இணைய இதழ்இணைய இதழ் 62சிறுகதைகள்

உடைப்பு – ந. சிவநேசன் 

சிறுகதை | வாசகசாலை

தொலைவிலிருக்கும் போதே ஓரளவு தெரிந்து விட்டிருந்தது அருகில் நெருங்க நெருங்க ஊர்ஜிதமானதில் மெலிதான அதிர்ச்சி பரவி, அவளது முந்தைய வாழ்வின் மீதான சலிப்புகளையும் மனக் குழப்பங்களையும் சற்று நேரம் ஒத்தி வைத்து, நிகழ் கணத்துக்குள் அவளை தாவச் சொல்லியது. பொட்டல் காட்டின் மையத்தில் நெளிந்தோடும் வற்றிய நல்லத்தி ஓடை ஆரியபாளையத்துக்கும் குடையனூருக்குமான மண்பாதையாய் இப்போது மாறிவிட்டிருக்க, நிழலற்ற மதியம் இரக்கமின்றி பாகுபதத்தில் வெயிலைக் காய்ச்சி ஊற்றியதில் அனல் காற்றில் அலையாடும் அந்த முகம் இன்னும் தெளிவாகப் புலனடையத் தொடங்க, இவள் மேன்மேலும் துணுக்குற்று வண்டியின் வேகம் அவளையும் அறியாமல் குறையத் தொடங்கியது.

சபரியை ரங்குச்செல்வியின் வீட்டில் விட்டுவிட்டு விளையாட்டுச் சாமான்களை இறைத்துவிட்டு வந்திருக்கிறாள். வீட்டுக்காரருக்குத் தெரியாமல் அவள் இரவல் தந்த எக்ஸெல் கடகடத்துக் கொண்டிருப்பதை செவிகள் விரும்பாத போதும், வேறு வழியற்று விரல்களில் அழுத்தம் தந்து அதிர்வை முடிந்த மட்டும் குறைத்துப் பயணிக்கிறவளை ஓடை தன்போக்கில் உள்ளிழுத்து, யாருமற்ற தனிமையின் மீது அதுவும் ஊர்ந்து கொண்டிருப்பதாகப் பட்ட உச்சிநேரத்தில்தான், அய்யனார் கோயில் தரையைத் தாண்டியதும் புன்னை நிழலில் எதிர்நோக்கி நிற்கும் அவளைப் பார்த்தாள். ஆறு வருடத்துக்கு முந்தைய துக்ககரமான நாளொன்றின் நினைவு பாரமாய் இறுகி அழுத்தியது. பார்வையை நேர் செலுத்திக் கடக்கத் துணிந்தும் குறுக்கே நீண்டு உதவி கேட்டு நடுங்கும் கரங்கள் இதற்கு முன் மண்ணை வாரித் தூற்றியபோது பார்த்தவைதான்.

தன் முகத்தை அடையாளம் கண்டால் அவளாகவே விலகிவிடுவாளென நினைத்து பிரேக்கை அழுத்தினாள். அவள் நினைத்தது போல் அல்லாமல் இடுங்கித் தளரிமை தொங்கி மறைக்கும் கண்களைச் சுருக்கி இவள் முகத்தில் பரிச்சயமானவர்களின் சுவடுகள் தெரிகிறதாவென ஒரு கணம் நிதானித்துப் பார்த்தவள் வண்டியின் பின்புறம் வந்து தடுமாறி ஏறியமர்ந்தாள்.

‘இரு சாமி.. எடுத்துப்புடாத’ என்றபடி சேலையைச் சுருட்டி கால்களுக்கிடையே சொருகியவளின் வாய் ‘எங்கயோ பாத்த மாதிரிதான் இருக்கு’ என உதிர்க்க இவளுக்கு திக்கென்றிருந்தது. நான்காவது முறையாக அடித்த போனை ஒரு கையில் வண்டியைச் சமாளித்தபடியே எடுத்துப் பார்த்தாள். திரும்பவும் அவன்தான். இயலாமையின் முள் குத்திய புண்ணில் இப்போது வக்கிரத்தின் ஈ அமர்ந்து கைகளைத் தேய்த்துக் கொண்டிருக்கிறது.

