சிறுகதைகள்
Trending

பாவ மன்னிப்பு – விஜயராணி மீனாட்சி

சிறுகதைகள் | வாசகசாலை

லட்சுமி அந்த வீட்டுக்குள் நுழையும்போதே ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவளாக தன் கணவனை ஏறிட்டாள். தன் மனைவியின் சமிக்ஞைப் பார்வை புரிந்ததும், பல்லிடுக்கில் யாருக்கும் கேட்காவண்ணம், “என்ன எல்லாரும் வெளில ஒரு தினுசா நிக்காங்கன்னு பாக்குறியா? போ உள்ள… பார்த்துட்டு வந்துருவோம்.” என்றான் லட்சுமியின் கணவன் ராஜேஷ்.  தெருவாசலில் பந்தல் போடப்பட்டிருந்தது. ஒரு ஓரமாக பாடை கட்டுபவர்கள் பச்சை ஓலையில் பாடை கட்டும் வேலையில் மும்மரமாக ஈடுபடுவதை ஆச்சர்யமாகப் பார்த்தாள் லட்சுமி. ஏனெனில் இப்போதெல்லாம் யாரும் பிணத்தைத்  தூக்கிக்கொண்டு போகும் பழக்கம் மாறி அழகான ரதம் போல வடிவமைப்பில் கிட்டத்தட்ட போக்குவரத்து வாகனம் போல் ஆகிவிட்டது. வயதானவர்களும் மயானக்கரை வரைக்கும் நடக்க முடியாதவர்களும் அந்த வண்டியிலேயே ஏறிக்கொள்வதால் அப்படி போக்குவரத்து வாகனமாகிவிட்டது. பாடை கட்டுபவர் பக்கத்தில் வெட்டியானுக்குத் துணையாள் போல ஒரு சிறுவயதுப் பையன் சங்கு ஊதுவதைக் கண்டாள். அவனிடமிருந்து வந்த சங்குச் சத்தம் கேட்டவுடன் அடிவயிறு பிசைவது போன்ற ஒரு உணர்வு. பையனுக்கருகில் வெட்டியான் குத்துக்காலிட்டு அமர்ந்தவாறே கொள்ளிச்சட்டிக்கான பானை சுள்ளிகள்  போன்றவற்றை  தயார்  செய்து  கொண்டிருந்தார்.

வெளியில் பந்தல் கீழ் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஆண்களும் பெண்களுமாய் ஒருவித இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது. கூடவே வயதான சில பெண்களின் ஒப்பாரிப் பாடலும் மனதை ஏதோ செய்தது.

வெளி வாசல் கடந்து  வராந்தாவில் பெரியப்பாவின் அழுகுரலும் குமுறலும் அடிவயிற்றைக் கலங்கச் செய்தது. “ஏ, எம்மா, பூரணீ……என்ன விட்டுட்டுப் போயிட்டியே…….! இது அடுக்குமா? அறுவத்தாறு வருஷமா என்னைய புள்ள மாதிரிப் பாத்துக்கிட்டியே,  நம்மவீட்டுக் கஷ்டத்தையெல்லாம் பேர்பாதியச் சொல்லாம  எம்மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு மறச்சுவச்சு மறச்சுவச்சு  நீயே மனசுல போட்டுப் புழுங்குவியே! புள்ளைக எதாவது தப்பு செஞ்சா எங்காதுக்கு வராம சுமுகமா முடிச்சது காலங்கடந்து தெரியும்போது, ‘அட நீங்க ஒண்ணு, வேலவெட்டின்னு வெளீல அலையிறவுகளுக்கு எதுக்கு இந்தச் சின்னச்சின்னக் கவலையெல்லாம்? அதெல்லாம் நாம்பாத்துக்கிடுதேன், நீங்க நிம்மதியாயிருங்க’ன்னு சொல்வியே! இப்ப இத்தனை பெரிய கவலைய குடுத்துட்டு தன்னந்தனியாத் தவிக்கவிட்டுப்  போறியே, இனிமே யாரு என்னையப் பார்த்துக்கிடுவா? ஓங்கூடவே என்னையும் கூட்டீட்டுப் போயிரும்மா பூரணீ…..பூரணீ………..” என்று கதறியழுதது வயோதிகம் கருதியும்  கலங்கடித்தது.

