சுவைத்து காலியான அந்த ‘இளநீர் ரம்’ குடுவையின் வடிவம் என்னை எப்போதும் ஈர்க்கக் கூடியதாகவே இருந்திருக்கிறது. நீங்கள் எப்போதாவது கோவா செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இதைச் சுவைக்க பரிந்துரைக்கிறேன். இதன் சுவை உங்களை உள்ளிழுத்து வசியம் செய்யக்கூடியது என்கிற பிதற்றல்கள் எதுவும் இல்லை, முன்பு சொன்னது போல அதனை உள்ளடக்கிய வடிவம் கண்டிப்பாக உங்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த முறையும் அலுவலகப் பணிச்சூழலிலிருந்து விலகி இந்த பத்து நாட்கள் கோவாவில் நடக்ககூடிய திரைப்பட விழாவை பார்ப்பது என்பது வருட நிகழ்வாகவே மாறியிருக்கிறது.
இந்த முறையும் வூடி ஆலனின் மொத்தப் படங்களையும் ஒரு நாள் நிகழ்வாய் அந்த திரைப்படவிழாவில் திரையிட ஒதுக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த கணம் முதற்கொண்டு அந்த நாளை தவற விட்டுவிடக் கூடாது என்று மனதிற்குள் ஒரு பரபரப்பு இருக்கக் காரணம் அதை தொடங்கி வைக்க அவரே வருகிறார் என்பதே. எப்போதும் இருக்கைகளை பதிவு செய்யும் ஆப்பில் என்றும் விட அன்று கூட்டம் அலை மோதும் என்பதால் எனக்கான ஒரு இருக்கையை உறுதிப்படுத்திக்கொள்ள மும்முரமாகக் காத்திருந்தேன். அவ்விழாவில் அன்றைய நாளைக் குறித்தான பேச்சுக்கள் எங்கும் நிரம்பியிருக்க, அறைக்குப் போகும் வழி எங்கும் அவரைப் பற்றியும், அவரின் திரைமொழி குறித்தும் பலர் தங்களின் தனித்துவமான பார்வையை முன்வைத்துக் கொண்டே இருந்தனர். எனக்கும் அப்படிப்பட்ட கருத்துக்கள் இருப்பினும் எவரின் விவாதங்களிலும் பங்கெடுக்கவில்லை. அதற்கு காரணம் சரியாகத் தெரியவில்லை என்றாலும் மற்றவர்களின் நோக்குகளைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.
வருடம் தவறாமல் கோவா திரைப்படவிழாவில் கலந்து கொள்வது பெரும் விருப்பமாக இருந்திருக்கிறது. திரைப்படங்கள் சார்ந்து இயங்கக் கூடிய நபர்கள் நிரம்பி வழியும் இக்கூடத்தினுள் தனி மனிதனாக இருந்திருக்கிறேன். இத்தனை வருடங்களில் ஏனோ எவரையும் தனிப்பட்ட என் சுயம் சார்ந்த வாழ்கையினுள் அனுமதிக்க மறுத்திருக்கிறேன் அதற்கான காரணத்தையும் என்னால் சரியாகச் சொல்லி விட முடியாது. ஏனோ, அது நிகழவில்லை. என்னை ஒவ்வொரு வருடமும் அடையாளம் கண்டு கொண்ட நபர்களிடம் ஒரு புன்னகையை மட்டும் தந்து விட்டு திரையரங்கினுள் செல்லவே விரும்பியிருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு அவரின் வருகை உண்மையில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கக் கூடாது என்றே நினைத்தேன். ஆனால், அப்படி நடக்காமல் அவரின் பாரீஸ் நகர வீதிகள் என்னுள் வந்து கொண்டே இருந்தன. பெரும்பாலான கதைகளை அதைச் சுற்றியே அவர் அமைத்திருந்தாலும், அவரின் படங்கள் வித்தியாசப்பட்டு தெரிவதே அதன் சிறப்பு. அலுவலகப் பணி நிமித்தமாக பாரிஸ் சென்றபோது அவர் நடந்த வீதிகளில் அவரைப் போன்று நடக்க முயன்றிருக்கிறேன். ஏனோ, அதை இப்போது நினைக்கையில் கேளிக்கையாகத் தெரிந்தாலும் அதைச் செய்து பார்க்க வைத்து விட்ட அவரை என்னவென்று சொல்லி கடந்து போக முடியும்? அப்படி படங்களைத் தேடி தேடிப் பார்க்க ஆரம்பித்தது அதில் வெளிப்படும் நிலங்கள் மற்றும் இடங்கள் குறித்தான மோகத்தில்தான். அதுவே ஆரம்ப புள்ளியாக இருந்தது. விவரம் தெரிந்தது முதல் என்னை தொற்றிக்கொண்ட தனிமையில் இருந்து விடுபட, நான் புதிது புதிதான இடங்களைத் தேடிப் போய் அதில் என்னை கடத்திக்கொண்டதும் ஒரு காரணம்.
