தொடர்கள்
Trending

நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;16 சங்கங்கள் வளர்க்கும் ‘டமில்’ – சுமாசினி முத்துசாமி

தொடர் | வாசகசாலை

நிகழும் மங்களகரமான ‘கோவிட்’ ஆண்டில், எந்த பண்டிகையும் கொஞ்சம் குறைவாகத்தான் ஜொலிக்கின்றது. இருந்தும், பண்டிகை தினங்களில் மட்டுமல்லாது,  நினைத்த நேரத்தில் நம் சாப்பாட்டுத் தட்டுகளில் பலகாரங்கள் இருந்தால், அதை நினைத்த அளவிற்கு உண்ணும் அளவில் ஆரோக்கியமும் இருந்தால் ஆசிர்வதிக்கப்பட்ட பலருள் நாமும் ஒருவர். சில நேரங்களில் செவிக்கு, அறிவுக்கு உணவைத் தள்ளி வைத்துவிட்டு, வயிற்றுக்கு மட்டும் சிறப்பான வகைவகையான பலகாரங்கள் ஈயப்பட்டு உன்னத வாழ்வு வாழும் பெரும்பான்மை தமிழ்ச் சமூகத்தின் துளிதான் நானும். இந்தப் பொறப்பை ரசித்து ருசித்து வாழ்வதை விட என்ன நன்றிக்கடன் நம் வாழ்வுக்குச் செலுத்தி விட முடியும்? அதுவும் தீபாவளியில் வகை வகையாக ஆரம்பித்து, அடுத்து நன்றி நவிலும் நாள் (Thanksgiving Day) என்று வான்கோழியைத் துவம்சம் செய்து, இதோ நெய் அப்பம், கொழுக்கட்டை, பொரி உருண்டை என்று இன்று திருக்கார்த்திகை.  அடுத்து, ஒரு மூன்று  வாரம் கொஞ்சமாக வேலை பார்த்துவிட்டு, மீண்டும் கேக்களும், குக்கீஸ்ஸும், பைகளும்  (pie) செய்தால் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு ஆண்டும், சக்கரைப் பொங்கலில் ஆரம்பித்து கேக்கில் சிறப்பாக இப்படியே முடிய வேண்டும் என்பதே இப்பொழுதைய என் பேராவல்.

வாழ்க்கையின் பல இனிமைகளுள் உணவு முக்கியமானது. அந்த உணவும், சுற்றம் சூழ சிரிப்பு சத்தங்களுக்கு நடுவே உண்ணும் பொழுது இன்னும் அதீத இனிமையாகி விடும்.  அந்த சிரிப்பு சத்தமும் சொந்த மொழி வார்த்தைகளுக்கு நடுவே இருந்தால், அற்புதம்! அதோடு அப்படிக் கூடி இருக்கும் சொந்த மொழி பேசும் நண்பர்களும் நல்ல ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் நண்பர்களாக  அமைந்து விட்டால் அது தான் பூலோக சொர்க்கம். அப்பொழுதில் சாப்பிடும்  உணவு அமிர்தத்தின் வகைமையோடு சேர்ந்து விடும்.

மொத்தத்தில், வாழ்வு அமிர்தத்தினை விடவும் இனியது.

உணவு, உறைவிடம், சில வாழ்க்கைத் தர வசதிகள் என்று சிறப்பான விஷயங்கள் இருந்தாலும், புலம் பெயர்ந்த பெரும்பான்மையான மனங்கள் ‘என்னத்த வெளிநாட்டு வாழ்க்க’ என்று அலுத்துக்கொள்வது ஒவ்வொரு பண்டிகை காலங்களில்தான். இங்கு சில நண்பர்கள் அமைந்தாலும் சொந்த பந்தங்களையும், சேர்ந்து வளர்ந்த நண்பர்களையும் தேடாத புலம்பெயர் மனது இருக்கவே இருக்காது. நல்ல நண்பர்களும் அமையாவிட்டால், அல்லது பழகும் மனிதர்களும் உதட்டளவில் அமைந்துவிட்டால், ‘நலம் சூழ் உலகு’ என்பது ‘வளம் சூழ் தனிமை’ என்று கடக்க ஆரம்பித்து விடும். அப்படியான தனித்த வாழ்வின் முகச்சாயம் பூசிய முகம், புன்னகையின் ஓரத்தில் உறைந்து போன கண்ணீர்த் துளியையும் கொண்டது. இந்த ஆற்றாமை தீரும் அளவிற்கு போனில் கதை பேசியே பண்டிகை நாட்களில் மனதை ஆற்றிக்கொள்ள முயலும் பலர் இங்குள்ளனர். வருடங்கள் கழியும் பொழுது இதுவும் பழகிவிடும் என்பது வேறு கதை.

