“பழைய இரும்பு பேப்பர் பிளாஸ்டிக் புக்கு வாங்குறது” பதிவு செய்யப்பட்ட குரல் விடாமல் ஒலித்தது வீதியில். கூரும் பிசிருமாக கொரகொரவென்றிருந்த அந்த உச்சரிப்பினை முதல் முறையாகக் கேட்கிறேன். அநேகமாக அந்த வியாபாரி எங்கள் தெருவுக்கு இன்றுதான் வருகிறார் போல. கணீர் கணீரென்று வீட்டுக்குள்ளிருப்பவர்களை வெளியே வந்து எட்டிப் பார்க்கச் செய்யும் ஆற்றல் அந்தக் குரலுக்கு .
காலை ஏழு மணிக்கெல்லாம் கோலமாவு அக்கா தொடங்கி, இரவு தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்று வரும் செல்வம் அண்ணா வரைக்கும், இப்படித்தான் கரண்ட் கம்பத்தில் கட்டி ஒலிக்கவிடப்படும் கொண்டை ரேடியோவின் குழந்தையைப் போலான குட்டி உருவ அமைப்பில், ஆளாளுக்கு ஒன்றை வண்டியில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதுவும் பாவம் ஓய்வில்லாமல் அவர்களின் எசமானர்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டே தானிருக்கிறது.
தினமும் மதிய நேரத்தில் பதிவாக ஒரு சொம்புத் தண்ணீர் வாங்கிக் குடித்துச் செல்லும் பழக்காரம்மா கூட, “யெம்மா, எவ்வளவு லேசா போச்சுத் தெரியுமா, சும்மா வண்டிய உருட்டிட்டேப் போனாப் போதும், வாயத் தெறந்து கூவத் தேவையில்லை” என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார். அதுவும் அவருக்கு கொஞ்சம் சத்தமாகப் பேசினாலே இருமல் வந்துவிடும் நோய்கண்ட பிறகு, இது மிகவும் தோதாக இருக்கிறதாம் .
இன்று எனக்கு அவசியமான அந்தக் குரல், அவசரப்படுத்தும் விதமாக, நாலைந்து முறைக்கு மேல் ஒலித்துவிட்டது இதுவரை.
தகப்பன் தன் குழந்தையைத் தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து கீழிறக்குவதாக, ஒவ்வொரு சொல்லும் உச்சஸ்தலம் தொட்டு உதட்டுக்கே வந்து சேர்ந்துவிட, அடுத்த சொல்லுக்கான ஒலி அங்கிருந்து அதே ராகத்தில் புறப்படுகிறது. இடையிடையே இசையால் நிரப்பி சொற்களை இன்னும் நீட்டித்தால் ‘மனசு மயங்கும் மௌன கீதம்’ என்ற பாடலை ஹஸ்கி வாய்ஸ் இல்லாமல் ‘ரா’வாகப் பாடினால் எப்படி இருக்குமோ அதில் ஐம்பது சதவீதம் ஒத்துப் போகும் போலிருந்தது. சிரிக்காதீர்கள் எதை எதனோடு ஒப்பீடு செய்கிறேனென்று. வேண்டுமானால் ‘பழைய இரும்பு பேப்பர் பிளாஸ்டிக் புக்கு வாங்குறது’ என்று பாடித்தான் பாடிப்பாருங்களேன் அதே ராகத்தில்
கொஞ்சம் தாமதித்தாலும் என் வீட்டைக் கடந்து போய் விடும்.
ஆனால் நானோ, நீல நிறச் சுவாலை இதழ்களைப் போல் பாத்திரங்களைத் தாங்கியிருக்க, என் காலை நேரத் தியானத்தையும் சமையலையும் ஒரே நேரத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட சமையலுங்கூட தியானத்தைப் போலத்தானே. மனம் ஒருங்கிணைய மறந்தால் சுவை தடம்புரளத் தொடங்கி விடுமே. மூன்று அடுப்பு ஆதலால், என் மொத்த கவனத்தையும் அந்த அக்கன்னா(ஃ) வடிவத்திற்குள்தான் நிறுத்தியாக வேண்டிய நிலை. தோசையின் மேற்புறம் உடையும் குமிழ்கள் உண்டாக்கிய குழிகளை எண்ணுவது பிடிக்கும் எனக்கு. ஏழு எனும்போது அந்தக் குரல் கலைத்துப் போட்டது என்னை.