சிறுவயது முதல் என்னை ஆட்கொண்ட வெறுமையில் இருந்து மீட்டு எடுத்தது என் அறையின் நான்கு சுவர்களும், என் ஜன்னலிலிருந்து வெளியில் தெரியும் கட்டடங்களும், சாலைகளும் அது இணைக்கக்கூடிய கடற்கரைகளும்தான். சிறுவயதில் நான் வரைந்த ஓவியங்களை மீண்டும் பரணில் இருந்து எடுத்துப் பார்க்கும் சூழல் வாய்த்தது. எத்தனை எத்தனை கிறுக்கல்கள்! எல்லாம் நிலப்பரப்பை மட்டும் சார்ந்தவை. அதில் நடமாட, உரையாட ஒரு மனிதர் கூட இல்லை என்பதை என்ன சொல்லி கடக்க முடியும்? அப்படியாக எனக்கு மனிதர்களால் எந்த வித சச்சரவுகளோ; இல்லை, அது சார்ந்த பெரிய இழப்போ இருந்தது இல்லை. ஏனோ அன்றிலிருந்து இன்று வரை உரையாடல் இன்றி காட்சிகளால் ஈர்க்கப்படக் கூடிய மனிதனாகவே இருந்திருக்கிறேன். அது என்னை நான் இயங்கும் இக்கட்டிட கலைத்துறையில் முதன்மைப்படுத்தியிருக்கிறது. ஆனால், இதனால்தானோ என்னோவோ அப்போதிருந்து குடும்பங்களுடனும், நண்பர்களுடனும், பெண்களுடனும் அவ்வளவு ஒட்டுவதே இல்லை. பல பேர் என்னிடம், ‘இது ஒரு வியாதி. இதற்கு சரியான மருத்துவ ஆலோசனை தேவை’ என்றெல்லாம் இழுத்துப் போய் இருக்கின்றனர். ‘எந்தொரு past trauma-வும் இல்லாமல் இது சாத்தியப்பட வாய்ப்பு இல்லை’ என்று ஒவ்வொரு மருத்துவரும் அதைச் சொல்லும் போதும், ‘அப்படிப்பட்ட ஒன்றைக் கடந்து வந்தால் தானே கூறமுடியும்?’ என்பேன். என்னுடைய விருப்பம் சார்ந்த ஒன்றாகவே இவைகளை வெளிப்படுத்தி இருக்கிறேன் அவைகள் எதை என்னிடமிருந்து பறித்துக் கொள்கின்றன என்பதை என்னால் சரியாக கணிக்கமுடியவில்லை. என்னிடமிருந்து சக மனிதனை அது பறிப்பதாக நீங்கள் சொல்பவை யாவும் என்னை ஒரு போதும் பாதித்ததில்லை என்றே நினைக்கிறன்.
அப்படி எவ்வளவோ இருந்தாலும் இடங்கள் மனதில் தேங்கி இருந்து கொண்டு அதைச் சுவைத்தல் இனிது . அதில் பெரிதும் ஆட்கொண்டது கடற்கரைகளே. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கடற்கரைகளில் நேரத்தைச் செலவழித்து இருக்கிறேன், இப்படியும் சொல்லலாம் ஒரு வித பைத்திய நிலையில் அவைகளுடன் இருந்திருக்கிறேன். எப்போதும் அவை என்னை அடர்த்தியுடன் காட்டும் கண்ணாடிகளாகவே தெரிய.. அதனுள் நான் சிரிக்க, அழுக, கோபப்பட, வம்பிழுக்க என்று காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். பெரும்பாலும் அதைச் சுற்றியே எனது இறுதிக் காலங்கள் அல்லது மரணம் இருக்கும் என்று நினைத்த பொழுதுகளில் அங்கேயே தொலைந்து போய் மீண்டு வர நினைக்காமல் அதன் சுகத்தை அனுபவித்திருக்கிறேன். அப்படி எனக்கு மிகவும் பிடித்த கடற்கரையில் ‘பஞ்சிம்’ கடற்கரையும் அடங்கும். முன்பு சொன்னது போல வூடி ஆலனின் படங்களில் தெரியக் கூடிய பாரிஸ் நகர வீதிகள் கூட இப்படிப்பட்ட நிலப்பரப்பை உள் வாங்க கூடிய ஒரு நிலையில் எனது மூளையினுள் பதிந்ததே காரணமாக இருக்கலாம். ஏனென்றால் என்னால் இடங்களை கூர்ந்து கவனித்து விட முடியும்; அதிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ள பெரும் போராட்ட மனநிலைக்கு செல்வதில் தொடங்கி, எங்கும் அதில் தன்னைப் பொருத்திப் பார்க்காமல் அனுபவிக்க வேண்டியிருக்கிறேன். அப்படிப்பட்ட கடற்கரையின் மணலில் புதைந்த எல்லாவற்றையும் ஒருநாள் தேடி எடுக்க தைரியம் எனக்கு கண்டிப்பாக வரும்.
