கட்டுரைகள்
Trending

ஒளிரும் ஆலமரம் – முன் கதைச் சுருக்கம்

டோட்டோ

“நான் பள்ளிக்குப்  போயிருந்தாலும்,  பள்ளிப்படிப்பை ஒரு நாளும் படித்ததுமில்லை, பள்ளியில் சொல்லப்பட்ட எதுவுமே எனக்குப்  புரிந்ததுமில்லை. மேலும், கல்வி என் வாழ்வின் ஒரு அங்கமாக, எப்போதும் இருந்ததில்லை.  சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் இதுவரை எந்தப்  பரிட்சையிலுமே பாசானதேயில்லை . கடைசியாக, நான் எழுதிய ஃபிலிம் இன்ஸ்டியுட் பரீட்சை உள்பட,” இதைச்  சொன்னவர் இந்தியாவின் பெருமைமிகு ஒளிப்பதிவாளர் திரு.பி.சி.ஸ்ரீராம். இளமையில் மிகவும் அகச் சிக்கல்களுக்குள்ளான காலகட்டங்கள் அவருக்கு வாய்த்திருக்கிறது. வீட்டில் இவரால் கவலை, பள்ளியிலும் அதே நிலை என்பதாகத் தான் இவரது இளமைக்காலம் இருந்திருக்கிறது.  அவரின் தாய் வழி சொந்தத்தில் ஒரு பெண் எழுத்தாளர் இருந்ததும், அவர் வீட்டுக்கு சிறு வயதில் போய் வந்ததும் தவிர, அவர்  குடும்பத்துக்கும், கலைக்கும் எந்தவித  முன் தொடர்பும் இருந்ததில்லை. படிப்பில் சுத்தமாக கவனம் செலுத்த முடியாததால் ,அவரின் தந்தை ஒரு முறை இவர் தான் அந்தக் குடும்பத்தின் மிகப் பெரிய அவமானம் என்றி சொல்லியிருக்கிறார். குடும்பத்தில், அனைவரும் படித்து பெரிய பதவியில் இருப்பதால் அவரின் தந்தையின் வருத்தத்தை அவரால் புரிந்துகொள்ள முடிந்ததே தவிர படிக்க முடியவில்லை. அந்நாட்களில் அவரின் தாய் மட்டும் இவரை சரியாக மதித்து இவருடன் நிறைய பேசி இவருக்காக பல டாக்டர்களுடன் உரையாடி அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்களையெல்லாம் இவருக்கு படித்தும் காட்டியிருக்கிறார்.

அவரின் தாத்தா ஒரு தோட்டக்கலை நிபுணர் – தொழில் தொடர்பாகப் புகைப்படங்கள் எடுக்கும் ஒரு காமிராவை, பள்ளியில் படிக்கும் (அல்லது போய்வந்த)  போது  முதன் முதலாக அவரிடமிருந்து பெற்றிருக்கிறார் ( திரை மேதை ஸ்டான்லி குப்ரிக் வாழ்வையும் இப்படி கிடைத்த ஒரு காமிராவே மடை மாற்றியது). அதுவரை எது தனக்கு சந்தோஷமும் திருப்தியும் தருமெனத் தெரியாமலிருந்த, அவருக்கு காமிரா மற்றுமொரு புது உலகைத்  திறந்து  காட்டியிருக்கிறது.  தனியாகச்  செய்ய வேண்டிய கலை என்கிற காரணத்தாலும், அவரை  புகைப்படமெடுப்பதும் அது உருப்பெறும் விதம் தரும் மாயமும்  பெரிதும் ஈர்த்திருக்கிறது. அந்த வயதில் தொடர்ந்து தனக்குள்ளே அவர் சொல்லிக்கொண்டதெல்லாம், “நிலவை, இரவை, மேலும் கனவுகளையும் படம் பிடிக்க வேண்டும்” என்பதே. அவர் மனம் பயணித்த திசையில்லா பெருவெளியில் காமிராவில் தனக்கு தோன்றியவற்றை எல்லாம் மணிக்கணக்கில் படம்பிடிப்பதும், நிறைய பயணம் செய்யவேண்டும் என்கிற எண்ணமும் அவரை மேலும் முன்னோக்கித்  தள்ளிக்கொண்டே இருந்திருக்கிறது. பயணத்திற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதிக்காகவே அவர், அந்நாளில் யாரும் அதிகம் சேர விரும்பாத  திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார்.  இளமைக்காலங்களில், இவருக்கு இருந்த ஒரே திரைப்படத் தொடர்பு என்பது இவரின் வீட்டிற்குப் பின்னால் இருந்த வீனஸ் ஸ்டுடியோ வளாகம் மட்டுமே. அங்கே அமர்ந்து, மணிக்கணக்கில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்திருக்கிறார். பின்னாளில் இவரே “நாயகன்” திரைப்படத்திற்காக வீனஸ் ஸ்டுடியோவில் வேலை பார்த்த உணர்வையும் தொடர்புப்படுத்தி அந்த மாற்றங்களையும் ரசித்திருக்கிறார்.   திரைப்படக் கல்லூரியே அவரின் வாழ்வின் புதுப் பக்கங்களைத்   திறந்து விட்டிருக்கிறது. வாழ்வில் எதையோ தேடியபடி அங்கு தான் நிறைய பார்க்கவும், படிக்கவும் செய்திருக்கிறார்.

