நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க் : 5 – நல்லா இருக்கீங்களா? – சுமாசினி முத்துசாமி
தொடர்கள் | வாசகசாலை
![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/08/kids1-685x405.jpg)
சின்ன வயதில் நான் பரீட்சைகளுக்காகக் காத்து இருந்திருக்கிறேன். அதுவும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு பரீட்சைகள் என்றால் இன்னும் கொண்டாட்டம். அது எல்லாம் படிப்பு மேல் இருந்த விருப்பத்தினால் அல்ல , பரீட்சை முடிந்த கடைசி நாள் அப்பாவும் அம்மாவும் செய்த சிறு செயலினால்! எந்த பரீட்சை முடிந்த கடைசி நாள் அன்றும் அப்பா அலுவலகத்திலிருந்து சீக்கிரம்வந்து குடும்பமாகப் படத்திற்கோ, உணவகத்திற்கோ இல்லை ரொம்ப பெரிய பரீட்சையாக இருந்தால் இரண்டிற்கும் சேர்த்தோ அழைத்துச் செல்வார்கள். இந்த இரண்டாயிரத்தின் தொடக்க ஆண்டுகள் வரை நினைத்த நேரத்தில் உணவகத்திற்குச் சென்று உணவருந்துவது என்பது மிகவும் அரிதான ஒன்றாகத் தான் இருந்தது. நானும் என் அக்காவும் எங்கள் வீட்டில். அதனால் வருடத்திற்கு இரு பிறந்தநாள் உணவக நாட்கள் தான் கிடைக்கும். இதற்காகவே, இன்னும் நிறைய உடன்பிறப்புகள் இருந்திருக்கலாம், இன்னும் நிறையப் பரீட்சைகள் இருக்கலாம் என்று நினைத்தது இன்று உதட்டில் ஒரு புன்னகையைத் தான் கொண்டுவருகிறது.
திருநெல்வேலி புறநகர் பகுதியில் நாங்கள் வசித்தோம். அங்கிருந்து ஊருக்குள் வரும் பொழுது, கீழே அந்த தாமிரபரணியையும் மேலே அந்த சுலோச்சன முதலியார் பாலத்தைப் பார்த்ததும் ஒரு சந்தோசம் சிறுவயதில் வரும். தொண்ணூறுகளில், அந்த சுலோச்சன முதலியார் பாலத்தையும் இரட்டை பாலத்தையும் தாண்டினால் தான் பெரிய கடைகள், சினிமா தியேட்டர்கள், நல்ல உணவகங்கள் எல்லாம். எங்கே செல்ல வேண்டும் என்ற தேர்வு செய்வதைப் பெற்றோர், அக்காவிடமும் என்னிடமும் விட்டுவிடுவார்கள். எனக்கு எப்பொழுதும் ஒரே தேர்வு தான்…அது துணி எடுக்க என்றால் போத்திஸ், உணவகம் என்றால் ஆர்யாஸ், கோவில் என்றால் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டிலுருந்து மீனாட்சிபுரம் செல்லும் வழியில் உள்ள சின்ன பெருமாள் கோவில். காரணம் மிக எளியது- இந்த இடங்களில் வேலை செய்துகொண்டிருந்த குழந்தைகள் ஆடைகள் செக்க்ஷன் மேனேஜர், உணவகத்தில் பிரிவில் வேலை பார்த்த சிலர், அப்போதிருந்த கோவில் அர்ச்சகர்! இவர்கள் அனைவரும் ‘என்ன வேண்டும்?’ என்று மட்டும் கேட்காமல் அங்குச் செல்லும் நிமிடங்களில் எங்கள் குடும்ப உறுப்பினர்களாய் ஒவ்வொரு முறையும் மாறியதால்தான். ஒவ்வொரு முறையும் என் தேர்வுகள் இந்த மூன்று இடமாகத்தான் இருந்தது. வீட்டில் அனைவரும் அலுத்துப்போகும் அளவிற்கு மீண்டும் மீண்டும் இவையே என் தேர்வுகளாய் இருந்தன. கொஞ்சம் மாற்றி ஆர் எம் கே வியும் (RMKV), ஜானகிராமும் மற்ற கோவில்களுக்கும் போகலாம் என்றால் அது என் தேர்வு இல்லாத நாட்களில் தான் அமைந்தது.