இரண்டு மூன்று நாட்களாக இப்படி ஏதேனும் வேறு வேலையைக் காரணங்காட்டி, அந்தப் பழையவைகளை வெளியேற்றாமல் இருந்துவிட்டேன். ஏணிப்படிக்கு அடியில்தான் கிடக்கின்றன அத்தனையும். ஆனாலும், என்னவோ தூக்கிச் சுமந்திருப்பது போலவே கனக்கிறது மனம். சென்ற வாரம் வீட்டுக்கு வர்ணம் பூசுகையில் ஒழித்து ஒதுக்கி வைக்கப்பட்டவை. கைப்பிடிக் கோளாறு, பலகோண நெளிசல், அடிப்பகுதி ஒழுகலென சுகவீனம் அடைந்த பாத்திரங்களும், பழுதடைந்த திருகு குழாய்கள், பிளம்பிங் பைப், பழைய மீட்டர் பாக்ஸ், இதோடு கூடவே பாழாய்ப் போன கிரைண்டரையும் சேர்த்து மூட்டை கட்டி வைத்திருந்தேன்.
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் செல்கையில் கண்ணில் பட்டு, ‘அவ்வளவுதானா நானுனக்கு… இனிமே நான் தேவையில்லாமப் போயிட்டேன்ல… இனி என்னைப் பார்க்கவே கூடாதுன்னுதானே இப்படி மூட்டையில போட்டு கட்டி வச்சிருக்க’ என அவை என்னைப் புகார் சொல்லியும் கெஞ்சுவதுமாக இருக்கின்றன
அதற்குத்தான் வாயும் இல்லை மனமும் இல்லையே, ஒருவேளை தேமேயென்று அதுபாட்டுக்கு இருக்கலாம்தான். ஆனால், நானாகவே எதையெதையோ கற்பனை செய்துகொண்டிருந்தேன். அதுவும் போக மனதோ? வீடோ? வீணாணதை சேர்த்து வைத்தால் குடைச்சல்தானே? கழித்து எறிந்துவிட்டால்தான் அதற்கடுத்து ஆகவேண்டியது சுளுவாகும் என்று எத்தனை முறை கற்றுத்தந்திருக்கிறது இந்த வாழ்வு. அதை இங்கு பயன்படுத்திப் பார்த்தேன் அவ்வளவுதான்.
ஆனாலும் என்ன செய்ய, பழக்க தோஷம் . நமக்கு முன்னால் யார் மௌனமாக இருந்தாலும் பிடிப்பதில்லை , அதைப் பொறுக்க முடியாமல் , சம்மந்தமற்ற ஒன்றைப் பொருத்தித் துயருக்குத் தூபம் போட்டு வளர்த்துக் கொள்கிறோம். இது நியாயமில்லைதான். அவரவர் பசிக்கு அவரவர் வாயுண்ணல்தானே தீர்வு.
சரி விட்ருவோம், மனசப் பத்தின ஆராய்ச்சில இறங்குனோம்னா, இறுதிவரைக்கும் ஒரு மண்ணும் தேராதுன்னு எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே.
இப்ப கூடப் பாருங்க, சொல்ல வந்த கதையை பாதியில அறுத்துவிட்டு , புதுசா சைக்கிள் ஓட்டப் பழகுறவன், பாதையை விட்டுட்டு கிடங்குலயும் மேட்டுலயும் லம்பி லம்பி போறமாதிரி எந்த லெக்குக்கோ இழுத்துட்டு போகுதுல்ல. ஆனா, எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும். அட அதாங்க… கதை சொல்லத் தெரியும்.
ஆமா…இன்று காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதே அந்தப் பழையவைகளை வெளியேற்றிவிட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டேன். இன்னும் சொல்லப்போனால், ‘பழைய இரும்பு பேப்பர் பிளாஸ்டிக் புக்கு வாங்குறது’ எப்போது ஒலிக்குமென்று காத்திருந்தேன் .
