இணைய இதழ்இணைய இதழ் 61சிறுகதைகள்

ஊர் திரும்புதல் – குமாரநந்தன்

சிறுகதை | வாசகசாலை

ற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஜெயக்குமாருக்குள் தீவிரமடையத் தொடங்கியது.

அவர் ஒரு சினிமா நடிகர்பல ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் சமீபத்தில்தான் நடிகராக அறிமுகமானார்அதற்குள்  அவருடைய வாலிபம் முடிந்திருந்தது. முதலில் அவர் டைரக்டராக விரும்பித்தான் வீட்டை விட்டு வந்தார். பின் நடிகராக வேண்டும் என, எப்போது முடிவு செய்தார் எனத் தெரியவில்லை. ஆண்டுக்கணக்காக வாய்ப்பு தேடிக்கொண்டே இருந்தார். துணை நடிகர்கள் சங்கத்தில் சேர்ந்து, வெகு காலம் கூட்டத்தில் ஒருவராய் நடித்துக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கை ஏறக்குறைய தீர்ந்துபோய்விட்ட நிலையில்தான் ஒரு படத்தில் அவருக்கு கதாநாயகிக்கு அப்பாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் நன்றாக நடித்திருப்பதாக பரவலாக கவனம் பெற்றார். பிறகு வரிசையாக படங்கள் வர ஆரம்பித்தன. மீண்டும் அவருக்குள் வண்ணக் கனவுகள் உயிர் பெற்றன. குணச்சித்திர நடிகராய் தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடித்துவிட வேண்டும் என நினைத்திருந்தார்.

நூற்றுக்கணக்கான வேடங்களை மனதில் புனைந்து விதவிதமாய் நடித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒன்றிரண்டு வருடங்களில் அவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. சீரியல்கள் மூலம் கவனம் பெற்று வந்த பிரதாப்புக்கு இவருடைய வாய்ப்புகள் போக ஆரம்பித்தன

இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து அவருக்கு ஒரு படம் கூட புக் ஆகவில்லை. அவ்வளவுதான், தன்னுடைய சினிமா வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது என நினைத்தார். மனப்புழுக்கம் மெல்ல மெல்ல அவரைத் தின்ன ஆரம்பித்தது. தற்கொலை சிந்தனைகள் வளர ஆரம்பித்தன

இந்த சமயத்தில் சின்ன வயதில் அவருக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலை எதேச்சையாக மீண்டும் கேட்டார்பல ஆண்டுகளாக அவர் மனதில் ஒலிக்காமல் மறைந்திருந்த அந்தப் பாடலை எதிர்பாராதவிதமாய் இப்போது கேட்கவும் தனக்கு ஒரு பால்யம் இருந்தது அவர் நினைவுக்கு வந்தது. அந்த வயதில் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தார்! அவர் மனம் பாரமின்றி பஞ்சுபோல எவ்வளவு சுதந்திரமாய் இருந்தது! வாழ்க்கை அப்படியே இருந்திருக்கக் கூடாதா? இவ்வளவு பாரம் எங்கிருந்து வந்தது? இதற்குப் பெயர்தான் வாழ்க்கையா என அவர் மனதில் தொடர்ந்து எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.

பால்ய நினைவுகளிலேயே சில நாட்களை ஓட்டிவிட்டார். ஆனால் பட வாய்ப்புகள் இல்லாத நிலை அவரை மீண்டும் மனப்புழுக்கத்துக்குள் தள்ளியது. தற்கொலை சிந்தனை திரும்ப உயிர்பெற்றது

சாவதற்கு முன் ஒருமுறை தன்னுடைய கிராமத்துக்குப் போய் வரலாம் என நினைத்தார். கிராமத்துக்குப் போனால் தன்னுடைய சின்ன வயதுக்கே போய்விடலாம் என நம்பினார்

ஏறக்குறைய தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அந்த சமயத்தில் சொந்தம், பந்தம், உறவுகளைப் பற்றி சிந்திப்பதை அறவே விட்டிருந்தார். அப்போது வீட்டிலிருந்தவர்களின் பாசத்தை பெரும் தொல்லையாகத்தான் அவரால் நினைக்க முடிந்தது.