 

கல்லூரியில் அவர் பார்த்த பிரென்ச் திரைப்படமான, “தி 400 ப்ளோஸ்” மிகவும் பாதித்திருக்கிறது. அப்படத்தில் அகச்சிக்கலுடன் வரும் சிறுவனின் வாழ்வும் தன்னைப் போல் இருந்ததால் இந்தப் படத்தை மட்டும் பல முறை பார்த்திருக்கிறார்.  அதன் பிறகு இவர் பார்த்த வெவ்வேறு மொழிப்  படங்கள் அவரின் பயணத்திற்கு மேலும் அர்த்தம் சேர்த்திருக்கின்றன. தன்னை அதிகம் பாதித்த படங்களாக இவர் குறிப்பிடுவது, “ஆல் தி ஜாஸ்”, “உட்ஸ்டாக்”, “ஒன் ஃப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட்”. தமிழில் “அந்த நாள் ” மற்றும் ஆரம்ப கால சிவாஜி திரைப்படங்கள், பெங்காலியில்   “சின்னமுல்”, “கல்பனா”, “ககஸ் கே  ஃபூல்” ஆகிய படங்களை.

இவருக்கும் இயக்குனர் மணிரத்னத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஸ்ரீராமும் யாரிடமும் உதவியாளராக வேலை பார்த்தது கிடையாது. கல்லூரி விடுமுறைக்  காலங்களில், சத்யா ஸ்டுடியோவில் நிறைய இருந்திருக்கிறார். ஒரே ஒரு முறை, படப்பிடிப்பு குழுவினரோடு மதுரை, சேலம் என ஒரு மாதத்திற்கு மேல் பயணித்து எதோ ஒரு படத்தில் நாலாவது உதவியாளராக சம்பளமில்லாமல் வேலை பார்த்தது மட்டுமே நடந்திருக்கிறது.

கல்லூரி முடித்ததும் , இவரின் முதல் முயற்சி என்பது பெங்களூருவில் ஒரு 16 எம் எம்  குறும்படம் நண்பர்களுடன் சேர்ந்து  எடுத்தது தான். அதுவும் கொஞ்சம் பிலிம் வைத்துக்கொண்டு ஊருக்கு வெளியே ஒரு கிராமத்தில் தங்கிக் கொண்டு, கிடைத்த ஒரு வேளை சாப்பாடு மட்டும் சாப்பிட்டு ,  வெறும் எம்.ஜி. ரோட்டில் வைத்து 2 வாரங்களில்  எடுக்கப்பட்ட படம் அது. இவரின் முதல் படமாக அறியப்படுவது, இயக்குனர் மௌலியின் இயக்கத்தில் 1981 ல் வெளிவந்த “வா இந்தப் பக்கம்” திரைப்படம் – ஒரு படுக்கையறை வெளிச்சத்தில் வரும் காதல் பாடலின் ஒளிப்பதிவும், கவிஞர் வைரமுத்துவின் பிரமாதமான வரிகளும் [ வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே ],   இசையமைப்பாளர் ஷியாமின் இசையில் “ஆனந்த தாகம்” என்கிற அபாரமான  பாடலும் எனக்  கலந்திருந்தது அந்தத்  திரைப்படம். பின்னர், 1982 இல் மீண்டும் இயக்குனர் மௌலியின் இயக்கத்தில் “ஒரு வாரிசு உருவாகிறது” மற்றும் “நன்றி மீண்டும் வருக” படங்களையும் அவர் ஒளிப்பதிவு செய்தார்.  இன்னொரு தகவலும் இங்கே பார்க்கலாம். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஆம்.  நன்றி மீண்டும் வருக படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகனுக்கு கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி அறிவுரை சொல்வதாக, ரஜினி, நடிகர் ரஜினியாகவே வருவார். இந்த மூன்று படங்களுமே  ஓடி இருந்தாலும்  ஸ்ரீராம் அவர்களுக்கு படங்கள் ஒளிப்பதிவு  செய்வதில் திருப்தி வரவில்லை. திரும்பவும் 3 வருடங்களில் வேலை செய்யாமல் தன்னை  தனிமைப் படுத்திக் கொண்டு இருந்திருக்கிறார்.