‘நீ எங்க போனாலும் தப்ப முடியாது தெரிஞ்சிக்க. நான் எப்பயாச்சும்தான் இங்க வருவேன் அப்ப மட்டும் தங்கிட்டுப் போறன்னுதான் சொல்றேன். நீ என்னடான்னா ஒண்ணுமே புரியாத மாதிரி நடிக்கிற?’ பற்களின் ஓரங்களில் பான்பராக் கறைகளோடு கச்சிதமற்ற மீசையை எக்காளமாய் திருகியவாறு அவன் உதிர்த்த சொற்கள் கழிவறை மூலைகளில் மழைக்கு அண்டியிருக்கும் அட்டைப்பூச்சிகளாக நெளிகின்றன. 

‘உங்கள அண்ணன் மாதிரிதான்னு எங்க வூட்டுக்காரரு சொன்னாரு. நீங்கலாம் இருக்கீங்கனுதான நான் தெம்பா இருக்கேன். ஆளில்லாத வூட்டுல பூந்து இப்படிலாம் பேசுனா நான் என்ன பண்றது’

‘இப்ப மட்டும் என்னா..? ஆதரவா இருக்கன்னுதான சொல்றன்.. அதனாலதான் உங்களுக்கு வட்டிக்காசு கூட நானே போட்டு கட்டிக்கிட்டு இருக்கேன். அண்ணன் கிண்ணன்லாம் சொல்லாத நல்லாயில்ல..’

இவள் வெளியே வந்து நின்றபிறகு வேறு வழியற்று அவனும் வெளியேறிப் போனான். உள்நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு உள்ளறையின் மரக்காலில் வெடித்தழுதபடி தலையை முட்டிக்கொண்டது இன்னமும் விண்விண்னென்று வலித்தது.அவன் இருளில் மிளிரும் பூனையின் கண்களோடு அவளையே கண்காணித்துக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. துளியும் இடமளிக்காமல் வெட்டிப் பேசி அனுப்பும் போதும் ஊரில் பேசத் தொடங்கிவிட்டார்கள். இவள் கடைசியாக சிறையில் சந்தித்தபோது வெறுக்கும் கண்களை ஏவி, ‘நீ பைனான்ஸ்காரன வச்சிகிட்டது எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா?’ என்றான் அவள் கணவன். எடுத்துப்போன மீன்குழம்பையும் சோற்று வாளியையும் சுவற்றில் வீசியெறிந்துவிட்டுத் திரும்பினாள்.

‘எங்கயோ பாத்த மாதிரி தான் இருக்குது’ பின்னாலிருந்து வந்த குரலில் மீண்டும் இயல்புக்கு வந்து வண்டியை குடப்பாறை இறக்கத்தில் இருபுறமும் கால்களை ஊன்றி ஊன்றி லாகவமாகச் செலுத்தினாள். கொஞ்சம் அசந்தாலும் நீரறித்து கூராக நீட்டிக் கொண்டிருக்கும் பாறைக்குச்சிகளில் விழச் செய்துவிடும் சரிவு அது. பத்திரமாக பிடித்துக் கொள்ளச் சொல்லலாமா என யோசித்துப் பின் சொல்லவில்லை.

கேள்விக்கு பதில் வராததால் தனக்குத்தானே, ‘இந்த பாப்பா என்னவோ பேச்சு குடுக்க மாட்டேங்குது’ என முணுமுணுத்து மீண்டும், ‘என்னா ஊரு கண்ணு நீயி?’ என்றாள் சத்தமாக. இந்த முறை ‘ஆரியபாளையம்’ என பதிலை உதிர்த்து எதிர்கேள்வி வருகிறதா என கூர்ந்து நோக்கினாள். கனத்த மௌனமொன்று பரவியது போலிருந்தது. எதுவும் பேசாமல் வண்டியைச் செலுத்தினாள். 