வீட்டைவிட்டு வெளியேறிய பின் ஆறு மாதங்கள் கழித்து, அவருடைய அப்பா, அம்மா தேடி அலைந்து அவரை சந்தித்த விட்டார்கள் அப்போது அவர்கள் அவரைக் கட்டிக் கொண்டு அழுததை சாதாரணமாக நினைத்திருந்தார்

இப்போது நினைக்கையில் அந்த தருணங்கள் பெரும் கண்ணீருக்குள் மூழ்கி இருந்ததைப் புரிந்துகொண்டார். எல்லாவற்றையும் இழந்துவிட்டதைப் போன்ற உணர்வு ஒரு இயந்திரத்தின் சக்கரமாக அவர் மனதை நசுக்கிப் பிழிந்தது.

 தனக்கு உறவென்று மனைவி மீனாவைத் தவிர யாரும் இல்லை என்பது அப்போதுதான் அவர் நினைவுக்கு வந்தது. அந்த விஷயம் பெரும் துயரமாகி தீவிரமாக தன்னுள் இறங்குவதைத் தடுக்க இயலாதவராய் பார்த்துக் கொண்டிருந்தார்.

***

மீனா கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள். அந்தி மல்லி நிறத்தில் லோயரும், மெலிந்த சாம்பல் நிற டீசர்ட்டும் அணிந்திருந்தாள். தலைமுடியை அழகாக சுருட்டி நெளி கிளிப் போட்டிருந்தாள்.

காலை உடற்பயிற்சியால் அவள் முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்பு கட்டி நின்றன. பூத்துவாலையை எடுத்து முகத்தில் ஒற்றிக்கொண்டே, ஜெயக்குமாரைப் பார்த்து,இன்னும் எழுந்திரிக்கலையா?” என்றாள்.

வாழ்க்கை என்பதை ஒரு ஓட்டப் பந்தயம் போல அவள் உருவகித்து வைத்திருந்தாள். அது கிளைகளற்றது. நேரானது என்பது போலவும், அதில் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கையோடும் எப்போதும் உற்சாகமாக இருந்தாள்

ஜெயக்குமாருக்கு அது அவ்வளவு செயற்கையாய் தெரிகிறது. ஆனால் அவளுடைய இயற்கையே மிகவும் செயற்கையாக இருப்பதுதான் என்பது எப்போதும் அவருக்குப் புரிவதில்லை. இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவரை உற்சாகமாகப் பார்த்தாள். “சாப்பிட வெளியில போகலாமா? அல்லது சமைக்கவா?” என்றாள். அவர் அவளை தொலைதூர மனநிலையில் இருந்துகொண்டு, யாரோ ஒருத்தியைப் பார்ப்பது போலப் பார்த்தார்.

அவள் ஆச்சரியமடைந்தாள். கலங்கிச் சிவந்திருந்த அவரது கண்களைப் பார்த்து திகைத்து,என்ன ஆச்சு?”  எனக் கேட்டாள்

என்னவோ திடீர்னு எங்க கிராமத்துக்கு போகனும் போல இருக்கு” என்றார். அதைக் கேட்டு சமநிலையை நோக்கித் திரும்பிய மனதுடன், “அப்படியா? போயிட்டு வாயேன்என்றாள்

அப்பா, அம்மா இல்ல. எங்க போறதுன்னுதான் தெரியல” என்றார். அந்த வார்த்தைகளில் அவர் மனக்காயத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்ட மீனா, அவர் தலையை செல்லமாக வருடினாள். “என்ன ஆச்சு? என்னை உனக்கு அந்நியமாய் தெரியுதா? ஏன் இப்படி பீல் பன்ற?” என்றாள்.