பஞ்சிம் கடற்கரையை ஒட்டிய விடுதியில் எனது காலை வேளைகள் கையில் இளநீர் சுவையுடன் தயாரிக்கப்பட்ட ரம்முடன்தான் ஆரம்பிக்கும். அதன் சுவைக்கு தினமும் பழக்கப்பட்ட நாவாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு வித சிலிர்ப்பை நரம்புகளில் அது ஏற்றிக்கொண்டே இருக்க, மூளை தன்னியல்பாக அன்று காணப் போகும் படத்திற்கான இருக்கைப் பதிவினை பதிவுசெய்து விடும். இப்படிப்பட்ட இடங்களே பெண்களின் இருப்பைத் தாண்டிய ஒன்றாக அனைவற்றையும் அமைத்து விடுவது என்னை காத்துக்கொள்ளும் வழிமுறைகளில் ஒன்று. அதுவும் கிடைக்கப்பெற்றால் வேண்டாம் என்று மறுக்கக் கூடிய மனிதனாக ஒரு போதும் மாறிவிடக் கூடாது என்ற வினையினுள் உள்ளிருத்திக் கொள்கிறேன். பெரும்பாலான நேரங்களில் சிறிய சிறிய போத்தல்களை வாங்கி என்னுடன் வைத்திருப்பது வழக்கம். ஆகையால் அதன் மகிழ்வைக் கூறிட விரும்பவில்லை. அங்கிருந்து நடக்கும் தூரத்தில் கடற்கரையும் திரையரங்குகளும் இருக்கக்கூடிய இடத்தை முதன் முதலில் தேர்வு செய்து கொடுத்தது என்னுடைய தோழியே. இது நடந்து சுமார் ஐந்து ஆண்டுகள் இருக்கலாம், அன்றிலிருந்து எவ்வளவோ மாறியிருக்கிற இந்த நகரத்தினை உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறேன். முதன் முதலில் இந்த நகரத்தினுள் என்னை இழுத்துப் போட்ட அவளை இங்கு நினைவு வைத்துக் கொண்டுதானே ஆக வேண்டும்.. அவளும் என்னைப் போன்று திரைப்படங்கள் சாராது வேறு பணிகள் செய்யக்கூடியவளே. அவளே எனக்கான முன்பதிவுகள் எல்லாம் செய்து என்னை அழைத்து வந்திருந்தாள். முதன் முதலில் அவளுடன் சேர்ந்தே இங்கு திரைப்படங்களை பார்க்கத் தொடங்கினேன். பார்த்த திரைப்படங்கள் குறித்து அவளிடம் பேச நினைத்த போதெல்லாம் அதிலிருந்து விலகி விடுபவளாகவே இருந்திருக்கிறாள். லட்சத்தில் சம்பளம் வாங்கும் ஒருத்தி கடற்கரையை கடக்கும் பயணிகளின் படகில் செலவில்லாமல் ஏறிய இடத்திலேயே வந்து இறங்கி ஆனந்தமடைவதை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் அங்கு இருந்த காலகட்டத்தில் அதை அவள் தினமும் செய்து வந்தாள். நான் அதே கடற்கரையில் இருக்கும் காசினோவிற்கு செலவழித்து நுழைவுக் கட்டணம் செலுத்தி பந்தயம் ஆட, அவள் அப்படகினுள் இருந்து கொண்டு என்னைப் பார்த்து கையசைக்கும் காட்சியை எப்படி மறக்க முடியும்?
தினமும் காலை தொடங்கி வரிசையாக மூன்று வெளிநாட்டுப் படங்களை பார்த்துவிட்டு மாலை கோவாவின் தெருக்களில் சுற்றுவது, ஒன்று விடாமல் அணைத்து சர்சுகளையும் வேடிக்கை பார்ப்பது என்றே நேரம் போகும். கடற்கரைகளும், சர்ச்சுகளும், பப்புகளும் என மூன்றே நிலபரப்பில் இயங்கக் கூடிய நகரம். இரவு அவர் அவர்களின் அறையில் தூங்கச் சென்று விடுவோம். எனக்கு அவள் மீது உடல் சார்ந்து எந்த வித ஈர்ப்பும் இருந்ததில்லை. ஏனோ, அதைக் கையாண்டது அவள்தான்; நான் அதில் பொம்மையாக இருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்றாகச் சுற்றித் திரிந்தாலும் இருவருக்குமான படங்களின் விருப்பங்கள் வெவ்வேறாகவே இருந்தது. ஆகையால் இருவரும் மூன்று காட்சிகள் முடிந்து சந்திக்கும் இடத்தை தேர்வு செய்து வைத்திருப்போம். பின்னர் அவள் அழைத்துச் செல்லும் இடத்திற்கு பின்னாலேயேசெல்வதுதான் என் வேலை.
