நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்; 17 – ’ஏட்டுச் சுரைக்காய்’ சுமாசினி முத்துசாமி
தொடர் | வாசகசாலை
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் (இந்த வருடம், கடந்த வாரம் வந்தது) ‘நன்றி நவிலும்’ நாளாகக் கொண்டாடப்படுகின்றது. வருடா வருடம் அந்த வியாழன் முதல் ஞாயிறு வரை பெரும்பாலும் இங்கு அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை. இந்த நாளில் அமெரிக்கக் குடும்பங்கள், அனைவரும் சேர்ந்து பெரு விருந்து உண்டு மகிழ்ந்திருப்பர். இந்த விருந்தில் வான்கோழி, உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், கிரான்பெர்ரி (குருதி நெல்லி) எனப்படும் ஒரு பழத்தில் செய்யப்படும் சாஸ் மற்றும் இனிப்புகள் இருக்கும். மத வழிபாடுகள், சிரத்தை எடுத்து சிலருக்கு நன்றி தெரிவிக்கும் பழக்கம், உணவு, உடை போன்றவற்றை தானம் கொடுப்பது போன்றவையும் இருக்கும்.
இந்த நாள் அன்று சில பெரிய நகரங்களில் ‘அணிவகுப்பு’ (Thanks giving parade) ஒன்று நடக்கும். அதுவும் நியூயார்க் நகரத்தில் நடக்கும் மேசிஸ் (Macy’s) என்ற நிறுவனம் நடத்தும் அணிவகுப்பு மிகப் பிரமாண்டமாய் இருக்கும். பெரிய விதவிதமான பலூன்களை எடுத்துக்கொண்டு அணிவகுப்பு நடத்துவர். நன்றி நவிலும் நாளுக்கும் இந்த அணிவகுப்புக்கும் என்ன சம்பந்தம் என்று யாருக்கும் தெரிவதில்லை என்பது வேறு கதை. எதிலும் ஒரு பிரமாண்டம் இருப்பது அமெரிக்காவின் ஸ்டைல். அதில் இதுவும் ஒன்று. இவை எல்லாவற்றையும் மீறி, இன்று இயல்பில் Thanksgiving day என்பது இங்கு பெரும் ஷாப்பிங் திருவிழாவாக மாறிவிட்டது. இந்த நான்கு நாட்களில் விற்கப்படும் அனைத்திலும் இங்கு தள்ளுபடி இருக்கும். நம் ஆடித் தள்ளுபடி போல் ஒரு பத்து மடங்கு அதிகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இந்த விற்பனையில் வாங்குவதற்காகவே ஒரு லிஸ்ட் தயார் செய்து வைப்பது இங்கிருக்கும் குடும்பங்களில் மிகச் சாதாரணம்.
1620களில் அகதிகளாக அமெரிக்காவிற்கு வந்த யாத்திரிகர்கள் (Pilgrims) தங்களின் முதல் அறுவடைக்குக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காக இந்த நன்றி நவிலும் நாளைக் கொண்டாட ஆரம்பித்தனர். அந்த அறுவடையினை அமெரிக்காவின் சொந்த மூத்த குடிகளான ‘வாம்பனோஅஃ ‘ (Wampanoag) மக்களோடு யாத்திரிகர்கள் பகிர்ந்து கொண்டதாகப் பெருவாரியான கருத்து இருந்தது. அமெரிக்கா தனி நாடாக உருவெடுத்து அகதிகளாக வந்தவர்களின் வாரிசுகள் அரசமைத்த பொழுது சொந்தக் குடிகளோடு சமாதானத்தை மேம்படுத்த இந்த நன்றி நவிலும் நாள் கதை மிகவும் உதவியாக இருந்தது. “நாம எல்லாம் ஒரே தட்டில் ஒரே மாதிரி ஒன்னுக்குள்ள ஒண்ணா சாப்பிட்டவங்க” என்று எப்படியாவது நிறுவ வேண்டிய அத்தியாவசியம் அன்றைய ஆட்சியாளர்களுக்கு இருந்தது.
ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் தரவுகளுடன் இப்பொழுது நிறுவியும் வருகின்றனர். அப்படியே ஒருசேர ஒரு விருந்து நடந்திருந்தாலும் அது பின்னர் வாம்பனோஅஃ மக்களை அழிப்பதற்கான ஆரம்பப்புள்ளி என்றும் விவாதிக்கப்படுகிறது. அமெரிக்காவின் சொந்தக் குடிகளை அழித்தொழித்துதான் இங்கு ஐரோப்பியர்கள் குடியேறினர் என்பது பெரும் உண்மை. 400 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து வந்தவர்கள் இங்கு முதல் சில ஆண்டுகளில் வித்திட்டது கலாச்சார மோதல்களைத்தான். அதாவது இந்த நாட்டின் துவக்கம் பூர்வ குடிகளின் சிதைகளின் மேல் எழுப்பப்பட்டது. அதுதான் இந்த புது அமெரிக்கா.
மற்றுமொரு சோற்றில் முழுப் பூசணிக்காய், கொலம்பஸ் – அமெரிக்கா கண்டுபிடிப்பு கதை. உலகம் முழுமைக்கும் கூறப்பட்ட செய்தி, ‘அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ்’ என்று. அவரது சிறப்பைப் போற்றும் விதமாக அவர் அமெரிக்காவில் தன் பொற்பாதங்களைப் பதித்ததின் நினைவாக இங்கு ‘கொலம்பஸ் தினம்’ அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமை அன்று விடுமுறையாகக் கொண்டாடப்படுகின்றது. கொலம்பஸ் அமெரிக்காவில் கால் பதித்தது ஐரோப்பியர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் வரமாகும், அமெரிக்காவின் மூத்த குடிகளான செவ்விந்தியர்களுக்குக் குலத்தின் கருவறுக்கும் சாபமாகவும் அமைந்துவிட்டது.
இந்த இரண்டு நாட்களையும் அமெரிக்காவின் மூத்த சொந்த குடிமக்கள் கொண்டாடுவதில்லை. இனப்படுகொலையாக நடந்துவிட்ட இந்த கொடூரத்திற்காய் வருந்தும் சிலரும் இந்தக் கொண்டாட்டங்களைத் தவிர்க்கின்றனர் அல்லது இந்த நாட்களில் ஒரு உரையாடலையாவது முன்னெடுக்கின்றனர். இந்த இரண்டு நாட்களின் பொதுப் புத்தி பற்றிய எதிர்க் கருத்து பல நாளிதழ்களும், பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரவலாக இப்பொழுது பேசுபொருள் ஆகி வருகிறது.
இதில் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், தங்களின் வரலாற்றுப் பிழையை ஒத்துக்கொள்ளும் இங்குள்ள மனநிலையை. இது தற்போதைய அளவிற்குச் சிறு சதவீதம்தான் என்றாலும், இந்த மாற்றம் மிகவும் நல்லது. அதுவும், உலக அளவில் வெறுப்பு அரசியலில் குளிர் காய நினைக்கும் சில அரசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு நடுவே இந்த மாற்றம் மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த உரையாடல்கள் இங்கு பள்ளிகளில் கூட நடக்கின்றன. இப்படிப்பட்ட உரையாடல்களின் வாயிலாக அமெரிக்காவில் பள்ளியிலிருந்தே ஒரு சிறு பொறியைக் குழந்தைகளின் மனதில் விதைக்கின்றனர்.
இந்தப் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்ததற்கு இரண்டு காரணங்கள் – நன்றி நவிலும் நாளுக்கு முந்தைய நாள் என் மகனின் வகுப்பு ஆசிரியர் குழந்தைகளிடம் பேசியதும் (தற்போது குழந்தைகள் வீட்டிலிருந்து பயில்வதால் நாமும் அவர்களின் வகுப்புகளை ஒட்டுக்கேட்க முடிகிறது), பின்னர் கடந்த வார இறுதியில் நண்பர்களைச் சந்திக்கும் பொழுது இதைப் பற்றி குழந்தைகள் செய்த உரையாடலும்தான். ஐந்தாவது ஆறாவது வகுப்பு படிக்கும் பொழுதே குழந்தைகளிடம் இந்த விஷயங்கள் குறித்து இருக்கும் தெளிவு மிகுந்த நம்பிக்கையைக் கொடுக்கின்றது.