தொடர்ந்த இரண்டு நாட்களில் மற்ற நினைவுகள் எல்லாம் சுத்தமாய் வடிந்து விட்டன. சிறு வயது நினைவுகள் அவருக்குள் இரவும் பகலும் நோயைப் போலக் கொதித்தன. தூக்கத்தில் தன்னை மறந்து  சிரித்தார். சிறுவனைப் போலக் கத்தினார்

மீனா பயந்து விட்டாள்

என்னாச்சு உங்களுக்கு? சைக்கியாரிஸ்ட் யாரையாவது பார்க்கலாமா? திங் யூ ஆர் இன் டிப்ரஸ்”

இரண்டு நாளில் சரியாயிடும்னு நினைக்கிறேன். அப்புறம் பார்க்கலாம்” 

அன்றிரவு அவர் பெரியம்மா கனவில் வந்து சோள தோசைகளை சுட்டுப் போட்டார்

ஜெயக்குமார் திடுக்கிட்டு விழித்தார். சோள தோசையின் வாசம் மூக்கின் அடியில் இருந்து மனதுக்குள் மூழ்கியது. ஒரு சில நிமிடங்களுக்கு முன், தான் நாற்பது வருங்களுக்கு முந்தைய காலத்துக்குச் சென்று வந்ததாய் நம்பினார். அந்தக் காலத்துக்கு இனி ஒருநாளும் போக முடியாது என்ற நினைவின் தாக்கத்தால், மிகவும் பதற்றமடைந்து, படுக்கையில் உட்கார்ந்துகொண்டு விசித்து அழ ஆரம்பித்தார். மீனா பதறி எழுந்து,என்னாச்சு?” என்றாள். அவளுக்கும் கண்ணீர் வந்தது. அவர் அவள் தோளை ஆறுதலாய் பிடித்து,ஒண்ணும் இல்ல ஒண்ணும் இல்ல” என்றார். “எனக்கு என்னவோ பயமாய் இருக்குங்க. இன்னைக்கிப் போய் சைக்கியாரிஸ்ட்ட பாத்துடுவோம். பிளீஸ்” என்றாள் மீனா.

அவர் சிரித்துக்கொண்டே, “நான் கிராமத்துக்குப் போகலாம்னு இருக்கேன்” என்றார். “நோ இந்த நிலைமையில உங்களை நான் விட மாட்டேன். டாக்டரை கன்சல்ட் பண்ணிட்டு அப்புறம் போலாம்” என்றாள் மீனா.

வேண்டாம் மீனா. நான் போய் எங்க பெரியம்மாவப் பாத்துட்டு வந்தா சரியாப் போயிடும். அவங்க இன்னைக்கு என் கனவுல வந்துட்டாங்க. அவங்க உயிரோட இருக்காங்களா? இருப்பாங்கன்னுதான் தோணுது. இருப்பாங்க. இல்லைன்னாலும் ஊருக்கு ஒரு தடவை போயிட்டு வர்றேன்” என்று கெஞ்சினார்.

அவங்க இல்லைன்னா நீங்க ரொம்ப பாதிக்கப்பட்ருவீங்க. நானும் உங்க கூட வர்றேன்” என்றவளை ஒரேயடியாய் மறுத்துவிட்டார்.

ரயில் டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் உடனே அந்த யோசனையைக் கைவிட்டார். பகல் நேர பஸ்சில் முன்பதிவு செய்தார்

அன்று வெயில் மிதமாய் இருந்தது. முதல்நாள் நல்ல மழை பெய்திருந்ததால், புறக்காட்சிகள் மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தன. மழையை நினைத்தவுடன் உடனடியாக தன் சிறு வயது மழைக் காலத்திற்குள் சென்று விட்டார். அப்போது மழைக்காலம் வெறும் மழைக்காலமாய் இருந்தது. புயல் சின்னம், புயல் உருவாவது எல்லாம் தெரியாது

விறகு அடுப்பில் பொரிபொரிச்சான் விறகுகள் பொரிய குளிர் காய்ந்தது. குடைக்காளான்களை தேடிப் போய் கூடை கூடையாய் பறித்து வந்தது, நண்டு பிடிக்க சுனைக்குப் போனது எல்லாம் நினைவுக்கு வந்தன.

