இணைய இதழ்இணைய இதழ் 62தொடர்கள்

பல’சரக்கு’க் கடை;10 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

திருவிழா நகரம் மதுரை

‘ஆலயத் திருவிழாக் கொண்டாட்டங்களை அனுபவித்திருக்கிறீர்களா..? எந்த ஊரில் நடக்கும் திருவிழாவை ‘தி பெஸ்ட்’ என்பீர்கள்?’ -இந்தக் கேள்வியை இதைப் படிக்கிற உங்கள் யாரிடம் கேட்டாலும், உங்கள் ஊரின் பெயரைச் சொல்லி, அங்கே நடக்கும் திருவிழாவைப் போன்றது வேறெங்கும் இராது என்பீர்கள். சரிதானே…? ஆனால், உண்மையில் மதுரையின் சித்திரைத் திருவிழாவுக்கு நிகரானதொரு திருவிழாவை உலகில் வேறெங்கும் நீங்கள் பார்த்துவிட முடியாது என்பதுதான் உண்மையிலும் உண்மை.

திருவிழா என்பது வெறுமனே கடவுளர்களைக் கொண்டாடுகிற ஒரு விஷயம் மட்டும்தானா..? நான்கு சித்திரை வீதிகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உபதெய்வங்கள் முன்னும் பின்னும் சூழ பவனி வருகையில் வீதியெங்கும் தலைகளாய் நிறைந்திருக்கும் மனிதக் கூட்டத்தின் மனோபாவங்களை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா எப்போதேனும்.? வயதில் முதிர்ந்தவர்களுக்கு சாமி தரிசனம் ஒன்றே பரவசத்தைத் தந்துவிடும். இளைஞர்களுக்கு.. மனசுக்குப் பிடித்த பெண்களை நெருக்கத்தில் பார்க்க, நாலு வார்த்தை பேச திருவிழாக் கூட்டம் ஒரு சாக்கு. விடலைகளுக்கோ ‘சைட்’டடிக்க இதைவிட வாய்ப்பானது வேறென்ன இருந்துவிடப் போகிறது? இதில் எந்தப் பருவத்தையும் அடையாத ஏழு வயதுச் சிறுவனான எனக்கும் தினந்தோறும் சாமி வீதி உலா வருவதைத் தரிசித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயமிருந்தது. அதற்குக் காரணம் மிக எளிமையானது. திருவிழா சமயங்களில் மட்டுமே விற்கப்படும் ஜவ்வு மிட்டாய். உங்களில் பலர் அதைச் சுவைத்திருக்கக் கூடும். பலர் அது என்னவென்பதையோ, அதன் சுவை என்னவென்பதையோ அறியாதவராயும் இருக்கக் கூடும்.

இந்த ஜவ்வு மிட்டாயில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஒரு மனித பொம்மை பதிக்கப்பட்ட தடியில் பட்டை பட்டையாக ஜவ்வு மிட்டாயைச் சுற்றி எடுத்துக் கொண்டு வரும் வியாபாரிகள். இவர்களிடம் பத்துப் பைசா தந்தால் வாத்து, கோழி போன்ற வடிவங்களை உருவாக்கி, அந்த ஜவ்வையே இழுத்து ஸ்ட்ராப்பாக்கி கையில் வாட்ச்சாகக் கட்டி விடுவார்கள். மல்டி கலரில் அது கையிலிருப்பதைச் சற்று நேரம் ரசித்துவிட்டு, பிறகு அதைப் பிய்த்துச் சாப்பிடலாம். செமையான டேஸ்ட்டில் இருக்கும். சிறுவயதில் அந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்தான். மற்றொரு வகை என்னுடைய அபிமான வகை. நல்ல சிவந்த நிறத்தில் ஒரு கோலிக்குண்டின் பருமனில் இருக்கும். ஐந்து பைசாவுக்கு ஒரு மிட்டாய். திருவிழா சமயத்தில் எப்படியோ சில்லறை தேற்றி, நான்கைந்தை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, ஒவ்வொன்றாய் மென்று தின்றபடி சாமி ஊர்வலத்தைத் தரிசிப்பேன். வாயிலிட்டு மென்றால் வாய் முழுதும் சர்க்கரைத் தித்திப்பு; அத்தனை லேசில் கரையவும் கரையாது. ஊர்வலம் முடித்து வீட்டுக்குத் திரும்புகையில் உதடுகள் லிப்ஸ்டிக் போட்டதைப் போன்று சிவந்திருக்கும் மிட்டாயின் உபயத்தில். இத்தனைக்கும் ஒரு மிட்டாய்தான் தின்றாகியிருக்கும். மற்றுமிரண்டோ, மூன்றோ பாக்கெட்டில் இருக்கும் மெதுவாய்த் தின்ன. அவை காலியாகிற சமயத்தில் சட்டைப் பாக்கெட்டில் தன் சிவப்பு நிறத்தின் தடயத்தை என் வியர்வையுடன் கலந்து பூசி விட்டிருக்கும். ‘தோய்ச்சா லேசுல போக மாட்டேங்கறதுடா’ என்று அம்மாவிடமிருந்து கண்டிப்புடன் கூடிய செல்லப் பூசை கிடைக்கும். ஆனாலும் சில்லறை தருவது கட்டாகாது. மிக எளிய தொகையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷமும் என்றும் குறைவுபட்டதில்லை.