அடுத்த  அறையையும் தாண்டி நடுக்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த பெரியம்மாவைக் கண்ட லட்சுமிக்கு சற்றே வருத்தமும் அழுகையும் வரத்தான் செய்தது.

பெரியம்மா போய்ச் சேர்ந்த வயசு அப்படி. ‘பின்ன…. எண்பத்தாறு வயசுல போறவுகள நினைச்சு அழுதா பொறள முடியும்?’ என்றாலும் பெரியப்பாவின் அழுகை பெரியம்மாவிற்குப் பிறகு அவரை யார் கவனிப்பது என்ற பெருங்கவலை அவர் மனதில் கேள்விக்குறியாகிப் போய் புலம்ப வைத்ததை நினைத்து கண்ணில் நீர் பெருகியது.

ஆஜானுபாகுவான எந்நேரமும் மஞ்சளோடு நெற்றியில் குங்குமம் துலங்கும் திருநீறும் பூசியே பார்த்துப் பழகிப்போன அந்த முகம் இன்றும் அதே தேஜஸோடுதான் இருந்தது.  ஒரு சிலருக்கு வாய் திறந்துவிடும் என்பதற்காக  நாடியோடு சேர்த்துக் கட்டும் வழக்கம் உள்ளபடி அதெல்லாம்  ஏதுமின்றி இயல்பாக பெரியம்மா ஏதோ உறக்கத்தில் இருப்பது போல அகன்ற மரபெஞ்சில் கிடத்தப்பட்டிருந்தார்.   கண்ணாடிப் பெட்டியிலெல்லாம் வைக்கப்படவில்லை.  எந்த நோயுமின்றி வயது முதிர்வு மரணமென்பதாலும் வர வேண்டிய  எல்லோருமே  பக்கத்திலேயே இருந்ததாலும்  நீண்ட காலதாமதமாகாது என்பதால் புதுமைக்கு மாறாமல் கண்ணாடிப் பெட்டியைத் தவிர்த்ததைக்  காண முடிந்தது.  கண்ணில் சந்தணமெல்லாம் வைக்கப்படவுமில்லை. நெற்றிக்காசு மட்டுமே  இருந்தது. கழுத்தில் ஓரிரு சம்பங்கி மற்றும் ரோஜா  மாலைகள் கிடந்தன.  கால்மாட்டில்  கொஞ்சம் மாலைகள் வைக்கப்பட்டிருந்தது. நிறைய மாலைகள் கழுத்தை நிறைத்தால் முகம் பார்க்கயியலாதென்பதால் சுவாமி சிலைகளுக்கு பக்தர்களால் அதிக மாலைகள் சேரும்போது முன்னர் சாற்றிய மாலைகள் எடுத்து வைக்கப்பட்டு பக்தர்களுக்கே தரப்படுமே, அதுபோல இங்கே எடுத்து வைக்கப்படும் அதிகப்படியான மாலைகள் பாடையோடு அலங்கரிக்கப்படுவதோடு போகும் வழி நெடுக பிய்த்தெறியப்பட்டு மரண ஊர்வலத்தைப் பறைசாற்றப் பயன்படுகிறது. மலர் மாலையாகட்டும் ஊதுவத்தியாகட்டும் பூஜையில் வைக்கப்படும் போது பக்தியைத் தூண்டுவது போலவும், துக்க வீடுகளில் ஒருவிதமான வாழ்வியல் யதார்த்தத்தை அமானுஷ்யத்தோடு பறைசாற்ற வந்தவை போல வேறு வகை மணத்தோடு  மாற்றம் கொள்ளும் மாயம் பெற்றுவிடுகின்றன. மரண வீட்டுப்  பூக்களின் வாசனையும் ஊதுவத்தியின் மென்புகையும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகின்றன,  மரணத்தை ஏற்கவிரும்பாத பலரின்  மனநிலை போல.

அறையைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள். தரையும் அறையும் பணத்தின் செழுமையைப் பறைசாற்றின.  ஆனாலும் அந்த அறையிலிருந்த சாண்ட்லியர் விளக்கும் சுவற்றோடு இணைத்திருந்த ஷோகேஷும் வேலையாள் இல்லாததையும் அந்த வீட்டு மகராசி மருமகளின் பாராமுகத்தையும் நொடிப்பொழுதில் அவதானித்துவிட்டாள். என்ன ஒரு திறமை இந்தப் பெண்களுக்கு?

