விளக்கவாதி
எதற்கும் இனி என்னிடம்
இருந்து விளக்கம் கேட்காதீர்கள்.
உங்களுக்கு விளக்கம்
கொடுத்து கொடுத்து
என் மொழியையே வெறுக்க
வைத்துவிட்டீர்கள்.
அலைபேசியின் சிக்னல் மாதிரி
மாறிக் கொண்டிருக்கும்
இந்த வாழ்க்கை
நமக்காக என்ன வைத்திருக்கிறது
என்பது தெரியாமலே
என்னைப் பற்றியும்,
எனக்கான உங்கள் பற்றியும்
நிலைப்பாட்டை நீங்களாகவே
எடுத்து விட்ட பின்னால்
போலியாக,
என் விருப்பத்தைக்
கேட்பது போலப்
பாசாங்கு செய்யாதீர்கள்.
நீங்கள் கேட்டாலும்
விளக்கம் அளிக்கவும்,
பதில் கூறவும்
வார்த்தைகள்
இல்லை இப்போது
என்னிடத்தில்.
00
தங்கையின் அலைபேசியில்
அவள் இல்லாத நேரம் பார்த்து
உன்னுடைய புலன அரட்டையினுள்
அரவமில்லாமல் நுழைந்து
சுயவிவரக்குறிப்பிற்குள்
எட்டிப் பார்த்தேன்.
இந்த மாற்றங்கள் தான்
எத்தனைக் கொடூரமானது,
உயிரைப் பலி கேட்கும்
கடவுளெனும் சைத்தானாக
மாறி,
ரிறில்லியம் பூவையொத்த
அழகோடு அவ்வளவு
உவகையாய் எனை நோக்கி
சிரித்துக் கொண்டிருந்தாய் நீ;
பறிக்க ஆசை தான்;
பறித்தால் இறந்துவிடும்
அத்தாவரமாய்
உன் அக்காளும் அம்மாவும்
நினைவிற்கு வந்தார்கள்.
தங்கை வரவும்
மாளாத துயரத்தோடு
அலைபேசியை
அணைத்து,
நீ சுமக்க வேண்டிய
குற்றவுணர்வின்
உதட்டில் முத்தமிட்டேன்.
00
சூன்யக்காரியாதல்
முதலில் மேகத்திரளாய் இருக்கிறாய்
நீ.
உலகம் உனை சூன்யக்காரி
எனும்போது,
மழையெனப் பொழிகிறாய் நீ.
பின் சுற்றியுள்ள அனைவருமே
சூன்யக்காரியென உனை நம்பத் தொடங்குகையில்,
சிறு பனிக்கட்டியாகி உறைந்து விடுகிறாய்.
இறுதியில் நீயே
சூன்யக்காரி தான் நானென்று
உனை எண்ணி சூன்யக்காரியாக
மாற எத்தனிக்கையில்,
புல்நுனியிலிருக்கும் பனித்துளியின் புகைப்படமாகி
என் வீட்டுச் சுவரின்
ஆணியில்
மஞ்சள் கயிற்றில்
மாட்டப்படுகிறாய்;
அல்லது
சூன்யக்காரி தான் நானென்று
உனை எண்ணி
சூன்யக்காரப் பறவையாகி
கடல் கடந்து விரிகிறாய்.
00