அன்றைய மதுரையில் இத்தனை வாகனங்கள் பெருக்கமில்லை. சச்சதுர வடிவிலான ஊரின் அத்தனை சந்து பொந்துகளும் அத்துப்படி என்பதால் நடந்து அல்லது சைக்கிளில்தான் ஊர் முழுவதையும் சுற்றி வருவேன். அந்த வகையில் இப்போதுவரை நினைவில் நிற்பது இரண்டு நடையனுபவங்கள். ஒன்று- தீபாவளிக்கு முதல்நாள் ராத்திரி டவுன்ஹால் ரோடில் ஆரம்பித்து விளக்குத்தூண் வரை சுற்றிவிட்டு மாசி வீதிகளில் புகுந்து வீட்டுக்குத் திரும்புவது. விளக்குத் தூண் ஏரியாவில் பொருட்களின் ஏலம் அந்த இரவில் நிறைய நடக்கும். சல்லிசான விலையில் பலவற்றையும் வாங்கலாம்- பட்டாசுகள் உட்பட. முடிந்தவரை வாங்கிக் குவித்து அந்த இரவு உலாவை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம் ஏறத்தாழ அதிகாலையை நெருங்கி விட்டிருக்கும். பிறகெங்கே தூக்கம்..? கொஞ்ச நேரம் அரட்டையடித்தால் எண்ணெய்க் கிண்ணத்துடன் அம்மா வந்துவிடுவார்கள். இளமதிகாலைப் பொழுதிலேயே குளித்துவிட்டு, தெருவில் வெடிக்கிற முதல் பட்டாசு நம்முடையதுதான் என்கிற கர்வத்துடன் தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கி விடும்.

இரண்டாவது நடை என்னவென்றால் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். மெல்ல நடந்து சிம்மக்கல்லைத் தொட்டு, கீழ்ப்பாலத்துக்கு வந்து சேர்ந்தால், அழகர் வர இன்னும் நேரமிருக்கிறது, பெருமாள் கோயில் மண்டகப்படியையே இன்னும் தாண்டலை என்பார்கள். நேராக கள்ளழகரை எதிர்கொள்ள தல்லாகுளத்தை நோக்கி நடையைக் கட்ட ஆரம்பித்து விடுவோம். அழகருடன் கீழ்ப்பாலத்தை அடைந்து தண்ணீரிலிறங்கும் கொண்டாட்டத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பினால்தான் முழுத் திருப்தி. இந்த அழகர் வைபவத்தில் கலந்து கொள்வதில் கிடைக்கும் சந்தோஷங்களில் குறிப்பிடத்தகுந்தவை இரண்டு. ஒன்று, தோலில் செய்த பெரிய பையில் நிறையத் தண்ணீரை நிரப்பி ஆங்காங்கே பீய்ச்சிக் கொண்டு பலர் அலைவார்கள். வாகனங்கள், மனிதர்கள் என அனைவரையும் நனைக்கும் அந்தத் தண்ணீர் தரும் உற்சாகம் தனி. அப்படியொரு பையை நாமும் சுமந்து கொண்டு, அழகர் வரும் சமயம் தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்பது என் சிறுவயது ஆசைகளில் ஒன்று. அது நிறைவேறவே இல்லை. 

