துற்சகுனத்து இரவில் மோதும் ஒளியின் முதற்சாயல்
உடைந்து தெறித்த பொம்மையின் கை
தரையில் மோதி
சுக்குநூறாகச் சிதறியபோது
கைவிடப்பட்ட பிள்ளைகளின் முகங்களென
அறைமுழுக்கப் பரவியது
கை அற்ற
பொம்மையை
நாடியது கைவிடப்பட்ட இன்னொரு கை.
****
பைன் மரத்தின் தடித்தகிளையொன்றில்
சணல் கயிற்றால் கழுத்தைச் சுருக்கிட்டு
கால்களைத் தாங்கிக்கொண்டிருந்த
மூங்கில் கூடையைத் தள்ளிவிட்டு
உடலை
காற்றிலாடும் லாந்தர் விளக்கு போல்
மாய்த்துக்கொள்பவர்களுக்கென பிரத்தியேகமாக
ஒரு பாடல் இருக்கிறது
அதன் ஒரு பாதியை
அந்தக் குயிலும்
மீதியை
தொங்குபவனின் உதடுகளும்
பாடும் கேள்.
****
கைகள் விரித்தபடி நிற்கும் கடவுளை
அல்லது
கடவுளின் மைந்தனை
இரவுகளில் அழைப்பவள்
தனது
எல்லா நிராசைகளுக்கும்
ஒரு முத்தத்தின் வடிவத்தில்
நிவாரணமளிக்குபடி இறைஞ்சுகிறாள்
அவர்
வாக்களிக்க மறுக்கிறார்
அவள் விடுவதாகயில்லை.
****
எரிசாராயம் காய்ச்சுபவர்களுக்கு
இதயம் இல்லையெனக் கதை சொன்னார்கள்
எரிசாராயத்தைப் பருகத் தொடங்கும் வரை
அதை நம்பவில்லை
பருகப் பருக
பருகப் பருக
நம்பத் தொடங்கினேன்
தனித்து நம்பத் தயக்கமாக இருந்தது
இன்னொருவனையும் நம்புமாறு கேட்டதற்கு
அவன் நம்ப மறுத்தான்
எரிசாராயம் காய்ச்சுபவனின் மார்பைக் கிழித்தேன்
கைகளால் துழாவி இதயம் இல்லையென்றேன்
“இதயம் இல்லை”
அவன் நம்பத் தொடங்னான்
மாமிச வாசனையில்
எரிசாராயம் மணத்துக் கிடந்தது
நீங்கள் நம்புகிறீர்கள்தானே?
****
இரவென்றால் அத்தனை கரிய இரவு
மழையென்றால் அத்தனை நெகிழ்மழை
அத்தனையென்றால்
திசுக்கள் சூழந்து கிடக்கும் தசைநார்களுக்குள்
எச்சிலால் பின்னப்பட்ட
சிலந்தி வலையை அடையும் முயற்சி
சிலந்தியின் கண்
மெடுல்லாவின் வழி காண்கிறது
ஒரு பெயர்
ஊடுருவும் நொடியில்
எலும்புகள் வளைந்து பூனையுருவை நிகழ்த்துகின்றன
பூனை மதிலுக்கு மதில் தாவுகிறது
உடலெங்கும் பூனைக் கால்கள்
ஆங்காங்கே பூனை மயிர்கள்
பிரபஞ்சத்தின் காமங்களை
சாபம் என்கிறாள்
சாபங்களை ஆசையென்றழைக்கிறாள்
ஆசை
ஒளியொன்றில் நுழைந்து
பரிசுத்தப் பாதைக்கு ஒளி காட்டுகிறது
அத்தனைக்கும் ஆசைகொள்ளெனக் கொல்கிறது
ஆசையே ஒளி.
*******