பெரியம்மா பிள்ளைகளான மூன்று அக்காமார்களையும் ரெண்டு அண்ணனையும் எங்க காணோமென்று தேடியவாறே அடுத்தடுத்த அறைதாண்டி சமையக்கட்டுக்கு வந்தவளுக்கு சின்ன அக்கா அங்கே பிரமித்தியடிச்சாப் போல் நின்றதைப் பார்த்து, “என்னக்கா இங்க நின்னு என்ன செய்ற? துக்க வீட்ல சமையக்கட்டுக்கென்ன வேல? அதான் அடுப்பு பத்த வய்க்கக் கூடாதுல்லக்கா…?” என்றவளிடம், சுயநினைவுக்கு வந்தவளாக, “இல்ல லட்சுமி…. டீ கேன்ல வாங்கி முன்னால பந்தல் கீழ வச்சிருக்கு. காப்பிதான் குடிப்பேன்னு சொல்றவுகளுக்கு இண்டெக்ஷன் ஸ்டவ்லதான் போடறேன். நீ காப்பி குடிக்கியா? ஒம்மாப்ளைக்கி வேணுமான்னு கேளேன் சேத்துப் போடுதேன்” என்றாள். உடனே லட்சுமி,  “இல்லக்கா உங்கொழுந்தனுக்கு சுகர் இருக்குல்ல, பொய் எதுக்குச் சொல்லுவானேன்…? அதான் எப்போ காரியம் முடியுமோன்னுட்டு ரெண்டு தோசயச்சுட்டுத் தந்துட்டு அப்டியே நானும் ஒரு தோசய வாய்ல போட்டுட்டு வாரேன். காப்பி வேணும்னா பொறவு நானே போட்டுக்கிடுதேன். நீ போய் வேற வேல இருந்தாப் பாருக்கா” என்றாள். இந்தப் பேச்சினூடாகவே சின்னக்கா சமையக்கட்டிலிருந்து ஏதோ ஒரு பதற்றத்தோடும் பயத்தோடும் வேலை செய்ததைக் கவனிக்கத் தவறவில்லை.  என்னவாயிருக்கும் என்று லட்சுமி மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.  எப்போது லட்சுமி, ’நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றாளோ விட்டாப்போதுமென சிட்டாகப்  பறந்து போனாள் சின்னக்கா.

யார் யாரோ குடிச்சுட்டு வச்ச காப்பி டம்ளர்களும் டபராக்களும் பாத்திரம் தேய்க்கும் தொட்டியில் நிரம்பியிருப்பதைப் பார்த்து அதைத் தேய்க்கத் தொடங்கினாள். அப்போது யாரிடமோ பெரியம்மா பேசும் குரல் கேட்டது லட்சுமிக்கு… என்ன இப்டியொரு பிரமையென நினைத்து வேலையைத் தொடர்ந்தபோது மீண்டும் தெளிவாகப் பெரியம்மாவின் குரல் கேட்டது… பாத்திரத்தை அப்படியே விட்டுவிட்டு சமையலறை வாசலில் தலையை நீட்டிப் பார்த்தால் கூடம் தெரிந்தது. அங்கே…..அங்கே விசாலாட்சி அத்தை மகன் பாஸ்கர் அத்தான் கைகளை தனது கட்டப்பட்ட பெருவிரலோடு சற்றே சிரமப்பட்டு மீதமுள்ள  எட்டுவிரல்களாலும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தவாறு பெரியம்மா பேசிய வார்த்தைகளைக் கண்கொட்டாமல் அதே நேரம் உச்சபட்ச  அதிர்ச்சியோடு சிலை போல் நின்று மூச்சுவிடவும் மறந்தவளாகக்  கேட்கிறாள்  செய்தியை.  அதென்னவென்றால்,

“பாஸ்கரு, ஓந்தங்கச்சி விமலி சாவுக்கு நாந்தான் காரணம் தெரியுமா? எப்டீன்னு சொல்றேங் கேளு, விமலி காலேஜ்ல கூடப் படிக்கிற சின்ன சாதிப்பய யாரையோ காதலிச்சத என்ன நம்பி வந்து சொன்னா. ஆனா நா என்ன செஞ்சேன் தெரியுமா? உங்க அம்மாவோட தம்பிமார்ட்டச் சொல்லி அந்தப் பயல அடிச்சு கையக் கால ஒடச்சிப் போட்டதுலயும் அது தாங்காம சீமண்ணைய ஊத்திக் கொளுத்தி உசுர விட்டுட்டா கூறு கெட்டவ. அது நடந்து முப்பது வருசமாகப் போகுது.  அப்பல்லாம் எனக்கு அது பெருசாத் தெரியல. சாதி மதம்லாம் மனுசத்தன்மையற்றதுன்னு இப்பப் புரியுது. வயசாக வயசாகத்தான் மனசு குறுகுறுன்னு கொடையுது. முடிஞ்சா என்னைய மன்னிச்சுருய்யா” என்றவாறே மீண்டும்  பிரேதமானாள்  பெரியம்மா.

