![](https://vasagasalai.com/wp-content/uploads/2021/05/PicsArt_05-15-02.02.19-780x405.jpg)
இரவுப் பாடல்
அந்தி தொடங்கும்
இந்த மாலைப் பொழுது
எவ்வளவு வசீகரமானது
நட்சத்திரங்கள்
விழித்துக்கொள்ளும் நேரம்
நான் எழுதுவதற்கான வாய்ப்பை
வழங்கலாம் அல்லது
நட்சத்திரங்கள் கூடி
கவிதை பாடலாம்
களைத்த சிறகுகள்
பறவையின் பாடலொன்றை
என்னருகில் முணுமுணுக்கலாம்
சில்வண்டுகளின் ஓசை
இரவின் கவிதையொன்றை
எனக்குப் பரிசளிக்கலாம்
கோடையோ…
குளிரோ…
மழையோ…
காலங்கள் எதுவாயினும்
உயிரின் ஓசையை
உறங்க விடாமல் செய்யும்
தனிமையின் துயரங்களில்
ஏதேனும் ஒன்று
என்னருகில் இருந்து
என் கவிதையை வாசிக்கவும் கூடும்
எனினும்
இந்த இரவு
அச்சத்திற்குரியதல்ல.
***
பச்சையத்தில் ஒளிரும் கண்கள்
அது ஒரு பகற்பொழுது
மெய் தீண்டி
பச்சையத்தின் பதிவுகளை
அதன் மேனியிலிட்டு வரைந்து கொண்டிருக்கிறது
அரூபம் தாண்டி நிலை கொண்டிருக்கிறது அதன் நிலத்தில்
விரைந்து நகரும் காலத்தின்
ஒரு முனையைப் பிடித்துக் கொண்டே வளர்ந்து வருகிறாள்
பருவத்தின் மழையை பார்த்து
நகரும் ஒளிச்சில்லுகளாய்
மின்னுகின்றன அவள் கண்கள்
அதிகாலைப் பொழுது
நகர வாசனை அறிந்திராத
அவளின் சுவாசங்களை
அள்ளிவந்து
வெயில் மகள்
பனியின் வெள்ளையாய் காடெங்கும் விரித்து விளையாடுகிறாள்
பின் மதியப் பொழுதொன்றில்
பழம் கொறிக்கும் அணிலொன்று
அவள் கழுத்தருகே இறங்கி வருகிறது
கூடு திரும்ப வேண்டிய பறவையொன்று
அவள் காதருகே வந்து
சிறகு கோதுகிறது
இவளையறிந்த
யாதொருவரின் கனவிலும்
மழை நீர் அறிந்திராத பசியொன்று
பாலையாய் விரிந்து கிடக்க..
பசலை பூத்து நிற்கும்
இவளின் காலடியில்
பச்சைப் பாம்பென
வளைந்து நெளிந்து ஓடுகிறது
காடருந்தும் நதியொன்று.
***
வாதை
இந்த உலகத்தை விசித்திரமாக
பார்த்துக் கொண்டிருக்கும்
உன் கண்களில்
ஒரு பறவையின் நிழல் பறந்தோடுகிறது
நீ யாரென அறியாதிருக்கும்
அப்பறவைக்கு
உன் சிறகுகளை விரித்து
அதன் திசைகளைக் காண முயல்கிறாய்
உன் மொழியை
அறியாமல் கடந்து போன
ஒரு வழிப்போக்கனிடமிருந்து
ஒரு சொல்லை அவனறியாமல்
திருடிக் கொண்டாய்
அதன் வழியே உன் வழி எதுவென தீர்மானிக்கிறாய்
உன் இமைகள் திறந்து மூட
இரவில் ஒரு நட்சத்திரத்துடன்
உன் உரையாடலை
தொடங்கி விடுகிறாய்
அருகிலேயே இசைத்துக் கொண்டிருக்கும்
ஒரு புதிய பாடல் ஒன்றின் இசைத்தட்டை
உன் கண்கள் விழுங்க பார்த்துக்கொண்டிருக்கும் தருணத்தில்
வழி தெரியா பறவை ஒன்றின் நிழல்
இரவின் மடியில் தலை சாய்ந்து கிடக்கிறது
பகலின் ஒளி ஊடுருவிக் காய்ந்த
அதன் சிறகுகளில்
நீ அறியாத திசை ஒன்றின் பாடலை ஒலித்து பின் ஓய்ந்தது
உன் கண்களில் இப்போது
நான் பார்த்துக்கொண்டிருப்பது
அதன் வாதையை
அதே இசையுடன்
அதே மென்மையுடன்.
***
பெயரை வைத்து என்ன செய்வது?
ஒரு நெருப்பின் முதல் சுடரையும்
அதன் கடைசி சுடரையும்
பார்த்து விட்டு
அதை மறந்து விடுகிறீர்கள்
இடையில் எரிவது
காலத்தின் கட்டாயம் என்பதை
உங்கள் மறத்தல் வழியே
உறுதிப்படுத்தி
கடந்து செல்கிறீர்கள்
நினைவில் இருத்தியபடியே காலத்தை
எரிப்பது என்பது
மறதியின் மறுபெயரை
உச்சரிப்பது போல்தான்
மனங்களில் எரிந்து
எஞ்சி இருக்கும் காலத்தில்
ஒரு குரல் கேட்கிறது
அதற்கு ‘மனச்சாட்சி’என்று
பெயரிட்டவனை
தேடிக்கொண்டேயிருக்கிறேன்
காலம் ஒழிந்து கொண்டே
கண்ணாமூச்சி ஆடுகிறது
பெயரிடப்படாத நிழல்களின் பின்னே.
***