பெரும்பான்மையாக, ஊரில் சிறு வயதில் ‘அப்படி இருக்கும், இப்படி இருக்கும்’ என்று இருந்த அல்லது இல்லாத பெருமை பேசியே பண்டிகை நாளை கடத்திவிட பெரும்பாலும் நாம் அனைவருமே முயலுகின்றோம். அப்படி செய்வதுதான் அந்த தினத்திற்கான நியாயமாக நம்மில் சிலரின் ஜீன்களில் ஊறிவிட்டது. என் ஜீன்களிலும் அதன் திரிபு உள்ளது. எனக்குத் தீபாவளி, பொங்கல் என்றால் பொதுவான இனிப்புகள், புது துணி, பட்டாசு, சுற்றமும் சூழமும் போன்ற நியாபகங்களுக்கு நடுவில், ‘கலை விழாக்களும்’ நியாபகத்திற்கு வருகின்றது. இன்றைய அபார்ட்மெண்ட் கலாச்சாரத்திலும் உருமாற்றம் கொண்டு ‘நலச் சங்கம்’ வைத்துத் தொட்டுத் தொடரும் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று. ஆதி தமிழன் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று வளர்த்த தமிழ் தானே நம் அடையாளம். இந்த ‘சங்கங்கள்’ வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். அந்தந்த ஊரின் தமிழ்ச் சமூக சங்கங்கள், பொங்கல், சித்திரை திருநாள், தீபாவளி என்றால் பெரும்பாலும் ஒரு ‘விழா’ வைத்துவிடுவார்கள். இவ்விழாக்கள் நடக்கும் தினங்களில்தான், புடவையும் வேஷ்டியும்  நம் கலாச்சார உடை என்று குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்லுவோம். ஏதோ ஒரு வகையில் இன்னும் கொஞ்சம் அதிக ஜனங்கள் கூடுவதற்கு இந்த விழாக்கள் இங்கு பெரும் சாக்கு. இந்த வருடம் அதுவும் அம்போ!.

ஒரு முப்பது வருடங்களுக்கு முன்1980, 90களில் நகரோ, இல்லை ஒரு குடியிருப்பு பகுதியோ உருவானால் ஒரு நலச் சங்கம் அமைக்கப்படும். ஏதோ ஒரு மதப்பெரும்பான்மையோடு அந்த புது குடியிருப்பு அமைந்துவிட்டால், அந்த மதம் சார்ந்த வழிப்பாட்டுத் தளமோ, பிரார்த்தனை மண்டபமோ அமைக்கப்படும்.  நிறைய சிறிய புது, புது கோவில்கள் அப்பொழுது உருவாகின.  நகரை நிர்வகிக்க, கோவில் கட்ட என்று குழுக்கள் அமைக்கப்படும். அதில் எப்படியும் யாரோ ஒருவர் எல்லாவற்றிற்கும் சண்டை பிடிப்பார். அணைத்துச் செல்லும் பெரியவர்கள் தனித்துத் தெரிய வருவர். அதிக நன்கொடை கொடுப்பவரோ, அதிக நேரம் செலவிடக் கூடியவரோ, இல்லை அரசாங்க பொறுப்பில் இருப்பவரா கோவில் குழுவிற்கு, இல்லை நகர் நலக் குழுவிற்குத் தலைவர் ஆவார். பின்னர், அங்கு கட்டுமான வேலை, கும்பாபிஷேகம், விழாக்கள் என்று ஒரு ஒருங்கிணைப்பு இருந்துக்கொண்டே இருக்கும்.

