பாதைகளின் முடிவில் துவங்கும் அன்புகள்
1.
நம் உறவின் வெளிச்சத்தை சிறு அகலில் நிரப்பியிருக்கிறோம்.
ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு திசையைக் காண்பிக்கின்றன,
அன்பு அதன் திசையிலிருக்கும் காலடிகளைத் தனியாகப் பின் தொடர்ந்து
ஒரு ஓரத்தில் தனக்கானவற்றைக் கண்டுபிடித்துக்கொள்கிறது.
2.
இந்தப் பாதைகள் திறந்திருக்கின்றன.
மனநலம் குன்றியவர்களை ஏற்றிச்செல்லும் வண்டிகளின்
ஜன்னல்கள் இரும்பு வலைச்சட்டகத்தால் மூடப்பட்டிருக்கின்றன,
அவர்கள் தூக்கியெறியும் சிறிய அன்புகள் நமக்கு வந்து சேர்வதேயில்லை.
3.
நாம் எத்தனை பிறழ்விலிருக்கிறோம்!
முழுவதும் கட்டித்தரப்பட்ட இனிப்பை
வீதி முழுவதும் ஒவ்வொன்றாகக் கொடுத்து விட்டு வருகிறோம்.
பகிர்தலே அன்பென்பதை இன்றளவும் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
4.
அப்பொழுது பூசப்பட்ட சமாதியின் முனைகளில் நின்றிருக்கிறோம்.
பிரார்த்தனைகள் முடிந்த கைகளுக்குள்ளிருந்து விழும் மலர்கள்
பிரபஞ்சத்தின் ஒரு துளியை மிகத் தனியாக வைத்திருக்கின்றன.
யாரும் பார்க்காத வேளையில் அதன் மௌனத்தில் கலந்து விடுகிறோம் நாம்.
5.
கண்ணீர் ஒரு மரமாக வளர்ந்து கொள்கிறது
பின் ஒரு செடியைப் போல உங்களிடம் வந்து நிற்கிற தது.
நீங்களவற்றை ஆறுதல் படுத்துகிறீர்கள்.
நாமெல்லோரும் கரகோசங்கள் செய்து அதை நெகிழ வைத்து விட்டோம்.
6.
நாம் நாடோடிகள்
நாம் தனித்த பாதைகளையே உருவாக்குகிறோம்.
ஒவ்வொரு பாதையின் முடிவிலும் ஒவ்வொரு அன்பைக் கண்டெடுக்கிறோம்.
அது அத்தனை நோய்களுக்கும் மருந்தாக ஆகிக்கொள்கிறது.
***