இணைய இதழ்இணைய இதழ் 50சிறுகதைகள்

நண்பனின் நண்பனுக்கு நடந்த கதை – இரா. சேவியர் ராஜதுரை

சிறுகதை | வாசகசாலை

ண்பனின் நண்பனுக்கு நடந்ததாகச் சொல்லி அந்தக் கதையை ரஞ்சித் கூற ஆரம்பித்த போது ஆறாவது ரவுண்டைக் கடந்திருந்தனர். பொதுவாக இப்படிச் சொல்ல ஆரம்பிக்கும் கதைகள் கம்பி கட்டும் கதைகளாகவே இருக்கும். அல்லது அதில் பாதி உண்மையே இருக்கும். மீதி சுவாரசியத்திற்காக சேர்த்துச் சொல்வது. அது எத்தனை ஆண்டுகள் பழகியவராக இருந்தாலும் சரி, என் ப்ரண்டோட ப்ரண்டுக்குனு ஆரம்பித்தாலே அதில் கொஞ்சமே கொஞ்சம்தான் உண்மை இருக்கும். பலநாள் பழகியவர் சொல்வதே இப்படி என்றால், ரஞ்சித்தை அன்றுதான் நான் முதன்முதலில் பார்த்தேன். அவன் சொல்வதில் உள்ள நம்பகத்தன்மை எப்படி இருக்கும்? நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை. இதற்கு முன்பு அவனிடம் முகநூலிலும் வாட்ஸப்பிலும் உரையாடியிருக்கிறேன். ரஞ்சித் என் கல்லூரிக்கால நெருங்கிய தோழனான அரவிந்த்தின் பள்ளித்தோழன். விடிந்தால் அரவிந்த்தின் கல்யாணம். கல்யாணம் செய்தால் உங்களுடைய நண்பர்கள் செட்டில் முதல் ஆளாக செய்துவிடுங்கள். அப்போதுதான் உங்கள் கல்யாணத்திற்கு உங்கள் நண்பர்கள் வருகையை உங்களால் எதிர்பார்க்க முடியும். நான்காவதாகவோ அல்லது ஐந்தாவதாகவோ செய்தீர்களென்றால் இதோ என்னைப் போல ஒரே ஒரு நண்பனைத்தான் உங்கள் திருமணத்தில் எதிர்பார்க்க முடியும். அரவிந்த்தின் பள்ளி நண்பர்கள் குழுவில் அவனுக்குத்தான் முதலில் திருமணம். அதனால்தான் இதோ இப்படி என்முன் இத்தனை பேர் அமர்ந்திருக்கிறார்கள். எல்லாருமே தஞ்சாவூராய் இருந்தாலும் வீட்டிற்கு செல்லாமல் ரூம் புக் செய்து சரக்கடிக்கும் திட்டத்தை அமல்படுத்தியிருந்தனர். என் கல்லூரி நண்பர்கள் குழுவில் நான் மட்டுந்தான் சென்றிருந்தேன். நான் சரக்கடிக்கமாட்டேன் என்பதால் தனியறை கேட்டிருந்தேன். 

ரஞ்சித்தான் “ஜீ, என்னைக்கோதான் பாத்துக்கறோம்! இனி அடுத்து எப்போ பாக்கப் போறோம்னு தெரியல! சரக்கடிக்காட்டியும் பரவால்ல! வாங்க ஜீ! சும்மா பேசிட்டாவது இருக்கலாம்ல” எனப் பாசமாக அழைத்தான். இதுபோல பாசமாக அழைத்து கடைசியாக முகம் கொடுத்துக்கூட பேச முடியாத நிலைமைக்கு சென்றிருந்த உறவுகளின் முகங்கள் கண்முன் வந்து போகவே அச்சத்தில் தவிர்த்தேன். “உங்களுக்கு பிடிக்கலைன்னாலோ, தூக்கம் வந்ததுனாலோ, எப்போ வேணாலும் கெளம்பிப் போயிடுங்க!” என அவன் வற்புறுத்தியதன் பொருட்டு புகைப்படங்களில் மட்டும் அரவிந்த் காட்டியவர்களுடன் அமர்ந்து, அவர்கள் சரக்கடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

அந்த பத்து பேரைப் பற்றியும் போட்டோவோடு காண்பித்து அவன் சொல்லியிருந்தாலும் ரஞ்சித், சுரேஷ், அசோக் மட்டுமே என் நினைவில் இருந்தனர். அதற்கு முகநூலில் அவர்கள் என் நட்பு பட்டியலில் இருப்பதும் காரணம். முதலில் அவர்கள் அனைவரும் தங்களை என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டனர். சுரேஷ், அசோக், ரஞ்சித் தங்களைப் பற்றி சொல்ல வரும் போது உங்களை எனக்கு நல்லாத் தெரியும் என சொல்லியிருந்தேன். இருந்தாலும் முழு விவரத்தையும் சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே அவர்கள் போதையானது தெரிந்தது. 

ஒரு பெரிய சூட் ரூம் அது. சரக்கடித்துவிட்டு இருவர் இருவராக தங்க நான்கு ரூம்கள் புக் செய்திருந்தனர். எனக்கு மட்டும் தனியாக ஒரு அறையை அரவிந்த் கொடுக்க சொல்லியிருந்தான். ரஞ்சித்தும் அதுபோலவே ஒதுக்கி கொடுத்துவிட்டான். அந்த அறைக்குச் சென்றுவிடலாம்; இதற்கு மேல் தாக்குபிடிக்கக்கூடாது என எழும் போது பாசமாக அழைத்த ரஞ்சித், “ஜீ! கொஞ்ச நேரம் எனக்காக இருங்க ப்ளீஸ்!” என காலில் விழ வந்தான். ‘சரி, இன்னைக்கு பொழுது இவங்ககூடத்தான் போல’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் பல்லைக்கடித்துக் கொண்டு அமர்ந்தேன்.

அதுவரை வேறு எதைஎதையோ பேசிக்கொண்டிருந்தவர்கள் நான் கிளம்புவதாக சொல்லவும் என்னையும் என்கேஜ் செய்வதற்காக எல்லோருக்கும் பொதுவாகப் பேச ஆரம்பித்தனர். எங்களுக்கான பொதுவான புள்ளி அரவிந்த்தான். அரவிந்த், அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் பெண்ணையே காதலித்து ஒரு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பெற்றோர் சம்மதத்துடன் நாளை திருமணம் செய்து கொள்ளப் போகிறான். அதிலிருந்தே பேச்சைத் துவக்கினர். 

