இணைய இதழ் 118தொடர்கள்

நான் – ஒரு போஹேமியன் பயணி; 6 – காயத்ரி சுவாமிநாதன்

தொடர் | வாசகசாலை

“கல் தூண்கள் சொன்ன கதைகள்”

சூரியன்  இன்னும் முழுதாய் விழிக்காத நேரம். சில தினங்களுக்கு முன்பு, மனம் குளிர்ந்த மழைப் பொழிவோடு தெய்வ அருளால் சூழப்பட்ட ஓர் அதிசயப் பயணம் நிகழ்ந்தது. காலையிலே என் பாதங்கள் சிக்கல் முருகன் திருத்தலத்தின் மண் மணக்கும் வாசலில் பதிந்தன. காற்றில் ஒரு பழைய தெய்வ வாசனை, மணி ஓசையோடு கலந்து வந்தது.


கோவிலின் கம்பீரமான கோபுரம், காலத்தின் கதை சொல்லும் ஒரு சின்னம் போல நெடிதுயர்ந்து நின்றது. மழைத்துளிகள் என் முகத்தைக் குளிரச் செய்தபோது, உள்ளம் பக்தியால் நிரம்பியிருந்தது. கோவில் சுவற்றில் ஒட்டியிருந்த மலர் வாசனை கூட ஒரு ஆசிர்வாதம் போல் எங்கும் கமழ்ந்து கொண்டிருந்தது. பிள்ளையாரும் முருகனும் ஒரே வீட்டில் உறவாடும் அந்த ஆன்மீகச் சிக்கல் ஆலயம் இதயத்தையும் கேள்விகளால் நிரப்பியது.

சிக்கல் முருகன் கோவில் வாசலில் அமர்ந்திருந்தார் அந்தத் தாத்தா. கையில் நூல், கண்களில் அமைதி, மழைத்துளிகள் விழுந்தும், அவரின் மனம் அசையவில்லை. அவரின் முகத்தில் ஆண்டுகளின் அனுபவம், ஆன்மீகத்தின் ஒளி என காட்சி தந்தது. அவருக்குப் பின்னால் சைக்கிள், முன்னால் வாழ்க்கையின் எளிமை. அவரைப் பார்த்த போது சட்டென்று தோன்றியது, இதுதான் உண்மையான தியானம், இதுதான் வாழ்க்கையின் சாந்தம்.

கல் தூண்கள் வரிசையாக நிற்கும் அந்த மண்டபம் நேரத்தை அப்படியே உறையச் செய்வது போலக் காட்சியளித்தது. அதன் ஒவ்வொரு தூணும் பல்லாண்டு பழமையைச் சுமந்து கொண்டு, தெய்வீக நாதங்களின் எதிரொலியை இன்னும் தமக்குள்ள தாங்கிக் கிடக்கிறது.

“தில்லானா மோகனாம்பாள்” படத்தின் காட்சிகள் இங்கேதான் உயிர் பெற்றன. அந்த கால சினிமா ஒளி இன்னும் காற்றில் கலந்திருப்பது போல ஒரு கணம் தோன்றியது. நான் கேமிரா வழியாக பார்த்த அந்த நொடியில் காலமும் காட்சியும் ஒன்றானது. அந்த இருண்ட வெளிச்சத்தில் தூண்களின் நிழல் ஒரு புனிதமான தியானம் மாதிரி இருந்தது. மழை வாசமும் நெய் விளக்கின் மணமும் கலந்து அந்த தருணம் ஒரு அமைதியான யாத்திரை போல இருந்தது. இந்த மண்டபம் பேசாமலே வரலாற்றைச் சொல்கிறது. ஒவ்வொரு கல்லும் ஒரு பாடல், ஒவ்வொரு நிழலும் ஒரு கதை!

சுவர்கள் மஞ்சள் நிறத்தில் ஒளிர, அதன் மேல் பசுங்கழை படர்ந்த குவியல்கள் காலத்தின் சாட்சியாய் நிற்கின்றன. ஓவியங்களும் சுவர்களும் சேர்ந்து ஒரு தெய்வீகக் கதை சொல்கின்றன. மௌனமாக இருந்தாலும் அந்த இடம் தன் வரலாற்றை நிமிர்ந்து பேசுகிறது.

***

என் நினைவின் இரு காலங்கள்

என் சிறுவயது நாட்களில் ஒரு பளபளக்கும் மழைக்காலம். பள்ளியில் சுற்றுலா அழைத்துக் கொண்டு போனார்கள். அந்த சுற்றுலா நாள் எங்களுக்கு ஒரு பெரும் திருவிழாவாக இருந்தது. பைகள் நனைந்து, இதயங்கள் குதூகலமாய், பேருந்தின் ஜன்னலில் இருந்த மழைத்துளிகளைத் தொட்டு விளையாடியபடி சிரித்து மகிழ்ந்தோம். குரல்களின் ஓயாத சலசலப்புடன் வேளாங்கண்ணிக்கு பயணம் செய்தோம். என்னுடைய நண்பர்கள் எல்லோரும் என்னுடன் இருந்தனர் (சுஜீப்ரியா, ராஜ் விக்னேஷ்) “இரண்டு இரண்டு பேராக கையப் பிடிச்சிட்டு போங்க” என்று ஆசிரியர் சொன்ன நினைவு இன்னும் மனதில் நின்றிருக்கிறது. இப்போது நான் ஒரு தேசாந்திரியாக மீண்டும் அதே மாதாவின் வாசலை அடைந்தபோது, அந்தக் காலமும் இக் காலமும் ஒரே புள்ளியில் கலந்தன.