ஊரில் இருக்கும் சில பொறுப்பான இளைஞர்களையோ, வயதான தாத்தா ஒருவரைக் கூப்பிட்டோ மாத சந்தா, விழாக்களுக்கு சந்தா என்று எல்லா வீட்டிலும் சென்று வாங்கி வரப் பணிப்பர். இதற்குள், இருபது/முப்பது வீடுகள் என்பது ஐம்பது/ நூறு வீடுகள் ஆகி இருக்கும். இரண்டொரு வருடங்களில் முதற்குழு கலைந்து புதுக் குழு உருவாகும். அதற்குள் தண்ணீர் பிரச்சினை, ரோடு பிரச்சினை, குப்பை அகற்றுவதில் பிரச்சினை என்று ஏதாவது ஒன்று இருந்துகொண்டே இருக்கும். இதற்கு மனு போடவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் போய் பேசவும் என்று இந்த நலக்குழுவின் தேவை அதிகரிக்கும். 1990களில் இப்படியான நிகழ்வுகளின் கதைகள் நிறைந்து இருந்தன.  இப்படியான நிகழ்வுகளுக்கு நடுவில்தான் நானும் வளர்ந்தேன்.

அந்தக் குழுவில் ஒரு செயற்குழு கூட்டம் கூடினால், அங்கு பரிமாறப்படும் காபியில் ஆரம்பித்து பேசப்பட்ட விஷங்கள்  வரை ‘தனிக்குழு’ ஒன்று பிறகு அலசி ஆராயும். உறுப்பினர்கள் இடையே விவாதங்கள் சில சமயம் சூடேறலாம். கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கும். ஆனால், அதையும் மீறி வகை வகையான ‘உள்’ அரசியல் மாற்றுக் கருத்தைப் பேச வைக்கும். அப்பொழுது நடக்கும் விவாதங்கள் சூடாக மட்டுமில்லாமல் மூச்சை அடைக்கும் நெடியோடு கூடவும் இருக்கும். இந்த நெடி அங்கு அறத்தை மூச்சு முட்ட வைக்கும். இப்படியான சங்கங்களில் தேவை எந்த அளவிற்கு அதிகமோ அந்த அளவிற்கு அங்கு நடக்கும் அரசியல் தேவையற்றது. கடைசியில் உள் அரசியல் தன் கோரப் பற்களோடு எப்படியோ பெரும்பான்மையாக ஜெயித்து விட்டால் அந்த ‘நலச் சங்கம்’ தோற்றுவிடும்.

எல்லாவற்றிக்கும் இருக்கும் ஒரு தொடர்முறை கதை இந்த நலச் சங்கங்களுக்கும் உண்டு. ஒரு நேரத்தில் இந்த நலச் சங்கங்கள் நிறைய ஆக்கப்பூர்வமான காரியங்கள் செய்யும். சில நேரங்களில் யாராவது தன்னை முன்னிறுத்தி, செயல்பாடுகளைக் கெடுத்து விடுவார்கள். வேறு சில நேரங்களில் இந்த சங்கங்கள் பெயரளவில் எதுவும் செய்யாமல் ‘லெட்டர் பேடில்’ மட்டும் உயிர்விட்டுக் கொண்டிருக்கும். பண பலமும், ஜாதியும், மதமும்  நம் நாட்டில் கருவறை முதல் கல்லறை வரை எல்லாவற்றையும் ஆட்டி வைக்கும் பொழுது இப்படியான சங்கங்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன? இதில் இந்த ஜாதி படுத்தும் பாடு சொல்லிமாளாது. இதை எதிர்த்து யாராவது சண்டை பிடிப்பார். பலர், தப்பு என்று தெரிந்தும் பின்னாடி புறம் பேசிவிட்டு தன் வேலைக்குத் தன் வழியே சென்று விடுவர். சண்டை பிடிப்பவரோடு மேலும் சிலர் சேர்ந்து சரியானதைச் சிறிதளவேனும் நிலை நிறுத்தினால், சங்கமும் அதைச் சார்ந்த செயல்பாடுகளும் கொஞ்சம் தப்பித்தது. ஆனால், எங்கு பணமும், அகங்காரமும், ஜாதியும் கூட்டு சேர்த்துக் கொண்டு  குரல் உயர்த்திப் பேசுகிறதோ, அங்கு துளி நன்மையும் நிலைத்து விட வாய்ப்பேயில்லை.