இதே நேரத்தில், இப்படிப்பட்ட எந்த எதிர்க் கருத்தின் நிழலும் படிந்து விடாமல் நம் கல்வி முறை இன்றும் நம் குழந்தைகளை வளர்க்கின்றது. சமூக அறிவியல் வகுப்பில் இந்தியப் பயிர்கள் மற்றும் உழவின் பெருமையை நடத்தும் ஆசிரியர் டெல்லியில் நடக்கும் போராட்டத்தைப் பற்றி மூச்சு விடக் கூட பயப்படுகிறார்கள். நம் நாட்டு உரையாடல்களின் நிலை அதுதான். ஆனால் இங்கு ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிக்கை இந்தியாவில் 65.5% மக்கள் கிராமப்புற பகுதிகளில் வசிப்பதாகவும், அவர்களில் பெரும்பான்மையானோர் விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி நம் மோடி அரசின் திட்டங்களைப் பற்றி அலசுகிறது. உலக நடப்புகள் என்ற தலைப்பின் கீழ் இதைப் பற்றி ஆராய்ந்து கட்டுரை சமர்ப்பிக்க இங்கு இருக்கும் பத்தாவது வகுப்பு மாணவி ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்படுகிறார்.
இந்த வெற்றிடம் போதாதென்று, நம் நாட்டில் பாடப்புத்தகத்தில் உள்ள கருத்துக்களும் ஆட்சியாளர்களுக்கு ஏற்றார் போல் மாற்றியமைக்கப்படும் அவலம் வேறு. பொதுவாகவே பள்ளி பாடப் புத்தகத்தைத் தவிர வேறு புத்தக வாசிப்பு நம்மிடையே மிகக் குறைவு. பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களைச் சார்ந்த கருத்துக்கள், நிகழ் கால நிகழ்வுகள் பற்றிய உரையாடல்கள் பள்ளிகளில் இல்லை. அப்புறம் எப்படி இந்திய மனங்களை வளர்த்தெடுக்கும் கனவில் நாம் மிதக்கிறோம் என்று எனக்குத் தெரியவில்லை. பழம் பெருமையை மட்டும் தூக்கிப் பிடிக்காமல் வரலாற்றின் தவறுகளையும் பள்ளிகளில் உரையாடுவது எவ்வளவு முக்கியம். ஆனால் அது முற்றிலும் நம்மிடையே இல்லை.
வரலாறு என்பது வெறும் ஆண்டுகளாகவும், பெயர்களாகவும், எண்களாகவும் மட்டுமே நமக்குக் கடத்தப்படுகின்றது. நாட்டுப் பெருமை, மதப் பெருமை, இனப் பெருமை, குலப் பெருமை, ஊர் பெருமை இன்னும் நிறையப் பெருமைகளை மனதில் சுமந்து அவைகளின் கணம் தாங்காமல் தரையோடு தரையாக திவங்கிக் கிடைக்கும் நிலையிலேயே நாம் வளர்க்கப்படுகின்றோம். இதை யோசிக்கும் பொழுது நெல்லையில் வளரும் பொழுது இருந்த மனநிலை நியாபகத்திற்கு வந்து வருத்தத்தையே தருகிறது.
புதிதாக ஒருவரைப் பார்க்கிறீர்கள் என்றால், பெயரைக் கேட்டபின் எந்த ஊர் என்று கேட்பது பொதுவான இயல்புதானே. எந்த ஊர் என்று விசாரிக்கும் பொழுதே நம் மக்கள் அந்த ஊரைப் பற்றிய தன் கருத்தையும் சேர்த்தே கூறுவர். ‘திருநெல்வேலி’ என்றால் அல்வா, தாமிரபரணி என்பதைத் தாண்டி “நீங்கல்லாம் அருவா வச்சிருப்பீங்களா?” போன்ற கேள்விகள் உண்மையில் நெல்லை வாசிகள் பலருக்குக் கொஞ்சம் எரிச்சலைத்தான் தரும். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அதை விடவும் கொஞ்சம் பிடிக்காத ஒரு கேள்வி ஒன்று உண்டு. அது “உங்க ஊருல அடிக்கடி அடிச்சிப்பீங்களா?” என்ற கேள்வி. ஏனென்றால் அதற்கு முந்தைய சில ஆண்டுகள் நெல்லை கலவர பூமியாகத் தொடர்ந்து காட்சியளித்தது.