இங்குக் கடைகளுக்குச் சென்றால் ‘இன்னைக்கு நல்லா இருக்கீங்களா? நான் உங்களுக்கு ஏதாவது உதவ வேண்டுமா?’ (How are you today? May I help you?) என்று ஒவ்வொருதடவையும் குரல்கள் கேட்கும் என்று சென்ற அத்தியாயத்தில் பேசி இருந்தோம்.இங்குக் கடைகளில் வேலை செய்பவர்கள் மட்டுமல்லாது, சாலையில் கடந்து செல்லும் பத்தில் ஒருவர் கூட உங்களைப் பார்த்து இப்படிக் கேட்பார்கள். பெரும்பாலும் பதில்களை எதிர்பார்த்து இந்த கேள்விகள் கேட்கப்படுது இல்லை. முன்னாள் நிற்கும் ஒரு ஜீவராசியை மனிதனாய் ஒப்புக்கொள்கிறேன் என்பதின் அணு அளவு வெளிப்பாடு தான் இந்த கேள்வி. இதை பேட்டரி முடியப்போகிற ரோபோக்கள் தன் மிகக்குறைந்த ஒலி அளவில் கேட்பது போலத்தான் பலர் கேட்கவும் செய்வார்கள். இருந்தும், இந்த குரல்களுக்கு நடுவே சிலசமயம் பதில்களும் கேட்கும். ஆனால் உரையாடல்கள் என்பது இருப்பதே இல்லை, அல்லது மிக மிக அரிது.
புதிதாக இந்த நாட்டுக்கு வந்தவுடன் இப்படிக் கேட்கப்படுவது மிக நல்ல விஷயமாகத் தோன்றி அதற்கு ரொம்ப கிரம சிரத்தையாகச் சிரித்து நம் மக்கள் பலர் பதில் சொல்லுவோம். போகப் போக, இந்தக் கேள்வியை மதிப்பதைப் பெரும்பான்மையானோர் விட்டு விடுகின்றனர். நான் இன்றும் அதில் வகை தொகை எல்லாம் வைப்பதில்லை. நல்ல சிரித்து ‘ரொம்ப நன்றி, நீங்களும் நல்லா இருக்கிறீர்களா’ என்று விசாரித்து, இன்னும் கொஞ்சம் விட்டால், ‘ சாப்டீங்களா? உங்க வீட்ல இன்னைக்கி என்ன குழம்பு, மன்னிக்கவும் சாண்ட்விட்ச்?’ என்று கூட கேட்டு அவர்களின் பேட்டரியை கொஞ்சம் சார்ஜ் ஏற்றி விடுவேன்.
ஒரு முறை, இங்குப் பிறந்து வளர்ந்த நண்பரின் குழந்தை, “மிஸஸ் சுமா இவ்வாறு அவர்களுக்கு நீங்கள் பதிலளித்தால் தங்களைப் பற்றி குறைவாக நினைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது” என்று அமெரிக்க ஆங்கிலத்தில் நுனி நாக்கில் எனக்கு உணர்த்தியது. நானும் அதற்கு, “இருக்கட்டும் கண்ணா! கூடவே கொஞ்சம் மனிதநேயமும் உள்ளவர் என்று நினைத்துக் கொள்வார்கள், தெரியுமா?” என்றேன். தோளைக் குலுக்கிவிட்டு, “ஐ விஷ் (I wish!)!” என்று நம்பிக்கையே இல்லாமல் கடந்துசென்றது அக்குழந்தை. அக்குழந்தையின் செய்கை மனிதர்கள் மீதும், மனிதத்தின் மீதும் இருக்கும் அவநம்பிக்கையா இல்லை உணர்ச்சிகளைக் காட்டுவது தவறு என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்படுவதினாலா என்ற பெரும் கேள்வியை என் மனத்தில் விதைத்தது. பின்னர் சின்ன உரையாடலுக்குப் பின், தெரியாத எவர் மீதும் சிறிதும் அக்குழந்தைக்கு நம்பிக்கை இல்லை என்பது விளங்கியது. தாத்தா பாட்டி அத்தை மாமா போன்ற பெரும்பான்மையான சொந்தங்கள் உட்பட!
நான் குழந்தையாய் இருக்கும் பொழுது சொந்தமாகவும் நண்பர்களாகவும் இருந்தவர்கள் தவிர்த்து, செல்லும் இடங்களில் எல்லாம் பல அண்ணன்கள், அக்காக்கள், அத்தைகள் மாமாக்கள், தாத்தாக்கள் பாட்டிக்கள் இருந்தார்கள். சாப்பிடச் சென்றாலோ, பொருள் வாங்க கடைக்குச் சென்றாலோ உரையாடிக்கொண்டே இருந்தோம். அவர்களுக்குத் தெரிந்ததை நமக்கும் நமக்கு தெரிந்ததை அவர்களுக்கும் பரிமாறிக்கொண்டே இருந்தோம். ஊரில் எங்கோ ஒரு உதவி வேண்டும் என்றால் யாரோ ஒருவர் உதவ இருந்தார்.
