
யுகாந்திரத் தாகத்திலிருக்கும்
ஆற்றின் ஓடுதளத்தில்
அணை மதகுகளுக்கு
நன்றி சொல்லிப் பாய்கிறது
விடுதலை பெற்ற நதி.
சுருண்டு வளைந்தப்
பழைய சருகுகள்
இசைக்குறிப்புகளின் எழுத்துருக்களென
வெள்ளத்தில் அமிழ்ந்து பின் மிதக்கின்றன
கோடையில் பூக்கும்
கொன்றையின் மொட்டுகளாக
மணல் துகள்களைப் புணர்ந்து
உருவாகின்றன நீர்க் குமிழிகள்
ஆயிரமாயிரம் சர்ப்பப் படைகள்
சமருக்கு அணிவகுத்துச் சீறுவதுபோல்
காணும் கணங்களை விழுங்கிக் கொண்டு
முன்னேறுகிறது இளம்நதி
சேலைக்குள் நுழையும்..
யுவதியின் வெட்க நளினமும்
காம்பு தேடும்
கட்டவிழ்த்தக் கன்றின் வேகமும்
முழுமையாய்த் தன்னிறைவு அடையட்டும்
அதுவரை…
அவளை நெருங்கவும் வேண்டாம்
கன்றின் கயிற்றை இழுக்கவும் வேண்டாம்.