பின்னர் 1985 இல் பிரதாப் போத்தன் இயக்கிய, “மீண்டும் ஒரு காதல் கதை” படத்தில் இவருக்குப் பிடித்த மாதிரி வேலை பார்க்கிறார். அந்தப் படம் தேசிய விருதும் வாங்கியது. இந்தப் படத்தை பள்ளிக் காலங்களில் பார்த்துவிட்டு இந்தப் படத்தில் பாதிரியாராக வரும் சாருஹாசன் பேசும், “உலகம் உருண்டை லட்டு உருண்டை ” வசனம் பள்ளி வகுப்புகளில் பேசி சிரித்திருக்கிறோம். மேலும், அதில் வரும் “அதிகாலை  நேரமே” பாடலும் கேட்டிருக்கிறோம். இந்தப் படம் இயக்குனர் பாசில் கண்ணில் பட, இவரை “பூவே பூச்சூடவா” படத்திற்கு ஒப்பந்தம் செய்தார். அந்தப் படம் பார்த்தே இயக்குனர் மணிரத்னம் இவரை “மௌன ராகம்” படத்தில் ஒப்பந்தம் செய்தார். தான் சிறு வயதில் எடுத்த ஒவ்வொரு புகைப்படமும் இவருக்கு ஒளிப்பதிவில்  உதவியிருக்கிறது. அவருடன் பணிபுரிந்த இயக்குனர்களும், இவரின் புகைப்படங்கள் போன்றே காட்சியும் வைத்திருக்கிறார்கள். (மௌன ராகம் ஆரம்பக்  காட்சியில் திவ்யாவை  பெண் பார்க்கும் முன்னர் முகம் கழுவும் போது, வாஷ் பேசின் உள்ளேயிருந்து ஒளி வரும் காட்சி ஒரு உதாரணம். மௌன ராகம் வெளி வந்த பின்னர் நடந்தது எல்லாம் சரித்திரம்.  நானும், என் பள்ளித் தோழன் மதனும், “இதயத்தை திருடாதே” படத்தை இவருக்காகவே 2 முறை பார்த்த சரித்திரக் குறிப்பு உட்பட ). திரைப்பட டைட்டிலில் ஒளிப்பதிவு பெயர் போடும்போது,  கைத்தட்டல் வாங்கியதும், என் நினைவில் இவர் ஒருவரே.

 

தலைப்பில் இவரைப் பற்றி ஏன் ஆலமரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது? காரணம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் அதிக எண்ணிக்கையில் கிளை கிளையாக இயக்குனர்கள் வெளிவந்தது இயக்குனர் பாரதிராஜாவிடம் மட்டுமே. ஆனால், அதைவிட  ஒளிப்பதிவில் இவரிடமிருந்து அலை அலையாக சீடர்களாக வந்தவர்களைப்  பற்றி பார்ப்போம். யாரையும் தன் உதவியாளராகப் பார்க்காமல், குருவாக நடந்து கொள்ளாமல்  சக பயணியாகவே பார்த்தும் நடத்தியும் இருக்கிறார். ஒளிப்பதிவாளர் இயக்குனர் செழியனின் “பேசும் படம்” புத்தகத்தில் இவரைப் பற்றிய விரிவான அனுபவங்கள் படிக்கக் கிடைக்கின்றன.

அமரர் ஜீவா [ காதலன், இந்தியன் ], திரு [ ஹே ராம், பேட்டை ], வேல்ராஜ் [ பொல்லாதவன் முதல் அசுரன் வரை ], ஒய்.என்.முரளி [ சத்ரியன் ], செழியன் [ கல்லூரி, பரதேசி ], ராம்ஜி [ டும் டும் டும் , பருத்தி வீரன் ], எஸ்.ஆர்.கதிர் [ சுப்ரமணியபுரம் ], எம்.எஸ்.பிரபு [ மகாநதி ], அர்விந்த் கிருஷ்ணா [ புதுப்பேட்டை ], கே.வி.ஆனந்த் [ காதல் தேசம், சிவாஜி ], மகேஷ் முத்துசுவாமி [ சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ], த்வாரகநாத் [ ஆட்டோகிராப் ], ரமேஷ் பாபு [ வீடே – தெலுங்கு ], அர்ஜுன் ஜென்னா [ காதல் வைரஸ்], ப்ரீத்தா [ அபியும் நானும் ], பவுசியா [ மித்ர் ], சாபு ஜேம்ஸ் [ சந்திராயன் ],  பாலசுப்ரமணியம் [ பிதாமகன், நீர்ப்பறவை ], என்.கே.ஏகாம்பரம் [ ஈ, அருவம் ] என இந்த ஒளிப் பரம்பரைப்  பட்டியல் ஒரு பகுதி  மட்டுமே இவரின் உதவியாளர்களின் உதவியாளர்கள் என விரியும் பட்டியலை ரசிகர்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.

காலம் மகத்தான சக்தி கொண்டது.  கல்விப்படிப்பில் நாட்டமில்லாத ஒரு கரிக்குள்ளேயிருந்து ஒரு ஒளிப்பதிவு  மேதை என்னும் வைரத்தைக்  கொண்டு வந்தது காலமென்னும் காட்டாறு மட்டுமே.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button