“பரவாயில்லையே, நம்ம அரவிந்த் எப்படியோ சண்டை போட்டு பிடிச்ச புள்ளைய கல்யாணம் பண்ணப்போறானே!” என சுரேஷ் சொல்ல, எனக்கும் அந்த எண்ணம் இருக்கவே அதை ஆமோதிப்பது போல தலையாட்டினேன். சுரேஷ் என்னைப் பார்த்து, “ஸ்கூல்ல பொண்ணுங்ககிட்டயே பேசமாட்டான் ஜீ. பொண்ணுங்களப் பாத்தாலே பதறுவான். இவனுக்குலாம் கல்யாணமே ஆகாதுனு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா, லவ் மேரேஜே ஆகும்னு சத்தியமா நினைச்சுப் பாக்கல! காலேஜ்ல எப்படி இருப்பான்!” எனக் கேட்டான். “கிட்டத்தட்ட நீங்க சொன்ன மாறியேதான் காலேஜ்லயும் இருப்பான். எனக்கும் இவன் லவ் மேரேஜ்தான் பண்ணப்போறானு இப்ப வரை நம்ப முடியல” என நான் சொல்ல, என்னைப் பார்த்துக்கொண்டே பக்கத்தில் இருந்த சைடிஷை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே அசோக், “ஜீ, என்ன லவ் பண்ணி என்ன பிரயோஜனம். அவன் என்ன ரொம்ப அழகான பொண்ணையா கல்யாணம் பண்ணப்போறான். அதான் நேர்லே பாத்தோம்ல! அது ஒரு மூஞ்சினு!” என்று கூறியபடியே ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து தீப்பெட்டியில் பற்ற வைத்தான். தொடர்ந்து “அவன் வீட்டுல பாத்துருந்தா கூட .. ” பேசும்பொழுதே சிகரெட் கீழே விழ, அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டு தொடர்ந்தான். “அவன் வீட்டுல பாத்துருந்தாக் கூட இதை விட அழகான பொண்ண பாத்துருப்பாங்க” என சிகரெட்டைப் பற்ற வைத்து ஊதினான்.

சுரேஷ் உடனே கோபப்பட்டு “உனக்கு லவ் பண்ணி கல்யாணம் பண்றதுக்கு வக்குப்புண்டை இல்லை. அதான் அதைப் பண்றவனப் பாத்து உனக்கு எரியுது” என்று கூறவும், அசோக் சிகரெட்டை அணைத்துவிட்டு புகையை ஊதிக்கொண்டே “எனக்கு என்னாத்துக்கு எரியணும்! இப்பவும் சொல்றேன். இப்ப கல்யாணம் பண்ணப்போற பொண்ணு சுமார்தான். போதாததுக்கு வரதட்சணையும் தரலையாம். அரவிந்த் அம்மாட்ட விசாரிச்சேன். அவன் அப்பா அம்மாவே அவனுக்கு பாத்துருந்தாங்கனு வை, இதை விட அழகா தேவதை மாறி அதுவும் சும்மா வெறுங்கையோட இல்ல குறைஞ்சது 30 பவுன் வரதட்சணையோடே பாத்துருப்பாங்க!” எனக் கூறிவிட்டு, “என்ன ஜீ, நான் சொல்றது கரெக்ட்தான?” என என்னைக் கேட்டான்.

அவன் என்னிடம் இதைக் கேட்பானென்று துளியும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு “இல்ல ஜீ, அவனவனுக்கு அவன் அவன் லவ் பண்ற பொண்ணு தேவதைதான். அவனுக்கு அந்தப் பொண்ணு தேவதையா தெரிஞ்சிருக்கு. அதை நம்ம எப்படி சொல்ல முடியும்?” என்றேன்.

“அந்தப் பொண்ணா! தேவதையா!” என அசோக் ஒரு சிரிப்பு சிரித்தான். அந்த சிரிப்பு எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. அந்த சிரிப்பே அவன் நிதானத்தில் இல்லை எனத் தெரிய வைத்தது. சுரேஷ் உச்சகட்ட கோவத்தை அடைந்தான். “மச்சான், ரஞ்சித்! இந்த சுன்னிய இங்கருந்து கெளம்பச் சொல்லு. இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்தான்னா பாட்டில எடுத்து மண்டைய உடைச்சிருவேன்” என்றான்.

“பின்ன என்ன அந்த பொண்ணு தேவதையா!” என என்னை இளக்காரமாக பார்த்துச் சிரித்தான். கோபமான நான், “த்தா, உனக்கு அவ்ளோதான் லிமிட்! இனி பேசுன நான் மனுசனாவே இருக்கமாட்டேன்” என குரலை உயர்த்தினேன். நீண்ட நேரமாக இதை கவனிக்காமல் வேறேதையோ யோசித்துக்கொண்டிருந்த ரஞ்சித்தைப் பார்த்து சுரேஷ், “டேய் மயிரு , இங்க இந்த நாய் என்ன பேசிட்டிருக்கான். நீ என்ன அங்க ஊம்பிட்டு இருக்கியா!” என கத்தினான்.

நிலைமை கைமீறிப் போனது தெரிந்தது, எப்படி இவர்களிடமிருந்து தப்பித்துச் செல்லலாம் என யோசிக்கும் போதே, ரஞ்சித் சர்வசாதரணமாக, “ப்ச்..” டேய் அவன் அடுத்த ரவுண்ட் தாங்கமாட்டாண்டா!” என சொல்லிவிட்டு, “மச்சான் என் காலேஜ் ஃப்ரண்ட் ரகு உனக்குத் தெரியும்ல” என கேட்க சுரேஷ் தெரியாது என்று தலையாட்டினான். “உன்கிட்ட நான் அவனைப் பத்தி சொல்லியிருக்கேன். போதையில மறந்துட்ட” என சொல்லிவிட்டு ‘அரவிந்த்துக்குத் தெரியும்’ என அவனுக்கு அவனே சமாதானம் சொல்லி, “அவனோட பெஸ்ட் ப்ரண்ட்.. அவன் பேரு கூட நம்ம பாஸோட பேர்தான்” என என்னைக் காட்டிச் சொன்னான். ஒரு கணம் சுரேஷ் என்னைப் பார்த்தான். 

அதைப் புரிந்துகொண்ட ரஞ்சித் “ப்ச்ச், இவனில்லடா! (போதையில் என்னை முதன்முதலாக ஒருமையில் அழைத்தான். இருவரும் ஒரே வயதுதான் என்றாலும் அத்தனை நாள் அப்படி மரியாதையாக அழைத்துவிட்டு திடீரென அப்படி அழைத்தது ஒரு மாதிரியாக இருந்தது.) என் காலேஜ் ஃப்ரண்ட் அவன். இப்போ ஃபாரின் போயிட்டான். திருச்சில வேலை பாத்தப்ப அங்க சத்திரம் பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல இருக்க ஒரு மாலோ இல்ல டவர்ஸோ… ஏதோ ஒன்னு. அங்க ஒரு பொண்ண லவ் பண்ணான்.” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக், ‘அவ தேவதையாம்…’ என முனகலோடே மட்டையாகிவிட்டான். 

———————————————————————————————————————————- 

“அந்த பொண்ணு அந்த டவர்ஸ் ல ஒரு மெடிக்கல் ஷாப்ல வேலை பாத்துச்சாம். அந்தப் பொண்ண பாத்தவுடனையுமே புடிச்சிருச்சாம். அப்படி ஒரு அழகாம் அந்த பொண்ணு. ஹீரோயின்லாம் தோத்துப் போயிடணுமாம் அந்த பொண்ணு அழகுல! பாத்தவுடனே விழுந்துட்டான். அந்த பொண்ண பாக்கவே டெய்லியும் அங்க போக ஆரம்பிச்சிருக்கான். இவன் அந்த பொண்ணுக்காகவே தினமும் வந்ததுல அந்த பொண்ணுக்கும் ரொம்ப பிடிச்சிருச்சு. நீங்க சொன்ன மாதிரி (என்னைக் கை காண்பித்து) காதலிக்கறப்ப எல்லாருக்குமே நம்ம காதலிக்குற பொண்ணுங்க தேவதையாதான் தெரியும். ஆனா, அந்தப் பொண்ணு உண்மையாலுமே தேவதைதானாம். ” – சொல்லிவிட்டு நான் எப்படி ரியாக்ட் செய்கிறேன் என்பதற்காய் என் முகத்தைப் பார்த்தான். பற்றவைத்து வெடிக்காமல் இருக்கும் பட்டாசு பற்றியதா இல்லையா என்ற ஆர்வத்தில் பார்த்த அவனுக்கு என் முகம் வெடிக்காமல் போன பட்டாசின் சாயலைத்தான் கொடுத்திருக்கும். மீண்டும் பற்ற வைக்க முயற்சி செய்தான். அப்போது சுரேஷ் வாந்தி எடுப்பது போல் முன்னால் வர ரஞ்சித், “டேய் டேய் பாத்ரூம் போடா” என கத்தினான். சுரேஷ் ‘ஓகே’ என கையால் செய்கை செய்துவிட்டு தள்ளாடி எழுந்தான். 