“மனுஷங்களையும் கொஞ்சம் பாரு..” என்று அவள் சொன்னது இத்தனை ஆண்டு காலங்களாக எனக்கு மட்டும் தெரிந்த ஒன்றை அவள் எப்படிக் கண்டுபிடித்தாள்என்று ஆச்சரியமாக இருந்தது.
“எல்லா இடத்தையும் உன்னால சொந்தம் கொண்டாட முடியாது தெரியுமா? உன் எடத்துல கொஞ்ச மனுசங்களுக்கும் பச்சாதாபம் காட்டு. அது கொண்டாட்டத்தை அருளும்” என்று சிரித்துக்கொண்டே அவள் சொன்னதில் இருக்கும் உண்மையை எதிர்த்து வாதிட முடியாமலும், அதேநேரத்தில் சரியென்று ஏற்றுக் கொள்ள முடியாமலும் இருந்திருக்கிறேன். அந்த இடத்தில அவள் மீது கோபமே வந்தது. இதுவரை என்னை மதிப்பிட்டவர்கள் இல்லை என்ற காரணத்தினால். அங்கிருந்து உடனே கிளம்பிவிட வேண்டும் என்று தோன்றியது. அப்படிப் பார்த்தால் நான் புதைந்து கிடக்கும் நீர்த்துளிகளான கடற்கரையும் அக்கேள்வியினுள் என்னைப் பார்த்துச் சிரிப்பதை ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்? அங்கேதான் அவள் என்னை நிராகரிப்பது போல அல்லாமல் மனிதர்களை சேர்த்து கொள்ளச் சொல்வது புதிதாய் இருந்தது. அது அவள் எனக்காக கொடுத்த சுவை என்று இப்போதுதான் புரிகிறது. அந்த இளநீர் ரம்மை எனக்கு அறிமுகப்படுத்தியதும் அவள்தான். ஒவ்வொரு முறை ஐஸ் கியூப்ஸ் உடன் சேர்த்து அவள் அதை அருந்தும் சமயம், ‘ஆன் தி ராக்ஸ்’ என்று சொல்லும் போது மட்டும் அவள் குரல் அவ்வளவு சில்லிட்டு இருக்கும். இங்கு இவளுடன் தனியாக வந்ததை இப்போது நினைக்கையில் எனக்கான ஒன்றை அவள் சரியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்று தோன்றுகிறது.
அவ்விழாவில் சிறிய குழுவொன்று கோவா பற்றித் தெரிந்து கொள்ள சிறுசிறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பல பிரிவுகள் இருந்தன. பழைய, புதிய கோவா பற்றிய புரிதல்கள், அங்கு இருக்கக் கூடிய கிராமங்களுக்கு கூட்டிச் சென்று அம்மக்களின் வாழ்க்கையையும், வரலாற்றையும், அவர்களின் உணவு முறைகளையும் காட்டுவதாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவர்களின் ஸ்டால்கள் திரையரங்க வளாகத்தினுல்லேயே போடப்பட்டிருந்தது . அங்கிருந்த பாம்ப்லெட்டை வாங்கி ஆர்வமாகப் பார்த்தவள் அதில் இருக்கும் ‘heritage walk ’ செல்ல வேண்டும் என்று அன்றிரவு இருவரும் அவளின் அறையில் இருக்கும் போது சொன்னாள். இரவு சிறிது நேரம் அவளின் அறையில் பேசுவதுதான் வழக்கம். அவளின் பேச்சில் தெரிந்த ஆர்வத்தில், ‘எதற்காக இத்தனை மகிழ்ச்சி கொள்கிறாய்?’ என்று கேட்ட என்னிடம், ‘அதை எல்லாம் பதிவு செய்ய ஒரு புகைப்படக் கலைஞன் என்னுடன் வருவதால்.. மண்ணின் மைந்தன்’ என்று சொல்லி சத்தமாகச் சிரித்தாள். அவளின் உடல் முழுவதும் பரவுவதாக இருந்தது அந்தச் சிரிப்பு.
அதுவரை தனிமையில் விடப்பட்ட என் அறைக்கு நான் சென்று உறங்குவதற்கு முன் மனதில் ‘ஏன் பேசுவதற்கு எப்போதும் அவளின் அறையை தேர்ந்தேடுக்கிறாள்?’ என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும். எதனின் வெளிப்பாடு அவள் அந்த அறையை தேர்ந்தெடுத்தது? அதிலிருந்து அவள் எதைச் சொல்ல நினைக்கிறாள்? எப்போதும் செயலின் மூலமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒருத்தியை எதைக் கொண்டு அளவிட முடியும் என்று தெரியாது திரிந்த நாட்கள் அவைகள்.
