தொடர்கள்
Trending

நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;9 – ’காற்புள்ளியில் தொக்கிநிற்கும் பயணங்கள்’ – சுமாசினி முத்துசாமி

தொடர்கள் | வாசகசாலை

கோடையில் வத்தல், அப்பளம் போன்றவற்றைப் போட்ட போன தலைமுறை பாட்டிகளை, பெரியம்மாக்களை நீங்கள் கவனித்ததுண்டா? நம்மூரில் வெயில் கொஞ்சமும் குறைச்சலில்லாமல் சுட்டெரிக்கும். ஆனாலும் அந்த சித்திரை, வைகாசி மாதங்களில் வத்தல், அப்பளம், வடகம் போட்டுச் சேர்த்து வைக்கவில்லை என்றால் ஏதோ பணத்தை வீண் செய்வதுபோல் ‘வெயில் வீணாகுது’ என்று புலம்புவர். வெயில் வீணாகுதே என்ற மன அழுத்தத்தில் குறுக்க நெடுக்க வரும் அவர்களின் செத்துப்போன மாமியாரில் ஆரம்பித்து, இன்னும் மணமாகியே வீட்டுக்குள் வராத பேரனுக்குப் பார்த்து வைத்திருக்கும் மணப்பெண் வரைக்கும் குறைச்சல் இல்லாமல் அர்ச்சனை நடக்கும். நம்மூரிலாவது பாட்டிகள் மட்டும்தான். அமெரிக்காவில் கோடையில் பல பயணங்கள் மேற்கொண்டு வெளியே சுற்றவில்லை என்றால் ‘ஐயோ, ஐயோ வெயில் போச்சே’ என்று சிறுசு முதல் பெருசு பலரும் அதிகமாகவே புலம்புவர்.
அமெரிக்க வாழ்வு என்பது ‘வாரம் ஐந்து நாள் வேலை, வார இறுதியில் முழுவதும் பார்ட்டி, வெளியே ஊர் சுற்றுவது’ போன்ற பிரமை உள்ளது. ”சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது?, மெஷின் எல்லாம் மனிதர்கள் ஆகச் சொல்லுது” என்று சொல்லிச் சொல்லி மனதில் பதிய வைத்துக்கொண்டே இருக்கப்படுகிறது. நிம்மதியாக இருந்தாலும், வெளியே செல்வதுதான் சரி என்ற எண்ணவோட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. அது முழுவதும் உண்மை இல்லை என்றாலும் சராசரி அமெரிக்கக் குடும்பம் தன் வழக்கமான வேலைகளைத் தளர்த்தி மாதம் ஒரு முறையாவது வெளி இடங்களைப் பார்க்கச் செல்வதாக அறிக்கைகள் கூறுகின்றன.
கோடை என்றால் பீச்சுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மலையேற்றங்கள், படகுகளில் முகாமிடுவது, வனங்களுக்குள் பாதுகாப்பாக கேம்பிங், பார்பீகியூ, படகு சவாரி என்று தேர்வு செய்ய பட்டியல் கொஞ்சம் பெரிது. கேம்பிங் எனப்படும் வனங்களில் கூடாரம் அமைத்துத் தங்குவது இங்கு மிகப் பிரபலம். ஆண்டுதோறும் 40 மில்லியன் மக்களுக்கு (ஆறு வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை) மேல் இங்கு பதிவுசெய்யப்பட்ட இடங்களில் கேம்பிங் செய்கின்றனர். இது போக, பதிவு செய்யாமல், காடுகளுக்குள்ளும், Recreational vehicle (RV) எனப்படும் கேரவன்களிலும் கேம்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை தனி.