ஆனால் பாருங்களேன், மிகச் சாதாரணமாக அதாவது பழையவைகளைச் சேமித்து வைக்காத நாட்களில், கால் மேல் கால் போட்டபடி நிதானமாக டி.வி பார்த்துக்கொண்டோ அல்லது புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கும்போதெலாம் நிறைய முறை இந்தப் பதிவு செய்யப்பட்ட குரல் , எனக்கு தொந்திரவு ஏற்படுத்தியது உண்டு.
‘கரெக்ட்டா நம்ம வீட்டு வாசல்ல வந்துதான் அலறவிடனுமா? எவ்வளவு நேரம் இங்கேயே நிற்குது? அங்குட்டுத் தள்ளிப்போய் வண்டியை நிப்பாட்ட வேண்டியதுதானே, காது கிழிஞ்சி போகுது சத்தத்துல’ என்று குறைபட்டுக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை எதிர்வீடு அல்லது அக்கம் பக்கத்தினர் அவரிடம் பழைய பொருட்களை எடைக்கு போட்டுக் கொண்டிருந்திருக்கலாம். அதெல்லாம் அப்போது யோசிக்க முடிந்திருந்தால் அத்தனை எரிச்சல் அடைந்திருக்கமாட்டேனே.
எதுவொன்றும் தேவை இல்லாதவரைக்கும் அருமை தெரியப்போவதில்லை, அதுவே தேவைப்படுறப்போ பொறுமையா இருக்க முடியுதாயென்ன? அதனால்தானோ என்னவோ அப்போது அது எனக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது. சில சமயம் கோபத்தில், கதவை அறைந்து சாத்தியதுகூட உண்டு.
அப்படியிருந்த நான், அதற்கு நேர்மாறாக இந்த இரண்டு மூன்று நாட்களாக அந்த பதிவு செய்யப்பட்ட குரலுக்காக காத்திருந்த நேரமும் இருக்கத்தான் செய்தது. அப்போதெல்லாம் இல்லாமல் இந்த காலை நேரத்தில், எவர் கண்ணுக்கும் தெரியாதவாறு கூடுதலாக ஆறு சோடிக் கைகளை ஒட்டிக்கொண்டு, அஷ்டாவதினியாக வேலையில் இருக்கையிலா வந்து தொலைய வேண்டும்? இதை இப்போதைக்கு விட்டுவிட்டால், இன்னும் காத்திருக்க வேண்டும். இன்னைக்கே இப்போதே இதற்கொரு முடிவு கட்டிவிடலாம் என்று உறுதி எடுத்தேன். ஆனால், அடுப்பில் வெந்து கொண்டிருப்பவைகளை பாதியிலேயே நிறுத்த ஏலாது.
அன்று அவருக்கு பி’ ஷிஃப்ட் . வீட்டிலிருந்து பதினோரு மணிக்குத்தான் கிளம்ப வேண்டும். முந்தினநாள் இரவு இரண்டு மணி வரை முழித்திருந்து இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்த்துவிட்டுத்தான் தூங்கினார். வீரர்கள் டாட்டா சொல்லிக் கிளம்பிய பிறகுதான் தொலைக்காட்சியை விட்டுப் பிரிந்து வரக்கூடியவர். அப்படியிருந்தும் படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்து, மூன்று தடவைக்கு மேலாக, ஹைலைட் ஷோ காட்சிகளிலிருந்து விடுபடாமலிருந்தார். அடுப்படியில் இருந்தவாறே அழைத்தேன். பதில் இல்லை.
“என்ன, காது கேக்கா இல்லியா?” என்றவாரே கொதித்துக் கொண்டிருக்கும் சோற்றைக் கிளறிய கரண்டியோடு எதிரில் வந்து நின்றேன்.
“ம்ம்… ” என்று அப்போதுகூட, டி.வி திரையை மறைக்கிறேனென்று என் கையை ஒதுக்கி, எட்டி நிமிர்ந்து உட்கார்ந்தார்.
“இங்க பாருங்க, எடுத்து வச்ச பழசுகளை போட்டுட்டு வாரேன், அடுப்பப் பார்த்துக்கிடுதீகளா?” அவர் முகத்தை என் ஒரு கையால் ஏந்தித் திருப்பி எனக்கு நேராகப் பார்க்கச் செய்தேன். ம்ஹூம் மனுஷன் தலைதான் திரும்பியதே தவிர பார்வை முழுசுக்கும் டி.வி யில் தான்.