கடைசி நாளும் வந்தது. இருவரும் அவ்விழாவில் பரிசைப் பெறக்கூடிய திரைப்படம் இதுதான் என்று ஆளுக்கு ஒன்றைச் சொல்லி இருந்தோம். முடிவிற்கு காத்திருந்த போது ஏனோ அது அவசியம் இல்லை என்பது போல இருவரும் கிளம்பினோம்.
அலுவலகத்திலிருந்து கிளம்பியது முதல் இப்போது விழா முடிந்து செல்லும் வரை அனைத்தும் அவளின் ஏற்பாடாகவே இருந்தது. எப்படியோ அந்த ‘heritage walk’ சென்று விட வேண்டும் என்று தினம் முயற்சி செய்தாலும் ஏனோ காரணங்களால் அது நடக்காமல் போனது. இருவரும் அதைப் பற்றி பேசிக்கொண்டாலும் அவளுக்கு அதில் பெரிய வருத்தம் இருந்ததாகத் தெரியவில்லை. எப்போதும் போல அடுத்த நாள் அலுவலகதிற்குச் சென்ற நான் அவளைத் தேடினேன். ஆனால், அவள் வரவில்லை. அதற்கு பின் அவள் வேலைக்கும் வருவதில்லை.. இப்படி சட்டென்று உதறிப் போதல் எதைச் சார்ந்தது என்று விளங்கிடாத ஒன்றை அறிவிற்கு கொண்டுவருவது முட்டாள் தனம். அவள் முட்டாள்தானா? இத்தனை பேர் இருக்கும் அலுவலத்தில் எப்படி எங்களுக்குள்ளான பயணம் தொடங்கியது? அதையும் அவள்தான் கையாண்டாளா? வேகமாக அருகில் இருக்கும் அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தேன். பதிலில்லை; அதன்பின் எதுவும் அவளிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை.
அன்றைய நாளில் அவள் சென்னையிலிருந்து ட்ரைன் மூலமாகவே கோவாவிற்கு பதிவு செய்திருந்தாள். “விமானம் என்றால் இன்னும் சுலபம்” என்று சொன்ன என்னிடம், “நீ பதிவு செய்து கொள்ள ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று சொன்னாள். அப்போது புரிந்து கொள்ளவில்லை.
அந்த ரயில் பயணத்தின் போதுதான் தூத் சாகர் அருவியினைப் பார்க்க முடியும்; அதனாலேயே அதைச் சொல்லியிருக்கிறாள் என்று தோன்றியது. பிரம்மாண்டமாக விழும் அவ்வருவியின் சாரல் எப்படி இருக்கிறது என்று கேட்க, “நான் ‘இதுவரை அனுபவித்திடாத இனிப்பு” என்றதும் சிரித்து விட்டாள். ‘இனிப்பா..’ என்று ஒரு முறை முனகி சிரித்துக் கொண்டாள். இப்போது நினைக்கையில்தான் புரிகிறது எனது நிலப்பரப்பு மீது எப்போதும் நான் தெளிக்கும் சுவையை அன்றே புரிந்து வைத்திருக்கிறாள் என்று. இப்போது அதே தூத் சாகரின் சாரல் இனிப்பை உடையதாகவே இருக்கிறது .
‘சுவைகள் அனைத்தும் ஒன்றே அது மனிதர்களைச் சார்ந்து மட்டும் பொருந்துவது அல்ல’ என்று அவள் கூறியதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.. அவளையும். அதை அறிந்தவள் போல அவள், “பிரித்தறிய முயலாதே.. அதன் முடிச்சுக்கள் தரும் யாவற்றையும் அனுபவி..” என்றாள்.
அதற்குப் பிறகு அவளைப் பற்றியான சிந்தனை கோவா பயணத்தின் போது தொற்றிக்கொள்வது வழக்கமே. எப்போதும் நாங்கள் அங்கே தங்கியிருந்த அருகருகிலுள்ள இரண்டு அறைகளை இணையம் மூலம் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அங்குள்ள அலுவலர், “மேடம் இந்த தடவையும் வரலையா?” என்று விசாரிப்பது ஆச்சரியமாக இருக்கும். எல்லோரிடம் அவர்களுக்கான சுவையை அவள் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறாள் என்றே தோன்றும்.