கேம்பிங் என்பது ஒரு புது அனுபவம்தான். காட்டுக்கு அருகிலோ, காட்டுக்குள்ளோ சென்று கூடாரம் போட்டுத் தங்குவதா என்று முதல் முறை இதைப் பற்றி கேட்டவுடன் ஒரு பெரிய மலைப்பு வந்தது. ஆனால் ஒரு பைக்குள் அடக்கக் கூடிய பிளாஸ்டிக் கூடாரம், கூடாரத்தில் கீழே போடக்கூடிய ஏர் பெட், பூச்சி நம்மைக் கடிக்காமல் இருக்கப் பலவகை கிரீம்கள், சமைக்கச் சிறிய சைஸ் முதல் பார்பீகியூ பண்ணும் அளவுக்கு பெரிய அடுப்புகள், உட்கார நாற்காலிகள், டேபிள்கள், ஒரு முறை உபயோகித்துத் தூக்கி எறியக் கூடிய அளவிற்கு சமைக்கும் சாதனங்கள் முதல் சாப்பிடும் தட்டு முட்டு வரை எல்லாமே இங்கு கிடைக்கின்றது. ஒரு முறை டெண்ட், நாற்காலிகள், டேபிள்கள், சமையல் அடுப்பு போன்றவற்றை வாங்கிவிட்டால் சில பல வருடங்கள் வரை உபயோகிக்கலாம். பாத்ரூம் மட்டும் பொதுவானது. இங்கு மிகப்பெரிய ஆசுவாசம் பெரும்பாலான பாத்ரூம்களின் சுத்தம். அதனால் அதுவும் பெரிய பாடு இல்லை. இன்னும் நம் மக்கள் முழுவதுமாக புகுந்து விளையாடாத ஒரு இடம் கேம்பிங் என்று நான் நினைக்கிறேன். இதுவரை எந்த இடத்திற்கு வெளியே சென்றாலும் இன்னொரு இந்தியச் சகோதர சகோதரியை, நம் பங்காளிகளைப் பார்க்கலாம். ஆனால் கேம்பிங் இடங்களில் அப்படிப் பெரிதாக பார்க்க முடிவதில்லை.
இந்த வருடம் கொரோனா கால கட்டுப்பாடுகளால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் வெளியில் செல்வதை சுருக்கி விட்டனர். மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நல்ல குடிமக்களாக அடுப்பறையில் இருந்து ஹாலுக்கும், ஹாலில் இருந்து படுக்கும் அறைக்கும் பயணப்படுகின்றனர். சுருக்கியவர்கள், இந்தக் கோடை சுற்றுலா பட்டியலில் பலவற்றைத் தவிர்த்து அருகில் உள்ள மலைகளில் மலையேற்றங்களுக்கோ, தேசிய/ மாநில பூங்காக்கள் என்றழைக்கபடும் வனம் சார்ந்த சூழலில் நடைப்பயிற்சியோ, ஒரு நாள் பயணம் போலோ மேற்கொண்டதுதான் இந்த வருடக் கணக்கில் சேர்ந்தது.

அமெரிக்காவில் இப்பொழுது இலையுதிர் காலம் ஆரம்பித்து விட்டது. கோடையின் பின் ‘ஃபால்’ பருவம் (Fall season). இது குளிர் காலத்தின் தொடக்கம். கொஞ்சம் கொஞ்சமாகக் குளிரின் தன்மையும் காற்றின் அடர்த்தியும் அதிகமாகும் நாட்கள் இவை. ஏற்கனவே வடக்கு மாகாணங்களில் மக்கள் உடம்பின் வெப்பைத்தை தாங்கும் ஸ்வெட்டேர்கள் ஜாக்கெட்கள் அணியத் துவங்கி விட்டனர். தெற்கு மாகாணங்கள் இன்னும் சில வாரங்கள் தாங்கும். இந்தக் கோடை முடிவதென்பது, வீடடங்குவது போன்றது. நினைத்த நேரத்தில் நினைத்த உடைகளில் கவனமற்று வெளியே செல்ல முடியாது. இலையுதிரோடு சேர்ந்து கொஞ்சம் சளி, கொஞ்சம் காய்ச்சல், தூசி ஒவ்வாமை உள்ளவர்களுக்குக் கொஞ்சம் அதிகமாகத் தும்மல் என்று உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டிய ஆரம்பக் காலம்.
