
கைவிடப்பட்டவர்களின் கதைகள்
– பிரபாகரன் சண்முகநாதனின் ‘மருள்’ தொகுப்பை முன்வைத்து
பிரபாகரன் சண்முகநாதனின் மருள் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இவர் 1999ல் பிறந்தவர். ஈராயிரக் குழவி (2k kid) என பிரபாகரனை எழுத்தாளர் காளிப்ரஸாத் தன்னுடைய முன்னுரையில் அறிமுகம் செய்வது நூலினை வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. இரண்டாயிரத்தை ஒட்டிப் பிறந்த ஒரு தலைமுறையில் இருந்து எழுத வந்திருக்கும் ஒருவரின் கதைகளை வாசிக்கிறோம் என்ற ஆவல் மேலிட நூலினை வாசிக்கத் தொடங்கினேன்.
பிரபாகரனின் மொழி நவீனத்துவத்தின் கச்சிதம் கொண்டதாக இருக்கிறது. பத்து கதைகள் இருந்தாலும் நூலின் பக்க அளவு 88தான். சராசரியாக ஏழிலிருந்து எட்டுப் பக்கங்கள்தான் ஒவ்வொரு கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ‘கணக்குவழக்கு’ இங்கு அவசியமா என்றொரு கேள்வி தோன்றலாம். அவசியம்தான்! தன்னை பாதித்த விஷயங்களை விரைந்து சொல்லிவிட வேண்டும் என்ற தவிப்பு இளமையில் இயல்புதான். சொல்வதன் வழியாக சொல்லப்பட்டவற்றிலிருந்து வெளியேறிவிடவோ தப்பிச் செல்லவோ முடிகிறதல்லவா!
/நான் என்னிடமிருந்து என்னைக் கடந்து செல்ல எழுதிப் பார்ப்பதாக நம்புகிறேன்/ என்று பிரபாகரன் சொல்வதுகூட விரைந்து கடக்க வேண்டும் என்ற அவருடைய ஆவலாதியைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம்.
காதல், தெய்வம் சார்ந்த குழப்பங்கள், அப்பாவின் மீது விமர்சனம் என்று பிரபாகரனின் புனைவுலகம் அவர் வயதினருக்கு உரிய பிரச்சினைகளை மிகச்சரியாக சித்தரிக்கிறது. இவற்றிலிருந்து மேலெழும் புள்ளிகளாக இரண்டு விஷயங்களைச் சுட்ட வேண்டும்.
ஒன்று நோய்மை அல்லது நிலையாமை குறித்த சித்திரம் மற்றொன்று எதிர்காலம் பற்றி பிரபாகரனுக்கு இருக்கும் கோணம். இத்தொகுப்பின் நல்ல கதைகள் அனைத்தும் இவ்விரு தளங்களிலேயே இயங்குகின்றன. ஒரேயொரு விதிவிலக்கு ‘மருள்’. தெய்வங்கள் பற்றிய குழப்பத்தினை காதலுடன் இணைத்துப் பேச இக்கதை முயன்றிருக்கிறது. காதல் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண்ணுக்கு கருப்பரின் அருள் இருக்குமா என்று தெரிந்து கொள்ள கதைசொல்லி அவளை ஊருக்கு அழைத்து வருகிறான். அவனுடைய அண்ணியின் மீதுதான் கருப்பர் ‘இறங்குகிறார்’. சுவாரஸ்யமான இந்த முடிச்சினை மையமிட்டு நகரும் கதையில் கதைசொல்லி தவிர யாருடைய கோணமும் நேரடியாக வெளிப்படாதது இதை நேர்த்தியான கதையாக மாற்றுகிறது. ‘ஒளிந்திருக்கும் வானம்’, ‘அ-சரீரி’, ‘வெகுதொலைவில் உலகம்’ ஆகிய மூன்று கதைகளிலும் சமகால உலகத்தை எதிர்தன்மையுடன் நோக்கி ஒரு எதிர்காலத்தை கற்பனை செய்யும் தன்மை உள்ளது. ஒளிந்திருக்கும் வானம் இத்தொகுப்பின் முதல் கதையாக இடம்பெற்றிருப்பது பிரபாகரனின் எழுத்துகள் மீது எதிர்மறை மதிப்பீடு உருவாகவே காரணமாக அமையும். பலவீனமான கதை. வெகுதொலைவில் உலகம் கதையும் ஒரு டிஸ்டோபியன் கூறினை கொண்ட கதையே. இவ்விரண்டு கதைகளையும் விட அ-சரீரி நன்றாக எழுதப்பட்டுள்ளது. அப்பாவிற்காக வாங்கிக் கொடுக்கப்பட்ட அலெக்ஸாவிடமிருந்து அவருடைய இறுதி நிமிடங்களை அறிந்து கொள்ள முனையும் மகனின் பார்வையில் இக்கதை சொல்லப்படுகிறது. எதிர்காலத்தில் நடப்பதாகச் சொல்லும்படியான சில கூறுகள் இக்கதையில் உள்ளன.