பக்கத்து அறையினை பார்க்க எப்போதும் கால்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த இரவுப் பேச்சுக்களை மீண்டும் பேச மனம் துடிக்கும். எது என்னை இப்படிப்பட்ட மாற்றத்திற்குள் கொண்டு போய் சேர்த்தது என்று இன்றளவும் தெரியவில்லை. இப்படி என்னை இக்கட்டான இல்லது புதிய ஒன்றை அனுபவித்து கொள் என்று அருளிச் சென்றவளின் முகமும், நடையும், பேச்சும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அந்த அறையின் தனிமையில் அவள் யோசித்த யாவற்றையும் எப்படியாவது என்னுள் கிரகித்துக் கொள்ள வேண்டும் என்கிற பிடிவாதத்தை எண்ணி வருந்தி இருக்கிறேன். நாங்கள் பேசிக்கொண்ட இரவுகளில் ஒலித்துக்கொண்டிருந்த கடற்கரை ஓசை இன்னும் அந்த அறையினுள் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் இதைச் செய்வதை நிறுத்த வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அது நிகழ்வதைத் தடுக்க முடியவில்லை. எதனால் அவளுடன் இப்படி பிணைக்கப்பட்டு விட்டேன் என்று யோசிக்கையில் அவள்தான் என்னுடைய ரகசியத்தை அம்பலப்படுத்தியள் என்பதே பெரும் காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது. இதிலிருந்து துண்டித்துக் கொள்ள முயன்றாலும் மேலும் மேலும் அதில் உள்ளே நுழைந்து பெரிய நடை போக பழகி இருந்தேன். அதற்கு ஓர் உதாரணமாய் அவள் சொன்ன அந்த heritage walk குழுவுடன் சேர்ந்து, எப்படியாவது அதில் பயணித்து விட வேண்டும். அதுவே இவையெல்லாம் முடிவுற ஒரு வழி என்கிற ஆர்வம் இருந்தாலும் அது தள்ளிப் போவது எதனால் என்று தெரியாது குழம்பிக்கொண்டிருந்தேன்.
அன்று பதிவு செய்திருந்த இருக்கையில் படம் திரையிடப்பட போகும் முன்பே நாங்கள் எப்போதும் அமரும் இடத்தில் இல்லாது வேறு ஒரு இடத்தில் அமர்ந்தேன். ஆட்கள் மெதுவாக இருக்கைகளை நிரப்பத் தொடங்கியிருந்தனர். நாளைதான் அந்த இயக்குனரின் வருகை. அவர் ஏற்கனவே கோவாவை வந்தடைந்து விட்டார் என்கிற செய்தி அவரின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருப்பதை கண்கொண்டு பார்க்க முடிந்தது. அதில் என்னைச் சேர்த்துக்கொள்ள கூடுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் படங்களில் இருக்கும் கதாபாத்திரத்தின் முரண்களோ, அவர்களின் வாழ்க்கை முறைகளோ அல்லது அது வெளிப்படுத்தும் கருத்தியல் சார்ந்த எதுவும் என்னை ஈர்த்தது இல்லை. அதன் நிலப்பரப்பே இவ்வளவு தூரம் என்னைக் கொண்டு வந்திருக்கிறது. சில நேரங்களில் இத்திரைப்பட விழாக்களில் சப் டைட்டில் வராமல் போன போது பாதி பேர் கிளம்பி விடுவார்கள் , என்னால் அப்படிப்பட்ட படத்தின் நிலப்பரப்பை வைத்துக் கொண்டு ஒரு கதையை உருவாக்கி விட முடியும் என்கிற நம்பிக்கை இருந்திருக்கிறது. அவளுடனான நட்பு ஆரம்பித்தது, நாங்கள் கோவா வந்தது முதல் எல்லாம் திரைப்படங்கள் சார்ந்ததே என்றாலும் அது குறித்து நாங்கள் அலுவலகத்தில் பேசிக்கொண்டது கிடையாது. இங்கு வந்த பிறகும் அதுவே தொடர்ந்தது. இரவுப் பேச்சுக்களில் பெரும்பாலும் அவள் என்னைப் பேச விட்டு, நான் போன இடங்கள் குறித்துதான் அதிகமாக உரையாடி இருக்கிறோம்.
விளக்குகள் அணைக்கப்பட்டது. அன்றைக்கு இயக்குனர் Herzog எடுத்த ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டிருந்தது. எப்போதும் போல அவரின் பரிட்சார்த்த முயச்சிகளில் அங்கும் இங்கும் கண்களை நகர்த்த விடாதபடி எடுத்த ஒன்றில் வென்றிருந்தார். ’ஆவணப்படத்தையும் நான் திரைப்படங்கள் போன்று ஸ்கிரிப்ட் உடன் இயக்கக் கூடியவன்’ என்கிற நேர்த்தியைப் போல அதில் ஹெர்சாக் நிறைந்திருந்தார். அப்படியே நானும் இயக்கப்பட்டதாக இப்போது உணர்கிறேன். என்னுடைய முதல் பெண் அவள்தான். அதனால் என்னவோ அவளுக்கு அவ்வளவு சுதந்திரம் தரப்பட்டதா ? இல்லை அது அவளாலே எடுத்துக் கொள்ளப்பட்டதா ..?
