
1.வேடிக்கை
அருகாமைச் சுவர்கள் திறந்துகொள்கிறபோது
நின்று வேடிக்கை பார்க்க
கடைவீதியின் பழக்கடையொன்று கிடைத்துவிடுகிறது
உடன்வந்தவராய்
கைகாட்டிவிட்டு கடை மூலையில்
சிக்னலாகிப் போகிறேன்
வெங்காயங்களைப் புடைக்கும் கிழவி
சட்டென்று கண்காட்ட
அவள் கண்களில் உரிந்த
சிறு வெங்காயங்கள்
ஒரு பொம்மையாவது
வாங்க வேண்டும்
வாங்கிக்கொண்டு போய்
கடலில் கரைப்பது யார்
சதுர்த்திக்குப்
பொறிகடலை வாங்கச் சொல்லி
சரஸ்வதியை
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
***
2.இடறும் அடையாளம்
கதம்பங்களுக்குப்
பண்டிகையுமில்லை
கிராக்கியுமில்லை
தலைக்கு வைத்துக்கொள்ள
ஜாதிப்பூ விலை
ஐம்பது
போதும் கொஞ்சமாய் போதுமென்று
கடைவீதியை விட்டு வெளியேறுகிற
நடையில்
ஜாதிப் பூ
இடறுகிறது
பிடிக்காத
வேண்டாத ஒன்றின் அடையாளமாய்
பின்தொடரும்
வாசனையை
தவிர்க்கவே விரும்புகிறேன்
ஆனாலும்
இந்தமுறை
இருக்கட்டும்
அடையாளத்தை
தவிர்த்துவிடலாம்
***