/பதினான்காவது மாடியில் மாந்தோப்புகளுக்கு இடையே அப்பாவின் குடில் இருந்தது. மாந்தோப்பு, குடில் எல்லாம் கண்களுக்கு மட்டுமே விருந்தோம்பல். மா வாசனையை அங்கு நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் அழுகிய மாங்கொட்டை குப்பைத் தொட்டியில் கிடப்பதாகப் புரிந்து கொள்ளலாம்./
கதை நிகழும் காலத்தை இத்தகைய சித்தரிப்புகள் வழியாக பிரபாகரனால் சொல்லிவிட முடிகிறது.
ஊகப்புனைவு பாணியில் எழுதப்பட்டுள்ள இம்மூன்று கதைகள் பிரபாகரனின் ஆர்வங்கள் விரியும் திசையைச் சுட்டி நிற்கின்றன. ‘இலட்சத்தில் ஒரு காதல் கதை’ ஒரு கள்ளமற்ற இளைஞனின் காதலுக்கான ஏக்கத்தை பகடியாகச் சொல்கிறது. ‘பின்மதிய நேரத்துச் சூரியனின் காதல் நாடகம்’ கற்பனாவாதம் கலந்த காதல் கதை. காதலை பேசும்போதும் பெண்ணின் அழகை வர்ணிக்கும்போதும் பிரபாகரனின் மொழியில் நுட்பம் கூடிவிடுகிறது. ஆனால், அங்கிருந்து காமத்தின் குறுகுறுப்பு தொனிக்கும் புள்ளிக்கு கதையை அவர் நகர்த்தாதது ஆச்சரியப்பட வைத்தது. முதல் தொகுப்பில் வெளிப்படும் இந்தத் தெளிவு பிரபாகரனை முக்கியமான புனைகதை எழுத்தாளராக அடையாளம் காண்பிக்கிறது. இவ்விரண்டு கதைகளும் தன்னளவில் வலுவானவையாக இல்லையென்றாலும் பிரபாகரனின் தெளிவைச் சுட்டுவதாக உள்ளன.
‘கடைசி நாள்’ ஒரு பெண் வேலை இழக்கும் தருணத்தைப் பேசுகிறது. அவள் வேலை போவதற்கான காரணத்தை சொல்லாமல் விட்டிருப்பது இக்கதையின் பலம். ஆனால், அந்த ஒற்றைப் புள்ளியிலேயே கதை சுற்றி வருவது இக்கதையை பலவீனப்படுத்திவிடுகிறது.
‘யாதுமானவள்’, ‘இழப்பு’, ‘அப்பாவின் கடைசிநாள்’ என்ற மூன்று கதைகளின் வழியாக பிரபாகரன் தன்னை வலுவான புனைவெழுத்தாளராக நிறுவிக் கொள்கிறார். மூன்று கதைகளிலும் பேசப்படுவது நிலையாமைதான். மூன்று கதைகளிலும் ஆண் துணை இல்லாது போகும் பெண்களின் மீதான கரிசனமே நிறைந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு கதையையும் தனித்தன்மையுடன் பிரபாகரன் எழுதி இருக்கிறார். இக்கதைகளில் நிகழும் மரணங்கள் வாசகர்களின் ஊகத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஆனாலும் அம்மரணங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. மரணிக்கிறவர் மீதான பரிதாபத்தையும் அம்மரணத்தை கடக்க வேண்டியவர்கள் மீதான கரிசனத்தையும் ஒருங்கே தூண்டும் விதமாக பிரபாகரன் இக்கதைகளை எழுதி இருக்கிறார். பிறரின் துயரத்தை எழுதுதல் எழுத்தாளரின் அடிப்படை தகுதிகளில் ஒன்றென நான் நினைக்கிறேன். பிரபாகரன் அந்த வகையில் கவனிக்கப்பட வேண்டியவர்.

பல ககைதளில் அப்பா ஏதோவொரு வகையில் இடம்பெறுகிறார். குடிகாரராக, லட்சியவாதியாக, முதுமையில் தடுமாறுகிறவராக அப்பா வந்து கொண்டே இருக்கிறார். ஆனால், அப்பாவுக்கும் மகனுக்குமான எதிர்கொள்ளல்களா மிகக்குறைவாகவே நிகழ்கின்றன. பிரபாகரன் தன் கதைகளில் அப்பாவை உறையச் செய்கிறார் அல்லது இல்லாமலாக்குகிறார். அப்பாவின் சாந்நித்யம் இல்லாத கதைகளில் பிரபாகரனால் சுதந்திரமாக இயங்க முடிகிறதோ என்று தோன்றுகிறது.
உரையாடலுக்கு வெளியே எழுதப்படும் உரைநடையை பேச்சுவழக்கிலும் உரையாடலுக்குள் திடீரென உரைநடையைத் தொனியையும் பல இடங்களில் பயன்படுத்தி இருப்பது வாசிப்புக்கு இடறலாக அமைகிறது.
தொகுப்பினை பற்றி முழுமையாக யோசிக்கும்போது கடந்த காலத்தின் துயர்களில் இருந்து எதிர்காலத்தின் நிச்சயின்மைவரை ஒரு சரடு இக்கதைகளினூடாக ஓடுகிறது. காதல், லட்சியம், உறவுகள், தெய்வம் எல்லாமும் தன்னைக் கைவிடுவதாக மென்மையான தொனியில் ஒரு இளம் குரல் நம்மிடம் சொல்கிறது. அவ்வளவு மென்மையாக அக்குரல் ஒலிப்பதே அச்சுறுத்தவும் செய்கிறது!
(தொடரும்…)
