்து  கிடந்தது போல் வெண்ணிலாவுக்குத் தோன்றியது.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. கிருத்திகா அவர்கள் சிறுகதை ‘முறிந்த சிறகுகள்’ படித்து முடித்த பிறகு இனி துளசி எனும் பறவை பறப்பதெப்படி? மனசு கனத்தது.

    -தஞ்சிகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button