“ரசத்தை ஆஃப் பண்ணிட்டு போறேன். சோறு இன்னுங் கொஞ்ச நேரம் வேகட்டும். நாலு தோசையை மட்டும் சுட்டு ஹாட்பாக்ஸ்ல போட்டுட்டு இருங்க, இப்ப வந்துர்ரேன்”
“ம்ம்..”.
“கொஞ்சுறதுக்கும் கெஞ்சுறதுக்கும் இப்போதைக்கு எனக்கு நேரமில்லை சாமி. ஏங்க மறந்துராதீங்க, முதல்ல அந்த இடத்திலிருந்து எழுந்திருங்க, இந்தாங்க..”
தோசைக்கரண்டியை அவரிடம் திணித்துவிட்டு முதல் மாடியிலிருந்து இறங்கினேன்.
அவசரத்தில் மூன்றாவதுக்குப் பதில் நான்காவது படியில் கால் வைத்துவிட , மலையுச்சிலிருந்து பள்ளத்தாக்குக்குள் நழுவுவது போலான நொடிநேர உணர்வு. ‘ஆத்தாடி..நல்லவேளை’ எனச் சொல்லிக்கொண்டு, சரிந்து விழப்போன என் உடம்பைப் பிடிகம்பி உதவியால் காப்பாற்றிக் கொண்டேன். அப்போதைக்கு வாய்க்கு வந்தவர் பிள்ளையாரப்பன்தான். அவருக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தால்…
வண்டிக்காரர் நாலுவீடு தள்ளிச் சென்றுவிட்டார். ‘ச்சே…அட ஏன்யா, முதல் மாடியிலிருந்து இறங்கி வரவேண்டாமா?’ என முதலில் கோபம்தான் வந்தது.
பெரிய கேரியர் சைக்கிளின் முன்பகுதியில், தள்ளுவண்டியும் சேர்த்து வைத்துப் புதிதாக வடிவமைக்கப்பட்டிருந்த வாகனம் அது. மூன்றாகப் பிரியும் தெருமுனையில் நின்று கொண்டு எந்தத் திசையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் போலும். நல்லவேளை வண்டி அதே இடத்தில் நின்றது. அடர் சாம்பல் நிறத்தில் சட்டை அணிந்திருந்தார். நான் பார்ப்பதற்கு முதுகுதான் தெரிந்தது. புறங்கழுத்துக்குக் கீழ் வரைக்கும் சுருண்டிருந்தன அவர் தலைமயிர்கள். மொட்டை போட்டிருக்கவில்லை, வெயிலுக்காகத் தொப்பி அணிந்திருந்கிறாரோ அல்லது வழுக்கைக்கோ? எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதைப்பற்றி யோசிக்கவா இவ்வளவு அவசரமாக வந்தேன்?
கம்பிக் கதவோரத்தில் நின்றபடி, “பழைய இரும்பு! பழைய இரும்பு” இரண்டுமுறை சத்தமாக அழைத்து மூன்றாம் முறையாக “பழைய ….” என்று வாயெடுத்து நிறுத்திக் கொண்டேன். ‘ஒரு மனஷனைப் போய் பழைய இரும்புன்னு கூப்பிடுவாங்களா?’ என உள்ளுக்குள் தோண, “அண்ணே..! அண்ணே…!” யென அழைத்தேன். திரும்பவேயில்லை அவர். கைபேசியில் எதையோத் தேடிக் கொண்டிருக்கிறார் போல, அறுபது டிகிரி குறுங்கோணத்தில் சாய்ந்திருந்தது அவர் தலை.
இடியாப்பக்காரர்கூட இதே சிக்கலைத்தான் உண்டுபண்ணுவார். கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்குள் “இடியாப்பம் புட்டு.. .இடியாப்பம் புட்டு..” என்று சத்தம் மட்டும் கேட்குமேயொழிய எந்த தெருவில் எந்த மூலையில் இருக்கிறாரென்று தெரியாமலே போய்விடும். அப்புறமென்ன இடியாப்பத்துக்கு மாற்று உணவாக டூமினிட்ஸ் மேகிதான் கைகொடுக்கும். இல்லையில்லை வாய்க்கு கொடுக்க வேண்டியதாகிவிடும்.