குதிரை வண்டியில் ஸ்பீக்கரை கட்டிக் கொண்டு செய்யப்பட்ட சினிமா விளம்பரங்கள், நோட்டீசுகள், போஸ்டர்கள் எல்லாம் அவர் கண் முன்னால் ஒளி சிந்தின

பெரியம்மா அகிலாண்டம் பின்னால் கொசுவம் வைத்து கட்டிய சேலையும் கொண்டையும் மல்லிகைப் பூவுமாக இவரை சினிமாவுக்கு கூட்டிப் போவார். ஊசித் தட்டான்களைப் பிடித்தபடி அந்த சாலையில் சென்றதன் மகிழ்ச்சி இப்போது கற்பனையும் செய்ய முடியாததாய் இருந்தது.  

கிராமத்துப் பெண்கள் சினிமாவை அப்படி ரசித்தார்கள். படம் பார்க்கும்போது, கதாநாயகனுக்குத் தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவன் எதிரியைப் பார்க்கும் போதெல்லாம் திட்டுவார்கள். சபிப்பார்கள். இவன் அவர்களைத் திரும்பித் திரும்பி வேடிக்கை பார்ப்பான். அப்போதுதான் அவனுக்குள் சினிமா எண்ணம் வேர் பிடிக்க ஆரம்பித்திருக்கக் கூடும்.

பதின்ம வயதில் எதில் காலை ஊன்றுவது எனத் தெரியாமல் தத்தளித்தான். படிப்பையும் சுமாராகப் படித்துக் கொண்டிருந்தான். விடாமல் சினிமா பார்த்தான். தான் மட்டுமல்ல, பெரும்பாலான இளைஞர்களிடம் உள்ளுக்குள் இருப்பது சினிமா கனவுதான் என்பதைப் புரிந்துகொண்டபோது, அவன் வேறு ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியேறினான்

அவனுடைய போராட்டம் மிகக் கடுமையானதாக, பரிதாபத்திற்குரியதாக, அவமானங்கள் நிறைந்ததாக இருந்தது. வருடங்கள் அவனுக்குப் பின்னால் வெகுதூரம் சென்றுவிட்டன. எவ்வளவோ சம்பவங்கள் நடந்தன. அவையெல்லாம் அப்போது அவனை பாதிக்கவே இல்லை

இப்போது நினைக்கும்போது இப்படியெல்லாம்தான் தான் வாழ்ந்தோமா என அவருக்கு வியப்பாய் இருந்தது. 

அப்பா இறந்ததற்குக் கூட போகாமல் சென்னையில் எதற்காக இருந்தோம் என்பது மறந்து போய் விட்டது. அம்மா இறந்தபோது கடைசியாய் ஊருக்கு போனார். அவர்களின் இறப்புக்கு இப்போது அழ வேண்டும் போல இருந்தது

மாலையில் சேலம் வந்து சேர்ந்தபோது, நகரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராகப் பதுங்கியிருப்பது போல இருந்தது. பழம், பிஸ்கட்களை வாங்கிக் கொண்டார். வாடகை வண்டி பேசினார்.

அரை மணி நேரத்தில் தன்னுடைய சொந்த ஊரான மேல்மங்கலம் கிராமத்துக்குப் போய் விட்டார்

கார் ஊர் கோவில் அருகே நின்றது. அங்கிருந்த இளைஞர்கள் பக்கத்தில் வந்தனர். ஜெயக்குமார் கீழே இறங்கி நின்றதும், அந்த சினிமா முகத்தை அவர்கள் எளிதில் அடையாளம் தெரிந்து கொண்டனர்