கொஞ்சம் விலை உயர்ந்த துணியின் விலையால் அப்பாவின் புருவம் உயர்ந்தால், ‘பாப்பா, இது வேண்ணாம் மா. இன்னொன்னு புதுசா வந்திருக்கு. அதுதான் நல்ல சேல்ஸ். இரு, அத நான் காட்டுதேன்’ என்று சொன்ன மாமாவும், ‘எல்லா ஐஸ்கிரீமும் முடிஞ்சி போச்சே லே’ என்றும் ‘இந்தா பிள்ளைக்கு புடிச்ச மாதிரி சோலாப்பூரி, அம்மாவுக்கு கொதிக்க கொதிக்க காப்பி’ என்று தன் வீட்டில் வரவேற்றது போல் உணவு பரிமாறிய அண்ணன்களும், ‘ நியூ ட்டூ ரூபி காயின்! ஸ்வாமி பாதத்தில வைச்சு உனக்காக ஸ்பெஷலா சேவிச்சிருக்கேன். கைலயே வைச்சீக்கோ… எல்லாம் ஜெயம் தாண்டி நோக்கு’ என்று மதத்தின் சாரமான அன்பைப் பரப்பிய பெருமாள் கோயில் பூசாரியும் தான் இன்று வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் இருக்கும் நம்பிக்கையை விதைக்க ஆரம்பித்தனர்.
இதில் சில தொந்தரவுகளும் உண்டு என்று உடனே கொடிப்பிடிக்க வேண்டாம். நான் மறுக்கவேயில்லை. இருந்தும், அவையும் மற்ற ஆறுதல்களின் கொடையினால் சீக்கிரமே கடந்துவிட கைகொடுத்தது. அன்பென்பது அறத்தின் நீட்சியாக நினைவுகளை நிறைந்துள்ளது.
இந்த ஊரில் நல்லா இருக்கீங்களா என்று மனதார கேட்டால் இப்படி ஒரு சோதனையா என்று ‘எப்படி இருந்த நம்ம இப்படி ஆயிட்டோமே’ என்று ஏதோ ஒரு தனிமை மனநிலையில் நொந்துக்கொண்டேன். சரி, ஊருவிட்டு பிழைக்க வந்த நமக்குத்தான் இந்த கதி இந்த ஊரில் இருப்பவர்களுக்கு எப்படி என்று தெரிந்துகொள்ள ஆவலாய் இருந்தது. நமக்கு வாய்த்த கிளையண்ட்(Client) எல்லாம் நல்லவர்கள். கணினி செயலிகள் வடிவமைக்கத் தேவைக்குறிப்புகள் (Requirements) தான் ஒழுங்காகச் சொல்ல மாட்டார்கள். இதற்குக் கூட பதில் கூறாவிட்டால் என்ன அர்த்தம். ஐம்பதைத் தொட்டுக்கொண்டிருந்த அல்லது தாண்டிய நான்கு வெள்ளை அமெரிக்க கிளையண்ட்களிடம் இதை மதிய உணவு நேரத்தில் ஒரு விஷயமாகவே எடுத்துப் பேசினேன். என்னைவிட நொந்து அவர்கள் பேசினார்கள்.
அவர்கள் பால்யத்தில் எப்படி யாரோ ஒரு கடைக்காரரோ, ப்ளம்பரோ, கார் மெக்கானிக்கோ பெயர் சொல்லி கூப்பிடத்தில் ஆரம்பித்து ‘அங்கிள்’ என்றழைக்காவிட்டாலும் குடும்பத்தோடு நெருங்கி இருந்தனர். இன்று அப்படியான நம்பிக்கைகள் மனிதரிடத்து மலிந்துவிட்டது என்று நால்வரும் வெவ்வேறு அளவு கோள்களில் பேசினார்கள். தற்பொழுது வெகு சில கடைகளிலேயே தொடர்ந்து செல்லும் போது இப்படி பழகின முகங்கள் தற்போது கிடைப்பதாகவும் இதற்காகவே ‘சிறு உள்ளூர் வணிகத்தினை’ (Local small businesses) சில சமயம் காசு அதிகம் என்று தோன்றினாலும் ஊக்குவிப்பதாகவும் இருவர் கூறினார்கள். மேலும் இதற்காகவே மிகவும் சிறிய ஊர்களில் குடியேற வேண்டும் என்றும் கூறினார்கள்.
தொழில்நுட்பத்தின் கருணையில் இன்று கூகுளும், வாட்ஸாப்பும், முகநூலும் மேலும் பல பிரத்யேக தளங்களும் இந்த வெற்றிடத்தை தன் மாய கைகளால் நிரப்புகின்றன. தகவல்களினால் வெற்றிடங்கள் நிறைந்தாலும் மனங்களில் அவை இன்னும் பெரும் பள்ளங்களாய்த் தான் உள்ளது.