இந்த ஃபால் பருவத் தொடக்கத்தில், இலைகள் சூரியனின் வெப்பம் இல்லாது தன் நிஜமான பச்சை நிற இயல்பை இழந்து மஞ்சள், ஆரஞ்சு, பல தரப்பட்ட பழுப்பு நிறங்களில் தன்னை மாற்றி உதிர்ந்துவிடத் தயாராகும். இந்த ‘ஃபால் கலர்ஸ்’ பார்ப்பதற்காக மக்கள் மலைப்பிரதேசங்களுக்குச் செல்வர். இன்னொரு உயிர் உதிர்ந்து போவதை ரசிக்கும் மனம் நம்மிடையே எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவை மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையை மறைந்து உணர்த்துகின்றன. அந்தப் பெரு நம்பிக்கையைக் காணிக்கையாகப் பெற மக்களும் ‘சுற்றுலா’ என்ற பெயரில் இவற்றைப் பார்த்து களிக்கின்றனர். இந்த இலைகளின் நிறங்கள் ஆகப் பெரும் போதை. பார்க்கப் பார்க்க இன்னும் அதிகமாகக் காண மனம் ஏங்கும்.
ஆனால், இந்த இலையுதிர் காலத்தோடு, பூசணியை வைத்து இவர்கள் பண்ணும் அழும்பு – தாங்க முடிவதில்லை! பூசணி மசாலா (Pumpkin spice) என்று ஒன்று- பட்டை, லவங்கம், ஜாதிக்காய், சுக்கு/இஞ்சி வைத்துச் செய்வது. காபியில் ஆரம்பித்து கேக் வரை எல்லாவற்றிலும் இந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் கலந்தடித்து விற்பனை செய்வர். இந்த காபியில் இவர்கள் கலக்கும் இந்த மசாலாவை மட்டும் அண்ட உலகத்தின் கடைசி தீர்ப்பு நாள் அன்று கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நரசுஸ், லியோ, கோத்தாஸ், ப்ரூ, நெஸ்கஃபே என்று நம் இரத்தத்தில் பாதி திரவம் காபியால் ஆனது. இதை இவர்கள் குழப்புவது என்பது பில்டர் காபியை அமிர்தம் போல் இரு கை ஏந்தி வாங்கி, முதல் வாய் உறிஞ்சியதும் ஆத்மாவை விட்டு ஆன்மா மேலே பறக்க ஆரம்பித்து, திரிசங்கு சொர்க்கத்திற்கு அருகில் சென்று காபி தீர்ந்து விட்டதே என்று வருத்தப்படும் நம்மைப் போன்றவர்களுக்குச் செய்யும் பெருங்கொடுமை. ஆத்மாவும், ஆன்மாவும் ஒன்றா வேறு வேறா என்று கேட்டால் நீங்கள் ஆண்டி ‘காபி’ இந்தியன். கிளம்பி சீனாவிற்கு போய் விடுங்கள். அங்கு தான் வெறும் டீ நிறைய குடிப்பார்கள். அந்தப் பூசணி மசாலா திரவத்தை ஒரு முறை ஒரு அமெரிக்கர் முன்பு குடித்து விட்டேன். கபசுர குடிநீரை முதல் முறை குடிக்கும் பொழுது நம் எல்லோருக்கும் இப்பொழுது மாறுவது போல் என் முகம் மாறி விட்டது. இன்றும் அதை அவர் கேலி செய்து கொண்டிருக்கிறார். அதன் பின் அவர்களுக்கு நம் காபி, டீ பற்றி நான் ஒரு பெரிய கதா காலட்சேபம் பண்ணினது தனிக்கதை.