***

அகிலாண்டம் இவரைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். அவர் முகத்தோடு தன் முகத்தை வைத்துக் கொண்டு குழந்தையைப் போலத் தேம்பி அழுதார். “இப்பதான் என் ஞாபகம் வந்ததாடா பயலே. செத்துட்டனா இருக்கனான்னு பாக்க வந்தியா?” என்றார். அவர் தான் கொண்டு வந்த பழங்கள் பிஸ்கட்டுகளை ஆசையாய் அவரிடம் தந்தார். எல்லாவற்றையும் வாங்கி ஓரமாய் வைத்து விட்டு நீ சாப்டியாப்பா? என்றார்

அவரோடு கதைகள் பேசித் தீராததாய் இருந்தது. அவர் பேசுவதை மொபைலில் படம் பிடித்தார். அவருடன் சேர்ந்து நிற்கும் பல கோணங்களை செல்பியாய் எடுத்துத் தள்ளினார்

போன் வந்தபோதுதான் மீனாவின் ஞாபகமே வந்தது. போனை எடுத்ததுமே,ஹாய் மீனா” என்று கத்தினார். அவருடைய மகிழ்ச்சி காட்டுத்தனமாய் மீனாவின் மீது கொட்டியது. அதீதமான வெளிப்பாடு அவளுக்கு சந்தேகத்தை கிளப்பினாலும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. உடனடியாக அவரோடு கிராமத்துக்குப் போய் விட வேண்டும் போல அந்த குதூகலம் அவளுக்குள்ளும் பாய்ந்தது. இவ்வளவு சந்தோஷமாய் அவரை ஒருமுறை கூடப் பார்த்ததில்லை. இப்போது அவர் முகம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் போல இருந்தது. அதை அவள் கற்பனை செய்ய முயன்றாள். ஆனால் அது கற்பனை செய்ய முடியாததாய் இருந்தது.

மீனா, எங்க பெரியம்மாவைப் பார்த்தேன். அவங்க எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க தெரியுமா? இந்த வாழ்க்கை இப்படியே இருந்துட்டாவே போதும் போல இருக்கு. நான் இங்கேதான் இருக்கப் போறேன்.

மீனாவின் மனதுக்குள் என்னென்னவோ விரும்பத்தகாத என்னங்கள் உருத் திரண்டன. அதை மறைத்துக்கொண்டு, “சாப்டீங்களா? என்ன சாப்டீங்க?” என்றாள் சகஜமாக

பெரியம்மா எனக்கு சோள தோசை சுட்டுத் தந்தாங்க” 

அவனோடு இப்போது எதையும் பேச முடியாது என்பதைப் புரிந்து கொண்ட மீனா. ஓகே டியர். டேக் கேர்… பை” என்று போனை துண்டித்தாள்

உடனடியாக ஜெயக்குமாரை சந்திக்க வேண்டும் என்ற உந்துதல் அவளை தொந்தரவு செய்தது ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றினாலும் ஒரே குழப்பமாய் இருந்தது.  வெளியில் கிளம்புவதற்குத் தயாராகி போனை எடுத்தபோதுதான் ஜெயக்குமார் அனுப்பிய வீடியோ, புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் இருப்பதைக் கவனித்து, திறந்து பார்த்தாள். அதில் ஜெயக்குமார் அட்டகாசமாக சிரித்துக்கொண்டு, அவர் பக்கத்தில் யாரோ நின்று கொண்டிருப்பதைப் போல நின்றிருந்தார். ஆனால் அங்கே யாரும் இல்லை. அடுத்தடுத்த படங்கள் எல்லாவற்றிலும் அவர் தனியாகவே இருந்தார். ஒவ்வொரு படத்துக்கும் மீனாவின் பதற்றம் அதிகரித்துக்கொண்டே போனது. வீடியோவைப் பார்த்தாள். அதில் அவரோடு யாரும் இல்லை. காட்டில் இருக்கும் ஒரு தனிமையான வீட்டில் யாருமற்ற வெளியைப் பார்த்து யாரோ இருப்பதைப் போல அவர் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். மீனா மனதை சமநிலையில் வைத்துக் கொள்ள போராடினாள். ஜெயக்குமாருக்கு போன் செய்தாள்

போன் ரிங் போகும் சத்தம் அவளுக்குள் முழங்கியது. போனை எடுத்ததும், “போட்டோஸ்லாம் அருமையாய் இருக்கு ஜெய். எப்ப கிளம்பற?” என்றாள்

பெரியம்மாக்கு ரொம்ப வயசாயிடுச்சி. அவங்கள இந்த நிலமையில விட்டுட்டு எப்படி வர்றது மீனா?”