அதன் பின், கடல் சின்னத்தைப் போன்ற வெள்ளை மினுமினுப்போடு நிற்கும் வேளாங்கண்ணி ஆலயத்தை அடைந்தேன். மழைத்துளிகள் ஆலயத்தின் ஜன்னல்களை விடாமல் தட்டியவாறே  விழுந்தன. தேவமாதாவின் சிலை மீது விழுந்த ஒவ்வொருத் துளியும், மண்ணின் துயரங்களைப் போக்கும் ஆசிர்வாதமாக உணர்ந்தேன். மக்கள் கூட்டத்தில் ஒலிக்கும் ஜெபத்தின் குரல், கடல் அலையோசையோடு கலந்து ஒரு தெய்வீக ராகம் போல ஒலித்தது.


வேளாங்கண்ணி ஆலயத்திற்குள் நுழைந்ததும், அந்தப் பெரும் கூட்டத்தின் மத்தியில் நான் என் பாதங்களை முன்னோக்கிப்  பதித்தேன். அற்புதம் என்னவெனில், அந்த கூட்டம் மெல்ல நகர்ந்து எனக்கான வழியை தானாகவே அளித்தது.

நான் நேராக இயேசுநாதரை நோக்கிச்  சென்றேன். அவர் மீது எப்போதும் எனக்கு பரிமாணமற்ற ஒரு பார்வை இருந்தது. மனிதர்களால் தோன்றாத ஆன்மீக மெல்லிசைப் போல ஒரு நட்பு அது. மிகச் சிறிய வயதில் நான் ஒரு கிறிஸ்துவ பள்ளியில் படித்தவள். என் நடைபாதையில் அவர் எப்போதும் என்னுடன் இருந்தார். நானும் அவரின் இருப்பை உள்ளத்தால் உணர்ந்தேன். பிறகு ஒரு கிறிஸ்துவக் குடும்பம் அவர்கள் வீட்டு பெண்ணாக என்னைத் தத்தெடுத்துக் கொண்டனர். இப்போது அவர்கள் தூத்துக்குடியில் வசிக்கின்றனர். இந்த நேரத்தில் என்னுடைய டிமோதி அப்பா, வசந்தி அம்மாவிற்கு நன்றிகள்.  பெரும் மழை பெய்தது. அந்த மழைத்துளிகளோடு நான் ஆலயத்திற்குள் நடந்துக் கொண்டிருந்தேன்.    

பிறகு, நான் வெளியில் வந்தபோது ஒரு பாட்டி கையில் பிச்சைப் பாத்திரத்தோடு அமைதியாக அமர்ந்திருந்தார். இயேசுநாதரின் அருளால் அவருக்கு வாழ்க்கை மாற்றம் நிகழ வேண்டும் என பிரார்த்தித்தேன். அதே நேரத்தில் அவருக்கும் என் ஆசீர்வாதத்தை மனதார அனுப்பினேன்.

என் அக்காவிற்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. முன்பு ஒருமுறை இந்த ஆலயத்தில் அதை வேண்டிக்கொண்டு ஒரு பெரிய மாதா சொரூபத்தை வாங்கி பரிசாக என் அக்காவிற்கு கொடுத்தேன். சில மாதங்களில் இயேசுநாதரின் அருளால் அவளது கனவு நனவாகியது. ஒரு பெண் குழந்தை பிறந்தாள். அவள் பெயர் “சஹானா”. நான் அந்த மகிழ்ச்சியை உளமார்ந்த நன்றியுடன் கொண்டாடினேன்.  அந்த இயற்கையின் அருளும், இயேசுநாதரின் மேன்மையும், என் உள்ளத்துடனே இணைந்தது. அங்கு நான் கண்ட அனுபவங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் முழுமையான நற்செயல் என்பதை முழுவதுமாக உணர்ந்தேன்.

வேளாங்கண்ணி திருத்தலம் வெளியில் நிற்கும் வெள்ளை இயேசுநாதர் சிலை யார் கண்ணில் இருந்தும் தப்பாது. கடற்கரையை நோக்கி நின்று, அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கும் முகபாவத்துடன் அச்சிலை திகழ்கிறது. தேசாந்திரிப் பார்வையில் பார்க்கும்போது, அது ஒரு அன்பின் சின்னம் போலத் தோன்றுகிறது. பல்வேறு மதத்தினரும், நம்பிக்கையுடன் வந்து மன அமைதி பெரும் இடமாக இந்த ஆலயம் உள்ளது. வெள்ளை நிறம் அமைதியினையும் புனிதத்தையும் குறிக்கும் ஒரு அடையாளமாக விளங்குகிறது. சூரிய ஒளியில் பிரகாசிக்கும் அந்தச் சிலை, நம்பிக்கையின் விளக்கேற்றி நிற்கிறது. தேசம் கடந்து வரும் யாத்திரிகர்கள் இதைப் பார்த்து உள்ளம் நிறைந்த நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறார்கள். வேளாங்கண்ணி வெள்ளை இயேசுநாதர்- உலக நம்பிக்கையின் உயிரான சின்னம்!

(தொடரும்)

gayathriswaminathan132@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button