அந்தக் கொடூரக் கதையை விட்டுவிட்டு மீண்டும் நாம் பயணங்களுக்கு வருவோம். இதுபோக, பருவத்திற்கு ஏற்ப பண்ணைகளுக்கும், விலை நிலங்களுக்கும் சென்று ஆப்பிள், பீச், செர்ரி முதல் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் போன்ற பலவற்றை நேரடியாக நாமே பறித்து, எடை போட்டு வாங்கிச் செல்வது என்பதும் இங்கு உண்டு. இது ஒரு வார இறுதி சுற்றுலா போலத்தான். இங்கு பல விஷயங்கள், முன்பே நாம் பேசினது போல் ‘எல்லாம் மார்க்கெட்டிங் மயம்’ தான். முழுவதும் நகரமயமாக்கப்பட்ட சூழலில் நகரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி, ஒரு மாடு, இரண்டு ஆடு , இரண்டு மூன்று கோழி சில சமயம் இதற்கு மேல் இரண்டு வான் கோழி, செம்மறியாடு இன்னொரு தினுசில் மாடு என்று வைத்து விட்டால் அது பண்ணை விலங்குகள் கூடாரம். இதைப் பார்க்க வண்டி கட்டிக்கொண்டு ‘பார்ம் பெஸ்டிவல்’ என்று மக்கள் போவது இங்குப் பொய்மை கலந்த நிதர்சனம்.
இதற்கும் மேல், அந்த மிருகங்களுக்குப் பக்கத்தில் அவற்றுக்கு உணவு வாங்கி நாம் புகட்டச் சிறு சிறு பெட்டிகள் போல் ஒன்று இருக்கும். 25 செண்டுகள் (அதாவது கால் டாலர்) முதல் ஒரு டாலர் வரை கொஞ்சத்திற்கு கொஞ்சுக்கோண்டு தானியம் அல்லது நான்கு புல் உள்ள கட்டிற்கு விலை. இதை குழந்தைகள் வாங்கி அங்குள்ள ‘அணிமல்ஸ்க்கு’ கொடுப்பர். எனக்கென்னமோ, நம்மளைதான் ஐந்தறிவுள்ள அணிமல்ஸ் மாதிரி இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றும்.
இலையுதிரின் பின் குளிர் காலம். இது பண்டிகைகள் காலம். ஹலோவீன், நன்றி நவிலும் நாள் (Thanksgiving day), கிறிஸ்துமஸ், புது வருடப்பிறப்பு என்று குடும்பத்தோடு, சுற்றம், சமூகத்தோடு சேர்ந்து கொண்டாட வழிவகுக்கும் விதத்தில் இருக்கும். இங்கு அத்தையுடைய கொளுந்தனாரோட பேரனுக்குக் காது குத்து, அண்ணியுடைய சித்தப்பா பையனுக்கு மொட்டை போன்ற குடும்ப விசேஷங்கள் இல்லை. ”அவுங்கள எங்களுக்குப் பத்து வருஷமா தெரியும்- அவங்க பெரியப்பா இவங்க வீட்டுக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தாங்க, எங்களையும் அழைச்சிட்டு ‘கண்டிப்பா வந்துரணும்னு’ சொல்லிட்டுப் போனாங்க…” போன்ற நிகழ்வுகள் இல்லை. அதன் மூலம் வரும் சொந்த பந்த சுற்றங்கள் இல்லை. இந்த விசேஷங்களில் சுணக்கம் கொள்ளக் கடுகளவு விஷயங்கள் உண்டு. இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும், தனிமரமாக நிற்கிறோமோ என்ற எண்ணத்தைத் தவிர்த்திடும் பெருவாழ்வு நம்முடையது. நம்மூர் வாழ்க்கை, கொண்டாட்டங்களோடு பிணைந்தது.