“ஜீ, கோச்சுக்காம அவனக் கொஞ்சம் பிடிச்சிக்குறிங்களா!” ரஞ்சித் ரிக்வஸ்டாக கேட்க, நான் சுரேஷைப் பிடிக்கப் போனேன். என்னைப் பிடிக்க விடாமல் சுரேஷ் தடுத்து, ‘நான் போய்க்கிறேன். தெளிவாதான் இருக்கேன்’ என சொல்லி உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டான். “அவன விடுங்க ஜீ போயிருவான்” என ரஞ்சித் சொல்வதற்கும், பாத்ரூம்மில் சுரேஷ் வாந்தியெடுப்பதற்கும் சரியாக இருந்தது. ரஞ்சித் அமர்ந்துகொண்டே தூங்கத் தொடங்கினான். அனைவரும் போதையில் அங்கேயே மட்டையாகி படுத்துக்கொண்டனர். 

“ரஞ்சித், ரஞ்சித்.. தூங்குறதுனா வேற ரூம் போயி படுங்க!” என கன்னததை தட்டி உசுப்பி நான் சொல்லவும், ‘இல்லயில்ல ஜீ’ என க்ளாஸில் அடுத்த ரவுண்டை ஊற்றிக்கொண்டே பதில் சொன்னான்.

உள்ளே வாந்தி எடுத்துக்கொண்டிருந்த சுரேஷ் கதவைத் தட்டினான். ரஞ்சித்தும் நானும் சென்று பார்த்தால் தாழ்ப்பாள் உள்பக்கம் தான் போடப்பட்டிருந்தது. ‘கதவைத் திறங்க திறங்க’ என வேகமாக கத்தினான்.

“டேய், நீதான்டா உள்ள பூட்டியிருக்க! கதவை நீதாண்டா திறக்க முடியும்” என ரஞ்சித் கோபமாக கத்தினான்.

உடனே தட்டும் சத்தம் நின்றது. சில நொடிகளில் அவன் கீழே விழும் ‘டம்’ என்னும் சத்தம் கேட்டது. “ஐயோ, ரஞ்சித் விழுந்துட்டான் போல” என்ன பண்ணலாம் என பதட்டத்தில் கேட்டேன். 

ரஞ்சித், “பரவால்ல விடுங்க மட்டையாயிட்டான். காலையில அவனா எழுந்திருச்சு வந்துருவான். வாங்க நம்ம உக்காருவோம்” என ஊற்றி வைத்த சரக்கை குடிக்கச் சென்றான்.

என்ன செய்வதெனத் தெரியாமல் ஒரு கணம் மூடியிருந்த பாத்ரூம் கதவையே பார்த்து தயங்கி நின்றுகொண்டிருந்த என்னை, “ஜீ, அதெல்லாம் பிரச்சனையில்ல. அவன் எப்பயுமே இப்படித்தான்! நீங்க வாங்க. வெளிய இருந்தா நம்மள டார்ச்சர் பண்ணிட்டு இருப்பான். அவன் உள்ளேயே இருக்கட்டும்” என்றான். பேசாமல் அவனருகில் சென்று அமர்ந்தாலும், உள்ளே அவன் எப்படி இருப்பானோ, கீழே விழுந்ததில் அடி எதாவது பட்டிருக்குமோ! என்ன செய்யலாம் என நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.“ஜீ, நான் கையில சரக்க வச்சிட்டு போதையில பேசறனால இத நீங்க நம்பாம இருக்கலாம். ஆனா, அந்த பொண்ணு நிஜமாவே தேவதை ஜீ.” என மீண்டும் துவங்க, “ஐயோ ரஞ்சித்! ஆக்சுவலா நான் அசோக்க பத்திதான் யோசிச்சிட்டு இருந்தேன்.” என்றேன். 

“அவனை விடுங்க ஜீ. அவனுக்கு எப்பயுமே இதே வேலைதான். நான் சொல்றத நீங்க நம்புறிங்களா அதை சொல்லுங்க!” என உற்சாகமாகக் கேட்டான்.

“நம்புறேன் ரஞ்சித்” என சொல்லவும் உற்சாகமாக ஒரு ரவுண்ட் ஊற்றி குடித்துவிட்டு ஆரம்பித்தான்.

“அவளுக்கு பசி,தூக்கம்,வலி எதுவுமே கிடையாதாம். அவகிட்ட எப்பயுமே அன்பு மட்டுந்தான் இருக்குமாம். அப்படிப்பட்ட தேவதை ஏன் அங்க வேலை பாத்துச்சு… ஏன் இவனைக் காதலிச்சிச்சுன்னு கடைசி வரை அவனுக்கே தெரியல. அந்தப் பொண்ணு தேவதைனு எப்படி கண்டுபிடிச்சான் தெரியுமா? ‘ கேட்டபடியே அடுத்த ரவுண்டை ஊற்றினான். 

“எப்போ வெளிய கூப்டாலும் வேலையிருக்குனு சொல்லுமாம். சரி வேலை முடிச்சிட்டு போலாம்னாலும் வீட்டில திட்டுவாங்கனு ஒத்துக்காதாம். சரி, உன் வீடு எங்கயிருக்கு? நான் வந்து விடுறேனு சொன்னாலும் கேக்காதாம். அந்த பொண்ணு வீட்ட கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சி பண்ணி பின்னாடியே போவானாம். எவ்வளவோ கஷ்டப்பட்டு ஃபாலோ பண்ணாலும் திடீர்னு எங்கயாவது ஒரு இடத்துல கூட்டத்துல மிஸ் ஆகிடுமாம். அவனால கண்டேபிடிக்க முடியலயாம். தேவதைக்கு ஏது வீடு? சொல்லுங்க!” அவன் கேட்கவும், ‘ம்ம்ம்’ என சைடிஷை கையில் எடுத்துக் கொண்டே தலையை ஆட்டினேன்.

“அந்த பொண்ணா ஒரு நாள் சொல்லும்னு அவனும் வெய்ட் பண்ணி பாத்துருக்கான். அந்தப் பொண்ணு சொல்லவேயில்லை. கடைசியா இவனா ஒரு நாள் ‘என் மேல நம்பிக்கையில்லையா?’ னு சொல்லி சண்டை போடறப்ப தான், அந்தப் பொண்ணு தன்னை தேவதைனு சொல்லிருக்கு.”

“அப்பறம் என்னாச்சு?” – முதல்முறையாக நான் கேள்வி கேட்கவும் ரஞ்சித் உற்சாகமானான்.

“பிரிஞ்சிட்டாங்க ஜீ!” என ஒரே வார்த்தையில் முடித்தான். 

“அவங்க எப்படி பிரிஞ்சாங்க? அந்த தேவதை விட்டுட்டு போயிடுச்சா?” எனக் கேட்டேன்.

