கவிதைகள்
Trending

அ.ரோஸ்லின் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

உறவொன்றின் மறுபக்கம்
கண்ணீர் பாளத்தால்  சூழப்பட்டிருக்கிறது.
கடந்த கணங்களின் நிச்சலனத்தை
இந்த விடியலின் மீது வைக்கிறேன்.
அது  புறப்பட்ட பறவையாகி
வெயில் துளிர்க்கும் திசையை நோக்கி
ஒரு பட்டாம் பூச்சியைப் போல அலைகிறது.

***

உலர் திராட்சையென்றாகும் விடுபடுதல்

பசி கொண்ட யானை
பூனையைப் போல ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குகிறது
துதிக்கைகளுக்குள் சிக்காத அதன் உணவு
உலர்திராட்சையைப் போல் சுருங்கிக் கிடக்கிறது.
அது ஒரு  ராட்சஸப் பறவையாகி
இந்தப்  பிரபஞ்சத்தை  தனது
சிறகுகளால் அளக்க  எண்ணியிருந்தது.
தற்போதைய  அதன் தேவை  கைக்கு எட்டுமாப்போல்
ஓர் அன்னாசிப் பழம் மட்டுமே.
இங்கிருந்து விடுபடவும்…

***

கணத்திலிருந்து  எழும்பும் பேரோசையின்
திசை அறியாத உயிரொன்று
இன்று மழை அல்லியென மலர்ந்திருக்கிறது.
பற்பல ஆண்டுகளாய்
உருக்கொண்ட பேரண்டத்தின் முகம் அதற்கு.
சொல்லப்போனால்  கணிக்கவொண்ணாத
விடுதலாய்
அதைச் சூடியபொழுது
மில்லியன் கணக்கில்  படரத் துவங்கியது,
புலன்களைத் திறக்கும்  இறக்கைகளுடன்.

***

தொன்ம அலை

காற்றைப்போல அலையும் ஆன்மாவை
கண்களாக உருமாற்றியிருந்த ஒருத்தி
தென் ஆப்பிரிக்கக் கடலிலிருந்து
நுரையாக மேலெழுகிறாள்.
நீலத்தின் பேரோசைக்குள் தனக்கே பிரத்யேகமான
அவளது   அம்மெல்லிய  இசையை
கடலாழத்தில் ஒளித்தபடி,
வெண்மணல் படர்ந்த கடற்பரப்பில்
பிறந்த சிசுவென  தன்னை ஒப்படைக்கிறாள்.
ஆழ்ந்த  கரிப்பை,
கண்டடைந்த தொன்மத்தை,
உயிர் கசியும் தீட்சண்யத்தை,
பெருகிப் பெருகும்  அச்சமுத்திரம்
அள்ளி சேர்ப்பித்தபடியே இருக்கும்
அலையெழும்பும் யுகங்களாய்.

***

நினைவெனும் கிழங்கு

செண்டை மேளத்தின் லயத்தினையொத்து
இந்த உலகத்தின் இறுதிக் கண்கள் திறந்து கொள்கின்றன.
அவை கவனம் பெறாத
ஒரு செம்பருத்தியின் சூலகத்தை கரங்களில் பொருத்தி
அது  அளிக்கும் மகரந்தத்தை இன்றைய நாளுக்குப் பூசுகின்றன.
கூட்டைச் சுமந்து செல்லும் நத்தையே உடலையிங்கு பூட்டுவாய்,
உன் ஆன்மாவைச் சுமந்தலையும்  பிரபஞ்சத்தின்
நீரோடிய காலங்களை என்ன செய்வாய்.

சிறுபட்சிகட்கு இரையாகும் நீர்ப்புழுக்களாய்
வனவாசியென அவளது தானியத்தின் பெயரெழுதப்படாத
இந்தக் கானகத்தில்  அலைகிறாள்.

பெருநகரின் சாயலற்ற
மலை அடிவாரத்தில்
உயிருடன் புதைக்கப்பட்ட
மீன்களைப் போலத் துள்ளுகின்றது,
நினைவுகளெனும் கப்பைக்கிழங்கு.

***

ஆன்மாவைச் செரித்தல்

உதிரம் பூசிய நிசியொன்று
கூட்டத்தால்
கைவிடப்பட்ட யானைக்குட்டியென்றாகி
என் நித்திரைக்குள் வந்தது.

கனமேறிய  ஓர் துண்டென
ஆழ் சமுத்திரத்தில் மூழ்கிக் கிடந்த அதன் கணங்கள்
பழுப்பேறிய விலங்கின் கண்களாய்
விழித்தபடியிருந்தன.
அரளி இலைகளின் கூர்மையென
நாளின் கரையைத் தீண்டும்
கசப்பின்  வேரினை
எவ்வளவு தூரம் சுமப்பது.
மண்ணின்  ஆழம்  புகுந்து
காலத்துக்குமான மவுனத்தை
இப்படித்தான் அவள் கடந்து வந்தாள்.
பேரொளி கமழ்த்திய அவளான்மாவின்  பருவம்
நரம்புகள் பரவிய
தேக்கிலையாய்  தன்னை நொறுக்க ஒப்பளித்தது அவ்வாறுதான்;
சிவந்த இரவு
சன்னமான முனகலுடன்
கடந்து போகிறது
பகிர்வதற்கான காலங்களைச்
செரித்தபடி…

***

இந்த உலகத்தின்
மிகுந்த கனமேறிய வார்த்தையைச்
சுமந்தலையும்  நீரோடையொன்று
என் வனத்தை மறித்தது.
பதற்றமுடன்  காணப்பட்ட அதன் கரங்களில்
செவ்வரிகளோடிய   கனிகளிருந்தன.
வார்த்தைக்காகத் தனது சிறகுகளோடு
வானத்தையும் சுருக்கிக் கொண்டு பிழைப்பதாகக் கூறியபடி காடெங்கும்
சங்குமலர்களைப் பூக்கச் செய்து
வனக்குளமாக
அவ்வார்த்தையின் மார்பில் சாய்கிறது.
வெற்றிடமெங்கும்  பரவும்
மனப்பச்சைத் தடங்கள்
பதிலூறிய
கரங்களில் தகிக்கிறது
இருளின் தீப்பற்றலாய்.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button