நல்லவேளை இவராவது கண்ணில் தட்டுப்படுகிறாரே. ஆனால், இத்தனைச் சத்தத்திற்கும் திரும்பிப் பார்க்கிறாரா பாரேன் என்றுதானிருந்தது எனக்கு.
அருகில் சென்று அழைத்துவர முடியும்தான். ஆனால், ஒரு சின்னப் பிரச்சினை இதில். இருபத்திநாலு மணிநேரமும் நைட்டியோடே இருத்தல் வசதியாகத்தான் இருக்கும். ஆனால், இப்படி ஆத்திர அவசர நேரத்தில்கூட, முற்றத்தைவிட்டு இறங்குவதற்கு தயக்கமாகவே இருக்கும் கொஞ்சம். ஒருவேளை அது அப்படியேப் பழகிப்போன காரணத்தால் இருக்கலாம். ‘இதெல்லாம் ஓவருங்க, நைட்டியை போட்டுட்டே அதுவும் அழுக்கு நைட்டியைப் போட்டுட்டே ஸ்கூல், மார்க்கெட்டுன்னு போயிட்டுதானே இருக்காங்க’ என்று பெண்கள் மீது நிறைய புகார் உண்டுதான். ஆனால், நான் அப்படி இல்லை. நைட்டியெல்லாம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய கிராம வாழ்வு எங்களுடையதாக இருந்ததன் காரணமாகக்கூட இருக்கலாம்.
சரி, அது பிரச்சினையில்லை இப்போதைக்கு, அந்த வண்டிக்காரரை பின்னோக்கி வரவழைக்க வேண்டும், யோசித்துக் கொண்டிருக்கையில் , கையில் முட்டைக் கூடோடு பத்து வயதுச் சிறுவன் ஒருவன் அவனது குட்டி சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவனிடம், “செல்லம், அந்த வண்டிக்கார அங்க்கிளை இங்க வரச்சொல்றியா?” என்றதும், அவனும் குஷியாக ‘யு’ வளைவு எடுத்துக்கொண்டு ஸ்டைலாக இடுப்பை வளைத்து ஓட்ட, பின்னிருந்து பார்க்கும் எனக்கு அத்தனை அழகாக இருந்தது. அவருக்குப் பக்கத்தில் சென்று தனது சைக்கிள் பெல்லடித்து, அவர் திரும்பிப் பார்த்ததும் என் வீட்டைக் காண்பித்தான்.
மிகக் குறுகலான வீதி, திருப்புவதற்கு இடமின்றி ஒவ்வொரு வீட்டின் முன்பும் நிற்கும் வாகனங்கள் இடைஞ்சலாக இருக்க, அவர் சென்ற வழியிலேயே பின்னோக்கி உருட்டிக் கொண்டு என்பதைவிட இழுத்துக்கொண்டுதான் வந்தார் அவர். ஏற்கனவே அதில் துருப்பிடித்ததும் ஒடிந்ததுமான இரும்பு சோபா, வெறும் கம்பிகளாக மட்டும் இருந்தது. மேலும் சில அட்டைப்பெட்டிகள், பிளம்பிங் பைப்புகளென பழைய பொருட்களும் கிடந்தன.
அவரிடம், “என்னண்ணே …மாடியிலிருந்து வர்ரங்குள்ளேயும் அம்புட்டு தூரம் போயீட்டீக” என்றேன். சிரித்தார் அவர்.
“இப்படி யேவாரம் பார்த்தா தோதுபடுமா?” என்றவாறே ஏணிப்படியின் கீழ் இடத்தைக் காட்டி, “இந்தாருக்கு, நீங்களே வந்து எடுத்துக்கோங்க, என்னால நகர்த்தக்கூட முடியாது, நிறைய இருக்கு” சற்று ஒதுங்கி நின்றேன்.
வண்டியிலிருந்து எடைத் தராசுவை கீழிறக்கினார். பதில் எதுவும் பேசவில்லை. மூட்டைக்கு வெளியே கிடந்த பெரிய பொருட்களை எடுத்தார், அதன்பிறகு சணல் சாக்கின் கழுத்தை நெறித்துக் கட்டியிருந்த கயிற்றைக் கழட்டி, ஒவ்வொன்றாக தராசில் வைத்தார்.