அந்த கேள்விக்காகவே காத்திருந்தவன் போல் இன்னொரு ரவுண்டை ஊற்றிக் குடித்தான். கையிலிருந்த சைடிஷை நீட்ட ‘வேண்டாம்’ என மறுதலித்துவிட்டு, முகத்தை சீரியஸாக்கிக்கொண்டே “இவன்தான் வேணாம்னு சொல்லி விட்டுட்டு வந்துட்டான்” என்றான்.

“என்ன! இவன் வேணானு சொல்லிட்டானா? லூசா அவன்” நான் சற்று ஆச்சரியமாகவே கேட்டேன்.

“இதே டவுட்டு எனக்கும் வந்துச்சு. நானும் என் ப்ரண்ட்கிட்ட கேட்டேன். ஏண்டா, யாராவது தேவதையை வேணான்னு சொல்லுவாங்களானு! அதை கேட்டதுக்கு அவன் சொன்னது:

“தேவதையை தூர நின்னு பாக்கறதுக்குதான் நல்லாருக்கும். கூடல்லாம் வாழ முடியாது. எல்லா விதத்துலயும் நமக்கு மேல இருக்கவங்கள ஆச்சரியமா பாக்கலாம். பழகலாம். ஆனா, கூடவே வாழ்ந்துர முடியாது. ஒவ்வொரு நிமிஷமும் அவங்களுக்கு நம்ம வொர்த் இல்ல வொர்த் இல்லனு தோணிட்டே இருக்கும். அவங்க நம்ம கூட இருக்கறதே ஒரு பெரிய தியாகம் மாறி தோணிட்டே இருக்கும். நான் இப்படி நினைக்கிறேன்றத அந்த தேவதை புரிஞ்சுகிச்சு. தேவதையாச்சே நம்ம என்ன நினைக்கிறோம்னு கூடவா தெரியாது அதுக்கு? நான் தேவதையா இருக்கறதுனாலதான உனக்கு அப்படி தோணுதுன்னு, தேவதைக்கான அம்சம் எல்லாத்தையும் இழக்க ஆரம்பிச்சது. யாருக்கும் தெரியாம ஒளிச்சு வச்சிருந்த றெக்கைய வெட்டிக்குச்சு. அழுகை,பசி,துக்கம் இது எதுவுமே இல்லாம இருந்த தேவதை எல்லாத்தையும் உணர ஆரம்பிச்சது. எனக்காக தன்னை சாதாரணமான பொண்ணா மாத்திக்குச்சு. எனக்கு சாதாரண பொண்ணே போதும்னு நினைக்க காரணமே தேவதையோட இருக்கப்ப அதை ரொம்ப கஷ்டப்படுத்துறோமேன்ற குற்ற உணர்ச்சி தான். இப்போ அந்த தேவதையே சாதாரண பொண்ணாயிடுச்சுனா..? ‘ஐய்யோ.. அத தாங்குற சக்தியே எனக்கில்ல. ஏன் நீ இப்படி ஆன? நான்தான் உனக்கு தகுதியானவன் இல்ல. அதுனாலதான் வேணாம்னு சொன்னேன். அதுக்கு அர்த்தம் நீ சாதரணா பொண்ணா மாறனும்னு இல்ல. அதுக்கான அவசியமும் இல்லை. நீ தேவதையாவே உனக்கு பிடிச்ச மாறியே இரு. நீ ஏன் அந்த மெடிக்கல் ஷாப்ல வேலைபாக்குறனு இதுவரை உன்ன கேட்ருக்கேனா! இல்லயில்ல. நீ தேவதை! உனக்கு பிடிச்சத நீ செய்யணும். எனக்காக நீ மாத்திக்கறத என்னால தாங்கிக்கவே முடியல. நீ உனக்கு பிடிச்சமாறியே இருந்தாலே எனக்கு சந்தோசம்னு’ சொன்னேன்.

எனக்கு உன் கூட இருக்கறது மட்டுந்தான் சந்தோசம். நீ இருந்தாலே போதும். உனக்காக இப்படி மாறுனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ப்ளீஸ்.. என்னை விட்டு மட்டும் போகாதனு முதல் தடவையா தேவதை அழுதுச்சு. 

அது அழுகுறப்பவே தேவதையோட எல்லா சாயலும் போயிடுச்சு. வரம் கொடுத்த தேவதை முதல் தடவை என்கிட்ட வரம் கேட்டுச்சு. நீ என்ன சொன்னாலும் செய்றேன்.ப்ளீஸ் உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும்னு அழுதுச்சு. என்ன கேட்டாலும் செய்வியானு கேட்டேன். ஆமா. முன்னாடி மாதிரி உடனே செய்யமுடியாது. சக்தி குறைஞ்சிருச்சு. ஆனா உயிரக்கொடுத்தாவது செய்வேனு சொல்லுச்சு.

என்னால அத ஏத்துக்கவே முடியல. எப்படி சந்தோசமா றெக்கையோட இருந்துருக்க வேண்டிய தேவதை. என்னால தான எல்லாம்னு என் மேலயே எனக்கு பயங்கர கோவம் வந்துச்சு. எவ்வளவு பெரிய கொடுமைய அதுக்கு பண்ணியிருக்கேனு.. அதுனால மனசக் கல்லாக்கிக்கிட்டு என்னைய விட்டுப் போயிடு. என் வாழ்க்கையில நீ வேணாம்னு சொன்னேன். தேவதையால அத தாங்கவே முடியல. ஆனா, வாக்கு கொடுத்தனால அழுதுட்டே என் வாழ்க்கைய விட்டுப் போயிடுச்சு. என்ன விட்டு போகப்போக அதுக்கு றெக்க திரும்ப முளைக்க ஆரம்பிச்சது. ஆமா, என்னை விட்டு விலகுறப்பயே தேவதையா மாற ஆரம்பிச்சிருச்சு.”

நான் அவனை ஆச்சரியம் பொங்கப் பார்த்தேன். அவன் போதையில் கண்களை மூடி சிரமப்பட்டு ஒரு ஏப்பம் விட்டான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைத் துடைத்துவிட்டு விம்மிக்கொண்டே ரஞ்சித் சொன்னான். 

“ஒரு வகையில அவன் பண்ணது கரெக்ட்தான் ஜீ. நம்ம ஒரு பொண்ண லவ் பண்ற வரைக்கும் தான் தேவதையா பாப்போம். அவள சந்தோசமா வச்சுக்கணும்னு நினைப்போம். அதே நம்மள அவ லவ் பண்ண ஆரம்பிச்சப்பறம், அவ நம்மள சந்தோசப்படுதனும், நம்ம கூட மட்டுந்தான் இருக்கணும்னு மாறிடுறோம். நம்ம கூட இருந்து அவங்கள டார்ச்சர் பண்றதவிட இப்படி பிரிஞ்சிருக்கறதே பெட்டர்தான்” என சொல்லிக்கொண்டே சிறுநீர் கழிக்க எழுந்து சென்றான்.

அரவிந்த், ரஞ்சித்தின் காதல் கதை பற்றி சொன்னது நினைவிருக்கிறது. அவன் கல்லூரியில் காதலித்த இஸ்லாமியப் பெண்ணை இந்துவாக மாறச் சொல்லி டார்ச்சர் செய்திருக்கிறான். அந்த பெண்ணோ இவனை திருமணம் செய்ய வீட்டின் சம்மதம் வாங்கி, பேருக்காக இவனை இஸ்லாத்துக்கு மாற சொல்லியிருக்கிறாள். இவன் அதைக் கேட்காமல் அவளை மதம் மாற சொல்லவே, அவள் வீட்டில் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்துவிட்டனர். என்ன செய்வதெனத் தெரியாமல் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். அதற்கு மேல் ரஞ்சித் எதுவும் டார்ச்சர் செய்யவில்லை. அவள் வீட்டில் பார்த்த பையனையே திருமணம் செய்துகொண்டாள்.