அழகரால் கிடைக்கும் சந்தோஷங்களில் இரண்டாவது- ஓலைத் தட்டியில், திக்கான அட்டைகளில் தங்களின் கம்பெனி பெயர் பொறித்து இலவசமாகத் தரப்படும் கை விசிறிகள். பிளாஸ்டிக்கில் தயாரித்துத் தருகிற சமாச்சாரம் பின்னாட்களில் வந்தது. அந்த அட்டை விசிறிகள் அந்நாட்களில் மதுரைவாசிகளின் வீடுகள் அனைத்திலுமே காணலாம். பெரிசுகள் அவற்றால் விசிறிக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருப்பார்கள். இன்று திண்ணை வைத்த வீடுகளும் இல்லை, விசிறிகளும் மின்னியக்கம் பெற்று விட்டதால் அந்தக் கை விசிறிகள் இப்போதும் கிடைக்கிறதா என்பதும் தெரியவில்லை. அப்பா மறைந்தபின் கிருஷ்ணாராவ் அக்ரஹாரத் தெருவை விட்டுவிலகி நாங்கள் குடிவந்திருந்த இடம் மதுரை நியூ சினிமாவுக்கு அருகில் இருந்தது. ‘கழுதை அக்ரஹாரம்’ என்பது அந்தத் தெருவின் பெயர். நோ… நோ… நீங்கள் நினைப்பது தவறு. நான் குடிபோனதால் அந்தப் பெயர் இல்லை. அதற்கு முன்பிருந்தே அந்தப் பெயரால்தான் வழங்கி வந்தது. ஏதோவொரு தேசத்தலைவரின் பெயர் சூட்டப்பட்ட தெரு அது உண்மையில். ஆனால், வழங்குமொழியில் நான் குறிப்பிட்ட பெயரில்தான் அழைக்கப்பட்டு வந்தது. தெருவின் முனைக்கு வந்தால், இடப்பக்கம் திரும்பி நாலடி நடந்தால் நியூ சினிமா தியேட்டர். அதைத்தாண்டி மேலும் நாலடி நடந்தால் மீனாட்சி கோயில். வலப்புறம் திரும்பி பதினைந்தடிகள் நடந்தால் பெரியார் பஸ் ஸ்டாண்டு. மிக எளிதாக அடைய முடிகிற தூரத்தில் சென்ட்ரல் தியேட்டரும், டவுன்ஹால் ரோடும். ஆக, நகரின் மையமான இடத்தில் வசதியான (ஒண்டிக்குடித்தன வீடாக இருந்தாலும்) வீடு.

தெரு முனையில் இடது பக்கம், வலது பக்கம் சொன்னேனில்லையா..? தெருவைத் தாண்டி நேரெதிரே வந்தால் ராஜா பார்லி பேக்கரி, பக்கத்தில் ஹனுமந்தராயன் கோயில் சந்தில் கரும்பு ஜுஸ் கடை, ராஜா பார்லிக்கு நேரெதிரில் காளிமார்க் கம்பெனியின் கடை. அதைக் கடந்தால் மாடர்ன் ரெஸ்டாரண்ட். இவையெல்லாம் இப்போதும் இருக்கின்றன. ஆக, தீனிக்குக் குறைவில்லாத இடம். பட், சொல்ல வந்த விஷயம் அதில்லை. இடதுபக்கம் திரும்பி எட்டடி நடந்தால் மீனாட்சியம்மன் கோயில் வரும் என்றேனில்லையா.. அதுதான். நினைத்த நேரத்தில் ஓடிவிடுவோம். போய் விபூதிப் பிள்ளையாரைச் சுற்றிவிட்டு பொற்றாமரைக் குளத்தில் உட்கார்ந்து காற்று வாங்கி, அம்மனைத் தரிசித்து, ஆடிவீதியில் சற்று நேரம் மறுபடி உட்கார்ந்து பிய்த்துக் கொண்டு போகிற காற்றை அனுபவிப்பேன். பின் துள்ளாட்டம் போட்டு, அந்த வழியாகவே வெளியேறி டவுன்ஹால் ரோடு வழியாக வந்து ஹனுமந்தராயன் தெருவில் புகுந்து எங்கள் (கழுதை) அக்ரஹாரத்தை வந்தடைவேன்.

இப்போதும் மதுரை இருக்கிறது, மேற்சொன்ன இடங்கள் எல்லாமே இப்போதும் இருக்கின்றன. ஆனால், அன்றிருந்த மீனாட்சி கோயில் இன்றில்லை. நேரே போய் அம்மனைத் தரிசித்துவிட இயலாது. சுங்கச் சோதனையைக் கடந்து, செல்போன், கைப்பை போன்ற அனைத்தையும் துறந்து, வரிசையில் நின்று ஆலயப் பிரவேசம் செய்வதற்குள் சலிப்பாகி விடும். உள்ளே போனால் அன்றைக்கு வாய்த்தது நிம்மதியான அம்மன் தரிசனம். இன்றைக்கு வாய்ப்பது அர்ச்சகர்களின் பிருஷ்ட தரிசனம். சிறப்பு வரிசை, விஐபி வரிசை என்று பணம் படைத்தவர்கள் குறுக்கில் புகுந்து விடுவார்கள். இத்தனை இடைஞ்சலையும் தாண்டி அம்மனை வழிபடுவது என்பது உண்மையில் நிறைய சலிப்பையே தருகிற விஷயமாகி விட்டது. ‘கோபுர தரிசனம் கோடி நன்மை’ என்கிற முதுமொழிக்கேற்ப, கோபு ரதரிசனத்தோடு திரும்பிவிடத்தான் தோன்றுகிறது. 

விஞ்ஞானம் வளர்ந்து, மனிதம் குறைந்தததால் இந்தத் தலைமுறை இழந்தது எத்தனை என்பதை அவர்களே அறியவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம். இவற்றையெல்லாம் அனுபவித்த தலைமுறையில் நானிருந்தேன் என்பதில் மனசெல்லாம் சந்தோஷமும் லேசான கர்வமும்கூட இருக்கத்தான் செய்கிறது.

(தொடரும்…)

balaganessh32@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button