இங்க புரட்யூசர் ஒருத்தர் உன்னைத் தேடி வந்தார். ரெண்டு நாள்ல வந்துருவேன்னு சொல்லியிருக்கேன். படம் பண்றாராம். அதுல ஒரு லைப் புல் கேரக்டர். நீ பண்ணா நல்லா இருக்கும்னார். ”

எனக்கு சினிமாவே வேணாம் மீனா. இங்க நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?”

 உனக்கு என்ன பைத்தியமா என உதடு வரை துடித்துக் கொண்டு வந்த கேள்வியை விழுங்கிக் கொண்டாள். சரி என்ன சாப்ட?”

குச்சிக் கிழங்கு, நிலக்கடலை இதான் சப்டேன். ஒத்துக்கலை. வயிறு வலிக்கிது.”

ஏன் சாப்பாடு என்ன ஆச்சி?” எனக் கேட்க நினைத்தாள். ஆனால் அவர் இருக்கும் நிலை அவளுக்குத் துல்லியமாய் தெரிந்தது. இப்படிக் கூட ஒருவருக்கு புத்தி பேதலித்துப் போகுமா? என ஆச்சரியமாய் இருந்தது

சரி ஊருக்கு எப்படி வர்றது சொல்லு நானும் அங்கயே வந்துடறேன்.” 

நிஜமாவா மீனா? நீ இப்படியெல்லாம் மாறுவேன்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்ல” 

பேசிக் கொண்டிருக்கும்போதே போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.

திரும்பவும் சாயந்திரம் வரை போன் அப்படியே இருந்தது. இனியும் தாமதிக்கக் கூடாது என, பக்கத்து வீட்டு ரம்யாவிடம் யோசனை கேட்டாள் .அவள் அந்தப் புகைப்படங்களை தன்னுடைய போனுக்கு தரவிறக்கிக் கொண்டாள்

இப்பவே ஊருக்குக் கிளம்புவோம். அவர் எங்க போறதா சொல்லிட்டுப் போனார்?” 

தெரியலையே? சேலம் பக்கம் ஏதோ ஒரு கிராமத்துப் பேரைச் சொன்னார். என்னன்னு மறந்து போச்சு

அவரோட ஊர் எது?”

அவர் ஊரைப் பத்தி எதுவும் பேசினதே இல்லை. பேசினாலும் வேற விஷயத்துக்கு மாறிடுவார். நான் ஒரு முட்டாள் இதைக் கூடத் தெரிஞ்சி வச்சுக்காம இத்தனை நாளா இருந்துட்டேன்” என்று அழுதாள்

அப்படீன்னா உடனே போலீஸ் கிட்ட உதவி கேக்கறதுதான் நல்லது” என்றாள் ரம்யா.

அவள் ஸ்டேஷனுக்குப் போவதற்குள் ஜெயக்குமாரின் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களிலும், யூ டியூபிலும் உலகெங்கும் பரவியிருந்தன. அவள் போன் விடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

இன்ஸ்பெக்டர் விவரங்களைக் கேட்டுக்கொண்டு, ஏம்மா படிச்சிருக்கீங்க உங்களுக்கு நேரா போலீஸ் ஸ்டேஷன் வரத் தெரியாதா? எதுக்கு பக்கத்துவீட்டு பொண்ணுகிட்ட போட்டோ, வீடியோவை ஷேர் பண்ணிக்கிட்டீங்க?” என்று அலுத்துக் கொண்டார்

சேலம் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்டு கேட்டார். அங்கு எந்த விவரமும் தெரியவில்லை

சரி சார், நான் சேலம் போய் பாத்துக்கறேன்” என்று மீனா கிளம்பினாள்

ஜெயக்குமாரோட நம்பரை கொடுத்து செல்போன் டவர வச்சு எந்த வட்டாரத்தில இருக்கார்னு பாக்கலாம். நாங்க எல்லா விவரமும் சொல்றோம். அவங்க உங்களுக்கு உதவி செய்வாங்க. தேவைப்பட்டா நாங்களும் வர்றோம். தைரியமா போங்க” என்று போலீஸ்காரர்கள் அவளை அனுப்பி வைத்தனர்.