சரி, இந்தக் கதை எல்லாம் நம்மூரில் நடந்தது. கடல் கடந்து வெளிநாடுகளில், அமெரிக்காவிலும் இருக்கும் ‘சங்கங்களிலும்’ நடக்க வேண்டுமா என்ன? எண்பதுகளில் வந்த சில படங்களில் மோசமான திரைக்கதை அமைப்போடு பார்த்த ஊர்த் தலைவர்களின் உள் அரசியலை விட இங்கு சங்கம் வைத்துப் பரப்பப்படும் அரசியல் அருவருப்பானது. ‘ஜாதி யாரு பாக்கிறா’ என்று சொல்லிவிட்டு ஏழு கடல் ஏழு மலை தாண்டியும் அந்த அரக்கன் இங்குப் பிரமாதமாகக் கோலோச்சுகிறான்.

மொழியை வளர்ப்பது என்பது இங்கு ஒரு முகமூடியோ என்று சில சமயம் தோன்றுகின்றது. தமிழ்ச் சமூகத்தை கூட்டமைக்கிறோம் என்பது ஒரு சாக்கு. ஆனால், அதற்கு எல்லா சங்கங்களும் இப்படித்தான் என்று நான் கண்டிப்பாகச் சொல்லவில்லை. என் நேரம், நான் பார்த்த நாலில் இரண்டு இப்படி. பல நண்பர்களோடு இதற்காகவே பேசினேன். நண்பர்களோடு பேசும் பொழுது குறைகளை அடுக்கி விட்டு அப்புறம் ஒரு நிறை கூறுகிறார்கள். தான் சார்ந்துள்ள அல்லது தான் பார்த்த சங்கங்களின் மேல் மதிப்புள்ள பெருவாரியான தமிழ் மக்கள் இங்கில்லை என்று ஆணித்தரமாக இந்த உரையாடல்களின் மூலம் என்னால் கூறமுடியும். கடல் கடந்த நாட்டில், ‘தமிழ்’ சங்கம் என்பது நம் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதத்தில், மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.

சங்கம் என்றால் ‘நலச் செயல்கள்’ என்று கொஞ்சம் பட்டியலிட வேண்டுமே. கண்டிப்பாக ஒரு லிஸ்ட் எல்லா சங்கங்களிடமும் இருக்கின்றது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அந்த லிஸ்டில் பலம் பெறுபவர்கள் யார்,  கூடுகைகளில் கலந்து கொள்பவர்கள் யார், விழாக்களில் பங்கு பெறுபவர்கள் யார் என்பதில்தான் நலம் மருவி  துளியளவுகளில் நஞ்சு கலக்கப்படுகிறது. சில இடங்களில் 500 தமிழ் குடும்பங்கள் இருக்கும் ஊரில், இருபது, முப்பது குடும்பங்கள்தான் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்கிறார்கள். கணவன், மனைவி அவர்களின் குழந்தைகள் என்று நிகழ்ச்சி நிரலில் மொத்தமாக சில குடும்பங்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றால் அது அந்த சங்கத்திற்கு அபாயக்குறி. அந்த சங்கம் சார்ந்த சமூகத்திற்கு அபாயக்குறி. நாடோ, மாநிலமோ, நகரோ, தெருவோ சில குடும்பங்கள் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் செயல்படும் எந்த இடமும் சரியான பாதையில் பயணிக்காது.

ஒரு சாதாரண அலுவலக மீட்டிங்கில் தொடர்ந்து ஒருவர் மட்டும் பேசினாலே அது அங்குள்ள ‘அணிக்கு’ பிரச்சனை என்று நம் மனதில் இடறுகிறது. மொத்த சமூகத்தின் விழாவில், பத்து குடும்பம்தான் மேலும் கீழும் கோலோச்சுகின்றது என்றால், அந்த சங்கத்தின் தகுதியுடைய தலைவர்கள் எவ்வளவு முன்னெடுப்புகள் எடுக்க வேண்டும்?