மணி மாமா உறுதியாகத் தருவதாகக் கூறியிருந்த சொற்களை எடுத்து கொஞ்சம் வலு சேர்த்துக் கொண்டாள். வட்டி இவரிடம் நூத்துக்கு மூன்று. அவனிடம் வாங்கியது நூத்துக்கு இரண்டு. ஒரு ரூபாய் அதிகமென்றாலும் உறங்கச் செல்லும் தெருவாசிகள் நின்று உன்னிப்பாக கவனிக்க ஏதுவாக ஒன்பது மணிக்கு மேல் தள்ளாடியபடி வந்து தண்ணீர் கேட்கவும், மீன் கறி சமைத்துத் தரச்சொல்லி பொட்டலத்தை நீட்டும் சாக்கில் கைகளைப் பற்றுவதும், நள்ளிரவில் போன் செய்து பேசாமல் இளித்துக் காட்டுவதுமான அணுகுமுறைகளிலிருந்து முதலில் தப்பிக்க வேண்டிய அவசரத்தில் இருந்ததால் வேறு வழியற்றுக் கிளம்பியிருக்கிறாள். வீட்டுப்பத்திரம் வண்டியின் முன்கொக்கியில் அலைவுக்குத் தகுந்தபடி ஆடிக் கொண்டிருந்தது.

அன்றைய நாளில் அவள் கணவன் நடுப்பகலில் குருதியுறைந்த கத்தியோடும் உடையோடும் வீதியில் வந்து கொண்டிருப்பதாக யாரோ கத்தியது கேட்டு கலக்கத்துடன் வெளியே ஓடிச்சென்று பார்த்தாள். திருமணமான முதல் நாளன்றோ, அன்றைய இரவில் இவளை முதன்முறையாக கட்டியணைத்தபோதோ, சபரி பிறந்தபோதோ கூட இல்லாதிருந்த பரவசமும் களிப்பும் இப்போது அவன் முகத்தில் பெருகி வழிந்து கொண்டிருந்தது. வீதியின் இருமருங்கிலும் நின்று பீதியோடு இவனை நோக்கும் உறவுகளை பெருமிதம் பொங்கப் பார்த்தவாறு காலரை தூக்கிவிட்டுக் கொண்டு இவன் நடந்து வந்திருந்தான். ‘ஐயோ என்னத்தயா பண்ணிட்டு வர்ற?’ எனக் கதறியழுதபடி பின்தொடர்ந்தவளை வீட்டுக்குள் நுழைந்ததும் கதவைச் சாத்தி ‘மூட்றி வாய’ என்று வெட்டுவது போலக் கத்தியை ஓங்கினான்.

‘அந்த சிறுக்கிக்கு என்னா அவ்வளவு அரிப்பு எடுத்துப் போய்டுச்சா.. சொல்லச் சொல்ல கேக்காம போனால்ல.. இப்ப சாவட்டும் ஓடுகாளி’ என்றபடி நசநசத்திருந்த சட்டையைக் கழட்டினான். இவளுக்கு யாரைச் சொல்கிறான் எனப் புரிந்தது. ஆரியபாளையத்தில் மூன்று தலைமுறையாக கரைக்காரராக இருக்கும் செல்லான் குடும்பத்தில் இவன் வகையறாவும் சேர்த்தி. செல்லானுடைய மகள் வேலைக்குப் போன இடத்தில் வேற்று சாதியைச் சேர்ந்த பையனை மணமுடித்துக் கொண்டதாக தகவல் பரவிய நாளில் ஊரே பரபரத்துக் கிடந்தது. ஒரு மாதமாக பங்காளிகளைக் கூட்டி இரவுதோறும் மாரியாயி கோயிலில் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. மணமுறிவு செய்து நம் பிள்ளையை கூட்டிவந்துவிடலாமென்று ஒரு சாராரும், அவளைத் தலை முழுகி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்ளலாமென இன்னொரு சாராரும் மாற்றி மாற்றி வாதம் செய்து கொண்டிருக்க, இவனும் மேற்குதெரு கிட்டு மாப்பிள்ளையும் மட்டும் அவர்களைக் கொன்று தீர்ப்பதென கூச்சலிடுவதாகப் பேச்சு அடிபட்டபோது இவளுக்கு பயம் பீறிட்டது. ஒவ்வொரு முறை இரவில் சட்டையணிந்து கோயிலை நோக்கிச் செல்லும் போதும் இவள், அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுவாள்.