விமலி மதினி அத்தனை அழகும் சிவப்புமாக அமைதியே உருவானவள். படிப்பாளி. அவளுக்கில்லாத திறமைகள் என்னவென்றே சொல்ல முடியாது. சமையல், கோலம், தையல் என இந்தப் பக்கம் சொன்னால் காலேஜில் பேச்சு, பாட்டு, கதை, கவிதை, கட்டுரை, வாலிபால் என ஒன்றையும் விட்டு வைக்க மாட்டாள். தனக்கு  சீனியர் ஒரு அண்ணனை விரும்புவதாக அம்மாவுக்கு விஷயம் கைமீறிப் போன பிறகு அதாவது பெரியம்மாவால் அந்தப் பையனுக்கு அடிஉதை என்றான பிறகே தெரிய வந்தது.  அந்த சமயம் லட்சுமியின் அம்மா அப்பாவிடம், “ஏங்க உங்க மதினி ஒரு பொண்ணோட வாழ்க்கைய கொஞ்சங்கூட மனசாட்சியில்லாம இப்படிச் சீரழிக்காக? இப்ப என்ன கெட்டுப் போச்சு? அந்தப் பையனும் நம்ம விமலி போலவே திறமையான நல்ல குணமான பையனாமே..! அந்தப் பையனுக்கே விமலியக் கட்டி வச்சா கௌரவம் சாதியால கொறஞ்சு போயிருமாக்கும்?” என்று  புலம்பியது  லட்சுமியின்  நினைவில்  நிழலாடியது…

பாஸ்கர் அத்தானோ ஏதோ மந்திரிச்சது போல தன்னிலை மறந்து கலவையான எண்ணவோட்டத்துடன் எதிரே உள் நுழைந்த எனது சித்தப்பாவைக் கூட கவனியாது வெளியேறினார்.

வாழ்வதற்குதான் தைரியம் வேண்டும் என்று சொல்வார்கள். அதேபோல சாவதற்கும் ஒரு தனிப்பட்ட தைரியம் வேண்டும். விமலிக்கு  அந்த தைரியம் இருந்திருக்கிறது.

ஆனால் செத்து விழுந்த பிறகு போய் ஒரு மனுஷிக்குள் ஆத்ம விசாரமாய்,  பாவ மன்னிப்பு கோரும் தைரியம் வந்தால் அதெல்லாம் எதில் சேர்த்தி? இது வாழும் காலத்திலேயே பரிசீலனை செய்து  நிகழ்ந்திருந்தால் எத்தனை நன்மையைத் தந்திருக்கலாமோ….

சித்தப்பா உள்ளே வந்ததும் என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. பெரியம்மா அருகில் சித்தப்பா சென்றதும் சடாரென எழுந்த பெரியம்மாவின் சடலத்தைப் பார்த்து பயந்து போன சித்தப்பாவை, “கொழுந்தனாரே! பயப்படாதீக,” என்ற மெல்லிய குரல் நிறுத்தி வைத்தது.  “எம்மகளுக்கு முன்னயே உங்க மகளுக்குக் கல்யாணம் ஆனதுல எனக்கெல்லாம் அம்புட்டுக் கோவமும் பொறாமையும் அப்ப இருந்துச்சா.  அவ புருஷனோட சண்டைபோட்டுட்டு அடிக்கடி இங்க வரும்போது எம்பாழாப்போன மனசு அவளை இப்டியே சண்டபோட்டு நிரந்தமா வந்துரட்டும்னு நெனெச்சது. அதுக்குக்கூலியா எம்மவதான் போன மச்சான் திரும்பி வந்தாம் பூமணத்தோடன்னு சொல்லுவாகளே! அதுபோல ரெண்டாவது மாசத்துலயே புருஷஞ் செத்து வீடு வந்தா. என் நெனெப்பு எனக்கே வினையானது. அதுனால இத இப்பவாச்சும் உங்ககிட்டச் சொல்லி மனசாறிக்(?)கிடலாம்னுதான் சொல்லுதேன்,”  என்று சொல்லி முடித்து மறுபடியும் பழைய நிலைக்குச் சாய்ந்தாள் பெரியம்மா. இதெல்லாம் நிஜம்தானா? என்ற பெருங்குழப்பத்தோடும் அதிர்ச்சியோடும்  மௌனியாய்  வெளியேறினார்  சித்தப்பா.

“தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்”னு சொன்னது லட்சுமிக்கு  நினைவில்  வந்து  தொலைத்தது.

மறைவில் நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த லட்சுமிக்கு இதெப்படிச் சாத்தியமாகும்? தனக்குத்தான் ஏதோ ஆகிவிட்டதோ? இல்லையானால் பெரியம்மா பற்றி சில ரகசியங்கள் அம்மா சொல்லிக் கேட்டிருந்ததால், அதீத கற்பனை செய்கிறோமோ?

“அப்போ எப்டி அத்தானும் சித்தப்பாவும் பதட்டத்தோடு போனார்கள்?” என்று நினைத்தாள். “இல்லயில்ல, அந்தப் பதட்டமும் கற்பனையாத்தான் இருந்திருக்கும்” என்று லட்சுமியின் மூளை குழம்பிய நொடியில் தெருப் பெண்கள் ரெண்டு மூணு பேர் சேர்ந்தார்ப் போல வரவும் சிறிது நேரம் பேசாமல் பெரியம்மா உடல் அருகில் அமர்ந்து சொல்லிக்காமல் எழுந்து போனதுமான நிகழ்வு லட்சுமியின் மூளைக்கு அனிச்சையாய்க் கடத்திப் போனது.  “இப்போ முன்னைப் போல அசம்பாவிதமா பிரேதம் எழுந்துக்கலையே,  அப்போ நமக்குத்தான் மூளை கீளை கொழம்பிடுச்சா? அப்டியில்லையே! தான் யார்ட்ட பரிகாரம் பாவமன்னிப்பு கேக்கணுமோ அவங்க வந்தாத்தானே பெரியம்மா எழுந்துக்கறா?!! இவங்க வரும்போது எதுக்கு எழப் போறா?” என்றெண்ணியவாறே தனக்குத்தானே இப்படியும் யோசிக்கத் துவங்கினாள் லட்சுமி,…  இப்பல்லாம் மகளோடு ஆங்கிலப் படங்களாகப் பார்ப்பதின் விளைவாக இருக்குமோ? அதிலும் நேற்றைய தினம் பார்த்த  ’ஹேப்பி டெத் டே’ மனதிற்குள் நிழலாடியது, சே…சே அதெல்லாமில்லை என்றவாறு தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு கண்களைக் கசக்கிக் கொண்டவள்  சிங்க்  குழாய்த் தண்ணீரைத்  திறந்து  முகம்  கழுவிக்  கொண்டாள்.

சிறிது நேரத்தில் லட்சுமியின் அப்பா உள்ளே நுழைந்ததை லட்சுமி பார்த்த நொடியில் பரபரப்பானாள். என்ன நடக்கப் போகுதோ என்ற எதிர்பார்ப்பில் அப்பாவைக் கூட எதிர்கொள்ளாமல் பெரியம்மாவை வழக்கம் போல உள்ளிருந்தவாறே கவனிக்கலானாள்.  நினைத்தபடியே பெரியம்மா தடாலென எழுந்ததும் லட்சுமியின் அப்பா பதற்றமடைந்து அவரது மகனை அழைத்தார். ஆனால் குரல் வெளிவர மறுத்தது. பெரியம்மா, சின்னத்தம்பி, (அப்படித்தான் லட்சுமியின் அப்பாவை அழைப்பது வழக்கம்) “நீங்க எங்கட்ட வேகுமுன்ன ஒரு விஷயத்துக்காக என்ன மன்னிச்சேன்னு ஒரு வார்த்த சொல்லுங்க” என்றதும் அப்பா மனதைத் திடப்படுத்திக்கொண்டு “மதினி மனசுல(?) எதையாவது போட்டுக் குழப்பிக்காதீக, நீங்க யாரு எனக்கு அம்மா மாதிரி. எங்க அம்மாவ நான் பார்த்ததில்ல. நீங்கதான எனக்கு எல்லாஞ் செஞ்சீக. நீங்க என்ன செய்திருந்தாலும் அதெல்லாம் பெரிசு படுத்தாதீக”, என்றவுடன்  “ஐயோ! நானா இப்பிடி தர்மர் மாதிரி ஒரு புள்ளைய வளர்த்தேன்? இல்லையில்ல நான் வளர்த்ததாலயில்ல தம்பி, அது பொறப்புலயே உங்க ரத்தத்துலயே ஊறுன கொணம். அதான் இப்பிடிப் பேசுதீக, இருந்தாலும் நான் சொல்லியே தீருவேன்,” என்று சொல்லத் தொடங்கினார்.