இதை எல்லாம் கவனித்து யாரோ ஒருவர் எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். பின்னர் சங்கத்தின் செயல்பாடுகள் கொஞ்சம் மாறுகிறது. சிறிது நாட்கள் கொஞ்சம் நலம். பின்னர் பழைய கதை. இங்குள்ள சில சங்கங்களின் சுருக்க கதை இது. பதினைந்து, இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும் பலரும் இந்த தமிழ்ச் சங்கங்களுக்குள் நடக்கும் அரசியலைப் பார்த்து மனம் வெறுத்துப் பேசுகின்றனர். ஆனால், இந்த மராத்தி, ஒடிசா, குஜராத்தி, வட இந்தியச்  சங்கங்களில் உள்ள நண்பர்கள் நம்மளவிற்கு இவ்வளவு அதிகமாக வருத்தப்படவில்லை. தமிழ் நண்டின் கதையை மூளையில் பதிய வைத்து விட்ட மக்கள் அல்லவா நாம்!.

அதை விடவும் என் மனது அதிகமாக வருத்தப்படுவது இங்குள்ள சில தமிழ்ப் பள்ளிகளுக்காக. அ + க் = க என்று ‘டீச்’ பண்ணும் ‘volunteer’ ஆசிரியர்கள். ஐயகோ! என்று போய் கேட்டால், “நீங்க ஏன் கேக்கறீங்க! அதெல்லாம் நீங்க பேசக்கூடாது” என்று சொல்லும்  நிர்வாகக் குழுக்கள். “இது தன்னார்வலர்களால் கற்பிக்கப்படுகிறது, அப்படித்தான் இருக்கும்” என்கின்றனர். நிஜமான தன்னார்வலர்கள் யார் என்பதில்தான் மொத்தமும் ஊசலாடுகிறது. மொழியின் மேல் பற்றுள்ள பெருங்கூட்டத்தைத் தள்ளி வைத்து விட்டால் ‘டமில் டீச்’ தான் பண்ண முடியும் என்று எப்படி இவர்களுக்குப் புரியும்? அடுத்து ஒரு சாக்கு, இங்கே வளரும் ‘கிட்ஸ்க்கு’ இப்படிச் சொன்னால்தான் புரியும் என்பது. தரம் என்பது உயர்த்தப்பட வேண்டியதுதானே.

நான் கலந்துகொள்ள(!) வைக்கப்பட்ட ஒரு தமிழ்ச் சங்க ‘சித்திரைத் திருநாள் விழா’ முழுவதும் ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கப்பட்டது. (கலந்துகொள்ள வைக்கப்பட்ட என்று ஏன் கூறினேன் என்றால் என் மகன் பயிலும் தமிழ்ப் பள்ளி மூலம் அனைவரும் நுழைவு கட்டணம் கட்டி கலந்துகொள்ள வேண்டும். வேறு வழியில்லை!) பாதிக்கு மேல் ஹிந்தி பாடல்களுக்கு நடனம் அரங்கேற்றப்பட்டது. ஒரு பையன் கீழே “தமிழ் எதற்குப் படிக்க வேண்டும்?, இங்கு எங்கும் ஆங்கிலம் தான் உள்ளது. பாருங்க, ஆங்கிலத்தில் தானே தொகுத்து வழங்குகிறார்கள்” என்று தன் அம்மாவோடு தமிழ் வகுப்பை நிறுத்த விவாதம் செய்து கொண்டிருந்தான். ஒரு சிலரைத் தவிர விழா ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் மேடையிலும், கீழே மற்றவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் உரையாடிக் கொண்டிருந்தனர். இவ்வாறாக வேர்வை சிந்தாமல், நுனி நாக்கு ஆங்கிலத்திற்கு நடுவில், நம் தமிழ், அயல் மண்ணில் அடுத்த தலைமுறைக்கு சொற்பமாக கை மாற்றப்படுகிறது. அதோடு சேர்த்து, அழகாக அருவருப்பான அரசியலும் வலுவாகக் கடத்தப்படுகிறது. பாவம் குழந்தைகள், க் +அ ஒலி வடிவில் எளிதாக ‘க’ என்று படிக்க முடியாமல், நடக்கும் அரசியலின் கோரமும் புரியாமல் வீடியோ கேம்ஸ் விளையாடி, உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சாப்பிட்டு போஷாக்காக வளர்கிறார்கள்.