‘வேணாம் சாமி வேணாம்.. நீ அதுங்கள கொல்றன்னு போயி என்னையும் எம் புள்ளையையும் அநாதயாக்கிட்டுப் போய்டாத..’ என பரிதவித்தவளை உதறிவிட்டு நேற்றிரவு போனவன் இப்போதுதான் திரும்பியிருக்கிறான். 

‘ஐயோ.. எம் பொழப்பு நாசமா போச்சே.. நான் இனிமே என்னா பண்ணுவேன் கடவுளே’ என தலையில் அடித்துக்கொண்டு அழுதவளை உதைப்பது போல் ஓடி வந்தான்.

‘அடச்சை.. இப்ப எதுக்குடி இளியற? நம்ம இனத்துக்காக புருசன் எப்பேர்ப்பட்ட பெருமையான காரியத்த செஞ்சிட்டு வந்துருக்கான்னு சந்தோசப்படுடி.. நாறமுண்ட..’ என கழுத்தைப் பிடித்து நெறித்தான்.

போனை எடுத்து ‘கிட்டு.. அண்ணன்கிட்ட சொல்லிடுடா.. சிறப்பா முடிச்சாச்சின்னு.. நம்ம புள்ளைய ஒண்ணும் பண்ணல.. தடுக்க வந்தா..கைல மட்டும் ஒரு வெட்டு விழுந்துடுச்சு.. அவனா.. அவன் காலி.. எடுத்தவுடனே போட்டேன் பாரு நடுமண்டைல.. அப்படியே சுருண்டுட்டான்’

அவன் குரலில் துளியேனும் பச்சாதாபமோ குற்ற உணர்ச்சியோ ஒரு மண்புழு போலவேனும் ஊர்கிறதா என உற்று நோக்கினாள். அப்படியெதுவுமற்ற அப்படியெதுவும் இருந்தாலுமே வெளியே தெரிந்துவிடாதபடி மறைத்த சுய கம்பீரத்தை வைத்து மெழுகிய பூச்சுக்குரல். போலீஸ் வந்து இவனை அழைத்துப்போனபோது அவனைத்தான் கைகாட்டிவிட்டுப் போனான். ‘கைச்செலவுக்கு வேணும்னா எங்கண்ணன் குடுப்பாருடி. வாங்கிக்க.. கேஸுலாம் அவரு நடத்திக்கிறேன்னு சொல்லிட்டாரு. நீ ஒண்ணும் கவலப்படாத.. எல்லாம் நான் வெளிய வந்ததும் வட்டியோட குடுத்துடலாம்’ என அவன் நகர்ந்து போன பிறகும் இவனது கைகள் அவள் கைகளை அழுந்தப் பற்றியிருந்தன. ‘உனக்கு என்னா வேணும்னாலும் என்கிட்ட கேளு..நான் பாத்துக்குறேன்..’ எனச் சிரித்தவனின் கறை பற்கள் இப்போது வரை குத்திக் கிழிப்பதாக அவள் உணர்கிறாள்.