ரஞ்சித் பாத்ரூம் கதவைத் தட்டும் சத்தம்தான் என்னை சுயநினைவிற்கு கொண்டு வந்தது. ‘சுரேஷ்.. சுரேஷ்’ எனக் கூறியவாறே கதவை ஓங்கித் தட்டினான். அங்கிருந்து எந்தவொரு பதிலுமில்லை. நான் எழுந்து ரஞ்சித் அருகில் சென்றேன். அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு வேகமாகத் தட்டினான். “அவசரம் தெரியாம..டேய்” என ஒவ்வொரு தட்டலிலும் வேகம் அதிகரித்துக்கொண்டே போனது. 

நானும் பேச்சுக்கு இரண்டொருமுறை தட்டிவிட்டு, “ரஞ்சித், உங்களுக்கு ரொம்ப அர்ஜெண்ட்னா என் ரூம் யூஸ் பண்ணிக்கங்க” என பாக்கெட்டிலிருந்த சாவியை எடுத்து நீட்டினேன். ரஞ்சித்தும் ஒரு கணம் யோசித்துவிட்டு “சரி, வாங்க” என காலிப்பாட்டிலையும், மீதமிருந்த சைடிஷையும் மடித்து குப்பையில் போட்டுவிட்டு என்னோடு அறைக்கு வந்தான்.

வந்தவன் சிறுநீர் கழித்துவிட்டு என் அறையிலேயே படுத்துக்கொண்டான். நானும் எதுவும் சொல்லவில்லை. தூக்கத்தில் ஒரு இஸ்லாமியப் பெயரை உச்சரித்தான். விம்மிக்கொண்டே படுத்திருந்தவனைப் பார்த்த நான் எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை. 

ரஞ்சித் அந்த இஸ்லாமியப் பெயரை சொல்லிக்கொண்டே என்னோடு வருகிறான். அந்த பெயரை உச்சரிப்பதை நிப்பாட்டுவதற்கான மாத்திரை வாங்க நாங்கள் அந்த பெரிய மாலில் உள்ள லிப்டில் ஏறிக்கொண்டிருக்கிறோம். அந்த மாலில் மொத்தமே ஒரே ஒரு கடை தான் இருந்தது. மீதம் உள்ள இடங்களில் எல்லாம் அந்த கடைக்குச் செல்லும் வழி என அம்புக்குறிகள் போட்டு பாதை மட்டும் இருந்தது.

எளிதாக அந்தக் கடையை அடைந்தோம். கடையில் வெள்ளை நிற உடை உடுத்தி கையில் மந்திரக்கோலுடன் இறக்கையை மெதுவாக அசைத்தபடியே அந்த தேவதை அமர்ந்திருந்தது. என் முன்னாள் காதலியின் சாயலில் அது இருந்தது. இஸ்லாமியப் பெண்ணின் பெயரைக் கத்திக்கொண்டேயிருப்பதைப் பார்த்து நாங்கள் எதுவுமே சொல்லாமல் அதுவே பிரச்சனையை கண்டுபிடித்து தன் கையிலிருந்த மந்திரக்கோலை உடனே ஸ்டெத்தஸ்கோப்பாக மாற்றி அவன் மார்பில் வைத்து சோதித்து உடனே மாத்திரையை நீட்டியது. மாத்திரையை சாப்பிடும் பொழுதும் அந்த பெயரையே ரஞ்சித் உச்சரித்துக்கொண்டிருந்தான். அதனால் தேவதை மந்திரத்தை உபயோகித்து சிறிது நேரம் அவன் அந்தப் பெயரை சொல்லாமல் இருக்க வைத்து பின்னர் மாத்திரையைக் கொடுத்தது. மாத்திரை விழுங்கி தண்ணீர் குடித்ததும் அந்த பெயரை உச்சரிப்பதை நிறுத்தினான். நானும் தேவதையும் ஒருவருக்கொருவர் பார்த்து நிம்மதியாக சிரித்துக்கொண்டோம். “ரொம்ப தாங்க்ஸ்டா மச்சான் _____” என அவன் என் பெயரை சொன்னதும், அந்த தேவதை ஆச்சரியமாக என்னைப் பார்த்து, “இவர் சொன்னதா உங்க பேரு?” எனக் கேட்டது. “என்னங்க, தேவதையா இருக்கிங்க.. இது கூட தெரியலயா?” என நான் கேட்கவும் “தெரியும், ஏன் நான் தெரிஞ்சுகிட்டே கேட்டா சொல்லமாட்டிங்களா?” என சிரிப்புடன் கேட்டது.

“ஐயோ, நீங்க கேட்டுட்டே இருங்க! நான் சாகுற வரை சொல்லிட்டே இருக்கேங்க!” என களிப்புடன் சொன்னேன். என் வலதுகையைப் பற்றி அதை மெல்ல வருடியபடி, “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னு தெரியுமா? உன் பேர்ல ஒருத்தர எனக்குத் தெரியும்’ என்றது தேவதை . என் உள்ளங்கையை வருடியது இதமாக இருந்தது. என் கைகளை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டு “எனக்கும் தெரியுங்க..ரஞ்சித் சொன்னான்!” என சொல்லும்பொழுதுதான் அந்த இடத்தில் ரஞ்சித் இல்லை என்பதை உணர்ந்தேன். தற்போது அந்த இடமே முழுக்க முழுக்க எதுவுமே இல்லாத வெறுமையால் சூழப்பட்டிருந்தது. அந்த தேவதை இருந்ததால் அது எனக்குத் தெரியவேயில்லை. “எங்கங்க அவனைக் காணோம்?” என கேட்டேன். தேவதை என் கையை வருடிக்கொண்டே, “அவன் வந்த வேலை முடிஞ்சிருச்சு.. போயிட்டான்” என்றது.

“அவனும் நானும் அரவிந்த் கல்யாணத்துக்குதாங்க வந்தோம். அப்பதான் அவனுக்கு திடீர்னு இந்த முஸ்லீம் பேர சொல்ற நோய் வந்திருச்சு. அவனை சரி பண்ண தான் அவசரமா மெடிக்கலுக்கு கூட்டிட்டு வந்தேன். இப்ப சரியாயிடுச்சுனா சீக்கிரம் போய் அரவிந்த் கல்யாணத்த அட்டண்ட் பண்ணனும். காலையில நாலைரைக்கே கல்யாணம். அதுக்குதான் முத நாள் நைட்டே வந்தோம். வந்த வேல இன்னும் முடியலங்க!” என்றேன். ஒரு ஞானச்சிரிப்பை சிரித்துவிட்டு என் கரம் பற்றி முத்தம் கொடுத்த தேவதை, “நீ அவன் கல்யாணத்துக்காக வரல. ரஞ்சித்தும்தான். அவன் வந்த வேலை முடிஞ்சிருச்சு, ஆனா, நீ வந்த வேலை முடியல” என சொல்லியது.

