
அந்தி
இரக்கமற்ற
இந்த அந்தியின்
பொழுதைத் தீட்டுவதற்கு
எவ்வளவு பேர்
இறந்தார்களோ அவர்கள்
காரிருள் கனிய
படகில் சவாரி செய்து
ஒளியை ஏற்றி வைத்தார்கள்
வீழ்ச்சியின்
திரை வடிவத்தின்
பின்னணியில் மக்கள்
வாழ்ந்து கொண்டிருந்தார்கள்
சில்லிட்ட காற்று
ஆதியின் அந்தத்தை
மறக்காமல் சபித்து
தேள் போல் கொட்டியது
ஒழிந்த நாள் ஒன்று
என் வசமில்லை எனினும்.
***
காலம்
எப்பொழுதும் எதையும்
சொல்லாத அவன்
இறப்பிற்கு முன்னும்
பின்னுமாய் நகர்கிறான்
அவன் வீட்டு ஜன்னலில்
வானத்தைப் பார்த்த கண்களுக்கு
காலம் ஒரு துளியாய்
அமர்ந்திருப்பது தெரிந்தது
அமானுஷ்யமாகவும்
அவன் மன லயத்திற்கும்
ஏற்ப பேசிக்கொண்டிருக்கும்
வார்த்தைகளின் முடிவுகள்
அவனுக்குக் கேட்டுக்கொண்டுதான் இருந்தன
அமைதி என்பது அமைதியல்ல
கடிகாரத்தின் கணக்கு தவறு
நான் முன்னே
நடக்க ஆரம்பித்து
பின்பு பின்னே
நடந்து முடிக்கிறேன்
கோப்பையில் இருக்கும் தேநீரில்
முன்பே இருந்த காலத்தை
கலக்கிய பொருள்
பொழுதைச் சமன் செய்தது
உள்ளிருக்கும் காலத்திற்குள்
நான் விழிப்புடன் இருக்கிறேன்
அனைத்து பொருட்களின் மீது
இருக்கும் வடிவங்கள்
என்னை ஏமாற்றுகின்றன
மடிந்து போகும் படிமங்களின்
கால் தடமாய் நான்
கவனிப்பாரற்றுக் கிடக்கிறேன்.
***
அவன்
முன்பே கனிந்துவிட்டவன்
ஊருக்கு வருகிறான்
ஊரில் இருப்பவர்கள்
தடுமாறுகிறார்கள்
இயற்கைக்கு
நிகராக இருக்கிறான்
அவனை வெற்றிகொள்வது
தோற்பதற்குச் சமம்
தூய அன்பை
அவன் சுட்டிக்காட்டுகிறான்
இறப்பைக் காலந்தாழ்த்தி
விடுதலையாக அளிக்கின்றான்
நண்பனுக்கு எட்டாத
தூரத்தில் இருக்கின்றான்
பெற்றவர்களுக்குப் பாசத்தைத்
தர மறுக்கின்றான்
அவன் பாறைகளின் இடையில்
வளர்ந்த தாவரமாய் இருந்தபோது
எல்லோரும் அவனை
நோக்கிப் போகிறார்கள்
அவன் இப்பொழுது
சகிக்க முடியாத இருப்பை
நமக்கு அளிக்கிறான்.
*******
– jayakumarpushpala14@gmail.com –