‘உன்ன எங்கயோ பாத்துருக்கேன் கண்ணு.. ஞாபகம்தான் தப்பிப் போய்டுச்சு’ 

கல்லொன்றில் ஏறிய முன்சக்கரம் வண்டியை இடதும் வலதுமாக அசைத்துவிட, சட்டெனக் கைகளை இறுக்கி மணலுக்குள் புதைந்துவிடாத வலிமையோடு நேர் செலுத்தியவளின் காதில் மீண்டும் சொற்கள் அறைந்தன. ‘ஆனா, எங்க பாத்தன்னு நெனப்பு வரல. கண்ணு வேற இப்பலாம் சரியா தெரிய மாட்டேங்குது சாமி.. வயசாச்சுல்ல’ என்றவளின் சொற்களை மீண்டும் மறுதலித்து பதில் பேசாமல் வருவது இவளுக்கு சங்கடத்தை உண்டுபண்ணியது. சொற்கள் கடினப் பாறையை வெடித்துக் கிளம்பும் செடியாக அவளை மீறி வந்து விழுந்தன. 

‘கூட யாரையாச்சும் துணைக்கு கூட்டிக்கிட்டு வெளிய போகலாம்ல’ கழுத்தை லேசாக இடதுபக்கம் திருப்பி அவள் காதில் விழுமாறு சத்தமாக உதிர்த்தாள்.

‘யாரும் இல்ல எனக்கு. எல்லாரும் போய் சேந்துப் போனாங்க..’ நிறுத்திய மௌனத்தால் ஒரு துயரத்தை கைமாற்றிய திருப்தியோடு மீண்டும் தடுமாறிய குரல் வண்டியின் இரைச்சலை மீறி கானல் மொழியாய் இரைந்தது. ‘மவளும் மருமவனும் இருந்தாங்க சாமி. அவ எங்கூரு செட்டியார் கெணத்துமோட்டுல தடுக்கு பின்னறேன்னு சோவ ஊற வைக்கப்போயி என்னமோ சீவன் தீண்டிப்புடுச்சு. மருமவன் கருமந்துரைல கள்ளச்சாராயம் காய்ச்சி போலீஸு தொரத்தும்போது கெணத்துல வுழுந்து செத்தான். ஒத்த பேரப்புள்ள வச்சிருந்தேன். அதுவும் அந்த நொள்ளக்கண்ணு மாரியாயிக்கு பொறுக்கல சாமி…’ விசும்பலாக மாறிய அவள் சொற்களின் கொடுக்கு முன்னாலிருந்தவளின் பின்னங்கழுத்தில் காலத்தின் குரூர விடத்தை இறக்கிக் கொண்டிருந்தது.

‘வெள்ளாளகுண்டம் நூல்மில்லு வேலைக்கு போனவன் ஒரு வேற சாதி புள்ளய கூட்டிக்கிட்டு வந்துட்டான். அவனுங்களாம் மோசமானவனுவ சாமி.. நம்ம பொழைக்கிற பொழப்புக்கு இதல்லாம் வேணாம்முன்னு எவ்வளவோ கெஞ்சிப் பாத்தேன். இல்ல ஆயா.. எனக்கு இந்த புள்ளயத்தான் புடிச்சிருக்கு. நான் கட்டிக்கிறேன்னு சொன்னான். இந்தா.. புதூரு தாண்டுனதும் வட்டாத்து மேட்டுல முருகன் கோயிலு இருக்குது பாரு. அங்கதான் கூட்டிக்கிட்டு போயி மாலை மாத்தி வச்சேன். ஒரு மாசம் ஆனுச்சு ரெண்டும் நல்லாதான் அம்மா தெவசத்துக்கு பொடவத்துணி எடுத்துட்டு வர்றன்னு சேலம் போனுச்சுங்க. கடவீதில பைக்ல போகும்போது எங்கருந்து வந்தானோ பாவிமவன்.. அந்த புள்ளயோட சொந்தக்காரன்.. வந்து வெட்டி சாய்ச்சுபுட்டான்மா எம்பேரன..’