“நீங்க தப்பா சொல்றீங்க! நான் அரவிந்த் கல்யாணத்துக்குதான் வந்தேன். அத முடிச்சிட்டு சாயங்காலம் வரை தஞ்சாவூர்ல சுத்திட்டு நைட்டு சென்னை போகணும். அவ்வளவுதான். நம்பாட்டி நைட் ட்ரைன் டிக்கெட் கூட இருக்கு பாருங்க” என உழவன் எக்ஸ்ப்ரஸில் போட்டிருந்த டிக்கெட்டை மொபைலில் காண்பித்து, எங்க போன ரஞ்சித் என ரஞ்சித்திற்கு போன் செய்து போனைக் காதில் வைத்தேன். அப்போது தேவதை என் கையிலிருந்த போனை வாங்கி வைத்து, “திரும்பவும் சொல்றேன். நீ அரவிந்த் கல்யாணத்துக்கு வரல” என சொல்லி தலையை வருடியது. “இல்லைங்க நான் கல்யாணத்துக்குதான் வந்தேன்” என சொல்லும் பொழுதே 4 மணிக்கு வைத்திருந்த அலாரம் அடித்தது. அரக்க பறக்க எழுந்து குளித்து ரெடியாகி மணடபத்திற்குச் சென்றேன். அரவிந்த் பள்ளி நண்பர்களில் ஒருவன் கூட எழவில்லை. திருமணத்திற்கு நான் மட்டுமே போனேன்.

நான்கரை திருமணத்தின் போது அரங்கம் பாதிதான் நிரம்பியிருந்தது. தாலி கட்டி முடித்து மணி ஏழை நெருங்கும் பொழுதுதான் கூட்டம் வரத்தொடங்கியது. வந்த கூட்டமும் நேரடியாக சாப்பாட்டு இடத்தை நோக்கியே ஓடியது.

சாப்பாட்டிற்கு சென்ற பிறகு மேடையில் கூட்டம் குறைந்தது. மொய்யாக அவன் கேட்டிருந்த இருபத்தைந்தாயிரத்தை கவரில் வைத்து அவன் கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

அரவிந்த் மற்றும் அவன் மனைவியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை கல்லூரி குழுவில் பகிர்ந்துகொண்டேன். அரவிந்த் தன் மனைவிக்கு என்னை அறிமுகப்படுத்தினான். “எங்க உங்க ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் வந்திருக்காங்கனு சொன்னிங்க. ஒருத்தர கூட காணோம்?” என அரவிந்தின் மனைவி கேட்க, “எப்படிமா வருவாங்க..நேத்து நைட்டு வந்து இவன் சரக்கு வாங்கி குடுத்துட்டு போறான். நைட்டு குடிச்சவங்க 4.30-க்கு எப்படி எந்திரிப்பாங்க?” என்றேன்.

‘டேய்’ என அரவிந்த் பல்லைக் கடித்துக்கொண்டு ‘சொல்லாத’ என சைகை செய்தான். “அவங்க ஒழுங்கா நைட் வீட்டுக்கு போயிருந்தா கூட கல்யாணத்துக்கு வந்திருப்பாங்க” என சொல்ல அரவிந்தின் மனைவி அரவிந்தை முறைத்துப் பார்த்தாள். ‘உன்ன இந்த கல்யாணத்துக்கு கூப்டதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட’ என்றான். சிரித்துவிட்டு மேடையிலிருந்து இறங்கி வந்தேன். அறைக்குச் சென்று இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு மதியம் போல் எழுந்து சாப்பிட்டு மீண்டும் தூங்கிவிட்டு மாலை காத்தாட பெரிய கோவில் சென்றுவிட்டு மாலை அங்கிருந்து சென்னைக்கு பேருந்து ஏறி காலையில் ஆபிஸ் செல்வதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் அந்த கனவு எல்லாவற்றையும் சுக்குநூறாக உடைத்துப்போட்டுவிட்டது என் பழைய காதலியின் சாயல் கொண்ட அந்த தேவதை, (ச்சீ அவளை எப்படி தேவதையாக கற்பனை செய்தேன்?) நீ கல்யாணத்துக்கு வரல எனச் சொல்லியே என்னை படுத்தி எடுத்தது. நான் வந்ததே இந்த கல்யாணத்திற்குத்தானா என யோசிக்க ஆரம்பித்து அரவிந்த் திருமணம் நடப்பதே நான் வரவேண்டும் என்பதற்காகத் தானா என யோசிக்கிற அளவிற்கு ரஞ்சித் சொன்ன அந்த கதையும் அந்த கனவும் என்னை ஆட்கொண்டுவிட்டது. 

தஞ்சாவூரிலிருந்து பஸ்ஸேறினால் மூன்று மணி நேரத்தில் சென்றுவிடலாம். சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் எப்படியாவது அந்த கடையைத் தேடிக் கண்டுபிடித்துவிடலாம் என முடிவு செய்துவிட்டேன். அறையைக் காலி செய்யும் நோக்கில் அங்கிருந்து கிளம்பினேன். 

அறைக்கு நுழையும் போதுதான் அரவிந்தின் பள்ளி நண்பர்கள் வேகவேகமாக கிளம்பிக்கொண்டிருந்தனர். ரஞ்சித், “ஜீ , என்னையும் எழுப்பி விட்ருக்கலாம்ல! பாருங்க எதுக்கு வந்தேனோ அதையே மிஸ் பண்ணிட்டேன்” என்றான். என் மனதிற்குள் இல்லை ரஞ்சித் நீ வந்த வேலையை மிஸ் பண்ணல சரியா செஞ்சிட்ட என நினைத்துக்கொண்டேன். பின் ரஞ்சித், ” சரி, அதை விடுங்க ரெண்டு பேரும் மண்டபத்துலதான் இருக்காங்களா..இல்ல, வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்களா?” எனக் கேட்டான்.

“இல்ல மண்டபத்துலதான் இருக்காங்க, ஆனா, கொஞ்ச நேரத்துல பனியாரக்குடம் எடுக்க போறாங்களாம்” எனச் சொல்ல, “டேய், சீக்கிரம் வாங்கடா!” என கத்தினான்.

இரவு பாத்ரூமிலே மட்டையாயிருந்த சுரேஷ் கையைக் காட்டி சிரித்தான். நல்லவேளையாக அவனுக்கு அடி எதுவும் பட்டிருக்கவில்லை. ஒரு புன்னகையை பதிலாகத் தந்தேன். 

ரஞ்சித் சற்று தயக்கத்துடன், “ஜீ, நைட் ஓவரா போதையாகி உங்கள் எதுவும் டார்ச்சர் பண்ணிட்டேனா?” என கேட்டான். “ஐயோ, அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ரஞ்சித்!” என்றேன். “போதையில என்ன பேசுனேன், என்ன நடந்துச்சுனே நியாபகமில்ல. எப்படி உங்க ரூமுக்கு வந்தேனே தெரியல!” என்றான்.

அவன் சொன்ன கதையையும் கனவையும் தவிர்த்துவிட்டு சுரேஷ் மட்டையானது முதல் என் அறைக்கு வந்தது வரை சொல்லிவிட்டு, “சரி ஜீ, நான் அப்படியே கெளம்பறேன். உங்கள பாத்ததுல சந்தோசம்” என கைகொடுக்கப் போனேன். வேகமாக கட்டியணைத்து “எனக்கும் தான் டச்லே இருங்க. உங்க கல்யாணம்னா சொல்லுங்க பசங்களோட கண்டிப்பா வரேன்.பாத்து பத்திரமா போயிட்டு வாங்க” என்றான். அவர்கள் அனைவருடனும் ஒரு செல்பி எடுத்துவிட்டு பஸ்ஸ்டாண்டிற்கு ஆட்டோ பிடித்துச் சென்றேன்.