எண்ணெய்ப் பிசுக்கோடு கறுப்படைந்த தாளிப்பு கரண்டி மட்டும் அமர்வதற்கு இடம் கிடைக்காமல் நழுவி நழுவிக் கீழே விழுந்தது. “இதுக்கு மட்டும் என்னைவிட்டுப் போக மனசுல்ல போலிருக்கு” என்று கொஞ்சம் சத்தமாகத்தான் சொன்னேன். நேரடியாக வண்டியில் போட்டுவிட்டேன் . பார்த்தார், அதே சின்னச் சிரிப்பு.
தொடர்ந்து எனக்குள் பெருமை பீற்றல் ஓடியது. ‘நாமயென்ன தங்கத்தையா கொடுக்குறோம் அவ்வளவு துல்லியமாகக் கணக்குப் போடுறதுக்கு, வாங்குன காசுக்கு மேலேயே நமக்காக நல்ல உழைச்ச பொருள். அதுல ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் பெறும் அவருக்கு. கீழ வீசியெறிய விருப்பமில்லாமத்தானே இவர்ட்டச் சேர்க்குறது’ என்று இவ்வளவு நீளத்துக்கு யோசிக்கனுமான்னு தோணுச்சி. டக்குன்னு நிறுத்திக்கிட்டேன்.
எல்லாவற்றையும் வண்டியில் ஏற்றிய பிறகு, கைகளை நாலுமுறை மாறி மாறித் தட்டித் துடைத்தார். தூசு படிந்திருக்குமென லுங்கியையும் உதறி மடித்துக் கட்டினார். காதின் மேலிடுக்கில் செருகி வைத்திருந்த ரீஃபில் பேனாவின் மூடியை உருவி நீக்கியவர், சட்டைப் பையிலிருந்து எடுத்த சின்ன சிகரெட் அட்டையில் ,பெற்றுக்கொண்ட பொருட்களின் எடையையும் அதன் மதிப்பையும் எழுதிக் கொடுத்தார். “பரவாயில்லைண்ணே எவ்வளவு ஆகுதோ அதைக் கொடுங்க போதும்” என்றேன். மொத்தம் நூற்றி நாற்பதைந்து ரூபாய். ஆனால், நூற்றி அம்பதாக ரவுண்டு கட்டித் தந்தார்.
நன்றி சொல்லிவிட்டு கிளம்பப்போனேன். அவர் சைகையில், குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டும் என்பது போல் கேட்க, உள்ளுக்குள் ‘தண்ணி கூட வாயைத் தெறந்து கேட்க மாட்டாரா?’ என்று நான் நினைத்தது உண்மைதான். அதைவிட குறும்புத்தனமாக ஒரு எண்ணமும் வந்தது அப்போது. ‘இவ்வளவு அழகாக குரல் பதிவு வச்சிருக்கிறாரே, இவரோட குரல் எப்படித்தான் இருக்கும்? என்று கேட்கத்தோணியதே அதுக்கு காரணமா இருந்துச்சி
ஆங்…இது சரி, இல்லை தப்புன்னு யோசிக்கிறதுக்கு எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்.ஒரு சின்ன ஆசைதானே. அதற்காகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன்.
முதலில் அவர் கேட்ட தண்ணிக்கு, “இந்தா கொண்டாரேன்ண்ணே” என்று சொல்லிவிட்டு, படியேறுவதற்கு மலைத்துப் போய் கீழிருந்தவாறே காலிங்பெல்லை அழுத்தினேன்.
“என்ன சொல்லு, இன்னுமா முடியலை?.” என்றவாறே படிக்கட்டு வளைவு இடுக்கின் வழி எட்டிப்பார்த்தார் என் கணவர்.
“அதெல்லாம் ஆச்சு, அடுப்படி ரெண்டாவது ஸெல்ஃப்ல ஒரு அட்டைப்பெட்டிக்குள்ள, காலி தண்ணி பாட்டில் போட்டு வச்சிருப்பேன். அதுல ஒன்னெடுத்து , தண்ணி நெரப்பிட்டு வாங்களேன் ப்ளீஸ்” என்று கேட்டதுமே, அது வண்டிக்காரருக்குத்தான் என்பதைப் புரிந்த அவர் தட்டாமல் கொண்டு வந்து கொடுத்தார்.