காது இரண்டும் அடைத்து தொண்டை கவ்வுவது போலிருந்ததில் வண்டியை நிறுத்திவிடலாமா என யோசித்தாள். சபரி நினைவுக்கு வந்தான். ரங்குச்செல்வி அவனுக்கு குடல் அப்பளம் பொறித்துத் தருவதாகச் சொல்லியிருந்தாள். தின்று முடித்ததும் மீண்டும் அழத் தொடங்கிவிடுவான். பேசாமல் இன்று பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியிருக்கலாம் எனத் தோன்றியது.ஏற்கனவே சுமக்கும் துயரங்களின் மீது மேலுமொன்றை அசுர பலத்தோடு இறக்கியது போல் முதுகில் இறங்கிக் கொண்டிருந்தன சொற்கள். 

யார் யாரோ வந்து தான் உடனிருப்பதாக சொல்லிப் போனதைப் போல உண்மையில் உடன் வரவில்லை. வெறும் ஆறுதலுரைப்பதே மருந்தாகிவிடுமென இவர்கள் எப்படிக் கருதுகிறார்கள்.. ‘அவ்வளவுதான் அத்தோடு உனக்கும் எனக்குமான கடமை முடிந்தது’ என்பதைப் போன்று உதவி கேட்டுச் செல்லும்போதெல்லாம் அசட்டுச்சிரிப்பை கைநிறைய அள்ளித் தந்து வழியனுப்பி வைப்பவர்களின் முகத்தில் கையறு நிலையில் தானிருக்கும் அவலத்தை பட்டவர்த்தனமாக உணர்த்திவிட்ட நிறைவு மிளிர்வதை பலமுறை பார்த்திருக்கிறாள். காவலர்கள் வந்து அழைத்துச் சென்ற நான்காவது நாளிலிருந்து இவள் தன்னை தெம்பூட்டிக் கொண்டு நடமாடத் தொடங்கியிருந்தாள். அன்றைய நாள் நன்றாக நினைவிருக்கிறது. 

‘இப்படி எம்பேரன சாச்சிபுட்டீங்களேடா பாவிங்களா.. நல்லா இருப்பீங்களா நீங்கலாம்.. அவன் உருப்பட மாட்டான்.. அவன் புள்ளயும் இதே மாதிரி கருகிப்போய்டும்.. அவம் பொண்டாட்டி நாசமாப் பூடுவா.. அவன் குடும்பம் குட்டிச்சுவரா பூடும்’ வாரியிறைத்த மணல் இவள் முகத்தில் வந்து விழுந்து தெறித்தது. யாரோ வற்புறுத்தி இழுக்க அவள் ஒப்பாரி பாடிக்கொண்டே வண்டியிலேறிப் போனாள். அவள் விதைத்த சாபத்தின் தீக்கங்குகள் ஆயுளை கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னும் கொடிய வாதையாய் சுற்றி வளைப்பதாக நேற்று கூடக் கருதினாள். ஆயினும் அவ்வாதை பின்தொடர்ந்து நெருங்கி தன் தலையைத் தொட்டுத் திருப்பி பல்லிளிக்குமென நினைக்காததன் இன்றைய பொழுதை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தாள். 

‘அன்னிக்கு என்னமோ அந்த வூட்டு முன்னாடி நின்னு அப்படியொரு சாபம் குடுத்துட்டேன். ஆனா, அவன் பண்ண தப்புக்கு அவன் பொண்டாட்டி புள்ளைங்க என்னா தப்பு பண்ணும். மறுநாளே போயி பச்சாயி கோயில்ல விழுந்து அழுதேன்.. எஞ்சாபத்த உருத்தெரியாம பொதைச்சிடு தாயின்னு.. என்னமோ போ..வாய் இருக்கமாட்டாம நான் பாட்டுக்கு பொலம்பிகிட்டு இருக்குறேன். ஆனா, எங்கயோ பாத்த மூஞ்சிதான் உனக்கு’

இதைவிடத் துயர் மிகுந்த நாளொன்றை இதற்குமுன் கடந்திடாதது போல அவளுக்கு வலித்தது. பைக்குள் வைத்த போன் மீண்டும் ஒலிக்க ஒரு கையால் எடுத்துப்பார்த்தாள்.‌ அவன்தான் மீண்டும் அழைத்திருக்கிறான். சேலை நுனி கால் வைக்கும் கம்பியில் மாட்டியதும் அவசரமாக சரளைக் கற்களின் மீது கால்களை ஊன்றி வண்டியை நிறுத்தினாள்.

