சொற்கள் உறங்கும் அறை
நிகழ்தகவுகளின் நீட்சியாய் நிகழ்ந்தவொரு
நிகழ்வின் வழியே விழுந்தவொரு விரிசலை
ஒட்டும் வார்த்தைகளைத் தேடுகிறோம்.
முன்நின்றதும் தானாகத் திறக்கும்
தானியங்கு கண்ணாடிக் கதவுகளைப்போல்
அகமகிழ்வைத் திறக்கும் நிகழ்வொன்றை
எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.
சாலையோர மரங்களில் உதிரக் காத்திருக்கும்
பூக்களின் வாசனை ஏந்திய சொற்கள்
யார் தேடுதலின்றியும்
தாழிட்டு உறங்குகின்றன
தனி அறையில்.
காலச்சுழற்சியில் மோதிக் கவிழ்ந்த வண்டியில்
கழண்டுவிட்ட சக்கரங்களை
யார் மாட்டிவிட?
***
நன்னம்பிக்கை முனையை நோக்கி
யாவற்றையும் நகர்த்திகொண்டே போகும் நதி
தன்மீது விழும் மரத்தின்
நிழலை ஏதும் செய்ய இயலாது
கடந்த படியிருக்கிறது.
யாருக்காகவோ ஒப்படைக்கப்பட்ட
காலக் கண்ணாடியின் பிம்பங்கள்
நாளில் பட்டு எதிரொலிக்கின்றன.
எந்திரச் சக்கரங்களின்
சுழற்சியில் நசுங்கியபடியிருக்கின்ற
நினைவுப் பழங்கள்.
ஒரு சட்டத்திற்குள்
நிழற்படமாக மாட்டப்பட்டிருக்கிறது
ஜன்னல் வானம்.
எங்கிருந்து தொடங்கி
எதில் முடியுமெனத் தெரியாத வாழ்வு
தன்பாதையில் கையூன்றிக் கரணமிடுகிறது.
கண்ணீர் விசும்பலில்
பட்டுத்தெறித்த துளி
பெரும் துயரொன்றை வெட்டிச்சாய்க்கிறது.
கால அளவீட்டாளன்
அடையாளப் படுத்துகிறான்
வாழ்வின் வரைபடத்தில்
நன்னம்பிக்கை முனையொன்றை.
காகிதக் கப்பலாயினும் தொடர்கிறது
அவரவர் பயணம் அதை நோக்கியே.
***
உதிரும் மாய இறகுகள்
மாய உலகத்தின்
கதவுகளைத் திறக்கும்
சாவியொன்றைச் செய்பவனை
நான் அறிவேன்.
கண்களில் மிளிறும்
அன்பின் மொழியை மின்னலுக்குள்
பதுக்கி வைத்திருக்கிறான்.
ஓர் இளவேனில்காலத்தில்
ஒற்றைமலை நிழல் மீதமர்ந்து
குளிர்காலத்திற்கென தன்னோடு உறங்கும்
குருவிகளுக்குக் கம்பளி நெய்துகொண்டிருந்தான்.
சாவியை அடைய
பாலைநிலத்தின் மணலிலுறங்கும்
வெப்பத்தைக் கட்டிடும் வித்தையைக்
கற்றுவரப் பணித்தான்.
யுகங்களைக் கடந்து
கற்றுவரும் பொழுதில்
வானவில்லின்
நீலநிறத்தை என் மீது
பூசி விட்டு அச்சாவியோடு
மாயமாய் மறைந்திருந்தான்.
இப்போது அக்குருவிகளுக்கு
ஒரு நதியைத் தருவிக்கிறேன்
எதிர்வரும் கோடைக்கென.
***