இப்படிப் பேசுவோமே! ஒரு புது ஊருக்கு நீங்கள் மாற்றல் ஆகிச் செல்கிறீர்கள். அங்கு ஒரே ஒரு பள்ளிதான் உள்ளது. உங்கள் குழந்தையைப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று சிலரிடம் விசாரிக்கிறீர்கள். அவர்களுக்கு அந்தப் பள்ளியைப் பற்றித் தெரிந்துள்ளது. இருந்தும், ஒருவரும் அங்குள்ள அந்த ஒரே ஒரு பள்ளியைப் பற்றிச் சொல்லவே இல்லை. சில நாட்களுக்குப் பின் உங்களுக்கு அந்தப் பள்ளியைப் பற்றித் தெரிய வருகிறது. அந்த நண்பர்களிடம் “இப்படி ஒரு பள்ளி உள்ளது, பிள்ளையைச் சேர்க்கப் போகிறேன்”  என்று கூறுகிறீர்கள். அதற்கு அவர்கள் ‘எனக்கு முன்பே தெரியும். அங்கு படிப்பதற்கு நீ பிள்ளையைப் படிக்கவே அனுப்ப வேண்டாம்’, ‘அந்தப் பள்ளியை விட நீயே நன்றாக சொல்லிக் கொடுக்க முடியும்’, ‘அங்கு இருக்கும் அரசியல் அருவருப்பானது. அதுதான் சொல்லவில்லை’, ‘அதை விடவும் கொஞ்சம் தள்ளி இருக்கும் இன்னொரு பள்ளி பரவாயில்லை’ என்றெல்லாம் கூறுகிறார்கள். இப்படித்தான் இங்கு நடக்கிறது. இங்கு நான் ‘பள்ளி’ என்று குறிப்பிடுவது நம் தொப்புள் உறவுகளை இணைக்கும் தாய்த் தமிழ்ச் சங்கங்களை.

பெரும்பான்மையாக, இங்கு ஒரு ஊரில் ஒரு தமிழ்ச் சங்கம்தான். அவற்றுள், சில சங்கங்களின் பார்வை மதிப்பு இந்த நிலைதான். ரொம்ப வருடங்கள் இங்கிருக்கும் மிக நெருங்கிய நண்பர்கள் என்றால் ‘தமிழ்ச் சங்கம்’ என்ற பெயரைக் கேட்டவுடன் இன்னும் ஒரு அறிவுரை கூறுவார்கள் – “எதுலயும் கலந்துக்காத! மொத்தமும் சேர்த்து உனக்குப் பெரிய தல வலியாயிடும்” என்று. சொந்த மொழியில் ஊறி இருப்பது இனிமை என்றெல்லாம் கட்டுரையின் ஆரம்பத்தில் ஏதோ கனவிலிருந்து பேசினேன் அல்லவா?.\ சில சமயம் இப்படியான அரசியலை விட்டுத் தனித்திருப்பதுதான் இனிமை. என்னே  சிறந்த அறிவுரை! இப்படிப் பலரையும் பேச வைக்கும் அளவிற்கு என்னே சிறந்த செயல்பாடுகள்!

வாழ்க தமிழ்! வளர்க சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் அயல் நெஞ்சங்கள்!

 

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. சூப்பர். உள்ளது உள்ளபடி வந்திருக்கிறது. 🙂

    ஒரேயொரு கருத்து என்னன்னா, சங்கம் கூடிச் சேரணும்னா ஒரு குழுவா அந்தக் குழுவுக்கு ஏதோவொரு insecurity இருக்கணும். அது தனி மனிதர்களின் insecurity-யால் replace பண்ணப்படும் போது இப்படிக் குழுவாக இணைய முடியாமல் செய்துவிடும். அது கூட நம் transition-இல் அடுத்த கட்டமோ என்று படுகிறது.

    வடக்கர்கள் எடுத்துக்காட்டாக பெரும்பாலும் ஒரே மாதிரியான அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒருத்தரை ஒருத்தர் சேலன்ச் பண்ற அளவுக்கு அவர்கள் உரையாடவே தொடங்கவில்லை. அந்த வகையில் நாம் அடுத்த கட்டமோ என்றும் படுகிறது. உறுதியாகத் தெரியவில்லை. ஜஸ்ட் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button