‘அலோ.. என்னங்க உங்களுக்கு பிரச்சின?’

‘ஒண்ணும் பிரச்சினை இல்லயே. எங்கம்மா ஊருக்கு போயிருக்குன்னு உம்பையன்தான் சொன்னான். சொல்லியிருந்தா நானும் வந்துருப்பேன்ல…அதான் என்னா ஊருக்கு போனன்னு கேக்காலமுன்னு’

இவளுக்கு கருக்கென்றது. எதிர்முனையில் சபரி யாருடனோ பேசும் சத்தம் கேட்டதில் உள்ளுக்குள் ஆங்காரம் அதிகரித்தது. 

‘த்த்.. டேய்.. எம்பையன எதுக்குடா தூக்குன? அழிஞ்சிப் போகப்போறடா நீ.. என்ன வுட்டுத் தொலைய மாட்டியா?’ எதிர்முனையை காதில் வாங்காமல் அழுகை பொங்க வெடித்துக் கத்தத் தொடங்கினாள். 

‘அந்தக்காச மொத வேலையா உம்மூஞ்சில வீசியெறிஞ்சிட்டுத்தான்டா எனக்கு மறுவேல…எம்புள்ளய மரியாதையா இருந்த எடத்துல போய் விடலன்னா நடக்குறதே வேற..’ போனை அணைத்துவிட்டு விம்மியபடி வண்டியில் கைகளை ஊன்றித் திரும்பிப் பார்த்தாள். 

பின்கம்பியைப் பிடித்தபடி இறங்கி நின்றிருந்தவள் இவளுக்காக காத்திருந்தது போல தளர்ந்த நடையில் காலடியெடுத்து அருகில் வந்து கண்களை ஊன்றிப் பார்த்தாள். ஏதோ தீர்மானித்தவளாய் மடியில் கட்டியிருந்த சுருக்குப் பையைத் திறந்து கைநிறைய திருநீறை அள்ளி இவள் நெத்தியில் பூசினாள்.

‘என்னமோ பிரச்சின இருக்குது உனக்கு. என்னவா இருந்தாலும் இது வனமார்த்தாயி கோயில் விபூதி.. .நீ வேணாப் பாரு. எங்க சாமி ரொம்பத் துடியான சாமி.. எல்லாம் சரியாப் பூடும். கவலப்படாத நம்மள மாதிரி ஆளுங்களுக்குலாம் சாமிதான் துணையா நிக்கும். நான் வர்றன்..’ என்றபடி கிழக்கு பார்த்து நடக்கத் தொடங்கினாள். இவளுக்கு ஏதோவொரு துணிவு உடலிலும் மனதிலும் அரும்பியது போலிருந்தது. சத்தமாக ‘குடையனூருக்கு இன்னும் ரெண்டு மைல் போவணும்’ எனக் கத்தினாள்.

‘இல்ல தாயி. இங்க சம்பூத்து தாண்டி ராயமலைல எங்க பொறந்தவன் பேத்திய குடுத்துருக்கு.. நான் அவளப் போயி பாத்துட்டு காலம்பர போய்க்கிறேன். இந்நேரத்துக்கு போயி மட்டும் யாரு இருக்குறா எனக்கு? நீ மெதுவா போ சாமி.. ‘ என்றபடி கரையேறத் தொடங்கியவளை இவள் பார்த்தவாறே நின்றிருந்தாள். கலங்கிய கண்களில் தளும்பிய நீரை துடைத்தபோது புறங்கையில் திருநீறு கொட்டியது.

*******

nsivanesan1988@gmail.com – 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button