“நீங்கள்லாம் சின்னஞ்சிறுசுகளா இருந்தப்பவே உங்க சின்னம்மாவோட வைரத்தோடு, வைர அட்டிகை, வைர மூக்குத்தி அப்புறம் கொஞ்சம் வெள்ளிப் பாத்திரங்களையெல்லாம் நானே எடுத்து ஒதுக்கி வெச்சேன். எம்புள்ளைகளுக்கு கல்யாணத்துக்குன்னு. ஆனா பாருங்க, ஒரு புள்ளையாச்சும் நல்ல பொழப்பு பொழைக்கல. போட்டதெல்லாம் எங்க போச்சுன்னு தெரியல.  உன்னோட கஷ்டத்துலயும் மூணு பொண்ணுகளையும் நல்லாப் படிக்க வச்சு முடிஞ்சதப் போட்டுக் கட்டிக் குடுத்த. அதுகளும் ஓஹோன்னு ராஜபோகமா வாழ்றாங்க.  அதுல எனக்கு சந்தோஷந்தான். உங்களுக்கும் சேரவேண்டிய பங்க கொள்ளையடிச்சதுல எம்புள்ளைக நல்லாவா இருக்க முடியும்னு இப்பப் புரிஞ்சு என்ன செய்ய?” என்று புலம்பிக் கண்ணீர் வடித்தார் பெரியம்மா.

“சரி, விடுங்க மதினி. இதுக்கெல்லாம் விசனப்படாதீங்க, ஏதோ நேரம் சரியில்ல. இனி பிள்ளைகள்லாம் நல்லா வருவாங்க. கவலப்படாதீங்க” என்று சொன்னார் லட்சுமியின் அப்பா பதற்றமேயில்லாமல். பெரியம்மா கண்ணில் வழிந்த கண்ணீரோடு அப்பாவின் கரங்களில் முகம் புதைத்து பின் விடுவித்து பழைய நிலைக்குத் திரும்பினார். ஆனால் அப்பாவோ எவ்வித சலனமும் இல்லாமல் தளும்பாத நிறைகுடமாய் தனக்கே உரித்தான கம்பீரத்தோடு வெளியே சென்றார். இந்த விஷயத்தைக் கேட்ட லட்சுமிக்கு தன் அப்பா மீதும் அம்மா மீதும் அளவு கடந்த மரியாதையும் அன்பும் பொங்கிப் பெருகி கண்களில் கண்ணீர் வழிந்து மாராப்பை நனைத்தது.  ஏனெனில் இன்று இந்த நிமிஷம் வரை அம்மாவும் அப்பாவும் இது பற்றி மூச்சு கூட விட்டதில்லையே! எத்தனை பெருந்தன்மை!! ஓ…அதனால்தான்  பெரியம்மாவே  தன்  வாயால் அப்பாவை  தர்மர் என்றாரோ?!!

அதற்குள் வேலு மாமா வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்த லட்சுமியின் மனதுக்குள் இதயமே கலங்குமளவுக்கு ஒரு பேரிரைச்சல்….

வேலு மாமா பெரியப்பா பக்கத்து கிராமத்தில் மாற்றலில் பணிபுரிந்த போது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள். பெரியப்பா மாற்றலாகிப் போன புதிதில் சாமான்களை வண்டியிலிருந்து இறக்கியது முதல் அத்தனை அனுசரணையாக இருந்து எல்லா உதவிகளையும் செய்தவர். சிறிது சிறிதாக இரண்டு குடும்பமும் வெவ்வேறல்ல என்ற அளவுக்கு ஒன்றிப் போனவர்கள்.  ரெண்டு குடும்பத்துக்கான கவலையும் மகிழ்ச்சியும் பசியும் பண்டிகையும் எல்லாம் ஒன்றாகிப் போன காலம்.