எப்போதும் இரவுக்கான இளநீர் ரம்முடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன். அங்கும் இங்கும் என ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். நாளை நடக்கவிருக்கும் கான்செர்ட்க்கு மேடை அலங்காரம் செய்து கொண்டிருந்தனர் ஒரு குழுவினர். என்னை மீறி மேடையின் பின்புறம் ஒரு இளம் ஜோடி ‘ஸ்மூச்’ செய்வதைப் பார்த்தேன். எதனால் அவள் மீது உடல் ரீதியாக எனக்கு விருப்பம் இல்லாமல் போனது என்பதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். அவலுடளின் அங்க அசைவுகள் யாவும் என்னுள் உருவம் பெறதத் தொடங்குகிறது. அது ஏற்படுத்தும் கிளர்ச்சியின் தாகம் இன்னும் இன்னும் என்னை புதிதாக்குகிறது. அவளின் அறையை நான் எடுத்திருப்பதே என்னை நிர்வானப்படுத்தவே. அவள் என் ஆடைகளை எப்போதோ களையத் தொடங்கிவிட்டிருக்கிறாள்.
ஏனோ இந்த முறை இன்று பார்த்த ஆவணப்படத்தை தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தும் சுமாரான படங்களாகவே இருந்தது. இத்திரைப்படவிழாவில் தவறவிட்டு விடக் கூடாத படங்கள் என்று அனுப்பும் படங்களை பெரும்பாலும் நான் பார்ப்பதில்லை ஏனென்றால் கிளாஸிக் என்று இவர்கள் சொன்னவற்றில் பாதி ஒன்றுக்கும் லாய்க்கில்லாததாகவே இருந்தது. அதைக் கூட பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது. திட்டவாவது ஏதோ ஒன்று இருந்திருக்கும் என்று புலம்பியது மனம். ‘எல்லா சுவையும் மனிதர்கள் கூடி இயக்குவதல்ல‘ என்று அவள் சொன்னதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இல்லை; அவள் சொன்ன விதத்தில் என்னால் புரிந்து கொள்ளப்பட்டதா என்று தெரியவுமில்லை. மனதிற்குள் இந்த முறைதான் இங்கு வரக் கூடிய கடைசி தடவை என்று தோன்றியது. எல்லாவற்றிலிருந்தும் ஏனோ ஒரு எதிர்ப்பை என்னால் இங்கு உணர முடிகிறது. அது என் அங்கங்களை பளிச்சிட்டுக் காட்டுவதாய் இருக்கிறது. அதோ தூரத்தில் என்றும் எழுப்ப முடியாத படி மிதந்து கொண்டிருக்கும் எனக்கு கரை ஒதுங்க அல்லது மீண்டும் எழ மனம் இல்லை. நான் எடுத்த புகைப்படங்கள் கரை ஒதுங்குவதற்கு விருப்பமின்றி இருக்கின்றன. அத்தனை பெரிய வீடுகளையும், நகரங்களையும், தனிமையின் வெளியினையும் இரக்கமின்றி கடல் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.
கடற்கரையின் குளிரில் திடுக்கிட்டு எழுந்து கொள்ளும் போது உடல் சவப்பெட்டியின் வாசத்தை கடத்திக்கொண்டிருக்க, ஏனோ அதை விரும்பிச் சுவைக்கத் தொடங்கியிருந்தேன். காலியான போத்தல்களில் மணலை நிரப்பிக் கொண்டு ஹோட்டல் சென்றேன். இன்றிரவு அவளின் அறையில் கழிக்க வேண்டும் என்று தோன்றியது அல்லது ஒரு சிறு உரையாடல் அவ்வளவுதான் என்று மனம் அவ்வறையினுள் சென்றது. உள் நுழைந்ததும் இவ்வளவு நாள் மனதிற்குள் போட்டு அழுத்திக்கொண்டிருந்த, ‘எதற்காக இப்படி ஒரு பயணத்தினை தொடங்கி விட்டது மட்டும் இல்லாமல் அதில் என்னை தேர்ந்தெடுத்து ஏன்? அவள் ஆடிய விளையாட்டை நான் ரசிக்க வேண்டுமா? யாரை பலியாக்க? ஆகிய கேள்விகளை முதலில் கேட்டுவிட முயன்றேன். .அதன் ஆரம்பமாய்
“எதற்காக என்னை தேர்ந்தெடுத்தாய்..?”