எந்த ஊர் மக்களுக்கும் ஊர் பெருமை கொஞ்சம் உண்டு. அதிலும் எங்கள் நெல்லை மக்களுக்கு அல்வாவில் உள்ள இனிப்பு போல் இந்த ஊர்ப் பற்றும் பெருமையும் கொஞ்சம் அதிக தூக்கலாகவே இருக்கும். இந்தப் பெருமை கொஞ்சம் கண்ணையும் அறிவையும் மறைத்ததால் யாராவது மேலே சொன்ன கேள்விகளை என்னிடம் கேட்டால் ஒரு எரிச்சல் சிறு வயதில் வரும். அதற்கு ஒரு படி மேலே போய், சில சமயம் கலவரத்திற்குக் காரணத்தை விளக்கி ஊர் பாசத்தில் நெல்லைக்கு முட்டுக் கொடுக்கவும் செய்வேன்.
உண்மையில் மொத்த தமிழகத்திலும் அங்கும் இங்குமாய் சில கலவரங்களைப் பற்றி நாம் நாளிதழ்களில் படித்துள்ளோம், இன்றும் படித்து வருகிறோம். ஆனால் அன்று நெல்லை கலவரங்கள் கொஞ்சம் ரத்தக் களரியாகக் காட்சியளித்து அதிகமாக தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது. இப்படிப்பட்ட கலவரங்களுக்குக் காரணங்கள் பற்றி பத்திரிக்கைகளில் கொஞ்சம் விரிவான செய்திகள் வரும். அவை பற்றிப் படித்துத் தெளிந்திருந்தாலும் உண்மையை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு நிராகரிப்பு மனநிலையிலேயே அவற்றைப் பற்றிப் பேசினேன். பின்னர் வாசிப்பும் கொஞ்சம் அவதானிப்பும் எப்படி ஒரு முட்டாள்த்தனத்தோடு வளர்கிறேன் என்பதை உணர்த்தியது.
ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பற்றிய விஷயங்கள், அவை நடந்ததற்கான காரணம், தீர்ப்பளிக்காத இரண்டு தரப்பு வாதங்கள், சிலவற்றைத் தவிர்த்தால் சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் போன்றவற்றைச் சிறு வயதிலேயே உரையாடி இருந்தால் இன்னும் தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். இப்படியான உரையாடல்களை மிகச் சிறு வயதிலேயே தவிர்ப்பதினால்தான் இன்னும் கைகளில் ஜாதி குறியீட்டுக் கயிறுகளுடன் நம் மாணவர்கள் சிலரை இன்றும் பார்க்க வேண்டியுள்ளது.
உணர்தல் வந்த கணங்களிலேயே சரியான பாதைக்கு நம்மை நாமே செலுத்தும் திறன் மனிதனுக்கு உண்டு. அவ்வுணர்வை ஊட்டுவதற்கான பெரும் உந்து சக்திதான் பள்ளிகளும், ஆசான்களும், புத்தகங்களும் வீடு மற்றும் பொது இடங்களில் நடக்கும் உரையாடல்களும். இன்றும் சிலர் அதே பழைய மனநிலையிலேயே முகநூலிலும், வாட்சப்பிலும் சில பொன் கருத்துக்களை உதிர்த்து, பகிர்வதைப் பார்க்கிறோம். உந்து சக்தியின் ஒரு துளி அவுன்ஸ் கூட மூளையின் உயிரணுக்களைச் சேர விடாத அளவிற்கு சமூக கட்டமைப்பை வைத்துவிடுகிறோம். எதிர்பார்ப்பதென்னவோ எங்கும் எதிலும் அறத்தையும், ஒழுங்கையும், ஆற்றலையும், செயல் திறனையும். திடீரென சமூகத்தில் அனைவரும் எல்லாவற்றையும் ஆராய்ந்து, நன்மையும் தீமையும் நாடி, அவற்றுள் சீர் மிகுந்த நன்மையைத் தூக்கிப் பிடித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். நாளைய சமூகத்தின் உயிர் நாடிகளான குழந்தைகளுக்கு இவற்றைப் பயிற்றுவிக்க வேண்டாமா? குழந்தைகள் பச்சை மண் – எப்படி வேண்டும் என்றாலும் பிடிக்கலாம் என்பர். விதையை மண்ணில் விதைக்காமல் மண்ணிடம் இருந்து மகசூல் எதிர்பார்ப்பது நம் முட்டாள்த்தனம் அல்லவா?
தொடரும்…