மீனா சேலத்தில் இறங்கியபோது, நகரமெங்கும் ஜெய்குமாரின் போஸ்டர் தொங்கி. ’புத்திபேதலித்த நடிகர் எங்கே இருக்கிறார்?’ என்ற கேள்விகள் நகரெங்கும் சுற்றித் திரிந்தன

சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், தன்னை ஜெயக்குமாரின் மனைவி என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். வேறு அதிக விவரங்கள் தேவையாய் இருக்கவில்லை

ஜெயக்குமாரின் போன் நம்பரை வைத்து உடனடியாக டவர் கண்டு பிடித்துவிட்டார்கள்.

போலீசார் அந்த டவர் கவர் ஆகும் பத்துக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் விசாரித்தபடியே சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். டீ குடிக்க ஒரு கடை முன் வண்டியை நிறுத்தியபோது, அங்கு நடிகர் ஜெயக்குமார் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக டிவியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது

சமூக தளங்களில் போட்டோவை பார்த்துவிட்டு மேல்மங்கலம் ஊர் இளைஞர்கள் ஜெயகுமார் இங்கேதான் இருக்கிறார் என பேஸ்புக்கில் பதிவிட்டவுடன் விஷயம் மீடியாவுக்குப் போய்விட்டது

முதலில் பெரியம்மா வீட்டை கேட்டுக் கொண்டு வந்தவர் அவர் இறந்துவிட்டார் என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்தார். பிறகு திரும்பிப் போய் விட்டார் என்றுதான் நினைத்தோம். ஆனால், அவர் அகிலாண்டம் அம்மாவின் தோட்டத்து வீட்டுக்குச் சென்றது எங்களுக்குத் தெரியாது.அது கிராமத்தைத் தாண்டி தொலைவில் இருக்கிறது. டிவியில் அவருடைய வீடியோவைப் பார்த்த பின்தான் நாங்கள் அங்கே போய் பார்த்தோம்

குடிசையில் அவர் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை. மனிதர் அசையாமல் உட்கார்ந்திருந்தார். நாங்கள் போய் கூப்பிட்டபோது வரவில்லை. குண்டுக் கட்டாய் தூக்கி வந்து ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என மீடியாவுக்கு தகவல் கொடுத்தோம்” 

என அந்த ஊர் இளைஞர்கள் மாறி மாறி பேட்டி கொடுத்தார்கள்

காட்டிலிருந்து பிடிபட்ட விலங்கைப் போல அவர் கேமராக்களை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்

பின்குறிப்பு:

மனநல டாக்டர் சீனிவாசன் ஜெயக்குமாரை பரிசோதித்து இரண்டு மாதம் சிகிச்சை அளித்து, மெல்ல மெல்ல அவரை பழைய நிலைக்கு மீட்டார். அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது, கசப்பான எதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல் மனம் இப்படி தான் விரும்பும் கற்பனைகளை நிஜம் போல உருவாக்கிவிடும் சாத்தியம் இருப்பதாக அவர் மீனாவிடம் கூறினார. அப்போது பக்கத்தில் இருந்த ஜெயக்குமார் நானா இப்படியெல்லாம் நடந்துகிட்டேன் என ஆச்சரியமாய் கேட்டார்

இந்த சம்பவத்தை மையமாக வைத்து, பிரபல டைரக்டர் ஒருவர் திரைப்படம் இயக்க முடிவு செய்திருக்கிறார். அதில் கதாநாயகனாக நடிக்க ஜெய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்

******

kumaarananthan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button