வேலு மாமா பெரியம்மா அருகில் வந்ததும் பெரியம்மாவின் சிறு விசும்பல் ஒலியோடு, “வாங்க, வந்துட்டீகளா? எங்க என்னப் பார்க்க வராமப் போயிருவீகளோன்னு நெனெச்சேன்”, என்றவாறு எழுந்து வேலுமாமாவின் கைகளைப் பிடித்தார். வேலுமாமாவின் கைகள் பெரும் நடுக்கம் கண்டதை லட்சுமி உணராமலில்லை. பெரியம்மா வேலு மாமாவின் தோள்களைப் பிடித்துக் கொண்டு, “உங்க ஊர்ல நாம ரெண்டு பேருமா சேர்ந்து மேட்னி ஷோ சினிமாவுக்கு யாருக்குந் தெரியாமப் போனோமே, அத மறைக்க முடிஞ்சது நெனெச்சு தெனந்தெனம் கடவுளுக்கு நன்றி சொல்லாத நாளில்ல தெரியுமா? அப்புறம் ஒரு நாள் கிணத்தடியில…..” என்ற பெரியம்மா பேச்சை பாதியில் நிறுத்தி நிலைகுத்திய பார்வையோடு ’யாரைப் பார்க்கிறார்’ என்று திரும்பினாள். அங்கே அத்தனை தகிப்போடு  நின்றது  பெரியப்பா.

ஒரு வார்த்தையும் பேசாது விடுவிடென்று வெளியேறிய பெரியப்பா தெருக்கோடி வீட்டு வக்கீல் சந்தானம் வீட்டில் போய் நின்ற வேகத்தில் அவரிடம் விவாகரத்து வழக்குப் போடவேண்டுமென்றார்.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. எழவு வீட்டிற்கே ஒரு பயணம் போனதுப் போல ஒரு உணர்வை கடக்க முடிய வில்லை. அதுவும் முகப்பில் சாவு வீட்டின் தோற்றத்தையும் அங்கு அரங்கேறும் யதார்த்த நிகழ்வுகளும் மூளையில் பதிந்து விட்டன.பூரணி பெரியம்மா வின் சாவும் அவள் கிடத்தப்பட்டிருந்த நிலையும் அச்சு அசலாக என் பாட்டின் இறப்பை ஞாபகம் படுத்திவிட்டது மஞ்சல் பூசி குங்கும் வைத்த முகம் சற்று புண்ணகைக்கும் தோறனையோடு உறங்குவது போல் அவள் கிடந்தது ஐந்து வயதான எனக்கு ஆயா தூங்கறாங்களோ என்று நினைக்க வந்த ஞாபகங்கள். அப்போதுதான் குலைத் தள்ளிய எங்கள் வீட்டு வாழை மரத்தைக் கொண்டு பாடைக் கட்டியதெல்லாம் கண்முன்னே வந்தோடுகிறது இந்த பெரியம்மாவின் சாவிலும்.
    செய்தது தவறென்று அறிந்தால் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கத்தான் செய்யும். இதற்கு பிணம் மட்டும் விதிவிலக்கா? சவவும் குற்ற உணர்வால் பிதற்றிற்று உண்மைகளை உலரி ஆத்மா சாந்திக்காக பாவமன்னிப்பு கேட்கிறது. தன்னைப் பார்க வரும் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு வேண்டி நிற்கும் அந்த சவம் சாவுவீட்டின் திகில் சம்பவம். அய்யோ இது நிஜமாக நடந்தால் நானெல்லாம் ஓட்டம் பிடிப்பேன்.
    அவ போனதும் நீ இல்லாம எப்படி இருப்பேனு அழுது புலம்பிய பெரியப்பா கடைசியா வந்த மாமா கிட்ட அந்த கினத்தடியிலனு இழுத்தப்ப இத்தன நாளா சொல்லாத வச்ச ரகசியம் ஒடஞ்சி மாட்டிக்கிட்ட உணர்வோட மறுபடியும் படுத்துட்டா பிணத்துக்கிட்ட கோபித்துக் கொண்டு சவத்திடமே டைவர்ஸ் கேட்ட பெரியப்பா அல்டிமேட் .
    வாழும் நாட்களில் என்றோ நாம் செய்தது தவறு என்றறிந்தால் அதை உணர்ந்தாலே பாவ மன்னிப்பு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button