நம்பிக்கைக்கும் அன்பும் பேசித்தான் வெளிப்படுத்த வேண்டுமா என்ன? பேசாமலும் அவர்கள் அனைவரும் எனக்கு ஒரு பொது மரியாதையை உணர்த்திவிட்டார்கள. அவர்களைப்போல் அல்லாது வேறு நிறத்தில் உள்ள, வேறு சாயலில் ஆங்கிலம் பேசும், வேறு கலாச்சார மரபில் வந்த என்னிடம் அவர்கள் மரியாதை நிமித்தம் கூறாத இன்னும் ஒரு கருத்து இருந்தது. அது, தன் உருவ நிறத்தைப் போல், தன் பொருளாதார நிலையைப் போல் இல்லாதவர்களை நம்ப எவர் மனமும் உடனேயே இடம் கொடுப்பதில்லை என்ற அவர்களின் உள்ளுணர்வை!
அன்று பேசியபின் அதுபற்றி யோசித்த பொழுது நமக்கும் அதே உணர்வு இருந்துள்ளது எனபது விளங்கியது. சிறு திருட்டுக்குக் கூட நாம் கை காட்டியது ஊருக்குள் புதிதாக குடியேறிய எளிய பக்கத்துக்கு ஊர்க் காரர்களைத்தானே. அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் தொலைந்த பொழுது நாம் பெரும்பான்மையாகக் கைகாட்டியது வடக்கு நோக்கித் தானே. அதைப்போல், இங்கு தெற்கே கைகாட்டி சுவர் கட்டுவேன் என்று சொல்பவர் ஒன்பது பொய்களை அடுக்குகிறார் என்று தெரிந்தும் அந்த இனிய பொய்களை நம்ப விரும்புகின்றனர். அவர் நாட்டு விசாக்களை அவர் முடக்குகிறார் என்ற செய்தி நம்மை பதற்றமடைய வைக்கிறது, மாறாக அதே செய்தி இங்கு ஓட்டு வங்கியாக பெரு ஊக்கம் அடைகிறது.
இன்னுமொரு தருணத்தில் பொதுவாக அவர்களுக்கு இந்தியர்கள் மேலுள்ள அபிப்பிராயத்தைப் பற்றிப் பேசினோம். நமது உணவு, உடை, கல்யாண மரபு பற்றிய அவர்களின் நினைப்புகள் பற்றிக் கேட்டுக் கேட்டு நமக்கே புளித்துப் போய் விட்டதால் அவை தவிர வேறு அபிப்பிராயங்கள் பற்றிக் கூற வேண்டும் என்று கேட்டிருந்தேன். முதலில் அவர்கள் கூறியது இந்தியர்களின் புத்தி திறனைப் பற்றி! அவர்கள் வேலை பார்த்த, பார்த்துக்கொண்டிருக்கும் நிறுவனங்களில் இந்தியர்கள் எத்தனை பேர் நல்ல பதவிகளில் இருக்கின்றனர் என்று கூறினார்கள். பின்னர் குழந்தைகளை படிப்பில் எவ்வாறு முயற்சி செய்து குழந்தைகளை முன்னிறுத்தி, அவர்களுக்கு ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கின்றனர் என்று வியந்தும், தங்கள் குழந்தைகளோடு ஒப்பிட்டு, பயந்தும் கூறினர்.
பின்னர் கொஞ்சம் நண்பர்கள் போல் சாதாரணமாக உரையாடின பொழுதில் ஒருங்கிணைந்த நம் சத்த அளவின் திறனை வியந்தனர்!!! (அதாவது, பொதுவாக கொஞ்சம் அதிகமாகக் கத்தி நாம் பேசுகிறோம் என்று நம்மைக் கிண்டல் அடித்தனர்)! பார்க்கோ பீச்சோ இந்திய குடும்பங்களின் சத்தம் தனியாக தெரிவதாக கூறினர். வளர்ச்சிக்காய் நாம் கொடுக்கும் விலை நினைவில் தங்கியுள்ள மனதிற்கு நெருக்கமான மகிழ்ச்சி சுவடுகளோ என்று எண்ணி இருந்த எண்ணம் அந்த நொடி மாறியது.
உரையாடல் என்ற ஒன்று நிகழும் வரை, உணர்ச்சியின் பெருக்கில் அது சத்தமாக நிகழும்வரை, நம்பிக்கைகளும், அன்பும், நினைவுகளும் விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். என் பால்யத்தில் பார்க்காத இன்னுமொரு ரூபத்தில் இங்கு அவை நடக்கின்றன. குழந்தைகளைப் பேசாதே, உணர்ச்சிகளை காட்டாதே என்று கூறாமல் இருப்பது மட்டும் நாம் செய்ய வேண்டியது.
அனைத்தும், அப்படி நடந்துகொண்டே இருக்கும் அந்த தினம் வரை, எல்லாம் நலம்!