வெளிப்புறத்து தொண்டையெல்லாம் நனையும் படியாகப் பாட்டிலின் பாதிக்கு மேல் குடித்தார். பாட்டிலை என்னிடம் திருப்பித் தர தர, நான் வாங்கவில்லை. “நீங்களே வச்சிக்கோங்க” என்றதும் அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
பிரயாணங்களின் போது வாங்கும் தண்ணீர் பாட்டிலை ஒன்றிரெண்டு எப்போதும் சேர்த்து வைத்தது நல்லதாகிப்போனதென்று எனக்கும் மன நிறைவாக இருந்தது. இந்த யோசனை என் கணவர் தந்ததுதான்.
வண்டிக்காரரிடம், “எத்தனை வருஷமா இந்தத் தொழிலு பார்க்கீகண்ணே.. கட்டுப்படியாகுதா? ” என்றேன்.
சந்தோஷமாக தலையசைத்தவர், பெருவிரலை மட்டும் மடித்து, மற்ற நான்கு விரல்களையும் நிற்க வைத்துக் காட்டினார். புரிந்து கொண்டேன்.
தொடர்ந்து அவராகவே, “நீ..நீ…நீ…ங்..நீங்க தி..தி..திரு..தி..திருந…வே..வே..வே…” திக்கியவர் தொடர் முயற்சியில் திருநவேலியைத் தொட்டுவிட்டார்.
கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகச் சென்னைதான் வசிப்பு என்றாலும், பிறந்த மண் மொழியில்தான் என் பேச்சு இருக்கும். அதனால் அவர் அப்படிக் கேட்டிருக்கக்கூடும்.
புரிந்து கொண்ட நான், “ஆமா…நீங்க?” பதிலுக்கு அவரிடம் கேட்க, “நானும் அதேதான் ..” என்பதை தன் நெஞ்சுக்குழிக்குள் மேல் ஒரு தடவை தொட்டு, ஆட்காட்டி விரலை ஒரு கொக்கின் அலகுபோல் நீட்டி என்னைநோக்கிக் காட்டினார்.
“நானும் உங்க ஊர்தான்” என்பதைச் சைகையோடு வார்த்தைகளை உதிர்த்துப் போட்டும் சொல்வதற்கு முயற்சித்தார்.
அதற்குள்ளாக நானாகவே “அட… அப்படியா, ரொம்ப நல்லதுண்ணே” என்றேன்.
அசலூரில் ஒரே ஊர்க்காரர்களைச் சந்தித்தால் வரும் இனம்புரியாத சந்தோஷம் வருவது எப்போதும் நிகழ்வதுதான். ஆனால், அதைவிட வருத்தமாக இருந்தது, அவர் திக்கித் திக்கிப் பேசியது.
‘கூழாங்கல்லை வாய்க்குள்ள போட்டு அதக்கிப் பேசுங்கண்ணே’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. அப்புறமாகத்தான் யோசித்தேன், என்னைவிட வயதில் மூத்தவர், இதுவரை வாழ்வில் எத்தனை பேரைச் சந்தித்திருப்பார், எத்தனை வைத்தியங்களை முயற்சி செய்திருப்பார், அவருக்குத் தெரியாததாயென்ன?
சென்னைக்கு வந்த புதிதில் வாடகை வீட்டில் தங்கியிருந்த போது ,வீட்டு ஓனரம்மா அடிக்கடி, ‘வாய் இருந்தாத்தான் இந்த ஊர்ல பிழைக்க முடியும்.’ என்று அறிவுரையாக இதைச் சொல்வாள்.
இப்போது அவரிடம், ‘இங்க பார்த்தீங்கள்ல..’” என்று இவரைக் காட்டிப் பெருமை பட்டுக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
“போயிட்டு வாரேன்” என்பதை தன் தலையசைப்பின் வழி சொல்லிவிட்டு வண்டியிலேறினார்.
திக்காமல் திணறாமல், யாரோ ஒருவர் கொடுத்துதவிய குரலோடு, நெஞ்சு நிமிர்த்திய அமர்வில் அவர் செல்லும் வண்டியினையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“பழைய இரும்பு பேப்பர் பிளாஸ்டிக் புக்கு வாங்குறது…” கொஞ்சம் கொஞ்சமாகத் தூரம் செல்கிறது அந்தக் குரல்…
*********