எப்போதும் அவளிடமிருந்து வேகமாக வரும் எதிர் குரல் தாமதப்பட்டது, கடற்கரையின் அலை அறையெங்கும் நிரம்பி இருவரையும் ஒன்றோடு ஒன்றாக அழுத்தியது. அவளின் முகம் வாடியிருந்தது, அழுதிருக்கக் கூடுமோ? .என் நினைவில் சில வார்த்தைகள் மீண்டும் மீண்டும் பளிச்சிட்டன ‘கொண்டாட்டத்தை அருளும்…’ அதற்கு முன் அதை இழந்திருக்கிறேன் என்று அவளுக்குச் சொன்னது யார்? என்னளவில் அது தவறா..சரியா என்று அவளிடம் அன்றே தெளிவாகக் கூறியிருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க தேவையில்லை.
அவள் நான் எடுத்து வந்திருந்த போத்தலை திறந்த அடுத்த கணம் என்னை அக்கடற்கரை சொந்தம் கொண்டடிக்கொள்ள முயல்வதில் போராடி மூச்சு முட்ட புதைந்து போனேன். என்னவாகி இருப்பாள்? இப்படி பாதியில் நிறுத்திவிட்டு போன அவள் வாழ்கையின் மீதியை அறிந்திட பயம் கொள்கிறேன். ஏனோ அது அக்கறையின் வாசலா இல்லை என்னை சுவைத்தவளை இங்கிருந்து அழித்திடும் முயற்சியா ..?
வயிறு பசிக்க விழிக்க வேண்டியிருந்தது. முதலில் வெளிப்படாத ஒன்று சட்டென்று தன்னை நிரூபிக்க இன்றைக்கான இருக்கையின் பதிவை இழந்திருந்தேன். அவசரமாகத் தேடி நுழையும் போதே அனைத்துஇடங்களும் நிரம்பியிருந்தன. அதை அறிந்ததும் என்னுள் எதுவும் பெரிதாக நடந்து விடவில்லை அவரின் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் ப்ளூ ஜாஸ்மின். அதில் ஜாஸ்மினாக நடித்திருக்கும் Cate Blanchette அப்படத்தின் இறுதி காட்சியில் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பை.. அந்தக் கோபத்தின், வெறுப்பின் அழுகையை என்னால் இப்போதுதான் நினைவுகூற முடிகிறது. ஏதுமற்ற பெரும் வெற்றிடத்தில் அவளை இச்சமூகம் தள்ளியதை காட்சியாக என் மனத்திரையில் ஓட்டிப்பார்க்க முடிந்தது. அப்படிப்பட்ட முடிவை பாதியில் விட்டுவிட்டு போனவளுக்கு நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. என்னிடமிருந்து விலகியவளின் அடுத்ததடுத்த சுவையை அறிந்திட முயற்சித்தலே இவ்வளவும் என்று நினைக்கிறேன்.
அனைவரும் இயக்குநரின் இடத்தை நோக்கி நகர்ந்ததால் மற்ற படங்களுக்கான இருக்கைகள் காலியாக இருந்தது. ஏனோ இன்று படங்கள் பார்க்கத் தோன்றவில்லை. மொபைலை எடுத்து அந்த ‘heritage walk‘ குழுவிற்கு அழைத்தேன். ஒரே ஒரு இடம் இருக்கிறது; நீங்கள் சேர்ந்து கொள்ளலாம் என்றனர். நீங்கள் தங்கி இருக்கும் விடுதிக்கே நாங்கள் வந்து கூட்டிச் செல்கிறோம். அவ்வழியேதான் நம் பயணம் என்றனர்.
சொல்லிய நேரப்படி அவர்கள் என்னை ஏற்றிக்கொள்ள நான் அவர்களுள் ஒருவனாக கலந்து கொண்டேன். திரைப்பட விழா நடக்கும் திரையரங்கை கடந்து போவதற்குள் பெரும் சிரமமாக இருந்தது. அங்கு ஒரு பெரும் ஆராவாரம் நிரம்பி இருந்த காரணம் என்னோடு பயணித்த குழுவினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வூடி ஆலன் எடுத்த அணைத்து திரைப்படங்களின் போஸ்டர்களையும் அவரின் புகைப்படத்தோடு ஒரே பேனரில் அலங்கரித்திருந்தனர். அதில் எனக்குப் பிடித்த ப்ளூ ஜாஸ்மினைத் தேடினேன். ஒரு நாளும் அவளை போன்று தோழிக்கான இடம் இவ்வுலகில் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் முதன் முதலில் தோன்றியது. அவளுக்காக என்னுள் ஓர் நிலப்பரப்பின் இருப்பிடம் வடிவம் பெறத் தொடங்கியிருந்தது அங்கு அவள் சுவைத்துக் கொண்டாட இளநீர் ரம் எங்கும் நிரம்பியிருக்கும். ’ஆன் தி ராக்ஸ்’.
**********