பிள்ளையார் சதுர்த்திக்கு அடுப்பில் ஏறும் பெரிய சட்டி வரிசையாக வெல்லப்பாகு எடுத்து, கிண்டி, கிளறி, பொரித்து என்று அடுத்தடுத்த பண்டிகைகளுக்கு அப்புறம் பொங்கலுக்கு வடை சுட்ட பின் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிப்போமே, அது போலும் இங்கு இல்லை. ஊரோடு இருக்கும்போது செய்ததில் பாதிதான் சென்னை என்ற பெரு நகரம் செய்ய வழிவிட்டது. அதிலும் கால்வாசிதான் அமெரிக்காவில். அதிலும் நூற்றில் ஒரு பங்கு தான் இந்த அமெரிக்கர்களுக்குச் சாங்கிய கணக்கு. நன்றி நவிலும் போது வான்கோழியை முழுதாக ரோஸ்ட் செய்வதும், கிறிஸ்துமஸ் என்றால் எக்நாக் (Eggnog) குடிப்பதும் தான் ஆகப்பெரிய சாங்கியம்!

வாழ்க்கை முறையில் எதுவுமே தப்போ சரியோ இல்லை. இது மண்ணை ஒற்றிய வாழ்க்கை முறை. அவ்வளவுதான். ஆங்கில நாவல்கள் , படங்களில் ‘டோன்ட் ஜட்ஜ்’ (Don’t judge) என்ற சொற்றொடர் வந்துகொண்டே இருக்கும். மனதின் விசாலத்திற்கு வாசல் இந்த ‘நான்-ஜட்ஜ்மென்டல் Non-judgemental’ நிலைதான். இங்கு வந்த பின் கற்றுக்கொண்ட மிக மிக முக்கியமான வாழ்க்கைக் கல்வி இது. கண்டிப்பாக நம்மூரில் நாம் கூட்டாகக் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடமும் கூட.
கொரோனாவின் பாதிப்பால் பூங்காக்கள், பீச்சுகள் போன்றவை சில மாதங்கள் மூடப்பட்டன. கோடையில் இது நடந்ததுதான் இன்னும் அதிக வருத்தம் இங்குள்ளவர்களுக்கு. கோடையின் வரமான சிறு, பெரு பயணங்கள் தடைப்பட்டன. ‘ஃபால் கலர்ஸ்’ பக்கத்து மரத்தில் பார்த்துக் கொள்வோம் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்து விட்டது. கொரோனாவின் இரண்டாவது அலை என்று வந்தால் கிறிஸ்துமஸ்க்கு கூட குடும்பத்தை, பெற்றோரைப் பார்க்கப் போக முடியாது என்று சிலர் இப்பொழுதே பேச ஆரம்பித்து விட்டனர். பயணங்களால் சூழ்ந்த அமெரிக்க வணிக சந்தையும், நகர வாழ்வும் இன்று வீடுகளில் ‘பிரேக் டௌன்’ ஆகி நிற்கின்றது.
நாம் பண்டிகைகளுக்காகவோ, குடும்ப விழாக்களுக்காகவோ அல்லது வழிப்பாட்டுத் தலங்களை நோக்கியோதான் பெரும்பாலும் பயணப்படுகிறோம். அமெரிக்காவில் பயணங்கள் ஓய்வெடுப்பதற்காகவோ, வாழ்வின் கடுமைகளைத் தவிர்ப்பதற்காகவோ அல்லது சாகசங்கள், உடல் உழைக்க உடற்பயிற்சி நோக்கியோ அமைகின்றன. இதற்குப் பிறகுதான் பெரும்பாலும் குடும்பமும், சாமியும். இந்த மண்ணின் கலாச்சாரத்தில் கொண்டாட்டங்கள் எனப்படுவது குடும்பச் சூழலில் இயற்கையாகவே குறைவாக இருப்பதால், அன்றாட நிகழ்வுகளைக் கொண்டாட்ட தினங்கள் ஆக்கிவிட்டனர். எப்படியோ பயணங்களும், பண்டிகைகளும் நம்மை அன்றாட காலச்சுழியில் இருந்து விடுவிக்கும் என்றால், அவை தேவைதான். மனத்தின் இலக்கு என்பது மகிழ்ந்து, சுகித்து, நிறைவாக, உற்சாகத்தோடு வாழ்வது மட்டும் தானே!

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button