பஸ்ஸில் ஏறி அமர்ந்த பின் எப்போது அங்கு போய் சேருவோம் என ஒரு உந்துதல் இருந்தது, காலையில் ரஞ்சித் என்ன சொல்லியிருக்கிறோம் என்றே தெரியாத அளவு போதையில் சொன்ன ஒரு கதையை நம்பி எந்த தைரியத்தில் செல்கிறேன் என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். வேண்டாம் என மூளை சொன்னாலும் கனவில் ‘நீ அரவிந்த் கல்யாணத்துக்கு வரல’ என என் வலக்கையை வருடிச் சொன்ன தேவதை நினைவிற்கு வர என் கையை ஒரு முறை பார்த்து தேவதை போலவே வருடிக்கொடுத்தேன்.

அந்த கனவின் கிறக்கத்திலேயே திருச்சி வந்து இறங்கினேன். ஒரேயொரு முறை திருச்சி மலைக்கோட்டை வந்திருக்கிறேன். சத்திரம் பேருந்து நிலையத்திற்கு போகும் பஸ்ஸ்டாண்டிற்கு வந்தேன். உறையூர் வழியாக போகும் பஸ்ஸில் ஏறக்கூடாது என்பதை மலைக்கோட்டை வந்த அன்று ஏறி உணர்ந்திருக்கிறேன். “சத்திரம் சத்திரம் சத்திரம்” என சத்திரத்திற்கு பாலக்கரை, உறையூர் வழியாகப் போகும் பேருந்தின் கண்டக்டர்கள் கத்திக் கொண்டிருந்தனர். தீனியை சுமந்துகொண்டு ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் எறும்புகளைப் போல பயணிகளை சுமந்துகொண்டு பேருந்துகள் நகர்ந்து கொண்டே இருந்தது. எப்படி இவ்வளவு மக்கள் சத்திரத்திற்கு சென்றுகொண்டே இருக்கின்றனர் என ஆச்சரியமாகப் பார்த்தேன்.

பார்த்துக்கொண்டிருந்த பொழுதே என் எதிரில் அடுத்த பேருந்து வந்து நின்றது. திருச்சி பேருந்துகள் வெற்றிக் கொடிகட்டு படத்தில் வடிவேலு சொல்லக்கூடிய துபாய் ரோட்டை ஒத்திருந்தது. கண்ணாடி மாதிரி உங்களை அப்படியே காட்டும். அதிலே தலைவாரிக்கொள்ளலாம். என் முகத்தைப் பார்த்து தலைவாரிக்கொண்டேன். அழகாக இருக்கிறேனா என ஒருமுறை பார்த்துக்கொண்டேன். தேவதையைப் பார்க்கப்போகிறேனே..அதற்கு ஏற்றது போல் இருக்க வேண்டாமா?

இந்த முறை சரியாக பாலக்கரை வழியாக போகும் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டேன். மனமெங்கும் அந்த தேவதையைப் பற்றிய எண்ணங்களே சூழ்ந்திருந்தன. 

‘சத்திரம்,சத்திரம்’ என கத்தி பின்னால் இருந்த நடத்துனர் இறங்க சொன்னார். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் என வாயில்தான் சொன்னார்களே அன்றி உண்மையில் அங்கு எதுவுமே இல்லை. சத்திரம் பேருந்து நிலையத்தையே இடித்து வைத்திருந்தனர். எல்லா பேருந்துகளும் வெளியிலேயே நின்றிருந்தது. நேரம் மதியம் ஒன்றரையைக் கடக்கவே கல்லூரி மாணவ மாணவிகளால் அந்த இடமே சூழப்பட்டிருந்தது.

முதலில் அங்கே அருகே இருக்கும் மெடிக்கல் ஷாப்களைப் பார்த்தேன். வாசன் மெடிக்கல் முதற்கொண்டு எல்லா மெடிக்கல்களும் சாலையை ஒட்டியே இருந்தது. அங்கு எதாவது மால் போல இருக்கா என விசாரிக்க ஆரம்பித்தேன். பெமினாவைத் தான் குறிப்பிட்டார்கள். பெமினாவில் மெடிக்கல் இல்லை. ஏமாற்றமே மிஞ்சியது. ரஞ்சித் சொன்னதை வைத்து பக்கத்தில் எதாவது டவர்ஸ் இருக்கா எனக் கேட்க, பெரியசாமி டவர்ஸைக் குறிப்பிட்டார்கள். அவன் சொன்னது பெரியசாமி டவர்ஸாகத்தானிருக்கும் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றேன். 

அந்த டவர்ஸ் நன்றாகவே இருந்தது. ஊர்ப்புறங்களில் இருக்கும் பெரிய தண்ணீர்த் தொட்டியை நினைவுபடுத்தும் வடிவத்தில் வட்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அண்டர் க்ரவுண்ட் தொடங்கி இரண்டு மாடி. எல்லாமே கடைகள் கடைகள். மக்கள் சாலையைக் கடந்து அந்தப் பக்கம் செல்ல அதை குறுக்கு வழியாகவும் பயன்படுத்திகொண்டிருந்தனர். எந்தப் பக்கம் வேண்டுமானாலும் வெளியேறிச் செல்ல முடியும். எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் அண்டர்க்ரவுண்டில் ஆரம்பித்து வட்டமடித்தேன். பெல்ட் கடை, செல்போன் கடை, எலக்ட்ரானிக்ஸ், லேப் டாப் கடைகளே பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்தன. ‘வாங்கண்னா..வாங்கண்னா..பாருங்க’ என திருவிழாக்களில் அழைப்பது போலவே செல்போன் கடைக்காரர்களும் கூவிக்கொண்டிருந்தனர்.

அங்கிருந்து முதல் தளத்தை அடைந்தேன். எதோவொரு நம்பிக்கை இப்போது நெஞ்சில் துளிர்விட்டது. எல்லையில்லா ஆனந்தமும் அதே சமயம் பதட்டமும் சேர்ந்து கொண்டது. பாதி வட்டத்தை நிறைவு செய்யும் வளைவில் ஒரு மெடிக்கல் ஷாப் இருந்தது. அதற்கு வலப்புறமும் இடப்புறமும் தொங்கவிடப்பட்டிருந்த பக்கத்து கடைப்பொருட்கள் அந்த மெடிக்கலையே மறைத்திருந்தது. ஏதோ ஒரு புதையலைக் கண்டறிந்த ஆர்வத்தில் அந்த கடை முன்பு நின்றேன். கனவில் இருந்தது போல அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மெல்ல கடையை நோக்கிச் சென்றேன். என் இதயம் உற்சாகத்தில் பலமாக அடித்துக்கொண்டது. மெல்ல கண்களை மூடி மூச்சை இழுத்துவிட்டேன். படபடப்பு லேசாக குறைந்தது. உள்ளே ஒரே ஒரு பெண் மட்டும் அமர்ந்திருந்தாள். அவளை கனவில் வந்த தேவதையின் பூரணத்துவத்தோடு நினைத்துக் கொண்டு பார்த்தேன். சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியின் வேகம் பத்தாததால் புழுக்கம் தாங்காமல் தன் இரு கைகளால் விசிறிக்கொண்டிருந்தாள். அவள்தான் ரஞ்சித் சொன்ன என் கனவில் வந்த தேவதையா! நிச்சயமாக இல்லை. இவளுக்கு தேவதையின் சாயலும் இல்லை. என் முன்னாள் காதலியின் சாயலும் இல்லை. என்னைப் பார்த்ததும் அமர்ந்திருந்த சேரிலிருந்து எழுந்து முன்னால் வந்தாள். அவளை ஒரு தேவதையாக என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை. ரஞ்சித் சொன்னபடி பார்க்கும்பொழுது தேவதையின் காதலனாலே அவள் தேவதை என கண்டுபிடிக்கமுடியாதபடிதான் இருந்திருக்கிறாள். எனவே இவள் நான் தேடி வந்த தேவதையாயிருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என என்னை நானே தேற்றிக்கொண்டேன். 

கடையருகில் சென்று நின்றவுடன், “சொல்லுங்க..என்ன வேணும்?” என முன்னால் வந்து கேட்டாள். கற்பனைக் கோட்டையில் லயித்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு இவ்வளவு தூரம் வந்து எதார்த்தத்தைப் பார்த்ததில் என் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. உண்மையாலுமே தலைவலி இருந்தது அதையே சொன்னேன். “காய்ச்சல் சளி இருக்கா?” என்றாள். “இல்லை” என்றேன். சரி என கூறிவிட்டு ஒரு சின்ன டப்பாவை எடுத்து அதை வாயில் வைத்து பல்லால் திறந்து அதில் உள்ள மாத்திரையை அழகாக கட்செய்து பேப்பரில் மடித்து வைத்து, “சாப்டதுக்கு அப்பறம் போட்டுக்கங்க” என சொல்லி வைத்தாள். அந்த கவரிலும் உணவிற்கு பின் என எழுதினாள். சத்தியமாக ஒரு தேவதையால் இவ்வளவு கேவலமாக எழுத முடியாது. அதை ஏற்றுக்கொள்ள முயன்றதில் தலைவலி அதிகமானது. அவள் கொடுத்தவுடனே மாத்திரை ஒன்றை எடுத்துப் போட தண்ணீர் கேட்டேன். எடுத்துக் கொடுத்தாள். எத்தனையோ மாதங்களுக்கு முன்பாக வாங்கிய தண்ணீர் பாட்டில். அதில்தான் தண்ணீர் வைத்திருந்தாள். வெறுப்போடு குடித்துவிட்டு அவளிடம் கொடுத்தேன்.

எவ்வளவு என கேட்க பில் போட சென்றாள். வெளியே தெரியாதபடிக்கான கடையாய் இருந்தாலும் அங்கே பில் போட மிஷின் வைத்திருந்தார்கள். என் மொபைல் எண்ணும் பெயரும் கேட்டாள். வெறுப்போடு சொன்னேன்.

என் பெயரைச் சொன்னதும் ஒருகணம் என்னை நிமிர்ந்து பார்த்து கண்கள் அகலச் சிரித்தாள். சத்தியமாக சொல்கிறேன். அந்த கண்ணில் அந்த கணத்தில் தேவதையின் தீட்சண்யம் இருந்தது. என் தலைவலி பறந்து போய் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது. என் மனம் மீண்டும் பரவச நிலையை அடைந்தது.

“என்னாச்சுங்க?” என்றேன். “இல்ல, ஒன்னுமில்ல” என்றாள். “இல்ல சும்மா சொல்லுங்க! என் பேரக் கேட்டதும் சிரிச்சிங்க. ஏன் உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது பேரா?” எனக் கேட்டேன். 

“இல்லங்க” என்றாள். 

“சொல்லுங்க” என வற்புறுத்த, “உங்கள எங்கேயோ பாத்த மாதிரி தெரிஞ்சவங்க மாதிரி இருந்துச்சு, ஆனா, உங்க பேரக் கேக்கவும் நீங்க தெரிஞ்சவங்க இல்லனு கன்பார்ம் ஆயிடுச்சு. உங்க பேருல எனக்கு ஒருத்தரக் கூட தெரியாது” என்றாள். 

அப்படியொன்றும் வித்தியாசமான பெயரெல்லாம் என்னுடையது இல்லை. உங்கள் நண்பர் குழுவில் நிச்சயம் இருக்கக்கூடய வழக்கமான பெயர்தான். அந்த பெயரில் ஒருவர் கூட தெரியாது என்கிறாளென்றால் அவள் தேவதையாக இருப்பாளோ என சந்தேகம் தோன்றியது.

அந்த மாத்திரைக்கு பில் போட்டுக் கொடுத்தாள், அதை வாங்கிக்கொண்டு தாங்க்ஸ் என சொல்லிவிட்டு நகர்ந்தேன், நான் போகும்வரை என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நான் போகும் வரை என்னை அவள் பார்த்துக்கொண்டேயிருக்கவே அவள் தேவதைதானா என சந்தேகம் வலுத்தது.. எனவே அவள் கண்ணில் படாதவாறு அதே சமயம் அவளைப் பார்த்துக்கொண்டேயிருக்கும்படியான இடத்தில் அமர்ந்துகொண்டு அவளை நோட்டமிட்டேன்.

அவள் சாப்பாடு, தண்ணீர் ஏன் இயற்கை உபாதைகளுக்கு கூட வெளியே வரவில்லை. அவள் தேவதைதானா என் கண்டுபிடித்துவிட வேண்டும் என அங்கேயே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கடையில் அவளைத் தாண்டி வேறு யாருமில்லை, அதனால் கடையை விட்டு வெளியே செல்ல முடியாது. தேவதை என்றில்லை சாதாரண பெண்ணாயிருந்தாலும் இப்படித்தான் இருந்தாக வேண்டும். பாவம். ஆனால், இவள் தேவதையாக இருக்க வேண்டும் என என் மனம் விரும்பியது. மாலை கடைமுடியும் வரை அங்கேயே அமர்ந்திருந்தேன், கடை முடிந்து வெளியே வந்தவளைப் பின் தொடர்ந்தேன். ஒருவேளை ரஞ்சித் சொன்ன படியே இடையிலே காணாமல் போவாளோ என்ற ஆர்வத்தில் நடக்க ஆரம்பித்தேன். 

அப்படி அவளைத் தொடர்ந்ததில் ஒருவழியாக உண்மையைக் கண்டறிந்துவிட்டேன். அவள் தேவதையா இல்லையா என. அவள்…………………………………………

பொதுவாக நண்பனின் நண்பனுக்கு நடந்ததாக சொல்லி ஆரம்பிக்கும் கதைகள் கம்பி கட்டும் கதைகளாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை. அல்லது அதில் பாதி உண்மையே இருக்கும். மீதி சுவாரசியத்திற்காக சேர்த்து சொல்வது. அது எத்தனை ஆண்டுகள் பழகியவராக இருந்தாலும் சரி, என் ப்ரண்டோடா ப்ரண்டுக்குனு ஆரம்பிச்சாலே அதில் கொஞ்சமே கொஞ்சம்தான் உண்மை இருக்கும். பலநாள் பழகியவர் சொல்வதே இப்படி என்றால் யாரென்றே தெரியாத அதுவும் என் பெயர் கூட சொல்லாத நான் சொல்வதில் உண்மை இருக்கும் என நீங்கள் எப்படி நம்புவீர்கள். 

இது என் நண்பனின் நண்பன் அவன் நண்பனின் நண்பனுக்கு நடந்ததாக சொன்ன கதை! ஒருவேளை என்னிடம் இப்படி யாராவது சொன்னால் நான் நம்பியிருக்கமாட்டேன். நானே பார்த்துவிட்டதால் இதை நம்புகிறேன். அதற்காக அதை நீங்கள் நம்ப வேண்டுமென்ற அவசியமில்லை!

******

xavierrajadurai3@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button